Advertisements

கண் தானம்

கண் தானம் குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடம் ஏற்படுத்தும்விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் 25 முதல் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை 15 நாட்கள் தேசிய கண்தான இருவாரமாக இந்தியாவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பார்வையின்மையைக் குறைப்பதோடு அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, இறப்புக்குப் பின்னர் கண் தானம் செய்ய உறுதியெடுக்கும்படி மக்களை ஊக்கப்படுத்துவது மற்றும் கண்தான விழிப்புணர்வினை அதிகரிப்பது போன்றவையே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். கண் சிகிச்சை மருத்துவர் ப்ரீத்தியிடம் இதுகுறித்து விளக்கமாகக் கேட்டோம்…
பார்வை இழப்பின் காரணிகள்


வளர்ந்து வரும் நாடுகளில் பார்வையிழப்பு என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி கண்புரை, கண்ணழுத்த நோய்களுக்கு அடுத்தபடியாக கண்ணின் முன்பகுதித் திசுக்கள் சேதமடைவதால் ஏற்படும் கருவிழிப்படல நோய்களே(Corneal Blindness) பார்வையிழப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது.
இந்த கருவிழிப்படல பிரச்னையானது வைட்டமின் ஏ குறைபாடு, தொற்றுகள், பிறப்புக் குறைபாடு மற்றும் பல்வேறு காரணங்களால் கண்ணில் ஏற்படும் காயங்களால் குழந்தைகளுக்கு  ஏற்படுகிறது. வயது வந்தவர்களுக்கு தொற்றுகள், காயங்கள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் பார்வையிழப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது.
இன்றைய நிலை
இந்தியாவில் வரும் 2020-ம் ஆண்டில் இந்த கருவிழிப்படல பிரச்னை உள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சம் என்ற அளவுக்கு அதிகரிக்கும். இவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டுக்கு 2 லட்சம் கார்னியாக்கள் தேவை. ஆனால், நமக்கு தற்போது 45 ஆயிரம் மட்டுமே தானமாகக் கிடைக்கிறது. கண்தானம் செய்ய முன் வராததற்கு மக்களிடையே நிலவிவரும் கட்டுக் கதைகள் மற்றும் போதிய விழிப்புணர்வின்மையும் முக்கிய காரணங்களாக இருக்கிறது.
இப்படி பெறப்பட்டுள்ள அந்த குறைந்த அளவிலும் 46 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையிலும், மீதமுள்ளவை தரமற்றவையாகவும் உள்ளன. நம் நாட்டில் கண்பார்வை குறைபாடுடைய 95 சதவிகிதம் பேர் எளிதில் குணப்படுத்தக்கூடியவர்களே! கண் திசுக்களை தானம் பெறுவது, அதை சரியான முறையில் செயல்படுத்துவது மற்றும் நவீன வசதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் இந்தக் குறைபாட்டை சரி செய்ய முடியும். தேசிய பார்வையிழப்புக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கணக்குப்படி உலக பார்வையற்றவர்களில் 20% பேர் நம் நாட்டில் உள்ளனர்.
மேலும் கருவிழிப் படல நோய்களால் பாதிக்கப்படுவோர் பட்டியலில் ஆண்டுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் புதிதாக சேர்கின்றனர். இதற்கு கண்தானம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது ஒன்றே தீர்வு. ஆகஸ்டு 25-ல் தொடங்கும் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழாவை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் கண்தானம் குறித்த சரியான புரிதலை கிராமம், நகரம் என்று அனைத்துப் பகுதி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அரசுக்கும், மருத்துவர்களுக்கும் உள்ளது.
உறவினர்கள் கவனத்துக்கு…
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 95 சதவிகிதம் வெற்றிகரமாக நடைபெறுவது கண் அறுவை சிகிச்சைகளே. ஒருவர் உயிருடன் இருக்கையில் தன் கண்களை தானம் செய்வது சட்டப்படி இயலாத ஒன்று. எனவே, ஒருவருடைய மரணத்துக்குப் பின் கண்களை தானமாக வழங்குவதே கண் தானம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் யாராவது திடீரென இறந்துவிடும்போது, அவருடைய கண்களை தானம் செய்ய விரும்பினால் அதிகபட்சம் இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை உடலிலிருந்து எடுத்தாக வேண்டும். எடுத்த கண்களை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இப்படி பெறப்பட்ட ஆரோக்கியமாக உள்ள கண்களையே மற்றவர்களுக்கு பொருத்த முடியும்.
அரசாங்கம் செய்ய வேண்டியவை…
இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களின்போது, உறவினர்களின் ஒப்புதலோடு இறந்தவரின் கண்களை தானம் பெறும் முயற்சியை மருத்துவமனைகள் மேற்கொள்ளலாம். நம் நாட்டில் விபத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர். விபத்துகள் காவல்துறை வழக்குகள் சம்பந்தப்பட்டவை என்பதால் பல்வேறு நடைமுறைகள் முடிந்து 6 மணி நேரத்துக்குள் கண்களைத் தானம் பெற முடியாத நிலை உள்ளது. இப்படி இறப்பவர்களின் கண்களை 6 மணி நேரத்துக்குள் தானம் பெறும் வகையில் உரிய மாற்றங்களை அரசு மேற்கொண்டால் கண்தான பற்றாக்குறையைக் குறைக்க அது பெரும் உதவியாக இருக்கும்.
கண்தானம் செய்யும் வழிமுறை
கண்தானம் செய்வதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. முதலில் கண்தானம் செய்வதாக ஒரு கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையை அணுகி பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்காக 1919 என்ற தொலைபேசி உதவி எண் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தகவலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து, கண் வங்கியின் தொலைபேசி எண்ணையும் அவர்களிடம் கொடுத்து வைத்திருந்தால் இறந்த பிறகு கண்தானம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். ஏற்கெனவே கண் தானத்துக்கான உறுதிமொழி கொடுக்காவிட்டாலும், இறந்த நபரின் உறவினர்கள் விரும்பினால் கண் வங்கியை தொலைபேசியின் மூலம் உடனடியாக அணுகி அதற்கான விதிமுறைகளின்படி கண்தானம் செய்யலாம்.
கண் கொடையாளர் இறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
கண் கொடையாளர் இறந்தவுடன் கண் வங்கிக்கு தகவல் கொடுத்த பின்னர், அந்த குழுவினர் வந்து அவரது உடலிலிருந்து கண்களை எடுக்கும் வரை அவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். கண் இமைகளை முதலில் மூடி வைக்க வேண்டும். அவரை வைத்திருக்கும் அறையிலுள்ள மின் விசிறியை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக குளிர்பதன சாதனத்தைப் பயன்படுத்தலாம்.
இறந்தவரின் தலையை ஒரு தலையணையில் வைத்துச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும். அருகிலிருக்கும் கண் வங்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டாலே போதும். கண் வங்கிக் குழுவினர் கண் கொடையாளரின் வீட்டுக்கு அல்லது மரணம் அடைந்த மருத்துவமனைக்கு சென்று, அவருடைய கருவிழிப்படலத்தினை எடுத்துக் கொள்வார்கள்.
கண்தானத்தால் முகம் சிதையாது
இறந்தவரின் உடலிலிருந்து கண்களை அகற்ற 15 முதல் 20 நிமிடங்களே தேவைப்படும். இறந்தவர்களின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்துவதில்லை. ஒரு நபரின் ஒரு கருவிழிப்படலத்தில் முன்னே 3, பின்னே 3 என்று மொத்தம் 6 அடுக்குகள் இருக்கும். இந்த 6 அடுக்குகளைப் பிரித்தெடுத்து, அதில் தேவையான பகுதிகள் மட்டுமே கண்பார்வை பிரச்னை உள்ள நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.
இந்த நவீன முறையில் ஒரு நபரிடமிருந்து தானமாகப் பெறும் ஆரோக்கியமான 2 கண்கள் மூலமாக 4 நபர்களுக்கு கண்பார்வையைக் கொடுக்க முடியும். கண் தானத்தால் முகம் சிதைவடையும் என்பது ஒரு கட்டுக்கதையே. கருவிழிப்படலத்தை அகற்றுவதால் எந்தச் சிதைவும் ஏற்படாது. கண்கோளம் அகற்றப்பட்ட பின் ஒரு ஒளிபுகும் கண் மூடி அதற்குப் பதிலாக வைக்கப்படுவதால் முகத்தில் எந்த உருக்குலைவும் ஏற்படாது. தேவைப்பட்டால் செயற்கைக் கண்களைகூட பொருத்திக் கொள்ளலாம்.
கட்டணம் எதுவும் இல்லை
கண் மாற்று சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை கண் வங்கி ஏற்றுக்கொள்வதால் தானம் அளிப்பவர் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மனித கண்கள், உடல் உறுப்புகள் அல்லது திசுக்களை விலை கொடுத்து வாங்குவதோ விற்பதோ சட்டப்படி குற்றம் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வது அவசியம்.
சில நிபந்தனைகள்
கண்தானம் என்கிற உன்னதமான செயலை வயது, பாலினம், ரத்த வகை அல்லது மத வேறுபாடுகளைக் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். கண் தான உறுதிமொழியை எந்த வயதிலும் அளிக்கலாம். தானம் அளிப்பவர் மற்றும் பெறுபவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். தானம் அளிக்கப்பட்ட கண்களை வாங்கவோ விற்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிட்ட அல்லது தூரப் பார்வைகளுக்காக கண்ணாடி அல்லது Contact lens அணிபவர்களும், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும்கூட கண் தானம் செய்யலாம்.
நீரிழிவு நோயாளி அல்லது ரத்த அழுத்தம், ஆஸ்துமா நோயாளிகளும் கண் தானம் செய்யலாம். கண்புரை உள்ளவர்களும் கண்தானம் செய்யலாம். ஆனால், தொற்று நோயுள்ளவர்கள் கண்தானம் செய்ய இயலாது. எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, நரம்பியல் பிரச்னைகள், மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் இறந்ததற்கான சரியான காரணம் அறிய முடியாத நிலையில் இருப்பவர்களும் கண் தானம் செய்ய முடியாது.
விழிப்புணர்வு அவசியம்
கண்தானத்தில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு உறவினர்கள் சம்மதம் இல்லாமலேயே கண்கள் தானம் பெறப்படுகின்றன. தங்கள் தேவைக்கும் அதிகமான கண்களை இதர நாடுகளுக்கும் தானமாக அமெரிக்கா வழங்குகிறது. சரியான முறையில் இன்னும் கூடுதல் விழிப்புணர்வினை ஏற்படுத்தினால், இந்த நிலையை இந்தியாவிலும் உருவாக்க முடியும்.
நிறைவாக…
ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடலை மண்ணில் புதைத்து, அதனால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்படும்போதோ எவ்வித பலனுமின்றி போகக்கூடிய அந்த நபரின் ஆரோக்கியமான இரு கண்களை தானமாக கொடுப்பதால், வாழும் நான்கு பேரின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்!

Advertisements

One response

%d bloggers like this: