Advertisements

“ஒதுங்கி டெல்லி வந்துவிடுகிறேன்!” – மோடியிடம் பதவி கேட்ட ஓ.பி.எஸ்

விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறேன்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெஸேஜ். சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘டெல்லிக்கும் பெங்களூருக்கும் அலைந்ததில் ஒரே களைப்பாக இருக்கிறது’’ என்றபடி அமர்ந்தார். ‘‘எதற்கும் டெங்கு இருக்கிறதா  எனப் பரிசோதனை செய்துகொள்ளும். ரணம்… மரணம் என மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு அலட்சியம் காட்டுகிறது’’ என்றோம்.
‘‘தமிழகத்தை டெங்கு ஜுரம் வாட்டிக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வேறொரு ஜுரம் வாட்டுகிறது.’’

‘‘ஓ.பி.எஸ் மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்களே… டெல்லி பயணம் அதற்குத்தானா?’’
‘‘ஆமாம். துணை முதல்வராகப் பொறுப்பேற்றவுடனேயே பிரதமரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க ஓ.பி.எஸ் முயற்சி செய்தார். அப்போது பிரதமர் அலுவலகத்தில் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை. தீவிர முயற்சிக்குப் பிறகு, கடந்த 12-ம் தேதிதான் நேரம் ஒதுக்கினார்கள். நன்றி சொல்லப் போனவர், புலம்பல் புராணத்தைப் பாடிவிட்டு வந்தார்.’’

‘‘என்ன காரணம்?’’  
‘‘அவரை எல்லா விஷயங்களிலும் ஓரம்கட்டி வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு அணிகளும் இணைந்தபோது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்கூட இப்போது துணை முதல்வருக்கு இல்லை. கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவும்போது முதல்வருக்கு அடுத்து துணை முதல்வரைத்தான் அழைத்திருக்கவேண்டும். ஆனால், பன்னீரைப் பத்தாவது நபராகவே மலர்தூவ அழைத்தனர். சம்பிரதாய மரியாதைகளில்தான் இப்படி என்றால், நிர்வாக விஷயங்களிலும் அதேதான் நடக்கிறது.
ஓ.பி.எஸ் துறை சார்ந்த அனைத்துக் கோப்புகளும் எடப்பாடியின் ஒப்புதலுக்குப்பின்தான் நகர வேண்டும் என முதல்வர் தரப்பிலிருந்தே உத்தரவு போடப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தால் ஒரு ஃபைலைக்கூட நகர்த்த முடியவில்லை.’’
‘‘ஓஹோ.’’
‘‘கட்சி மற்றும் அரசு தொடர்பாக நடக்கும் ஆலோசனைகளிலெல்லாம் பன்னீரைத் தவிர்த்து வருகிறார் முதல்வர். தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற விழாவின் மேடையிலும், பன்னீரை கட் செய்துள்ளார்கள். ஆனால், அந்த விழாவில் பன்னீர், கவர்னருக்குப் பக்கத்தில்கூட அழைக்கப்படவில்லை. மாறாக, அமைச்சர்கள் அமர்ந்திருந்த வரிசையில்தான் பன்னீருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதனால் மிகவும் நொந்துபோய் இருக்கிறார். இதையெல்லாம் பிரதமரிடம் சொல்வதற்காக, மைத்ரேயன் எம்.பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகிய தனது ஆதரவாளர்களுடன் பன்னீர் டெல்லி புறப்பட்டபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியான அமைச்சர் தங்கமணியும் அவர் களோடு அனுப்பி வைக்கப்பட்டார். தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதி கேட்கும் மனு ஒன்று, அவசரமாக முதல்வர் அலுவலகத்திலிருந்து தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காகத்தான் பிரதமரை பன்னீர் சந்திப்பது போல காண்பிக்க வேண்டும் என எடப்பாடித் தரப்பு நினைத்தது.’’
‘‘டெல்லியில் என்ன நடந்தது?’’
‘‘புதன் இரவு டெல்லி வந்த ஓ.பி.எஸ், ‘மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்திக்க இருக்கிறேன்’ என்றார். பன்னீர், தங்கமணி உள்பட ஐந்து பேரும் பிரதமரைச் சந்திப்பதாகவே திட்டம். ஆனால், வியாழன் காலையில், ‘பிரதமரைச் சந்திக்க துணை முதல்வரோடு மைத்ரேயனுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. உங்களுக்கில்லை’ என்று அமைச்சர் தங்கமணியிடம் தகவல் சொல்லப்பட, அவர் வெகுண்டெழுந்தார். ‘ஏன் என் பெயர் சேர்க்கப்படவில்லை. இங்கிருந்து அனுப்பினீர்களா இல்லையா..?’ என்று தமிழ்நாடு ஹவுஸ்  அதிகாரிகளிடம் கோபத்தில் பொங்கினார். ஆனால், அன்று காலைதான் மைத்ரேயன் மட்டும் உடன் வருவதற்குப் பிரதமர் அலுவலகம் இசைவு வழங்கியிருக்கிறது. தமக்கு அனுமதியில்லை என்றான பிறகு என்ன செய்வது என்று யோசித்த தங்கமணி, ஆர்.கே.புரத்திலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று குமுறலோடு வழிபாடு செய்தார். பின்னர், அங்கிருந்து சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு வந்தார்.’’
‘‘பிரதமர் அலுவலகத்தில் என்ன நடந்ததாம்?’’
‘‘பிரதமருடனான 20 நிமிட சந்திப்பின்போது, துணை முதல்வர் ஆனதற்கு நன்றி தெரிவித்ததோடு சில கோரிக்கைகளையும், புகார்களையும் ஓ.பி.எஸ் முன்வைத்துள்ளார். ‘உங்கள் விருப்பப்படியே இணைப்புக்கு ஒத்துழைத்தோம். ஆனால், முதலமைச்சர் எங்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. புறக்கணிக்கப்படுவதாகவே உணர்கிறோம்’ என்று தன் வேதனைகளைக் கொட்டியிருக்கிறார் பன்னீர். அனைத்தையும் பிரதமர் மோடி அமைதியாகக் கேட்டிருக்கிறார். எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். இறுதியாக, ‘ஒதுக்கப்பட்டவனாக சென்னையில் இருப்பதைவிட, அங்கிருந்து மொத்தமாக ஒதுங்கி டெல்லிக்கு வந்துவிடுகிறேன். மத்திய அரசில் அ.தி.மு.க-வுக்கு இடம்கொடுத்து எங்களுக்கு உதவுங்கள்’ என்று பன்னீர் சொன்னபோது பிரதமர் ஏறிட்டுப் பார்த்து, ‘பொறுத்திருங்கள். பார்க்கலாம்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.’’
‘‘ம்’’
‘‘பின்னர் தமிழக இல்லம் வந்த பன்னீர், உடனே செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. அறைக்குச் சென்றுவிட்டு வந்து பேசுவதாகச் சொன்னார். 15 நிமிடங்கள் கழித்து, நான்கு பேருடனும் வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். ‘பிரதமரிடம் மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைத்ததாக அவர் சொன்னபோது, ‘மின்துறை அமைச்சரை ஏன் உடன் அழைத்துச் செல்லவில்லை’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். உடனே அமைச்சர் தங்கமணிக்கு முகத்தில் உற்சாகம் கரைபுரண்டது.
ஓ.பி.எஸ், ‘மின்துறை அமைச்சர், பிற்பகலில் மத்திய மின்துறை அமைச்சரைச் சந்திக்க இருக்கிறார்’ என்று அமைதியாகச் சமாளித்தார். பிரதமருடனான இந்தச் சந்திப்பு பலன்தரும் என்று ஓ.பி.எஸ் முழு நம்பிக்கையில் இருக்கிறார். எடப்பாடி தரப்பில் பிரதமர் அலுவலகத்தோடு நெருக்கத்தில் இருக்கும் தங்கமணியை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு மோடி நேரம் ஒதுக்கியதால் எழுந்த நம்பிக்கை இது.’’
‘‘சசிகலா பரோல் முடித்துச் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு அவருடைய குடும்ப உறவுகள் கொஞ்சம் தெம்பாக இருப்பதுபோல் தெரிகிறதே?’’ எனக் கழுகாரை சென்னைக்கு இழுத்து வந்தோம்.
‘‘ஆம். குறிப்பாக டி.டி.வி.தினகரன் தெளிவடைந்துள்ளார். அவருடைய செயல்பாடுகளில் ஒரு நிதானம் ஏற்பட்டுள்ளது. சசிகலா வந்த அன்று, ‘அண்ணன் பழனிசாமி, பிறகு அந்தப் புலிகேசிகளின் ஆட்சியைக் கலைப்பேன்’ என்று சொன்னவர், அதன்பின் அப்படிப் பேசுவதில்லை. ‘முதல்வரை மாற்ற வேண்டும், ஊழல் செய்த சில அமைச்சர்களை மாற்ற வேண்டும்’ என்ற பழைய பல்லவிக்கே மீண்டும் வந்துள்ளார். இதற்குக் காரணம், சசிகலாவின் ஆலோசனைதான். ‘ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசுவதை விடு. இந்த ஆட்சி அக்கா ஏற்படுத்தியது. இதைக் கலைப்பதாகப் பேசுவது சரியில்லை. பழனிசாமியும், இன்று அவரை ஆதரிக்கும் சிலரும் மட்டும்தான் நம் குடும்பத்துக்குத் துரோகம் செய்துள்ளனர். மற்றவர்கள் நாம் சொல்லும் வழியில்தான் போவார்கள். அவர்களில் யாரும் துரோகியில்லை. யாரும் மாற்றுக் கட்சியில் போய்ச் சேரவில்லை. அதனால், ஆட்சியைத் தொந்தரவு செய்யாதே. அதை நாம்தான் கலைத்தோம் என்ற அவப்பெயர் நமக்கு வேண்டாம். அவர்களே கலைந்து விடுவார்கள்’ என்று தினகரனிடம் சசிகலா சொன்னாராம்.’’
‘‘அவர்களே கலைந்துவிடுவார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறார் சசிகலா?’’
‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீருக்கும் போய்க்கொண்டிருக்கும் முட்டல், மோதல்கள் பற்றிய தகவல்கள் அவருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இதை வைத்துதான் சசிகலா அப்படிச் சொன்னாராம்.’’

‘‘தினகரனுக்கு வேறு முக்கிய ஆலோசனைகள் எதையும் சசிகலா கொடுத்தாரா?’’

‘‘சிறையிலிருந்து வெளியே வந்த வேகத்தில் தினகரனைத் திட்டினாலும், அதன்பிறகு தட்டிக் கொடுத்தாராம். ‘கட்சியை வழிநடத்துவதை நீ சரியாகச் செய்கிறாய். ஆரம்பத்தில் நீ அவசரப்பட்டு எடுத்த முடிவுகள் தப்பாகப் போய்விட்டன. இப்போது நிதானம் தெரிகிறது. இப்படியே கட்சியை நடத்து. ஆட்சி கலைந்தபிறகோ, அல்லது நான்கு ஆண்டுகள் கழித்தோ வரும் தேர்தலில் நாம் ஜெயிப்பது கடினம். ஆனால், அதன்பிறகு கட்சியை ஒழுங்காக உயிரோடு வைத்திருந்தால்தான் இந்தச் சோதனையில் நாம் வெற்றி பெற முடியும். அதனால், கட்சி வேலைகளை நீ பார்த்துக்கொள். மற்ற சொத்து நிர்வாகம், நிதி விஷயங்களை விவேக் பார்த்துக்கொள்ளட்டும்’ என்றாராம்.’’
‘‘குடும்ப உறவுகளிடம் என்ன பேசினார்?’’
‘‘இளவரசியின் மகன் விவேக்கிடமும், தன் தம்பி திவாகரனிடமும் மனம்விட்டுப் பேசினார். சசிகலாவை பரோலில் அழைத்து வந்ததில், விவேக்கின் பங்கு முக்கியமானது. ‘கட்சி சார்ந்த எல்லா சொத்துகளும் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது. இப்போது, அவரிடம் 80 சதவிகிதப் பணம் ‘லாக்’ ஆகிவிட்டது. கட்சி அலுவலகமும் கையைவிட்டுப் போய்விட்டது. இதிலிருந்து மீண்டு வருவது சாதாரண விஷயமில்லை. வெளிநாட்டு முதலீடுகள், சொத்துகளை நீ ஒழுங்காகப் பார்த்துக்கொள். இதையெல்லாம் வைத்தே எதிர்காலத்தில் கட்சியைக் காப்பாற்ற முடியும். தினகரனோடு ஒத்துப் போங்கள். அவருக்கு யாரும் இடையூறு தர வேண்டாம்’ என விவேக்கிடம் சசிகலா சொன்னாராம்.’’ 
‘‘திவாகரன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளதால் அவர் சசிகலாவைச் சந்திக்கவில்லை என்றார்களே?’’
‘‘டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் சசிகலாவை ஆரம்பத்தில் சந்திக்கவில்லை.இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டுக்கும் அவர் போகவில்லை. 11-ம் தேதி காலையில் அவர் நேராக, நடராசன் சிகிச்சை பெற்றுவரும் குளோபல் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அங்கேதான் சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார்.’’ 
‘‘உறவினர்கள் தவிர்த்து வேறு யாரும் சசிகலாவைச் சந்தித்தார்களா?’’
‘‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 7 பேர் சசிகலாவைச் சந்திக்க வந்துள்ளனர். ஆனால், அவர்களிடம் பேசிய விவேக், ‘பரோல் நிபந்தனைகள் மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களே நிலைமையைப் புரிந்துகொள்ளுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். அதனால், அவர்களும் சந்திக்காமல் சென்றுவிட்டனர். மற்றபடி, வழக்கறிஞர்களை சசிகலா சந்தித்துப் பேசினார். ஆடிட்டர் சுவாமிநாதனைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். அவரோடு கட்சியின் சொத்துகள், குடும்பச் சொத்துகள் பற்றி ஆலோசனை நடத்தினாராம். பின்னர், மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குக் கிளம்பிவிட்டார். சசிகலா போட்டுக் கொடுத்த இந்தப் பாதையில்தான் இனி குடும்ப உறவுகளின் பயணம் இருக்கும்.’’
‘‘சசிகலா வருகையால் டென்ஷனாக இருந்த போலீஸார் இப்போது ரிலாக்ஸாகிவிட்டார்களா?’’
‘‘ஆம். சசிகலா சென்னையில் இருந்தபோது அவர்களுக்கு ஏகப்பட்ட டென்ஷன். கிருஷ்ணப்ரியாவின் வீடு மற்றும் குளோபல் மருத்துவமனையைச் சுற்றி ஐ.எஸ், எஸ்.பி. சி.ஐ.டி போலீஸைக் குவித்து வைத்திருந்தார்கள். சசிகலாவின் ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் ஃபாலோ செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட் அனுப்பும் வேலையில் மண்டை காய்ந்துகொண்டிருந்தனர். ஆனால், சசிகலாவின் பயணம் எந்தப் பிரச்னையும் சலசலப்பும் இல்லாமல் முடிந்ததால், அவர்கள் சசிகலா குடும்பத்துக்கு பெரிய கும்பிடாக வாட்ஸ்அப் மெஸேஜில் போட்டுள்ளனர்.’’
‘‘வாட்ஸ்அப் மெஸேஜிலா?’’
‘‘ஆமாம். எடப்பாடியின் ‘நம்பிக்கைக்குரிய’ சில உயர் போலீஸ் அதிகாரிகள்  சசிகலா குடும்ப உறவுகளோடு, ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப் மெஸேஜில் தகவல் பரிமாறிக்கொண்டுதான் இருந்தனர்; இப்போதும் இருக்கிறார்கள்’’ என்ற கழுகார், சட்டென பறந்தார்.

Advertisements
%d bloggers like this: