செரிமானத்துக்கு உதவும் சூப்பர் பயிற்சிகள்

செரிமானக் கோளாறு பெரும்பாலானோரைப் பாதிக்கும் பிரச்னையாக மாறிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறையும் உணவு முறையும் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கின்றன. சிலர் இதிலிருந்து தப்பிக்க, தங்கள் விருப்பத்துக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால், மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்வது நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியானால், செரிமானக் கோளாறை எப்படிச் சமாளிப்பது? இருக்கவே இருக்கிறது யோகா.

செரிமானக் கோளாறுகளை எளிதாகத் தீர்க்கும் சில யோகாசனங்களைக் கற்றுத்தருகிறார் யோகா பயிற்சியாளர் பூ.குமரேசன்.

வக்ராசனா (Vakrasana):

கால்களை நீட்டியவாறு நேராக அமர வேண்டும்.  இடது காலை மட்டும் மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். வலதுகையால் இடதுகாலின் பாதத்தைப் பிடித்தபடி இருக்கவேண்டும். அப்போது இடதுகையை பின்புறமாக ஊன்றித் தலையைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.

பயன்கள்: இரைப்பையில் சுரக்கும் அமில உற்பத்திக்கு இது அதிகம் உதவக்கூடியது. இதனால், அஜீரணக் குறைபாடுகள் விலகி செரிமானம் சீராகும்.


பரிவிர்த திரிகோண ஆசனா (Parivirtha Trikona asana):

நேராக நின்று, இருகைகளையும் விரித்துக்கொண்டு கால்களையும் முடிந்தளவு விரித்துக்கொள்ள வேண்டும். இப்போது, வலதுகையால் இடதுகாலைத் தொடவேண்டும். இவ்வாறு செய்யும்போது, வலதுகையின் நேர்கோட்டில், இடதுகை மேல்நோக்கி இருக்கும். சில விநாடிகள் கழித்து, மறுதிசையில் இதனைச் செய்யவேண்டும்.

பயன்கள்: இதைச் செய்யும்போது, மார்புப் பகுதி விரிவடைவதைக் காணமுடியும்.  மூச்சு விடுவதில் பிரச்னை இருப்பவர்கள், ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது சிறந்த தீர்வு. செரிமானக் கோளாறுகளும் சரியாகும்.


அர்தபவன் முக்தாசனா (Ardha Pawan muktasana):

தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு, இடது காலை மடக்கிக்கொள்ள வேண்டும். தொடைப்பகுதியை மார்புக்கு அருகே கொண்டுவந்து, இருகைகளையும் கொண்டு, மடக்கிய இடது காலைப் பிடித்துக்கொள்ளவும். அடுத்து, தலையை முன்னோக்கி நகர்த்தித் தாடைப்பகுதியால், மடக்கியிருக்கும் முழங்கால் முட்டியைத் தொட வேண்டும். சில விநாடிகள் வரை இதே நிலையில் இருந்துவிட்டு, பின்னர் வலதுகாலைக்கொண்டு இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

பயன்கள்:
உடலின் ரத்த ஓட்டம் சீராக்கப்படும். அனைத்துத் தசைகள், உறுப்புகள் சுறுசுறுப்பாகச் செயல்பட உதவும். சீரான செரிமானத்துக்கும் இடுப்புப் பகுதியின் தசைகளுக்கு  வலுசேர்க்கவும் உதவும்.


மண்டுகாசனா (Mandukasana):

முட்டி போட்டபடித் தரையில் அமர்ந்துகொண்டு, கைவிரல்களை இறுக்கமாக மடக்கிக்கொள்ள வேண்டும். (அனைத்து விரல்களுக்கும் அடியில், கட்டைவிரல் இருக்க வேண்டியது அவசியம்). இப்போது மடக்கிய கைகளை வயிற்றின் கீழ்ப்பகுதியில் வைத்துக்கொண்டு தலை தரையில் படும்படியாகக் குனிய வேண்டும்.

பயன்கள்: கணையப் பாதுகாப்புக்கும் கணையச் சுறுசுறுப்புக்கும் இந்தப் பயிற்சி வழிவகுக்கிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி சீராகும். சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச்சிறந்த யோகா. செரிமானக் கோளாறுகளுக்கும் இது சிறந்ததாகும்.


பவன்முக்தாசனா (Pawanmuktasana):

தரையில் மல்லாந்து படுத்தபடி, இருகால்களையும் மடக்கி, தொடைகளை மார்புப்பகுதிக்கு அருகே கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவந்த கால்களைக் கைகளால் இறுக்கிப் பிடித்தபடித் தலையை, மடங்கியிருக்கும் முழங்கால் முட்டியை நோக்கி முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

பயன்கள்: செரிமானக் கோளாறுகளைச் சரி செய்வதுடன் பின்பக்கத் தசையின் வலிகளை இது குறைக்கும். வயிற்றுப்பகுதியின் ரத்த ஓட்டங்கள் சீராக இருக்க உதவி புரியும்.


நவாசனா (Navasana):

நேராக அமர்ந்துகொண்டு, இரு கால்களையும் மேல்நோக்கித் தூக்க வேண்டும். பிறகு கைகள், முழங்கால், முட்டிப்பகுதியைத் தொடுமாறு வைத்து  உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது, முதுகு சற்றுப் பின்னோக்கி நகர்வது இயல்பே. உடலை சற்று பேலன்ஸ் செய்து கொண்டு, கைகளை விலக்கி கால்முட்டிக்கு அருகில் கையை நேராக நீட்ட வேண்டும்.

பயன்கள்: பின்பக்கத் தசைகள் வலுப்பெறுவதற்கான இப்பயிற்சி, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் செயல்பாட்டை அதிகரிக்கும். இதனால், செரிமானம் சீராகும்.


தனுராசனா (Dhanurasana):

தரையில் குப்புறப்படுத்துக்கொண்டு இரு கால்களையும் மேல்நோக்கி வளைக்க வேண்டும். இப்போது கைகளால் கால் பாதத்தை இழுத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, கால்களை முடிந்தவரை மெதுவாக விரிக்க வேண்டும். அதிகம் விரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கால்களை விரிக்கும்போது மார்புக்கு மேலுள்ள பகுதியும் மேல்நோக்கி எழுந்தால், பேலன்ஸிங் சரியாக இருக்கும்.

பயன்கள்:
செரிமானம் மற்றும் பசியின்மைப் பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். மாதவிடாய் பிரச்னை இருக்கும் பெண்களும் எடை குறைக்க விரும்புபவர்களும் இதனைத் தொடர்ந்து செய்து வருவது நல்ல தீர்வைத் தரும்.

– ஜெ. நிவேதா

படங்கள்: ப.சரவணகுமார்,
மாடல்: வெரோனிகா
நன்றி:
136.1 யோகா ஸ்டுடியோ


கவனம்:

* செரிமானத்துக்கான யோகா பயிற்சிகள் என்பதால், சாப்பிட்டவுடன் இவற்றைச் செய்ய வேண்டும் என்று பொருளில்லை. காலை அல்லது மாலை வேளைகளில்தான் செய்ய வேண்டும்.

*  மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டாம்.

* அடைபட்ட அறைகளுக்குள் யோகா செய்யக் கூடாது. நல்ல காற்றோட்டமான பகுதியில் செய்ய வேண்டும். ஒவ்வோர்  ஆசனத்தையும், இரு திசைகளிலும் செய்து பழக வேண்டும். உதாரணமாக, முதலில் வலதுபக்கம் செய்தால், சில விநாடிகள் கழித்து இடதுபக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் உடலுக்குச் சம அளவு பேலன்ஸிங் கிடைக்கும்.

* வெறும் தரையில் அமர்ந்தபடி யோகா செய்வது தவறு. மிருதுவான ஒரு விரிப்பின்மேல் அமர்ந்து செய்ய வேண்டும்.

* ஒவ்வோர் ஆசனத்துக்கும் இடையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட வேண்டும். மூச்சு வாங்கும்படியான சூழலில் யோகா செய்வது மிகவும் தவறு.

%d bloggers like this: