தீபாவளி அன்று நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

தீபாவளி என்றுமே குதூகலமும் குடும்ப ஒற்றுமையையும் பாராட்டும் ஒரு நன்னாள். வருடத்திற்கு ஒரு முறைதான் நாம் தீபாவளியைக் கொண்டாடுகின்றோம்.

அதனால்தான் இந்த திருநாளை எதிர்பார்த்து நாம் புதுத் துணிமணிகளை எடுக்கிறோம்; வீட்டை சுத்தம் செய்கிறோம்; பலகாரங்கள் சுடுகிறோம். வேலை செய்பவர்கள் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே அலுவல் வேலைகளை முடித்துக் கொண்டு தீபாவளிக்காக நீண்ட விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர்.

இப்படி தீபாவளிக்கு முன்னமே பல முன்னேற்பாடுகளைச் செய்யும் நாம் தீபாவளி அன்று கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. காலையிலே எழுந்திருக்க வேண்டும்

தீபாவளி அன்று நாம் காலையிலேயே எழுந்து விடுவதுதான் நல்லது. தீபாவளிக்கு முதல் நாள் நீங்கள் என்னதான் கடுமையான வேலை செய்திருந்தாலும், அலுப்பாக இருந்திருந்தாலும் தீபாவளி அன்று காலையில் எழுந்து விடுங்கள். அப்பொழுதுதான் அந்நாளில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். சூரியன் தலைக்கு மேல் வந்த பிறகு நீங்கள் படுக்கையை விட்டு எழுந்தால் உங்களின் பாதி நாள் சந்தோஷம் வீணாகிவிடும். ஒரு நாள் தானே, காலையிலே எழுந்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள்.

2. எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்

தீபாவளி அன்று நீங்கள் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வாரமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது. ஆனால் இந்த பழக்கம் இப்பொழுது தீபாவளிக்கு மட்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உங்கள் உடல் சூடு தணிகிறது. தீபாவளி அன்று நாம் பலவிதமான உணவுகளை உண்போம். இது நம் உடல் சூட்டை அதிகரிக்க வாய்ப்பு அதிகம். ஆக சாங்கியம் எனச் சொல்லி தலையில் மட்டும் சும்மா எண்ணெய் வைத்துக் கொள்ளாமல் உடல் முழுவதும் தேய்த்துக் குளியுங்கள்.

3. பெற்றோர்களின் ஆசீர்வாதம் பெருங்கள்

தீபாவளி அன்று காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்ந்துக் குளித்த பின் நீங்கள் கண்டிப்பாக பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும். அவர்கள் இன்றி ஓர் அணுவும் நம் வாழ்க்கையில் அசையாது. நாம் எப்பொழுதுமே பெற்றோர்களின் ஆசி பெற்றவர்கள்தான். ஆனால் தீபாவளி அன்று அவர்களின் பாதம் தொட்டு அந்த அன்பு உள்ளங்களை மேலும் குளிரவையுங்கள். உங்கள் நாள் அர்த்தமுள்ள நாளாக அமையும்.

4. ஒன்றாக அமர்ந்து காலை சிற்றுண்டி உண்ணுங்கள்

தீபாவளி அன்று குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டி உண்பதில் இருக்கும் சந்தோஷம் எதிலுமே இல்லை. அம்மா சுட்ட இட்லி தோசையுடன் சேர்த்து காரமான கோழிக் குழம்பும் ஆட்டுக் குழம்பும் சாப்பிடும் போது அப்பப்பா! அந்த ருசியே தனிதான். என்னதான் நாம் அன்றாடம் கடையில் இட்டிலி தோசை சாப்பிட்டாலும் தீபாவளி அம்மாவின் கைமணத்தில் மலர்ந்த இட்லி தோசை சாப்பிடுவது தனி சுகம். மேலும் நீங்கள் உங்கள் கையால் அவர்களுக்கு இந்த உணவுகளை பரிமாறுங்கள். அவர்களின் முகமலர்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை.

5. பெரியோர்களுக்கு உதவுங்கள்

தீபாவளி அன்று சிறியவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் மும்முரமாக இருப்பர். விருந்தோம்பல் என்பது தமிழரின் மரபில்லையா. இந்த விருந்தோம்பலுக்கான ஏற்பாடுகளில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். வீட்டை சுத்தம் செய்யவோ, உணவை சமைப்பதற்கோ பெரிவர்களுக்கு உதவி செய்யுங்கள். இது அவர்களின் வேலைப் பளுவை குறைப்பதோடு அவர்களுடன் கலந்துரையாட உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். இது அவர்களை அலுப்பில்லாமால் வேலை செய்ய வழி வகுக்கும்.

6. யார் மனதையும் புண்படுத்தாதீர்கள்

தீபாவளி என்றால எட்டு விதமான கருத்துகள் நாலாப் பக்கத்திலிருந்தும் வருவது இயல்பு. நீங்கள் அந்த கருத்துகளை அலசி ஆராய்ந்து எது பொருத்தமான ஒன்று என முடிவு செய்து அதை செயல்படுத்துங்கள். யாரிடமும் வீண் பிடிவாதமும் கோபமும் கொள்ளாதீர்கள். ஒரு வேளை பெரியோர்கள் சொல்வது தவறாகத் தெரிந்தால் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள். உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது கடினம் ஆனால் உடைத்தெறிவது மிகச் சுலபம். தீபாவளி என்பது உறவுகள் சங்கமிக்கும் ஒரு நாள். ஆக அனைவரின் மனம் அறிந்து செய்ல்படுங்கள். சந்தோஷமான தீபாவளியைக் கொண்டாடுங்கள்!

%d bloggers like this: