அழகுக்கு இல்லை அறுவை சிகிச்சை!

உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்னையாகி வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என, வழக்கமான வழிமுறைகளைத் தாண்டி, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையும் பிரபலமாகி வருகிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகள், அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. உடல் பருமன் குறித்து, அடிப்படையான சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.’ஒபிசிட்டி’ எனப்படும்,

உடல் பருமன் மூன்று வகைப்படும். முதலாவது, மிதமான உடல் பருமன். 15 ஆண்டுகளில், நம்மிடையே ஏற்பட்டுள்ள உணவு பழக்க, வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக முக்கிய காரணம். மரபியல் ரீதியாகவே நமக்கு, தசை சம்பந்தமான கொழுப்பு சற்று அதிகம். சத்தான, குறைந்த உணவு, அதிக உடலுழைப்பு என்பது தான், இந்திய மக்களின் உடல்வாகிற்கு ஏற்றது. இதற்கு நேர்மாறாக, அதிக கொழுப்பு உள்ள உணவு, போதிய உடலுழைப்பு இல்லாதது என, மாறிவிட்டோம். இதனால், மந்தமான வாழ்க்கை முறைக்கு பழகி, உடல் பருமன் அதிகரித்து விட்டது. 40 சதவீத மக்களுக்கு, மிதமான உடல் பருமன் உள்ளது.
இதற்கு அடுத்த நிலையில் இருப்பது, தீவிர உடல் பருமன். மரபியல் ரீதியான காரணங்கள் இதற்கு இருந்தாலும், நீரிழிவு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் பாதிப்பு, தீவிர உடல் பருமன் இருப்பவர்களுக்கு இருக்கிறது. பல ஆண்டுகளாக கொழுப்பு, உப்பு நிறைந்த துரித உணவுகளை மட்டுமே சாப்பிடுவது, போதிய உடற்பயிற்சி இல்லாதது, இந்த உடல் பிரச்னைகளுக்கு முக்கிய காரணங்கள். இந்த பிரச்னை, 15 சதவீத மக்களுக்கு இருக்கிறது. இந்த பிரிவினருக்கு, உடல் உள் செயல்பாடான மெட்டபாலிசம், குறைவாகவே இருக்கும். மூன்றாவது வகை, அதிதீவிரஉடல் பருமன். இதனால், 4 சதவீத மக்கள், பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தான், அதிக ஆபத்தான நிலை. அதிதீவிர உடல் பருமனால், பலவிதமான நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு, 70 முதல், 80 சதவீதம் அதிகம். இதனால் தான், ஆசியாவில், 30 வயதிலேயே மாரடைப்பு பிரச்னை வருகிறது. அதிதீவிர உடல் பருமனால், பல பிரச்னைகள் வருகின்றன; சராசரி வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால், அறுவை சிகிச்சை மட்டும் தான் தீர்வு. முன்னிருந்ததைக் காட்டிலும், ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற நிலையில் மட்டுமே, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இது, ‘காஸ்மடிக் சர்ஜரி’ கிடையாது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள, எல்லா வசதிகளும் உள்ள மருத்துவ மையத்தை மட்டுமே நாட வேண்டும். காரணம், எந்த சிக்கலான அறுவை சிகிச்சையையும் போல, இதிலும், 1 சதவீதத்திற்கும் கீழே உயிரிழப்பிற்கான ஆபத்து உள்ளது.கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில், 15 ஆயிரம் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. அதில் உயிர் இழப்புகள், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்திருக்கின்றன. அதிக உடல் பருமனைக் குறைக்க அறிமுகமாகி உள்ள புதிய முறை இது. இதனால், எங்கே போவது, யாரை பார்ப்பது எனத் தெரியாமல், குழப்பமாகி, தவறான முடிவை எடுக்கின்றனர்.
‘ஒபிசிட்டி சர்ஜன் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற அமைப்பு, 15 ஆண்டுகளாக இருக்கிறது. இதன் இணையதளத்தில், உடல் பருமனுக்கான சிகிச்சை முறைகள், சிறப்பாக செயல்படும் மையங்கள் என, தேவையான விபரங்கள் உள்ளன. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் தேவை, தற்போது அதிகரித்து இருப்பதால், வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து வருகிறோம். 2018 பிப்ரவரியில், தேசிய கருத்தரங்கை, சென்னையில் நடத்த உள்ளோம்.
டாக்டர் ராஜ்குமார் பழனியப்பன், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர், சென்னை. docraj@me.com

%d bloggers like this: