Advertisements

செம்மரத்தை ஏன் கடத்துகிறாங்கன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? இதான் ரகசியம்!!

ஆந்திராவில் செம்மரம் வெட்டிய தமிழக இளைஞர்கள் கைது, துப்பாக்கிச்சூடு, இதுபோன்ற ஏராளமான செய்திகளை நாம் அடிக்கடி படித்தாலும், வழக்கமான நிகழ்வாக அதைக்கடந்து செல்கிறோம், பின்னர் மறந்தும் போகிறோம்!

என்ன இருக்கிறது அந்த மரத்தில்? ஏன் அதை வெட்டிக் கடத்துகின்றனர்? சந்தனத்தை விட விலை உயர்வானதா? ஏன் தமிழக ஆட்கள் மட்டும் மாட்டிக்கொள்கின்றனர்? இதுபோல, விடைதெரியாத கேள்விகள் பல, நம்மில்!

சங்க இலக்கியத்தில், வேங்கை மரம் என்று அழைத்துவந்த மரமே, இந்த செம்மரம் என்று சிலர் கூறினாலும், வேங்கை மரம் வேறு, ஆயினும் வேங்கையின் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தின் நடுப்பகுதி இரத்தம் போல தோன்றுவதாலும், சந்தனத்தின் குண நலன்கள் கொண்டிருப்பதாலும், செஞ்சந்தன மரம் அல்லது சந்தன வேங்கை என்று அழைகின்றனர்.

Reasons for Why there is always demand for Red Sandalwood Tree

பண்டைக்காலத்தில், வெண் சந்தனம், செஞ்சந்தனம் என்று சிலவகை சந்தனங்கள் இருந்தன, அதில், சிவப்பு வண்ண சந்தனம், இந்த செம்மரச் சந்தனமாகும். மேலும், அக்காலத்தில், சந்தன மரத்தையும், செஞ்சந்தன மரத்தையும் வேறுபடுத்தி பார்ப்பதில், குழப்பம் இருந்திருக்கிறது, நறுமணம் வீசும் இரு மரங்களும் ஒன்றாகத் தோன்றினாலும், அவற்றின் பட்டைகளின் நிறங்களைக் கொண்டே, வகை பிரித்தார்கள்.

நறுமணம் கமழும் மலர்களைக்கொண்ட சந்தன வேங்கை, அக்கால மகளிரின் கூந்தலை அணிசெய்வதாக அமைந்தது. பொதுவாக செம்மரங்கள் மலைப்பகுதிகளிலேயே, ஒரே வளர்விடத்தில் மட்டும் வளரும் இயல்புடையவை.

முதிர்ச்சியடைய பல காலம் :

மலைக்காடுகளில் வளரும் இயல்புடைய வேங்கை மரங்கள், நான்கைந்து ஆண்டுகளில் முப்பது அடி உயரம் வளரக்கூடியவை, ஆயினும் இவற்றின் மரம் நன்கு பருத்து முதிர்ச்சியடைய, இருபத்தைந்து ஆண்டுகள் வரை ஆகிவிடும். தமிழகத்தின் எல்லையாக பண்டைக்காலத்தில் விளங்கிய வேங்கட மலை என்னும் பெயர், அங்கு அபரிமிதமாக வளர்ந்த நறுமணம் தரும் வேங்கை மரங்களால் உண்டான காரணப்பெயராகும். காலப்போக்கில், கடத்தல்காரர்களால் வெட்டப்பட்டு, இன்று கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருக்கிறது, இந்த சந்தன வேங்கை மரங்கள்.

இந்த மரங்கள் ஓரிடத்தில் மட்டும் வளரும் இயல்புடையவை ஆதலால், கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரின் காடுகளில், ஆந்திரத்தின் திருப்பதி மலை, இராயல சீமா பகுதிகளில் சொற்ப அளவிலேயே இந்த மரங்கள் காணப்படுகின்றன.

சகல நோய்களுக்கும் நிவர்த்தி :

இல்லை!. செம்மரம் சித்த மருத்துவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, சரும வியாதிகள், மூலம், சர்க்கரை பாதிப்பு, கைகால் மூட்டு வீக்கம், விஷக்கடிகள் மற்றும் பாக்டீரியா, புற்றுவியாதிகள் இவற்றைப் போக்குவதில், அரு மருந்தாகப் பயன்படுகின்றன.

சரி, இதனால்தானா, செஞ்சந்தன மரத்தை கடத்துகிறார்கள்? இதுவும் இல்லை!, இன்னும் இருக்கிறது. அதற்கு முன், மனிதர்களுக்கு வேறுவிதத்திலும் நன்மைகள் தரும் செஞ்சந்தன மரத்தின் பலன்களைப் பார்த்துவிடுவோம்.

சரும நிறத்தை மாற்ற :

இன்றைக்கு மனிதர்கள், வியாதிகளை குணப்படுத்த செய்யும் செலவைவிட, உடல் உறுப்புகளை அழகு படுத்துவதிலேயே, மிக அதிக செலவுகளை செய்கின்றனர். முகத்தை அழகுபடுத்துவது, உடல் சரும நிறத்தை மாற்றுவது, கருப்பு நிறத்தை சிவப்பாக்குவது, சிவப்பு நிறத்தை வேறு வண்ணத்தில் மாற்றுவது என்று, இன்றைய நவ நாகரிக உலகின் ஆசாபாசங்களும், இந்த சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளும், நாம் கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத அளவில், இருக்கின்றன.

அழகு சாதன பொருட்கள் :

இந்த வகை நிற மாற்று சிகிச்சைகளில், சந்தன வேங்கை எனும் செஞ்சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைகளில் உள்ள, டீரோஸ்டில்பீன்கள், சிடோஸ்டேரோல், மீத்தைல் அங்கோலெனேட் போன்ற வேதிப்பொருட்களே அதிக பலன்கள் தருகின்றன. அழகு சாதன தயாரிப்பிலும், சிறந்த பலன்கள் தருகின்றன.

 

ஆண்மைக் குறைபாடு :

இவற்றோடு, ஆண்களின் ஆண்மைக் குறைபாட்டை போக்க, சிறந்த தீர்வாக விளங்குகிறது. மேலைநாடுகளில் வயாகரா எனும் ஆண்மைக் குறைபாட்டு மருந்து தயாரிப்பில், சந்தன வேங்கை மரத்தின் வேதிப்பொருட்களே, பெருமளவு பயன்தருவதாக அறியப்படுகிறது.

இந்த அழகு மற்றும் ஆண்மைத் தீர்வுகள் எல்லாம் மிக அதிக செலவு பிடிப்பதாலும், செஞ்சந்தன மரங்கள் குறைந்த அளவில் இருப்பதாலும், இதைக் கடத்துகின்றனரோ?

 

இருக்கலாம்! ஆயினும் இன்னும் ஒரு காரணமும் உண்டு:

மனிதருக்கு பல வித நன்மைகள் தரும் தன்மைகள் இந்த மரத்தில் காணப்பட்டாலும், இவை எல்லாவற்றையும்விட, மிகப் பெரிய நன்மையாக, ஏன் மனித குலத்துக்கே பேருதவியாக விளங்கும் தன்மை, இந்த மரத்துக்கு உள்ளது, அதனாலேயே, இந்த மரத்தை அதிக அளவில் கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்கின்றனர், என்கின்றனர். செஞ்சந்தன மரங்கள், அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் சக்திமிக்கவை!

 

அணு வீச்சை தடுப்பவை :

அணு உலைகள், அணு ஆயுதங்கள் இவற்றின் கதிர் வீச்சு நேரிடுகையில், அவற்றை தடுக்கும் ஆற்றல் உள்ள உலகின் ஒரே மரமாக, செஞ்சந்தன மரங்களை, ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்!. மேலும், சீன தேசத்தில் இந்த மரங்களை அணுக்கதிர்கள் வெளியேறாமல் தடுக்க, அணு உலைகளின் பாதுகாப்பில், உபயோகிப்பதாகக் கூறப்படுகிறது.

 

மரச்சாமான்கள் செய்ய :

செம்மரம், வேங்கை மரங்கள் இவை யாவும், உறுதியான மரங்களாக, மரச் சாமான்கள் செய்யவும், பலகைகள் செய்யவும் பயனாகின.

ஆயினும் இந்த சந்தன வேங்கை, அதன் வைரம் பாய்ந்த உறுதியான மர அமைப்பினால், வலிமையான மரச்சாமான்கள், இசைக்கருவிகள், விளையாட்டு பொருட்கள், மர வண்டிகள் செய்யப் பயன்பட்டன. மிக வலுவான இந்த மரத்தை பூச்சிகள் அரிக்காது, நீடித்து உழைக்கும். குழந்தைகள் விளையாடும் மரப்பாச்சி பொம்மைகள், இந்த மரத்தில் இருந்தே செய்யப்பட்டன.

சந்தனவேங்கை மரங்கள், வெப்பத்தைப்போக்கி, குளிர்ச்சியை உண்டாக்குபவை, இதனால், இந்த மரங்களை வளைகுடா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், வீடுகளில் நாற்காலி, கட்டிலாக செய்து உபயோகப்படுத்துகின்றனர், இதன்மூலம், உடல் வெப்பம் நீங்கி, உடல் நலமாக வாய்ப்புகள் கிடைக்கிறது.

 

இறக்குமதி

சமீபகாலங்களாக, மத்தியகிழக்கு நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, வளைகுடா நாடுகளான துபாய், குவைத், ஓமன், சவுதி அரேபியா மற்றும் சீனாவும் நம்மிடம் இருந்து அதிக அளவில், செஞ்சந்தன மரங்களை இறக்குமதி செய்தன. ஆயினும் தேவைக்கேற்ற அளவில் கிடைக்காததாலும், ஏற்றுமதிக்கு தடை விதித்ததாலும், கடத்தல்காரர்கள் மூலம், செஞ்சந்தன மரங்களை வெட்டி, சிறு துண்டுகளாக மரத்தை அறுத்து, தூளாக்கி, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.

இதில், சீனா நம்மிடம் தொடர்ச்சியாக செஞ்சந்தன மரங்களை வாங்கியது, ஆய்வாளர்களின் இந்தக்கூற்றை உறுதிசெய்கிறது. சீனாவில் நம் நாட்டைப் போல ஏராளமான மரவகைகள் இருந்தாலும், செஞ்சந்தன மரங்கள் அங்கே இல்லை, என்ன காரணம்?

செஞ்சந்தன மரங்கள், குறிப்பிட்ட வளர்விட தன்மை கொண்டவை. தோன்றிய இடத்தில் மட்டுமே வளரும் தன்மையால், கடத்தல்காரர்கள் மூலம் அதிக விலை கொடுத்து, வெளிநாடுகள் வாங்க முயல்வதை, நாம் அறிய முடிகிறது.

 

எவ்ளோக்கு விற்கும் தெரியுமா?

அரசாங்கமே, சந்தன மரங்களைப் போல, செஞ்சந்தன மரங்களை ஏலம் விடுகிறது, ஒரு டன் சந்தன வேங்கை, தரம் வாரியாக, பதினைந்து இலட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை விலை போவதில் இருந்தே, இதை ஏன் கடத்துகிறார்கள் என்பதும், கடத்தலில், இதன் விலை என்னவாக இருக்கும் என்பதையும், நாம் அறிய முடிகிறதல்லவா?

நம் நாட்டில், அணு உலைகளில், அணுக்கதிர் தடுப்பு பயன்பாட்டில், சந்தன வேங்கை மரங்கள் இல்லையென்ற தகவல் இருந்தாலும், அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதை, அறிய முடியவில்லை.

மனிதர்க்கு உடல்நலம் தரும் மரமாகவும், மனிதனின் தீய நோக்கத்தால் ஏற்படும் அணுக்கதிர் வீச்சை தடுக்கும் மரமாக விளங்கும் சந்தன வேங்கை, அதே மனிதனின் பேராசையால், இன்று அழியும் நிலையில் இருப்பது அனைவருக்கும் வருத்தமே! ஆயினும், அரசுகள் காடுகளில் செஞ்சந்தன மரங்களை அதிக அளவில் நட்டு பராமரிப்பது, இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடிய செய்தியாக, அமையும்

Advertisements
%d bloggers like this: