Advertisements

தேர்தலுக்குத் தயாராகுங்கள்!” – முடுக்கிவிடப்படும் தி.மு.க.

சிறகுகளை விரித்து நம்முன் குதித்த கழுகார், தனது செல்போனில் இருந்த படங்களை வரிசையாகக் காட்டினார். முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்து பார்வையிட்டப் படங்கள் அவை.
‘‘ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு ‘முரசொலி’ அலுவலகத்துக்கு கருணாநிதி வந்ததால், தி.மு.க-வினர் உற்சாகமாக  உள்ளார்களே’’ என்றோம்.
‘‘ஆமாம்! தீபாவளிக்கு மறுநாள் தி.மு.க தொண்டர்களின் வீடுகளில் திடீரென பட்டாசுகள் வெடிக்க, கருணாநிதியின் வருகை காரணமாகிவிட்டது. ‘முரசொலி’ நாளிதழின் பவளவிழாவிற்காக, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில்

உள்ள ‘முரசொலி’ அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் ‘இந்து’ என்.ராமும் சேர்ந்து இதைத் திறந்து வைத்தார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த கருணாநிதி அப்போது அங்கு வரவில்லை.”
‘‘கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே கருணாநிதி வீட்டுக்குள்தானே இருக்கிறார். வெளியே எங்கும் அழைத்துச் செல்லப்படவில்லையே?”
‘‘மருத்துவமனைக்குத் தவிர அவர் வேறெங்கும் செல்லவில்லை. அலர்ஜி அல்லது நோய்த்தொற்று ஏற்படும் என்பதற்காகவே மருத்துவர்கள் அவரை ‘வெளியில் செல்ல வேண்டாம்’ எனச் சொல்லியிருந்தார்கள். மிகமிக முக்கியமானவர்கள் தவிர வேறு யாரையும் அவரைப் பார்க்க அனுமதிக்கவுமில்லை. இந்த நிலையில், ‘முரசொலி கண்காட்சியைப் பார்க்க வைக்க வேண்டும்’ என ஸ்டாலின் சொல்ல… அதற்கு மருத்துவர்களும் அனுமதி தந்தார்கள்.”

‘‘வெளிக்காற்று, பழகிய இடங்களைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கும் என்பதாலும் இருக்கும்.”
‘‘தீபாவளிக்கு மறுநாள் 19-ம் தேதி இரவு, கருணாநிதியின் வாகனம் வழக்கம்போல் தயாரானது. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோருடன் வாகனம் புறப்பட்டது. மகள் செல்வி, அவர் கணவர் செல்வம், கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன், உதவியாளர் நித்யா ஆகியோர் உடன் சென்றார்கள். சுற்றும்முற்றும் பார்த்தபடி சென்ற கருணாநிதி, முரசொலி அலுவலகத்தில் இருந்த நேரம் முழுவதும் உற்சாகமாக அனைத்தையும் கவனித்துள்ளார். ‘நீங்கள் வெளியிட்ட முதல் பொங்கல் மலர் அப்பா’ என்று ஸ்டாலின் சொல்ல, அதை உற்றுக் கவனித்த கருணாநிதி, ‘ம்… ம்…’ என்று தலையசைத்துள்ளார். கருணாநிதியைப் போலவே மெழுகு சிலை வைத்துள்ளார்கள். அதைப் பார்த்த கருணாநிதியிடம், ‘யாரு மாதிரி இருக்குப்பா’ என்று ஸ்டாலின் கேட்க… ‘நான்…’ என்று சைகையில் சொல்லியிருக்கிறார். முரசொலி மாறன் சிலையைக் கீழே இருந்து இஞ்ச் இஞ்ச்சாக பார்த்தார். ஒவ்வொன்றையும் காட்டி அவர் காதருகே சென்று ஸ்டாலின் சொல்ல… அதனை உணர்ந்தவராக தலையசைத்தார். திரும்பி வீட்டுக்கு வந்தபிறகு, ‘எப்படிப்பா இருந்தது கண்காட்சி’ என்று ஸ்டாலின் கேட்க.. கருணாநிதி சிரித்துள்ளார். 15 நாள்களுக்கு ஒருமுறை இப்படி அவரை வெளியே அழைத்து வரத் திட்டம் உள்ளதாம்’’ என்ற கழுகார், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடர்பான செய்திகளை டி.வி-யில் பார்த்தார். பிறகு, ‘‘தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் வருவது நிச்சயம் என மூன்று காரணங்களால் ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார்’’ என்றார்.
‘‘காரணங்களைச் சொல்லும்…’’
‘‘முதல் காரணம், உள்ளாட்சித் தேர்தல். நீதிமன்றக் கட்டளைப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் குட்டு மேல் குட்டு வாங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது எப்படியும் தேர்தலை டிசம்பருக்குள் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு வேறு தேர்தல் ஆணையத்தில் இழுத்துக்கொண்டிருக்கிறது. ‘சின்னத்தை வாங்கியபிறகே தேர்தல்’ என்பதில் ஆளுங்கட்சி உறுதியாக இருப்பதால், மாநிலத் தேர்தல் ஆணையம் தவிக்கிறது. எப்படியும் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அ.தி.மு.க-வுக்குள் பெரும் மோதல்கள் வெடிக்கலாம் என தி.மு.க எதிர்பார்க்கிறது. என்னதான் அணிகள் இணைந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்குமே ஒத்துப் போகவில்லை. மாவட்டங்களில் இரண்டு அணியினரும் இன்னமும் தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என்ற விஷயத்தில் ஒவ்வொரு பதவிக்குமே மோதல் இருக்கக்கூடும். இதனால் கீழ்மட்ட அளவில் கட்சி கலகலத்துப் போகும். பலர் கட்சி மாறுவார்கள், அல்லது அணி மாறுவார்கள் என ஸ்டாலின் கருதுகிறார்.’’
‘‘இரண்டாவது காரணம் என்ன?’’
‘‘தினகரன் பக்கம் வந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கைத்தான் எல்லோருமே உற்றுக் கவனிக்கிறார்கள். சத்தமில்லாமல் இன்னொரு வழக்கும் வேகம் பிடித்திருக்கிறது. இந்த வழக்குதான் அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கும் பிரதான அஸ்திரமாக இருக்கும் என ஸ்டாலின் நினைக்கிறார். அது, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி தி.மு.க சார்பில் போடப்பட்ட வழக்கு. தி.மு.க கொறடா சக்கரபாணி சார்பில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் அல்லவா? அப்போது பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் அந்த நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். பன்னீர் அணியில் இருந்த கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தார். இது அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறிய செயலாகும். 1986-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்ட விதிப்படி, இந்த 12 பேர்மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏன் அவர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யவில்லை என்பதுதான் தி.மு.க-வின் கேள்வி.’’

‘‘அ.தி.மு.க விவகாரத்தில் தி.மு.க எப்படிக் கேள்வி கேட்க முடியும்?’’
‘‘அவை நடவடிக்கை தொடர்பான வழக்கை, பதவியில் இருக்கும் எந்த எம்.எல்.ஏ-வும் தொடர முடியும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இதை உறுதி செய்கிறது. இதை மேற்கோள் காட்டியே சக்கரபாணி வழக்குப் போட்டிருக்கிறார். ‘இந்த வழக்கால் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட 12 பேர் எம்.எல்.ஏ பதவியை இழப்பது உறுதி’ என்கிறார்கள். அதன்பின் வெளிப்படையாகவே இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். இந்தச் சிக்கல் தெரிந்தே வழக்கறிஞர்களுடன் பன்னீர் தரப்பு அவசர ஆலோசனை நடத்தியது. ‘நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சபாநாயகரிடம் அப்போதே விளக்கம் கொடுத்தது போல ஒரு ஃபைல் தயாரித்து விடலாமா?’ என்றும் யோசனை கேட்டார்கள். ஆனால், ‘அப்படிச் செய்ய முடியாது’ என வழக்கறிஞர்கள் கையை விரித்துவிட்டார்கள்.’’
‘‘பிறகு என்ன செய்தார்கள்?’’
‘‘இந்த வழக்கை எப்படியாவது இழுத்தடிப்பதுதான் ஒரே வழி என நினைத்தார்கள். சபாநாயகர்களின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நீண்ட காலமாக நடந்துவருகிறது. ‘உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டு அந்த வழக்கோடு இதை இணைக்கலாம்’ என யோசனை தெரிவித்தார்கள் வழக்கறிஞர்கள். இதைத் தொடர்ந்து செம்மலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க தரப்பு உஷாராகி, ‘எங்கள் தரப்பை விசாரிக்காமல் இதில் முடிவெடுக்கக்கூடாது’ என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு போட்டிருக்கிறது. இதெல்லாம் பன்னீர் தரப்பே எதிர்பார்க்காத திருப்பங்கள்.’’
‘‘மூன்றாவது காரணம் என்ன?’’     
‘‘தி.மு.க-வின் டெல்லி பிரதிநிநிதிகளுக்கு நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்தது. ‘தமிழக அரசைக் கைகழுவிவிட டெல்லி பி.ஜே.பி மேலிடம் தயாராகிவிட்டது’ என்ற தகவல்தான் அது. தமிழக கவர்னராகப் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித், டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசியல் பற்றித்தான் முழுமையாக விவாதித்துள்ளார். ‘தமிழகத்தில் இருக்கும் அரசு எந்தச் செயல்பாடும் இல்லாமல் இருக்கிறது. மாநில அரசுக்கான செயல்பாடுகள், நோக்கங்கள் எதுவுமில்லை. வெறுமனே சில தலைவர்கள் ஊழல் செய்வதற்காகவே இந்த அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்றாராம்.’’
‘‘இதை ஜனாதிபதியிடம் தமிழக கவர்னர் எடுத்துச் சொன்னதன் நோக்கம் என்னவாம்?’’
‘‘ ‘இப்படிப்பட்ட ஒரு அரசை நாம் காப்பாற்றுவது தவறு. ஜனநாயக நாட்டில், கட்சிப் பின்புலமின்றி செயல்படும் ஒரு அரசு இருக்கக்கூடாது’ என்றாராம். ‘வெளிப்படையாக இது, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் பொம்மை அரசு என்ற விமர்சனம் பரவலாக பொதுமக்களால் வைக்கப்படுகிறது. அதனால், இந்த அரசாங்கம் நீடிப்பது மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கும் தமிழகத்தில் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும்’ என்றாராம்.’’
‘‘தமிழக அரசைக் காப்பாற்றுவது பி.ஜே.பி மேலிடம். ஜனாதிபதியோ, கவர்னரோ என்ன செய்துவிட முடியும்?’’
‘‘பி.ஜே.பி மேலிடத்தை எதிர்த்துச் செயல்பட கவர்னர் நினைக்கவில்லை. மாறாக, பி.ஜே.பி மேலிடத்துக்கு நிலைமையைப் புரிய வைக்க நினைக்கிறார். பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் தமிழக அரசியல் நிலவரம் பற்றிக் கலவரத்தோடு பேசினாராம் கவர்னர். ‘இப்படிப்பட்ட ஓர் அணியை ஆதரித்து, அவர்களை ஆட்சி செய்ய வைப்பதால், நமக்கு என்ன நன்மை? ஆட்சி கலைந்தால் அவர்களே மொத்தமாகக் கலைந்து எங்கெங்கோ போய்விடுவார்கள் என்ற நிலையில், அவர்களோடு பி.ஜே.பி கூட்டணி வைப்பதால் கிடைக்கப்போவது என்ன… ஒன்றுமில்லை’ என்றாராம்.’’
‘‘அதற்கு என்ன பதில் கிடைத்ததாம்?’’
‘‘அந்தப் பதில் தி.மு.க-வுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் தி.மு.க வட்டாரத்தில் புது உற்சாகம் பீறிட்டிருக்கிறது. பொதுவாக ஜனவரி மாதம் திருத்திய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான பணிகள் முந்தைய ஆண்டின் அக்டோபரில் தொடங்கும். தேர்தல் இல்லாத ஆண்டுகளில் இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை. 2018-ம் ஆண்டுக்கான தமிழக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இதில் நடைபெறும் திருத்தங்கள் பற்றி விழிப்போடு கண்காணிக்க, ஆலந்தூர் பாரதி தலைமையில் ஒரு குழுவை தி.மு.க அமைத்துள்ளது. ஜனவரிக்குப் பிறகு எந்த நேரத்திலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கலாம் என மு.க.ஸ்டாலின் நம்புகிறார். அதற்காக தி.மு.க-வினரை முடுக்கிவிட அவர் தயாராகிறார். நவம்பரில் மீண்டும் ‘நமக்கு நாமே’ பயணம் போகிறார் அவர். சென்னையில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிக்கு மம்தா பானர்ஜியை அழைக்க உள்ளார்கள். முக்கிய நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி போன்ற அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பயணத்தின் நிறைவுப் பொதுக்கூட்ட மேடைக்கு ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி வரக்கூடும் என்கிறார்கள்.’’ 
‘‘சரி… இரட்டை இலை விவகாரம் என்ன நிலையில் இருக்கிறது?’’
‘‘தேர்தல் ஆணையத்தில் நடக்கும் வழக்கில், இன்னமும் முக்கிய விஷயமே விவாதிக்கப்படவில்லை. மாறாக, ‘பிரமாணப் பத்திரங்கள் சமர்ப்பித்ததில் முறைகேடு நடந்துள்ளது’ என தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கொடுத்த புகாரிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது. தினகரன் அணி சார்பில் முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகியிருந்தார்.’’
‘‘விசாரணையில் என்ன நடந்ததாம்?’’
‘‘தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘ஆசை வார்த்தை காட்டியும், சிலரிடம் மிரட்டியும் கையெழுத்துகள் வாங்கப்பட்டுள்ளன. சிலர் என்னவென்றே தெரியாமல் வெறுமனே கையெழுத்துப் போட்டுள்ளனர். அப்படிப் போட்டவர்கள் ஆறு பேரை நாங்கள் அழைத்து வந்துள்ளோம். அவர்கள் பெயர் விவரங்களை இந்த சீலிட்ட கவரில் வைத்து ரகசியமாக உங்களிடம் கொடுக்கிறோம். அவர்கள் யாரென்று தெரிந்தால், மிரட்டி அவர்களையும் விலைக்கு வாங்கிவிடுவார்கள். அவர்களிடம் இப்போதே விசாரணையைத் தொடங்க விரும்பினால், நாங்கள் அவர்களை ஆஜர்படுத்துகிறோம்’ என்றனர். ‘எங்களுக்கு ஆதரவாகக் கையெழுத்துப் போட்டவர்களை அவர்கள்தான் மிரட்டியுள்ளனர். ஆசை வார்த்தை காட்டி இன்று மாற்றியுள்ளனர்’ என்று பன்னீர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பன்னீர் தரப்பு அவகாசம் கேட்டதால், 23-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை விவகாரத்தை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’

‘‘காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வில் முறைகேடு எனத் தேர்தல் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளாரே?’’
‘‘தேர்தல் ஆணையத்தின் நிர்பந்தத்தால் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு உள்கட்சித் தேர்தலை நடத்தினர். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, கிளை கமிட்டி தலைவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர, 685 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அதிகாரிகளாக வட மாவட்டங்களுக்கு பாபிராஜு, தென் மாவட்டங்களுக்கு சஞ்சய் தத் ஆகியோரை டெல்லி காங்கிரஸ் கமிட்டி நியமித்திருந்தது. இவர்களில் பாபி ராஜு பற்றி டெல்லிக்கு ஏகப்பட்ட புகார்கள் பறந்தன. அவர் செய்த நியமனங்களை மறு ஆய்வு செய்ய சஞ்சய் தத்தை ராகுல் காந்தி நியமித்துள்ளார். அவர், வட மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலைச் சரிபார்க்கிறார்.’’

‘‘இந்தக் குளறுபடிகளுக்கு யார் காரணம்?’’
‘‘எல்லா விரல்களும் மாநிலத் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் பக்கமே நீள்கின்றன. அவரின் உறவினர்கள் இரண்டு பேரும், அரசரின் மகனும் உள்கட்சித் தேர்தல்களில் தலையிட்டு அரசியல் செய்துள்ளனர். மேலும், சென்னை புறநகரில் உள்ள பில்டிங் கான்ட்ராக்டர் ஒருவரும் அரசர் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துகொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக ராகுல் காந்திக்குப் புகார் போயிருக்கிறது. அரசரிடம் இதையெல்லாம் கேட்டுள்ளார் ராகுல். இந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் காந்தியைத் தலைவராகத் தேர்வு செய்யவிருக்கிறார்கள். ராகுல் பொறுப்புக்கு வந்தவுடன், அகில இந்திய மற்றும் மாநில காரிய கமிட்டி உறுப்பினர்கள், மாநிலத்  தலைவர்கள் நியமனங்கள் நடைபெறும். அப்போதுதான் அரசரின் நிலை தெரியும்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: