எடை குறைப்புக்கு ஏற்ற வழி

உடல் எடை குறைக்க இனி மூச்சு வாங்க ஓடவோ, உடற்பயிற்சி, ஜிம், டயட் என்று சிரமப்படவோ தேவையில்லை. எங்கள் மாத்திரையை மட்டும்
சாப்பிடுங்கள் ஒரே மாதத்தில் எடை குறைந்துவிடும் என்ற விளம்பரங்களை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள்.
இந்த விளம்பரங்களைக் கண்டு மயங்கும் பலர் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, உடல் எடை குறைக்க விரும்பும் இளம்பெண்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் டயட் பில்ஸ் என்று

சொல்லப்படும் இந்த மாத்திரைகள்தான்.
டயட் பில்ஸ்: இவை வேதிப்பொருள்களைக் கொண்ட கலவையாகும். கபைஃன் (Caffeine), எபிட்ரா (Ephedra) போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கும் ஆல்கலாய்டு வகை வேதிப்பொருள்களையும் வேறு சில வேதிப்பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுபவை.
இந்த மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் சாப்பிடக் கூடாது என்பதால், சப்ளிமென்டரி என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்து விட்டார்கள். இது சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில், மாத்திரைகளாக மட்டுமல்லாமல் பிரெட், மில்க் ஷேக் வடிவிலும் கிடைப்பதால், உணவுப்பொருளாக நினைத்து வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
100 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதயப் பாதிப்புகளும் நுரையீரல் பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில் இந்த மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. மற்றபடி, இதைப் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.
தீர்வு?
உடல் பருமனுக்கான காரணம் அறிந்து, வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் நல்லது. மேலும் துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது, நீச்சல், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைப்பதே நல்லது. அதே நேரத்தில் ஓர் உணவியல் நிபுணரின் உதவியுடன் உங்கள் பி.எம்.ஐக்குத் தகுந்த கலோரிகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப சாப்பிடுவதும் அவசியம்.
பாதிப்புகள்
தொடர்ச்சியாக “டயட் பில்ஸ் சாப்பிட்டு வந்தால், அவை ஹார்மோன்களைப் பாதித்துப் பசியின்மையை ஏற்படுத்தும். நாளடைவில், எதிர்மறை ஆற்றல் சமநிலை பாதிப்பை ஏற்படுத்தும். இது, வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும்; ஹார்மோன் குறைபாடுகளை உண்டாக்கி, தைராய்டு மற்றும் சர்க்கரைநோய் வரக் காரணமாக அமையும்.
இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. உணவில் உள்ள சத்துகள் உட்கிரகிக்கப்படுவதைக் குறைப்பதால், உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின், கால்சியம் போன்ற அத்தியாவசியச் சத்துகளில் குறைபாடு ஏற்படும். இதனால் எலும்புகள் வலுவிழந்து, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிப்பதுடன் வளர்ச்சியும் தடைபடும்.
குறிப்பாக டீன் ஏஜிலேயே இந்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், இது பாலியல் ஹார்மோன்களைப் பாதித்துக் குழந்தையின்மைப் பிரச்னையையும்
ஏற்படுத்தும். 30-35 வயதுகளில் உட்கொண்டால், டைப் 2 வகை சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டவுடன்
சில வாரங்களிலேயே உடல் எடை குறைய ஆரம்பிப்பதால், அதன் பக்கவிளைவுகளையும் பாதிப்புகளையும் அறியாமல் மற்றவர்களுக்கும் அவற்றைப் பரிந்துரைக்கிறார்கள். உண்மையில் இதன் பாதிப்புகள் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கழித்துக்கூடத் தெரியலாம்.

%d bloggers like this: