ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட தி.மு.க., தயக்கம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால், இரண்டாம் இடமே கிடைக்கும்
என, உளவுத்துறை சர்வேயில் தெரிய வந்துள்ளதால், போட்டியிட, தி.மு.க., தயக்கம் காட்டுகிறது.
‘இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தொடர்புடைய, முதல்வர் பழனிசாமி, ஏழு அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என, தேர்தல் கமிஷனிடம் மனு தாக்கல் செய்துள்ள, தி.மு.க., இப்பிரச்னையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவால், காலியிடம் ஏற்பட்ட, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டபோது, ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடா புகார் விவகாரம் தொடர்பாக, கடைசி நேரத்தில், தேர்தல் ரத்தானது. இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

மதுசூதனன்

ஆளுங்கட்சி சார்பில், அவைத்தலைவர், மதுசூதனன் மீண்டும் போட்டியிடுகிறார்.

விரைவில், ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கூடி, அதிகாரப்பூர்வமாக, அவரை வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. தி.மு.க., சார்பில், மீண்டும், மருதுகணேஷ் போட்டியிட விரும்புகிறார். காமராஜர் சகோதரியின் பேத்தி, மயூரி மற்றும் ஜெ.,வை எதிர்த்து போட்டியிட்ட, சிம்லா முத்துசோழன் ஆகியோரும், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புகின்றனர்.
இந்நிலையில், டிச., இறுதிக்குள் தேர்தல் நடந்தால், ஆளுங்கட்சி வெற்றிபெறும்; தி.மு.க.,வுக்கு இரண்டாம் இடமே கிடைக்கும் என, உளவுத்துறை எடுத்துள்ள சர்வேயில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த, தி.மு.க., மேலிடம், தேர்தலை சந்திக்க விரும்பாமல், தேர்தல் கமிஷனிடம் புகார் மனு அளிப்பது, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அனுதாப அலை இன்னும் நீடிக்கிறது. அங்கு, கட்சியை பலப்படுத்தும் பணிகளில்,தி.மு.க.,ஈடுபடவில்லை. ஏற்கனவே, வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணி களை பார்க்காமல், தற்போது ஆய்வு செய்து, 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என, கண்டறியப்பட்டுள்ளது.

பின்னடைவு

இந்நிலையில் தேர்தல் நடந்தால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என,

Advertisement

கட்சி மேலிடம் கருதுவதால், தேர்தலில்போட்டியிட தயக்கம் காட்டி வருகிறது. எனவே தான், ‘தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விபரங் களில் தொடர்புடைய, முதல்வர் பழனிசாமி, ஏழு அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., மனு தாக்கல் செய்து உள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்’

சென்னை, கொளத்துாரில், ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும், 4.78 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் கமிஷனர், லக்கானி கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில், 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை, தி.மு.க., ஆதாரங்களுடன் புகார் அளித்தும், நீக்கப்பட வில்லை. அவர்களை நீக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு, வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்த விவகாரமே காரணம்.
இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களில், முதல்வர், அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை கூட, பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு, பின் தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

%d bloggers like this: