Advertisements

வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம்!

குழந்தையின்மை அபாயத்தைத் தவிர்க்க வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம் என்பதையே ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். அதனால், மகப்பேறு மருத்துவர் கிருத்திகாதேவியிடம் இதுபற்றிக் கேட்டோம்…‘‘இது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். முன்பு பெண்களுக்கு இளவயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், இப்போது வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகு கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுவது அதிகரித்துவருகிறது.

ஆண்களுக்கு இந்த பயம் எப்போதும் உண்டு என்பதால் அவர்கள் சாதாரணமாகவே 35 வயதைத் தாண்டிவிடுகிறார்கள். நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் முறை, நைட் ஷிஃப்ட் வேலைகள் என்று எல்லாமே இன்று தலைகீழாகி வருகிறது. துரித உணவுகள், உடல் பருமன் போன்ற காரணங்களாலும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைகின்றன. மாசடைந்துவரும் சுற்றுச்சூழலும், அதிகளவு பிளாஸ்டிக் பயன்பாடும் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கிறது’’ என்கிற கிருத்திகா தேவி, மாற்றிக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை அறிவுறுத்துகிறார்.
‘‘திருமணமான பின்னரும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை சில தம்பதிகள் தள்ளிப் போடுகின்றனர். வீடு வாங்குவது, புரோமோஷன் போன்று தங்கள் திட்டமிடல்களை காரணம் காட்டுகின்றனர். குழந்தைப்பேறு என்பது ‘பருவத்தே பயிர் செய்’ என்ற தத்துவத்தில் அடங்கியிருக்கிறது. அதனால், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடக் கூடாது. பிரபலங்களைக் காரணம் காட்டி, ‘அவர்கள் 40 வயதில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்களே’ என்று சொல்வதும் சமீபத்தில் டிரெண்டாக இருக்கிறது.
இது தவறான முன்னுதாரணம். பிரபலங்கள் கருமுட்டை தானம் பெற்று கருவடைகிறார்களா அல்லது எதன் மூலம் கருவடைகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியாதபோது, அவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வது மேலும் சிக்கலுக்கே வழிவகுக்கும். Reproductive biological clock என்கிற இனப்பெருக்க உயிரியல் கடிகாரம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், திருமணமாகி எத்தனை நாள் ஆகிவிட்டது என்று பார்ப்பதைவிட எந்த வயதில் திருமணம் செய்து கொண்டோம், அதன்பின் எவ்வளவு நாளுக்குப்பிறகு கருவுறவில்லை என்பதையும் தம்பதியர் கருத்தில் கொள்ள வேண்டும்.
38 வயதில் திருமணம் செய்து கொள்ளும் ஒருவர் 6 மாதங்களுக்குப் பிறகும் கருவுறவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே மாதவிடாய் தள்ளிப்போவது, அப்போது ஏற்படும் வலிகள் போன்றவை திருமணத்துக்குப்பின் கருவுறுதலில் ஏற்படும் சிக்கலை வெளிப்படுத்தும் அறிகுறிகள். இவர்களுக்கு PCOS, Endometriosis போன்ற பிரச்னைகள் இருக்கக்கூடும் என்பதால் திருமணத்துக்கு முன்பு ஒருமுறை ஸ்கேன் செய்து பார்த்து சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
தாமதப்படுத்தினால் இவை கருமுட்டைகளை அழிக்கத் தொடங்கிவிடும். பருவமடைவதில் தாமதம் ஏற்படும் பெண்கள், மார்பக வளர்ச்சி குறைவான பெண்கள் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதையும் அறிவுறுத்துகிறோம். ஆண்களை எடுத்துக் கொண்டால், சிறுவயது பையன்களுக்கு விதைப்பை இறங்காமல் இருக்கும் அல்லது விதைப்பையில் அடிபட்டிருந்தாலோ அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அவர்கள் திருமணத்துக்கு முன்பு சோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்கிறார்.

Advertisements
%d bloggers like this: