சோம்பேறித்தனத்தில் இந்தியர்களுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?!

இது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம் அல்ல…நடைப்பயிற்சியின்போது ஒவ்வொரு நாட்டினரும் சராசரியாக எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறார்கள் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் மிகவும் குறைவாக காலடிகள் எடுத்து வைக்கும் பட்டியலில் இந்தியர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் இந்தியா உள்ளிட்ட 46 நாடுகளில் நடைப்பயிற்சி செய்யக்கூடிய 7 லட்சம் மக்களை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

நடைப்பயிற்சியின்போது காலடிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் வசதியுடைய ஸ்மார்ட்போன்களின் உதவியோடு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகம் சுறுசுறுப்பானவர்களாக சீனர்கள் முதல் இடம்பிடித்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளில் 6 ஆயிரத்து 880 காலடிகளை சீனர்கள் எடுத்து வைக்கின்றனர். 3 ஆயிரத்து 513 காலடிகள் என்ற கணக்கில் அதிக சோம்பலான நாட்டினர் என்ற பெயரை இந்தோனேஷியர்கள் பெற்றிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 297 காலடிகளை எடுத்து வைத்து நடப்பதாக இந்தியர்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இதன்மூலம் சோம்பேறித்தனம் கொண்ட நாடுகள் பட்டியலில் 39-ம் இடம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதிலும் இந்திய ஆண்களைக் காட்டிலும் இந்தியப் பெண்கள் மிகக்குறைவாகவே நடக்கின்றனர் என்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிகரித்து வரும் இந்தியர்களின் உடல்பருமனுக்கு இது முக்கியக் காரணம் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.‘நமக்கு முன்னாடி 38 பேர் இருக்காங்கள்ல’ என்று விளையாட்டாக இதை எடுத்துக் கொள்ளாமல், அலர்ட்டாகிக் கொள்ள வேண்டிய நேரம் இது!

%d bloggers like this: