டெங்கு பயம் வேண்டாம். – ஏழே நாள்களில் நலம் பெறலாம்!

ன்று ஒவ்வொரு கொசுவையும் உயிர்க்கொல்லியாகப் பார்க்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அந்த அளவுக்கு டெங்கு பாதிப்புத் தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தையே அசைத்துப் பார்க்கும்

டெங்கு எப்படிப் பரவுகிறது, தற்காப்பு முறைகள் என்னென்ன, டெங்கு பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து புதுக்கோட்டை மருத்துவர் நவீதா லட்சுமி விளக்குகிறார்.

டெங்கு எப்படி உருவாகிறது?
‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) எனப்படும் டெங்குத் தொற்று உள்ள பெண் கொசுக்களே  டெங்கு பரப்பும் வேலையைச் செய்கின்றன. இந்தக் கொசுக்களின் முட்டைகள் ஓராண்டுவரைகூட அழியாமல் இருக்கும். மழைக்காலங்களில் நல்ல நீர் தேங்கும் இடங்களில் இந்த முட்டைகள் உயிர்பெற்று நோய் பரப்பும் வேலையைச் செய்கின்றன. டெங்கு பாதிக்கப்பட்டவரைக் கடிக்கும் ஏடிஸ் கொசு, பாதிப்பில்லாத ஒருவரைக் கடிக்கும்போது நோய் பரவுகிறது.
என்ன செய்கிறது டெங்கு?
நம் உடலில்  எதிர்ப்பு சக்திகள் உருவானாலும்கூட, டெங்கு வைரஸ் சுனாமிபோல வீரியத்துடன் செயல்பட்டு நம் உடலின் நீர்ச்சத்தைக் குறைப்பதுடன் சோர்வையும் ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி என அடுத்தடுத்த வலிகள் நம்மை முடக்குவதற்கான வேலையைச் செய்கிறது.  அடுத்து ரத்தத்தில் நீர்ச்சத்தைக் குறைக்கிறது. படிப்படியாக ரத்தத்தில் உள்ள தட்டணுக்களைப் பாதிப்பதால், ரத்தத்தின் உறையும் தன்மை மாறி, ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதையே, டெங்குவில் அபாயக்கட்டம் என்கிறோம். இந்தச் சூழலில் உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. அதன் தொடர்ச்சியாக உறுப்புகள் செயல் இழக்கக்கூடும்.
தட்டணுக்களின் தடுமாற்றம்
தட்டணுக்கள் என்பவை ரத்தத்தில் மிதக்கும் ரத்தத் தட்டுகள். உடலில் காயம் ஏற்பட்டு   ரத்தம் வெளியேறும்போது ரத்தத் தட்டுகள் அந்த இடத்துக்கு விரைந்து, ஒரு ஃபைபர் படிவம்போல மாறி ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கின்றன. காயம் பட்ட இடத்தில் ரத்தம் உறைவது இதனால்தான். சாதாரணமாக ஒருவருக்கு ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை ரத்தத் தட்டுகள் ரத்தத்தில் மிதந்துகொண்டிருக்கும். டெங்கு வைரஸின் வேலையே இந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து ரத்த அணுக்களைச் சிதைப்பதுதான். இதனால் டெங்கு வைரஸ் பாதித்தவர்களின் உடலில் பிளேட்லெட் என்று அழைக்கப்படும் தட்டணுக்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் என்கிற அளவுக்குக் குறைகிறது. இதனால் உடலில் சாதாரணமாக உள்ள துளைகளில் இருந்து ரத்தம் வெளியேறுவதுடன் உள் உறுப்புகளிலும் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலிப்பு போன்றவையும் வரலாம். மற்ற வைரஸ் காய்ச்சல்களிலும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். அந்த பாதிப்பு இந்த அளவுக்கு இருக்காது.
ரத்தம் ஏன் தேவை?
டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதனால் உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.  தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது பல், ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை ஆகியவற்றில் ரத்தக்கசிவு ஏற்படும். மலத்திலும் வாந்தியிலும் ரத்தம் வெளியேறும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் கொண்ட ரத்தம் ஏற்றப்படுகிறது. ஒரு பாட்டில் ரத்தத்தில் ஒரு யூனிட் தட்டணுக்கள் மட்டுமே கிடைக்கும்.

தற்காப்பு?

வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதோடு, சுகாதார அலுவலர்களின் உதவியுடன் மருந்து தெளித்து கொசுக்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும். கொசு மருந்துகளைக்கொண்டு முட்டைகளை அழிப்பதன் மூலம் நோய்ப்பரவலைக்  கட்டுப்படுத்த முடியும்.

டெங்குக் காய்ச்சல் பரவியுள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காலை நேரத்தில் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஒருவருக்கு டெங்கு வந்தால், மற்றவர்களுக்கும் கொசுக்கள் வழியாகப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, காய்ச்சல் வந்த உடன் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம். சாதாரணக் காய்ச்சல்தானே என நினைத்து, தாமாகவே மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது கூடாது.

குழந்தைகள் எனில் கூடுதல் கவனம்
டெங்கு தாக்கி மூன்று நாள்கள் வரை அது வெளிப்படாமலே இருக்கலாம். இதனால், கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது அவசியம். குழந்தைகள் சாதாரணக் காய்ச்சலைத் தாங்குவதே கடினம். டெங்கு வைரஸ் தாக்குதலைத் தாங்கும் அளவுக்கு அவர்களின் உடலில் வலு இருக்காது.  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும், வேகமாகத் தட்டணுக்களை இழப்பதுமே, டெங்குவால்   குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படக் காரணம்.
என்ன சிகிச்சை?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுதான் முக்கியம். தொடக்கத்திலேயே கண்டறிந்து, ஏழுநாள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோய் கட்டுக்குள் வரும். காய்ச்சலால் ஏற்படும் சோர்வு மற்றும் வலிகள் இரண்டு வாரங்களில் நீங்கிவிடும். ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால்தான், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு அபாயம் உருவாகும்.
டெங்கு பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் சேர்த்துக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும். ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் அளவைக் கண்காணிக்க வேண்டும். தேவைக்கேற்ப ரத்தத்தை முழுமையாகவோ, தட்டணுக்களாகப் பிரித்தோ செலுத்த வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள குளுக்கோஸ் ட்ரிப்ஸ் போட வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்களைக் கடித்த கொசு, மற்றவர்களைக் கடித்து டெங்குவைப் பரப்பாமல் தடுக்க கொசுவலைப் பாதுகாப்புக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

உணவும் ஓய்வும்
டெங்கு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடல் வலி இருக்கும் என்பதால் ஓய்வு தேவை. உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் நீர்ச்சத்தை அளிக்கும் வகையில் கஞ்சி, இளநீர், பால், பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
என்ன சோதனை?
என்.எஸ்.ஐ.-1 ஆன்டிஜென் பரிசோதனை வழியாக ரத்தத்தில் டெங்குக் கிருமிகளுக்கான ஆன்டிஜென் உள்ளதா எனக் கண்டறியலாம். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்.
டெங்குவுக்குத் தடுப்பூசி உள்ளது!
டெங்கு வைரஸைத் தடுப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. 2013-ம் ஆண்டில் பிரான்ஸ் விஞ்ஞானி களால் ‘டெங் வேக்சியா’ என்கிற தடுப்பூசி கண்டறியப்பட்டது. 2015-ல் அந்தத் தடுப்பூசியை பிரேசில், இந்தோனேசியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா உள்பட 18 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்தியா நான்கு ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களில் இந்தத் தடுப்பூசிக் குறித்து ஆய்வு செய்துள்ளது. நோய்க் கிருமியைப் போதிய அளவு கட்டுப்படுத்தவில்லை என்றொரு  காரணத்தைக் கூறி, அந்தத் தடுப்பூசியை இந்தியா அனுமதிக்கவில்லை.
உண்மையில் இது மட்டுமே காரணம் இல்லை. இந்தத் தடுப்பூசியை ஒருவருக்குப் பயன்படுத்த 2,000 ரூபாய் வரை செலவாகும். மூன்று டோஸ் போட வேண்டும். ஒன்பது வயதில் இருந்து 45 – 65 வயது வரைகூட சில நாடுகள் டெங்குத் தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன. நம் நாட்டில் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த நிறைய பணம் தேவைப்படும் என்பதாலேயே அரசு அனுமதிக் காமல் உள்ளது.  ஆண்டுக்கு ஆண்டு டெங்குவின் பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் இந்திய அரசு இதற்கான புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2012-ம் ஆண்டு திட்டக்குழுவில் மருத்துவ ஆராய்ச்சிக்கு என 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் 50 சதவிகிதம்கூட ஆராய்ச்சிகளுக்கு வழங்கப் படவில்லை. இந்தியாவில் நவீன் கண்ணா தலைமையில் விஞ்ஞானிகள் குழு டெங்குவுக் கான தடுப்பூசியைக் கண்டறிந்து ள்ளது. இதை கிளினிக்கல் டெஸ்ட் செய்யவும் அரசு முயற்சி எடுக்கவில்லை. டெங்கு பாதிக்காத குரங்குக்கு  இந்த மருந்தைச் செலுத்தி ஆய்வுசெய்ய வேண்டும். அமெரிக்காவில்தான் இந்த ஆய்வைச் செய்ய முடியும். இதற்கு கோடிக்கணக்கில் நிதி தேவை. இன்ஃபோசிஸ் நிறுவனம் இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன்பின்னும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்தத் தடுப்பூசியும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலே உள்ளது.
குறிப்பிட்ட ஒரு மருந்தைத் தொடர்ந்து கொடுக்கும்போது வைரஸ் கிருமி அதைவிட வீரியம் மிக்கதாக  வளர்ந்துகொண்டே இருக்கும். டெங்குவுக்கு எதிராக நிலவேம்பு செயல்படுகிறதா என்பதையும் அரசு ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இன்று பரவி வரும் டெங்கு வைரஸின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அதற்கு எதிராகச் செயல்படும் தடுப்பு மருந்தைக் கண்டறிந்து மக்களுக்கு அளிக்க வேண்டியது அரசின் கடமை.


 

வெற்றிவேந்தன், சித்த மருத்துவர்
நிலவேம்பு உதவுமா?
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு, பப்பாளிச் சாறு தவிர, வேறென்ன மருந்துகள் உள்ளன? சொல்கிறார் சேலம் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் வெற்றிவேந்தன்.
“நிலவேம்புக் கஷாயம் தடுப்பு மருந்தாகப் பயன்படுவதோடு, டெங்குக் காய்ச்சலின் வீரியத்தையும் கட்டுப்படுத்துகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தட்டணுக்கள் குறைவதைத் தடுக்க பப்பாளிச்சாறு கொடுக்க வேண்டும். இதேபோல டெங்கு பாதித்தவர்களுக்கு ஆடாதொடை மனப்பாகு ஐந்து மில்லி வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுப்பதன் மூலம் தட்டணுக்கள் குறைவதைத் தடுக்கலாம். பிரம்மானந்த பைரவ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப் படுகின்றன. இரும்புச்சத்து குறைபாட்டைத் தடுக்க மாதுளை மனப்பாகு மாத்திரை, கேப்சூல் மற்றும் திரவ வடிவிலும் கிடைக்கிறது.
நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சம் வேர், சந்தனம், பேய்ப்புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படகம் ஆகிய ஒன்பது மூலிகைகள் கலந்தே நிலவேம்பு பவுடர் வடிவில் கொடுக்கப் படுகிறது. டெங்கு வைரஸ் உடலில் ஏற்படுத்தும் பிரச்னைகளைத் தடுக்க, இவை பல விதங்களிலும் செயல்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 200 மில்லி தண்ணீரில் ஐந்து கிராம் நிலவேம்பு பொடி சேர்த்து அதை 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். நிலவேம்புக் கஷாயத்தைத் தேவைப்படும்போது காய்ச்சிக் குடிக்க வேண்டும். நீண்ட நேரம் காய்ச்சி வைத்திருந்தால் அதன் வீரியம் குறைந்துவிடும்.
சீன மருத்துவத்தில் நிலவேம்பு குறித்த ஆய்வுகள் 1980-களில் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் வைரஸ் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை. இதனால் நிலவேம்புக் கஷாயத்தினை வைரஸ் காய்ச்சல்களுக்குப் பரிந்துரைக்கின்றனர். மலேசியா மற்றும் சிங்கப்பூர் பகுதிகளில் டெங்குக் காய்ச்சலில் தட்டணுக்கள் குறைவதைத் தடுக்க பப்பாளி இலைச்சாறையே பயன்படுத்துகின்றனர்.’’


டெங்கு தொடராமல் இருக்க ஆய்வு அவசியம்
தமிழகத்தில் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகளால் காய்ச்சல் பரவுகின்றது. பாக்டீரியாக்களால் நிமோனியா, நுரையீரல் தொற்று, சிறுநீர் மண்டலத் தொற்று, சீழ்க்கட்டியினால் ஏற்படும் தொற்று ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. இவற்றை சளி, சீழ் மற்றும் ரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியும். ஒட்டுண்ணி மூலம் பரவும் மலேரியாவை ரத்தப் பரிசோதனையில் கண்டறியலாம். வைரஸ் மூலம் பரவும் ஃப்ளூ காய்ச்சல், டெங்கு, சிக்கன்குன்யா, மூளைக்காய்ச்சல் ஆகியவற்றை ரத்தம், சிறுநீர், சளி ஆகியவற்றைப் பரிசோதித்துக் கண்டறிய முடியும். நோய்க் கிருமியின் தன்மை குறித்தும் தணிக்கை செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. வைரஸ் ஆராய்ச்சி நிலையங்களுக்கு நோயாளிகளின் மாதிரிகளை அனுப்பி உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும். வைரஸ் கிருமிகளின் தன்மை, நோய்க்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்க முடியும்.


சசிக்குமார், ஹோமியோபதி மருத்துவர்

ஹோமியோபதியில் டெங்குவுக்கான தடுப்பு மருந்துகள்?

‘‘டெங்கு வைரஸ் இந்த உலகத்துக்கு ரொம்பவும் பழசு. ஜெர்மன் நாட்டில் 1880-ல் டெங்கு வைரஸ் தாக்கியபோது ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தித் தீர்வு கண்டுள்ளனர். நோய் வராமல் தடுப்பது, நோயைக் கட்டுப்படுத்துவது என்று இரண்டு வகையில் ஹோமியோ மருந்துகள் செயல்படுகின்றன. ஒருவருக்கு டெங்கு பாதித்துத் தட்டணுக்கள் குறையத் தொடங்கினால் ஹோமியோபதி மருந்துகள் மூலம் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் தட்டணுக்கள் குறைவதைத் தடுக்க முடியும்.
டெங்கு வைரஸைத் தடுப்பதற்காகக் கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக்  மருந்துகளின் விளைவாக அவற்றின் வீரியம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பட்டினி கிடந்தால் காய்ச்சல் குணமாகிவிடும் என்று சிலர் நம்புகின்றனர். ரத்தத்தில் உள்ள தண்ணீரின் அளவு குறையும்போது தட்டணுக்களும் குறைவதால் ரத்தத்தின் உறையும் தன்மை குறைந்து ஈறுகள், மூக்கு மற்றும் பல இடங்களிலும் ரத்தம் வெளியேறும் அபாயம் உள்ளது.
வீட்டில் நல்ல தண்ணீரைச் சேமித்து வைப்பதையும் நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய  துணிகளைத்  துவைக்காமல் சேர்த்து வைப்பதையும் ஈரத்துணிகளைச் சேர்த்து வைப்பதையும் தவிர்க்கவும். இவற்றிலும் கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே உடனடித் தேவை’’ என்கிறார் நாமக்கல் அரசு மருத்துவமனை ஹோமியோபதி மருத்துவர் சசிக்குமார்.

%d bloggers like this: