ப்ளீச்சிங் பவுடர்? ப்ளீஸ் வெயிட்!

வீட்டைச் சுத்தம் செய்வதற்குப் பெரும்பாலும் ப்ளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். ஆனால், அதிகமாக ப்ளீச்சிங் பவுடரைப் பயன்படுத்துவதால் உயிருக்கே தீங்கு விளைவிக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.

நுரையீரல் அடைப்பு நோய் என்பது நுரையீரல் நோய்களில் முக்கியமானது. இது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும் பாதையை அடைத்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். தரையைச் சுத்தம் செய்வதற்கு கெமிக்கல் கலந்த கிருமி நாசினிகளை வாரம் ஒருமுறை பயன்படுத்துகிறவர்கள்  நுரையீரல் அடைப்பு  நோயால் பாதிக்கப்படுவதற்கு 22 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக  பிரான்சிலுள்ள தேசியச் சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி  நிறுவனத்தைச் சேர்ந்த ஒரியானா டுமாஸ் தெரிவித்துள்ளார்.

சி.ஓ.பி.டி (Chronic Obstructive Pulmonary Disease) என்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு  நோய். இது, நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis) மற்றும் சுவாசப்பாதைகள் குறுக்கம் அடையும் நோய்களைக் குறிக்கிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் ஒருமாத காலத்திற்குத் தொடர் இருமல், மூச்சுத் திணறல், மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சுவலி மற்றும் இருமலின்போது ரத்தம் வெளிப்படுதல் ஆகியவையாகும்.
ஐரோப்பா மிலன் நகரில் ரெஸ்பிரேட்டரி சொசைட்டி இன்டர்நேஷனல் காங்கிரஸ், ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் 55,185 பெண் செவிலியர்கள் 2009-ம் ஆண்டிலிருந்து கண்காணிக்கப்பட்டார்கள். அவர்களில் 663 செவிலியர்கள் நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சுகாதாரக் கூடங்களில் கிருமிகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களைத் தகுந்த வழிகாட்டுதலுடன் பயன்படுத்த வேண்டி யது அவசியம் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
சரி… ப்ளீச்சிங் பவுடருக்கு மாற்று உண்டா?
உண்டு.
சுத்தப்படுத்த வேண்டிய இடத்தில் சிறிது வினிகரை ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின், பிரஷ் ஒன்றில் கொஞ்சம் பேக்கிங் சோடாவை எடுத்து நன்றாகத் தேய்க்கவும். ப்ளீச்சிங் பவுடரை விட சுத்தமாக அந்த இடத்தை மாற்றிவிடும் இந்தக் கலவை.

%d bloggers like this: