டெங்கு… மெர்சல்…

கையில் பெரிய ஃபைலோடு வந்த கழுகார், ‘‘நீர் ‘மெர்சல்’ படம் பார்த்துவிட்டீரா?’’ எனக் கேட்டார்.
‘‘கழுகார் சினிமா பற்றிப் பேசுவது அபூர்வமாக இருக்கிறதே?’’
‘‘ஒரு வாரமாக தமிழக அரசியலே ‘மெர்சல்’ படத்தை வைத்துதானே ஓடிக்கொண்டிருக்கிறது. நான் மட்டும் சினிமா பற்றிப் பேசக்கூடாதா?’’ என்ற கழுகார், ‘‘இவ்வளவு நடந்தும், இந்த சர்ச்சைகள் பற்றி விஜய் வாயைத் திறக்கவில்லை; கவனித்தீரா’’ எனக் கேட்டார்.
‘‘ஆம்!’’

‘‘அது மட்டுமில்லை. முதல்வரில் தொடங்கி தமிழக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்தும் யாரும் இதுபற்றிப் பேசவில்லை. அவர்கள் இந்த சர்ச்சையால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம், இந்தப் பிரச்னையில் எல்லோரும் டெங்கு அவலங்களை மறந்துவிட்டார்களே!’’
‘‘தினம் தினம் டெங்கு மரணங்கள் தமிழகம் முழுக்கத் தொடரும் நிலையில், ‘மெர்சல்’ சர்ச்சையால் டெங்கு மறக்கடிக்கப்பட்டது என்ற கவலை சமூக அக்கறையுள்ள எல்லோருக்கும் இருக்கிறது.’’

கழுகார் கையில் வைத்திருந்த ஃபைலைத் திறந்தார். ‘‘தமிழக சுகாதாரத் துறையில் முக்கியப் பொறுப்பு வகித்த ஓர் அதிகாரி தந்திருக்கும் தகவல்கள் இவை. தமிழக அரசு எத்தனை அலட்சியத்தோடு டெங்கு விவகாரத்தைக் கையாள்கிறது என்பதைத் தோலுரிக்கின்றன இந்த விஷயங்கள். டெங்கு ஜுரத்தின் தீவிரத்தால் பலியாகும் பலரின் மரணங்கள், டெங்கு மரணங்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை. ‘விஷ ஜுரம்’ எனக் கணக்குக் காட்டுகிறார்கள். இப்படித் தப்புத்தப்பாகத் தந்திருக்கும் புள்ளிவிவரங்களேகூட தமிழக மக்களைப் பீடித்திருக்கும் ஆபத்தை உணர்த்துகின்றன.’’
‘‘என்ன அது?’’
‘‘இந்த ஆண்டு தமிழகம் போலவே பல மாநிலங்களை டெங்கு தாக்கியிருக்கிறது. ஆனால், தமிழகம் அளவுக்கு மரணங்கள் அங்கில்லை என்பதுதான் விஷயமே. இந்தியாவிலேயே கேரளாவில்தான் டெங்கு தாக்குதல் அதிகம்.
18,000 பேருக்கு மேல் பாதிப்பு. ஆனால், 35 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்தன. கர்நாடகாவில் 13,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், ஐந்து பேர் மட்டுமே இறந்தனர். டெல்லியில் 5,870 பேருக்கு டெங்கு தாக்கியதாக புள்ளிவிவரம் உள்ளது. ஆனால், இறந்தவர்கள் ஐந்து பேர் மட்டுமே. தமிழக அரசு 12,000 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகக் கணக்கு சொல்கிறது. அக்டோபர் 10-ம் தேதி வரை 40 பேர் இறந்ததாக அதிகாரபூர்வ கணக்கு சொல்கிறது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம். பாதிப்புகளுக்கும் மரணத்துக்குமான விகிதம் தமிழகத்தில் அதிகம் உள்ளதாக தொற்றுநோய் நிபுணர்கள் கவலை கொள்கிறார்கள்.’’
‘‘ஆனால், மத்தியக்குழுத் தமிழக அரசைப் பாராட்டியதாகச் சொல்கிறார்களே?’’
‘‘மத்தியக்குழுவில் இருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் அஷுதோஷ் பிஸ்வாஸ் சொன்ன ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைத்துவிட்டார்கள். ‘டெங்கு பாதிப்புகளோடு அரசு மருத்துவமனைகளுக்கு வந்த நிறைய பேர் இறந்துள்ளார்கள். மருத்துவமனைக்கு வந்தபிறகு அவர்கள் ஏன் இறந்தனர் என்பது புரியவில்லை. இதற்கான காரணங்களை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்’ என அவர் சொல்லியிருக்கிறார். ‘மருத்துவமனைக்கு வருபவர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏன் ஏற்பட்டது?’ என்ற கேள்விக்குப் பதிலில்லை.’’
‘‘நியாயமான கேள்விதான்.’’
‘‘பொதுவாக ‘90 நாள்களுக்குள் ஒரு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சுகாதார அவசரநிலைப் பிரகடனம் செய்ய வேண்டும்’ என்பது உலக சுகாதார நிறுவனம் வகுத்திருக்கும் விதி. தமிழக அரசு அதைச் செய்யவில்லை. இதைச் செய்தால் சர்வதேச அவமானத்தைச் சந்திக்க நேரும் என்பதுதான் தமிழக அரசின் கவலையாக இருந்தது. கடந்த மாதம் கர்நாடகாவிலும் கேரளாவிலும் விஷ ஜுரம் பரவியபோது, இரண்டு மாநிலங்களுக்கும் தலா இரண்டு மத்தியக் குழுக்கள் போய் நிலைமையை ஆராய்ந்தன. அவை பி.ஜே.பி அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள். தமிழகத்தில் இவ்வளவு மோசமாக பாதிப்பு இருந்தும், கடைசி நேரத்தில்தான் மத்தியக் குழு வந்தது. மத்திய அரசும் பாரபட்சம் காட்டுகிறது என்பதுதான் சமூக அக்கறையுள்ள டாக்டர்களின் வேதனை.’’    
‘‘மெர்சல் விவகாரம் பல தளங்களில் மெர்சலைக் கிளப்பியுள்ளதே?’’
‘‘ஆம். முதலில் நடிகர் விஜய்க்கும், தயாரிப்பாளர் முரளிக்கும் அது மெர்சலை உண்டாக்கியது. அதன்பிறகு, சென்சார் போர்டுக்குள் மண்டல அதிகாரி மதியழகனுக்கும் மத்திய சென்சார் போர்டு உறுப்பினராக இருந்த
எஸ்.வி.சேகருக்கும் இடையில் மோதலை உருவாக்கியது. இப்போது ஹெச்.ராஜாவை விமர்சனம் செய்ததற்காக, நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷாலுக்கு ரெய்டு வடிவத்தில் மெர்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், ‘நான் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டார். இதனால் இயல்பாக விஷால் கொந்தளித்துப் போனார். அதன்பிறகு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற அடிப்படையில் விஷால் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ‘ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஹெச்.ராஜா அவர்களே! மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? எனக்கு அதிர்ச்சியாக உள்ளது’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.’’
‘‘ரெய்டுக்கு இதுதான் காரணமா?’’
‘‘அப்படித்தான் விஷால் தரப்பு கருதுகிறது. இந்த அறிக்கை கடந்த 22-ம் தேதி வெளியானது. அதற்கு அடுத்த நாளே, வருமான வரித்துறையின் TDS பிரிவினர் விஷாலுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேல் ரெய்டு நடந்தது. அந்த நேரத்தில் விஷால், ‘பின்னி மில்’லில் ‘சண்டக் கோழி 2’ படப்பிடிப்பில் இருந்தார். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பல லட்ச ரூபாய் வருமான வரியை அரசுக் கணக்கில் செலுத்தாமல் இருந்ததால்தான் ரெய்டு நடத்தியதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தபோது, கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினார்கள். இதற்கு முறைப்படி வரி கட்டுவதாகச் சொல்லி, ‘காம்பவுண்டிங் அப்ளிகேஷன்’ கொடுத்திருக்கிறார் விஜய். இதுபற்றி ஒரு கமிட்டி கூடி முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது. இதை வைத்து விஜய்க்கு ஏதாவது சிக்கல் கிளப்பக்கூடும் என்பதுதான் இப்போது டெல்லி வட்டாரங்களில் பேச்சு.’’ 
‘‘இங்கு எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது என்பது எல்லாரும் அறிந்ததுதானே!’’
‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸ் ஆரம்பித்துவிட்டது. இப்போதைய தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என டெல்லிக்குக் கடிதங்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இதையடுத்து, தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் வேலைகளில் திருநாவுக்கரசரும் தீவிரமாக இறங்கியுள்ளார். இளங்கோவன், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட சிலரும் இந்த ரேஸில் இறங்கியுள்ளனர். இளங்கோவன் டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டார்.’’
‘‘சந்திப்பில் என்ன நடந்ததாம்?’’
‘‘உள்கட்சித் தேர்தல் குளறுபடிகள் தொடர்பான ஆதாரங்களோடு டெல்லி போனார் இளங்கோவன். மூன்று நாள்கள் டெல்லியில் காத்திருந்தும், ராகுல் காந்தியின் அப்பாயின்ட்மென்ட் இளங்கோவனுக்குக் கிடைக்கவில்லை. நான்காவது நாள்தான் ராகுலைச் சந்திக்க வரச் சொன்னார்கள். ராகுல் வீட்டில் இளங்கோவன் காத்திருந்த நேரத்தில், திருநாவுக்கரசரும் அங்கு வந்துள்ளார். அவரைப் பார்த்த இளங்கோவன், அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்தாராம். ஆனால், திருநாவுக்கரசர் நிலைமையைப் புரிந்துகொண்டு, ‘இளங்கோவன் முதலில் சந்திக்கட்டும்’ என்று விட்டுவிட்டார். இளங்கோவனை இரண்டு நிமிடங்கள் மட்டுமே சந்தித்துள்ளார் ராகுல். உள்ளேபோன வேகத்தில் இளங்கோவன் வெளிறிய முகத்தோடு வெளியேறிவிட்டார். அதன்பிறகு திருநாவுக்கரசருக்கு அழைப்பு வந்ததாம். அவர் பழங்களுடன் சென்று ராகுலைச் சந்தித்துள்ளார்.’’
‘‘திருநாவுக்கரசர் ராகுலிடம் என்ன சொன்னராம்?’’
‘‘புலம்பித் தள்ளினாராம். ‘தமிழ்நாடு காங்கிரஸில் எனக்கு யாரும் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. நான் என்ன செய்தாலும் அதற்கு எதிராகக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்’ என்பதுதான் அவரது புலம்பல். ‘குஷ்புகூட தலைவராவதற்கு முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன’ என்று புலம்பினாராம். திருநாவுக்கரசருக்கு ஆறுதலான வார்த்தைகள் கிடைத்துள்ளன. சந்திப்புக்குப் பிறகு உற்சாகமான திருநாவுக்கரசர், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தல்வரை நான்தான் தலைவர்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். திருநாவுக்கரசரின் இந்த உற்சாகம், தலைவர் பதவிக்குக் கனவு கண்ட பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.’’
‘‘அப்படியா?’’
‘‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு, வசந்தகுமார், கிருஷ்ணசாமி என அதிருப்தி கோஷ்டியினர் கடந்த வாரம் முழுவதும் சிதம்பரம் வீட்டுக்குப் படையெடுத்ததற்கு இதுதான் காரணம். ராகுலின் மனதைக் கரைக்க சிதம்பரத்தால்தான் முடியும் என்பது அவர்களின் கணக்கு. அதனால், அவரைப் போய்ப் பார்த்து தூபம் போட்டனர். அப்படிச் சந்தித்தப் பலரும், ‘கட்சித் தேர்தலில் எங்கள் ஆதரவாளர்கள் யாருக்கும் பதவி கிடைக்கவில்லை. அவருடைய ஆட்களுக்குத்தான் பதவி கொடுத்துள்ளார். எங்களை மதிப்பதில்லை. ஓரம்கட்டுகிறார்’ என ஆளுக்கொரு புகாரைச் சொல்லியுள்ளனர். அதோடு, ‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நீங்கள் வாருங்கள். நாங்கள் எல்லோரும் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம்’ என்றும் சொல்லியுள்ளார்கள்.’’
‘‘சிதம்பரம் பதில் என்னவாம்?’’
‘‘பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட சிதம்பரம், ‘நான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், டெல்லி தலைமைக்கு மொத்தமாகக் கடிதம் எழுதுங்கள்’ என்று சொன்னாராம்.  அத்துடன் தனக்குத் தமிழக அரசியலுக்கு வர விருப்பமில்லை என்பதைச் சுற்றிவளைத்துச் சொன்னாராம். அதைக் கேட்டவர்கள், ‘சரி, உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால், என் பெயரை ராகுலிடம் பரிந்துரை செய்யுங்கள்’ என ஒவ்வொருவரும் கோரிக்கை விடுத்தார்களாம். சிதம்பரத்தின் மன ஓட்டம் தேசிய அரசியலில்தான் இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தியை அறிவிக்கும்போது, சிதம்பரத்துக்கும், குலாம் நபி ஆசாத்துக்கும் துணைத் தலைவர் பதவி கொடுப்பதுப் பற்றி அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், டெல்லியில் இருக்கும் சில தலைவர்கள் சிதம்பரம், டெல்லி அரசியல் ஈடுபடுவது தங்களுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் ராகுலிடம், ‘தமிழகத்தில் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் சிதம்பரத்தைத் தலைவராக்குவது நல்ல முடிவு. அவர் தலைமையேற்றால்தான் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும்’ என்று தூபம் போட்டுள்ளனர். சிதம்பரமும் இதை அறியாமல் இல்லை.’’

‘‘சிதம்பரம் வீட்டுக்குத் திருநாவுக்கரசரும் சென்றிருந்தாரே?’’
‘‘சிதம்பரம் வீட்டுக்குத் தலைவர்கள் படையெடுத்த தகவல் திருநாவுக்கரசருக்குத் தெரிந்தததும், அவரும் சிதம்பரத்தைப் போய்ச் சந்தித்தார். திருநாவுக்கரசர் வருகையைச் சிதம்பரமும் எதிர்பார்க்கவில்லை. ‘எனக்கு யாரும் ஒத்துழைப்புத் தருவதில்லை. நான் தனியாகக் கஷ்டப்பட்டுத்தான் கட்சியை வளர்க்கிறேன். நீங்களாவது எனக்கு ஆதரவாக இருக்கவேண்டும்’ என்று சிதம்பரத்திடமும் திருநாவுக்கரசர் புலம்பியுள்ளார். ‘ராகுல் உங்கள் மீது நல்ல மரியாதை வைத்துள்ளார். நீங்கள் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களை நடத்துங்கள்’ என்று சொல்லியுள்ளார். இந்தச் சம்பவங்களின் மூலம் ஒன்று நன்றாகத் தெளிவாகிறது. அதாவது, கோஷ்டிகளுக்குப் பஞ்சம் இல்லாத தமிழக காங்கிரஸில் ஒற்றை அதிகார மையமாக சிதம்பரம் உருவாகியிருக்கிறார் என்பதே அது!’’
‘‘இரட்டை இலை வழக்கு எப்போது முடியுமாம்?’’ என டாபிக்கை மாற்றினோம்.
‘‘முக்கிய வழக்குக்குள் இன்னும் போகவே இல்லையே! பிறகு, எப்படி அது முடிவுக்கு வரும்? தினகரன் தரப்பு அதற்காக மிக கவனமாகக் காய் நகர்த்தி வருகிறது. அக்டோபர் 23-ம் தேதி இறுதி விசாரணை என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததும், அதற்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளைத் தினகரன் அணி தொடங்கியது. விசாரணை நடைபெறும் தினத்துக்கு முந்தின இரவு அவசரமாக ஒரு மனு, சசிகலா பெயரில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்’ என்று கேட்டுள்ளார்கள். இது தேர்தல் ஆணையத்துக்கும் சிக்கலைத்தான் ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஜேந்திரபாலாஜி, ‘மோடி ஆதரவு எங்களுக்கு இருப்பதால், இரட்டை இலை எங்களுக்குக் கிடைத்துவிடும்’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியது தினகரன் தரப்புக்குச் சாதகமாகப் போய்விட்டது. அதைவைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை அமைச்சர் ஒருவர் கேள்விக்குறியாக்கிவிட்டார் என்று தினகரன் பெயரில் அடுத்த ஒரு மனுவைத் தாக்கல் செய்ய, இரட்டை இலை கைக்கு வந்துவிடும் என்று ஆவலில் இருந்த எடப்பாடி அணிக்கு இலை இப்போது எட்டாத உயரத்துக்குப் போய்விட்டது.’’
‘‘இந்த விஷயத்தில் நவம்பர் 10-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதே?’’
“அதற்காகத்தான் தேர்தல் ஆணையமும் விசாரணையை வேகப்படுத்துகிறது. ஆனால், தினகரன் தரப்போ விசாரணையை இழுப்பதற்கான வேலையை வேகப்படுத்துகிறது’’ என்ற கழுகார், ஞாபகமாக ஃபைலை ஒழுங்குபடுத்தி எடுத்துக்கொண்டு பறந்தார்.

%d bloggers like this: