Advertisements

பார்வையை மேம்படுத்தும் பனம்பழம்

தமிழகத்தின் தேசிய மரம் பெருமை பனைமரத்துக்கு உண்டு. அப்படி என்ன சிறப்பு இருக்கிறது இந்த பனைமரத்தில் என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். இந்தியாவில் உள்ள மொத்த பனை மரங்களில், 80 சதவிகிதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. தமிழின் மதிப்புமிக்க சொத்துக்களாக இலக்கியங்களில் பனை மரம் பதிவாகி இருக்கிறது. மாபெரும் இலக்கியங்கள் எல்லாம் பனை ஓலைகளில்தான் எழுப்பட்டன.

கேட்டதைத் தரும் கற்பகத்தரு என்று பனை மரத்தை பழந்தமிழர்கள் அழைத்தனர்.
வாழைக்கு அடுத்தபடியாக, வேரில் இருந்து பூ வரை முழுமையாக பயன்தரும் மரம் பனை. பனையால் செய்யப்பட்ட துடைப்பங்கள், பனை நாரிலிருந்து
கயிறுகள், பனை விசிறி, குடை, காதணிகள், சிறுவர் விளையாடும் காற்றாடி, பனையோலை வெடி, பனங்கள், வாசல் கால்மிதிகள், தடுக்குகள் என,
பனையால் நிறைந்தது தமிழர் வாழ்வு.
இவற்றையெல்லாம் தாண்டி பனை நுங்கு, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனம்பழம், பதநீர், பனங்கிழங்கு என பனை தமிழர் வாழ்வில் தனது அத்துனை பாகங்களாலும் பின்னிப் பிணைந்துள்ளது. பனம் பழம் சிறந்த சத்துணவு. பனம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
தமிழகத்தைப்போலவே தமிழர்கள் மிகுந்து வாழும் யாழ்ப்பாணம், மன்னார், வடமராச்சி ஆகிய பகுதிகளிலும் பனை மரங்கள் அதிகம் வளர்க்கப்பட்டன.
அங்குள்ள தமிழர்கள் பனம்பழத்திலிருந்து பெறப்பட்ட கூழிலிருந்து ஜாம், குளிர்பானங்கள், உணவுப்பொருட்களை தயாரித்தனர்.
பனம்பழத்திலிருந்து ஒருவித துணிசோப்பினை உருவாக்கினர். போர்க்காலங்களில் வேதியியல் பொருட்களால் ஆன துணிசோப்புக்கள் கிடைக்காத போது பனம்பழங்களையே அதற்குப்பதிலாக பயன்படுத்தினர். பனம்பழத்திலிருந்து ஒருவித பற்பசையையும் கண்டுபிடித்து அதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். பழம் ருசிக்க சுவையானது. ஏனைய பழங்களைப் போல் பனம்பழத்தை நேரடியாக உண்ண மாட்டார்கள். இதனை நெருப்பில் சுட்டு உண்பது தமிழகத்தில் வழக்கம். நெருப்பில் சுட்ட இப்பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், களியைப் பிழிந்து உண்பார்கள். இக்களியை பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருட்களையும் செய்வது உண்டு.
தமிழகத்தில் பனம்பழத்தை சுட்டு வெல்லம் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உண்டு. பனங்கற்கண்டு இருமலுக்கும், சளித் தொல்லைகளுக்கும் சிறந்த மருந்து. பனங்கிழங்கும் வேகவைத்து சாப்பிட தோதான மாலை நேரத்து விருந்து. சுடவைத்த பாலில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது சில தொழில் முறை பாடகர்களுக்கு குரல் வளம் காக்கும் உபாயமாக இருக்கிறது.
சேர மன்னர்கள் போருக்குச் செல்லும்போது தங்கள் வெற்றியை உறுதி செய்யும் விதமாக பனம் பூவைச் சூடிச் செல்வர். பனையிலிருந்து பெறப்படும் நுங்கும், பனங்கற்கண்டும் மட்டுமே இன்றைக்கு பெரும்பாலும் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. பதநீர் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது.
பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் பற்கள் உறுதிப்படுகின்றன. உடல் வெப்பம் தணிக்கப்படுகிறது. பனை மரம் வெறும் தாவரம் மட்டும் அல்ல; தமிழர் வாழ்வின் அடையாளமாகவும் விளங்குகிறது.

Advertisements
%d bloggers like this: