‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு..!

வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல மனம் மட்டும் போதுமா..? நறுமண உடலும் தேவை என்பது ‘கார்பரேட்’ கலாச்சாரத்தில் கட்டாயம்! எனவே வியர்வை நாற்றத்தைத் தடுக்க, தோலுக்கு மென்மையைக் கொடுக்க, உடல் அரிப்பைக் குறைக்க, பிஞ்சுக் குழந்தைகளுக்கு, வளர்ந்த குழந்தைகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித் தனி சோப்புக் கட்டிகள் இப்போது மிடுக்காக வணிகச் சந்தையில் வலம் வருகின்றன.

 

இது மட்டுமில்லாமல் சோப்புகளின் தூரத்து உறவினர்களான பாடி வாஷ், ஃபேஷ் வாஷ், பாடி லோஷன், மாய்ச்சரைஸர், கிளன்சர் போன்றவைக்கும் இப்போது இளைஞர்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவற்றின் அதிரடி வருகைக்கு முன், நம்முடைய தோலுக்குப் பளபளப்பையும் வளத்தையும் தந்து, நறுமணம் மூலம் மனதுக்கு இதம் கொடுத்துவந்தவை மரபு மூலிகைக் கலவைகளே! எந்தவித ரசாயனத்தின் பங்களிப்பும் இன்றி அவற்றிலிருந்து மனதை அள்ளும் வாசனை உருவாவது இயற்கையின் சிறப்பு.

தோல் நோய்களைத் தவிர்க்க…

குழந்தைகள் முதல் முதியோர்வரை தோல் நலத்தை மேம்படுத்துவதில் மூலிகைக் குளியல் பொடி வகைகள் நிச்சயமான பலனைத் தரக்கூடியவை. அக்காலத்தில் குழந்தைகளுக்குப் பயத்த மாவு, இளைஞர்களுக்குச் சந்தனத் தூளோடு ரோஜா, செம்பருத்தியின் செவ்விதழ்களைக் கலந்து உலர வைத்த குளியல் பொடி, பெண்களுக்கு மஞ்சள் பொடி, அனைவருக்கும் ‘நலங்கு மாவு’ கலவை என செயற்கைக் கலப்படம் இல்லாத குளியல் பொடி வகைகள் பரிந்துரைக்கப்பட்டன.

இன்றோ, ரியல் எஸ்டேட் வர்த்தகத்தால் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல, சோப்பு வணிகத்தால் மூலிகைக் குளியல் பொடி வகைகளின் பயன்பாடு முடக்கப்பட்டுவிட்டது. முற்றிலும் மூலிகைப் பொடிகளை மறந்து, சோப்புக் கலாச்சாரத்துக்குப் பழகிப் போய்விட்டோம் நாம். இந்தப் பின்னணியில் அவ்வப்போது மூலிகைக் குளியல் பொடிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பல விதமான தோல் நோய்களைத் தவிர்க்க முடிவதோடு, தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடியும்.

இயற்கையான ‘ஸ்கிரப்’

பழங்காலம் முதல் மக்களின் முதன்மைக் குளியல் கலவையாக ‘நலங்கு மா’ பயன்பட்டு வருகிறது. பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, கிச்சிலிக் கிழங்கு ஆகிய மூலிகைகளின் தொகுப்பே நலங்கு மா. இவற்றைத் தனித்தனியே உலர்த்திப் பொடி செய்து ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளலாம்.

இதை நீரில் குழைத்துக் குளிப்பதால் நாள் முழுக்க மணம் கமழும் நறுமணம் உண்டாகும். தோலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். இதையே குளிக்கும்போது நீர் சேர்க்காமல், உலர்ந்த பொடியாகவே ஒரு முறை உடலில் தேய்த்து ‘ஸ்கிரப்’பாகப் பயன்படுத்த, மேனியில் அடைப்பட்ட துவாரங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, உடல் புத்துணர்ச்சி பெறும்.

நலங்கு மா கலவையைக் கொண்டு குளித்துவந்தால், தனியாகச் செயற்கை நறுமணப் பூச்சுக்கு அவசியம் இருக்காது. பெண்கள் பயன்படுத்தும்போது ‘நலங்கு மா’ கலவையில் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற இடங்களில் தோன்றும் முடி வளர்ச்சி அகற்றப்படும்.

கிருமிநாசினி சந்தனம்

கிச்சிலிக் கிழங்கு, நல்ல வாசனையைத் தரக்கூடியது. தோலில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. கோரைக் கிழங்குப் பொடி சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை நீக்கும். வியர்வை நாற்றத்தைத் தடுக்கும் குணமும் இதற்கு அதிகம். பாசிப்பயறு தூளை உடலில் தேய்த்துக் குளிக்க, உடல் குளிர்ச்சி அடையும். கார்போகரிசியைப் பால் விட்டு அரைத்து, தேய்த்துக் குளிக்க படர்தாமரை போன்ற தோல் நோய்களின் தீவிரம் குறையும். காளாஞ்சகப்படை (Psoriasis) எனும் தோல் நோய்க்கு, கார்போக அரிசியிலிருந்து செய்யப்படும் வெளிமருந்து பயன்படுகிறது.

தேமல், அரிப்பு போன்றவற்றை அழிக்கும் தன்மை சந்தனத் தூளுக்கு இருக்கிறது. கிருமிநாசினி (Anti-microbial) குணம் சந்தனத்துக்கு இருப்பதால், தோலில் உள்ள நுண்கிருமிகள் அனைத்தும் மடியும். உடலில் அதிகரித்த பித்தத்தை வெட்டிவேர் தணிக்கும். உடலில் தோன்றும் சிறு கொப்பளங்கள், கட்டிகளை வெட்டிவேர் குறைக்கும். வியர்க்குருவுக்கு வெட்டிவேர் பொடி சிறந்தது. மனம் மயக்கும் மணத்தைத் தரும் விலாமிச்சை வேரும் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது.

காயம் ஆற்றும் துவர்ப்பு

நலங்கு மா கலவையில், கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, உலர்ந்த ரோஜா இதழ்கள், வேப்பிலை, ஆவாரம்பூ, வெந்தயம், ஏலரிசி, அகிற்கட்டை ஆகியவற்றைத் தேவைக்கேற்பச் சேர்த்தும் பயன்படுத்தலாம். அகில், சந்தனச் சாந்தை சங்க கால மக்கள் குளியல் கலவையாகப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை ஈன்ற தாய்மார்களின் உடலமைப்பு மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகத் திரும்ப, கேரளத்தின் சில பகுதிகளில் குளியல் பொடி வகைகளை மட்டுமே உபயோகிக்கின்றனர்.

நெல்லிப் பொடி, கடுக்காய்ப் பொடி போன்ற துவர்ப்புப் பொருட்களை கிராம மக்கள் குளியலுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். துவர்ப்புச் சுவையுள்ள பொடி வகைகள், புண்களை விரைவில் குணப்படுத்தும் என்பது மருத்துவ அறிவியல். சித்த மருத்துவத்தில் உள்ள திரிபலா சூரணம், ஏலாதி சூரணம் போன்றவற்றையும் குளியல் பொடியாக மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காய் உணவாக மட்டும் இல்லாமல், குளிக்கும் நாராகவும் நெடுங்காலமாகப் பயன்பட்டு வருகிறது. முற்றி உலர்ந்த பீர்க்கங்காயின் நார்ப் பகுதிக்குள் மூலிகைப் பொடி வகைகளை வைத்து, மேற்புறத்தில் தேய்த்துக் குளிக்க, தோல் பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, தோலும் பொலிவடையும்.

உடலுக்கு நன்மை தரும் எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளும்போது, எண்ணெய்ப் பசையை முழுமையாக நீக்க சோப்பைவிட, குளியல் பொடிகளே உதவும். ஆனால் சோப்புகளின் வருகைக்குப் பின்னர், எண்ணெய்க் குளியல் முறை வெகுவாகக் குறைந்துவிட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம். மூலிகைக் கலவைகளைக் கொண்டு குளிப்பதால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஜவ்வாது மலைவாசிகள்.

சோப்புகளை மாற்றாதீர்

குழந்தைகளுக்குப் பல வித ‘பேபி சோப்’களைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்ளும் நாம் பாசிப் பயறு, கடலை மாவு, நலங்கு மாவு போன்றவற்றை மையாக அரைத்து நீரில் நன்றாகக் குழைத்துப் பயன்படுத்தினால், மூலிகை வாசனையோடு குழந்தையின் இயற்கை வாசமும் சேர்ந்து அற்புதமான நறுமணத்தைக் கொடுக்கும். பாசிப்பயறைத் தேங்காய்ப் பாலோடு சேர்த்து குழந்தைகளுக்கு லேசாகத் தேய்த்துக் குளிப்பாட்டுவதால் அவர்களின் தோல் பொலிவடையும். குழந்தைகளுக்கு அவ்வப்போது உண்டாகும் தோல் நோய்கள் தலை காட்டாது.

அடிக்கடி சோப்புக் கட்டிகளை மாற்றுவது பலரின் வழக்கம். இப்படி சோப்புகளை மாற்றிக்கொண்டே இருப்பதால், தோலின் சமநிலை பாதிப்படையும். அதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட மூலிகைக் கலவைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். ‘மண’ மாற்றத்தை உணர்வீர்கள்!

%d bloggers like this: