மாடி வீட்டு ஏழைகளா நீங்கள்? – உங்களுக்கு கைகொடுக்கும் ரிவர்ஸ் மார்ட்கேஜ்

சென்ற ஆண்டு, பெங்களூரு சுல்தான் பேட்டையைச் சேர்ந்தவரான வினோபா ராவ் (வயது 80) மற்றும் அவர் மனைவி கலாவதி பாய் (வயது 72) ஆகிய இருவரும் அவர்களின் வீட்டுக்குள் இறந்துகிடந்தனர். வயதான காலத்தில் அவர்களைப் பார்த்துக்கொள்ள யாருமின்றி வறுமையில் வாடி,  பட்டினியில் இறந்திருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்குமுன்பே, அவர்களின் வீட்டில் மின்சார இணைப்பும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. வினோபா ராவ் ஆயுதப் படையில் வேலை பார்த்து  ஓய்வுபெற்றவர். அவருக்குக் கிடைத்த சில ஆயிரம் ரூபாய் பென்ஷன், வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை.  

இதில் பெரிய சோகம் என்னவெனில், அவர்கள் வசித்தது சொந்த வீடு; அதன் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல்!

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு சொந்தமாக இருந்தும், அவர்கள் வறுமையில் வாடக்  காரணம், அறியாமையே.
வினோபா ராவ், தான் பணிபுரியும் காலத்திலேயே வீட்டுக் கடன் வாங்கி வீட்டைக் கட்டி, இருபது ஆண்டுகள் தொடர்ந்து மாதத் தவணை செலுத்தி, வீட்டைச் சொந்தமாக்கிக் கொண்டார். வினோபாபோல, நிறைய பேர் ஒரு வீட்டோடும், கையில் சொற்ப பணத்தோடும் ஓய்வுபெறுவதைப் பார்க்கிறோம்.
இவர்களின் மகனோ அல்லது மகளோ வெளிநாட்டில் செட்டிலானபிறகு, அங்கு போக போய் இருக்க இவர்களுக்கு மனம் வருவதில்லை. மற்றவர்களைச் சார்ந்திருக்க இவர்களின்  தன்மானமும் இடம்தருவதில்லை.
வங்கிக் கணக்கு, வைப்பு நிதி, மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட் என பல முதலீட்டு வழிகளைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வினோபாவைப் போன்றவர்களுக்கும், ஓய்வு பெற்றபின் எப்படி வாழ்வது என்கிற கேள்வி உடையவர்களுக்கும் அதிக தெரியாத ஒரு வரப்பிரசாதம்தான், ரிவர்ஸ் மார்ட்கேஜ். 
வங்கி தரும் பணத்தைக்கொண்டு வீட்டை வாங்கிவிட்டு, மாதாமாதம் வங்கிக்குப் பணம் தருவது மார்ட்கேஜ் அல்லது ஹோம் லோன். ஆனால், கடன் தரும்  வங்கியானது, கடன் வாங்கு பவருக்கு மாதாந்திரத் தவணை கொடுத்தால், அது ரிவர்ஸ் மார்ட்கேஜ்.
நீங்களும் உங்கள் மனைவி / கணவர் உயிருடனுள்ள வரை (இப்போதைக்கு அதிக பட்சமாக 20 ஆண்டுகள் வரை), வங்கியானது உங்களுக்கு மாதாமாதம் பணம் தந்து, உங்கள் இறப்புக்குப்பிறகு வீட்டை எடுத்துக்கொள்ளும். இந்தத் திட்டமானது 60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, அதில் 80% வரை கடன் கொடுக்கமுடியும். அதை மாதாந்திரத் தவணைகளாக மாற்றி, இருபது ஆண்டுகள் வரை வங்கிகள் வழங்குகின்றன.
இந்தத் திட்டத்தில் நீங்கள் குடியிருக்கும் வீட்டை மட்டுமே உபயோகிக்க முடியும். வாடகைக்கு விடப்பட்டிருக்கும் சொந்த வீட்டை இந்தத் திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியாது.
தவணையை மாதாமாதமோ, காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒருமுறையோ பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் பெறக்கூடிய பணம் வருமானமாகக் கருதப்படாது. எனவே, நீங்கள் இதற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை.
இது அடமானம்போல அல்ல; அடமானத்தில் மொத்தமாகப் பணம் பெற்றுக்கொண்டு மாதா மாதம் அடைக்க வேண்டும். ஆனால், இதில் மொத்தமாகப் பணம் கிடைக்காது. தவிர, திருப்பித் தரும் அவசியமும் கிடையாது.
கணவனும் மனைவியும் உயிருடனுருக்கும் வரை வங்கியானது பணம் தரும். இருவரும் இறந்த பிறகு வீடு வங்கிக்குச் சொந்தமாகிவிடும்.அப்போது வங்கி, இவர்களின் வாரிசுதாரர் களுக்கு வீட்டை வாங்கிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும். வாரிசுகள் விருப்பப்பட்டால் வங்கிக்கு மொத்தமாகப் பணம் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்ளலாம். வாரிசுகள் அந்த வீட்டை வாங்காத பட்சத்தில் வங்கியானது வீட்டை விற்றுப் பணத்தை எடுத்துக்கொள்ளும்.
ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தின்படி, வீட்டின் உரிமையாளர், வீட்டில் வசிக்கும் வரை அவரே அதற்கு உரிமையாளராகவும், பொறுப்பாளராகவும் இருப்பார். வீட்டு வரி,  வீட்டுப் பராமரிப்பு போன்றவற்றை அவர்தான் கட்ட வேண்டும்.
வீட்டின் உரிமையாளர் இருபது ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருந்தாலும், அவர் அந்த வீட்டில் தொடர்ந்து வசிக்கலாம். ஆனால், இருபது ஆண்டுகளுக்குப்பிறகு, பணம் தருவதை வங்கி நிறுத்திவிடும்.
வீட்டின் உரிமையாளர், வீட்டை வாடகைக்கு விட்டாலோ, வரிகளைச் செலுத்தாமல் விட்டாலோ, திவாலாகும் நிலைமை வந்தாலோ வீட்டை வங்கி எடுத்துக்கொள்ளும்.
ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு கொடுத்த வீட்டை உரிமையாளர், அடகு வைக்கவோ விற்கவோ முடியாது என்பது முக்கியமான விஷயம்.
வீட்டை விற்க உரிமையாளர் முடிவு செய்தால், முதலில் வங்கிக்குச் சேரவேண்டிய தொகையைச் செலுத்தி, வீட்டை மறுபடியும் ஃப்ரீஹோல்ட் நிலைக்குக் கொண்டு வந்தபின்னரே விற்க முடியும். இப்போதைக்கு ரிவர்ஸ் மார்ட்கேஜ் மூலம் பெறக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1 கோடி.
வினோபா ராவுக்கு ரிவர்ஸ் மார்ட்கேஜ் குறித்துத் தெரிந்திருந்தால், இரு உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
இனி, இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்க நாம் செய்யவேண்டியது, இந்தத் திட்டம் குறித்து ஓய்வுபெற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான்!  

%d bloggers like this: