அவதிகளைத் தடுக்கும் அந்தரங்கச் சுகாதாரம்

`பெண்கள் தங்களின் அந்தரங்கச் சுகாதாரத்தில் தேவையான அளவு அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் உரிய கவனம் கொடுப்பதில்லை. ஆனால், இன்டிமேட் ஹைஜீன் என்பது அவர்கள் அறிந்து தெளிவுற வேண்டிய விஷயம்’’

என்று வலியுறுத்தும் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் தீபா கணேஷ், பெண்களின் பிறப்புறுப்புச் சுகாதாரத்துக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

வெள்ளைப்படுதல்… இயல்பும், மிகையும்!
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதொரு நிகழ்வு. அது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்களை ஆரோக்கியமாகவும், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும். மாதவிடாய் முடிந்து சில நாள்கள் வரை குறைவாகவும், சுழற்சியின் நடுவில் சிறிது அதிகமாகவும், அடர்த்தியாகவும் வெள்ளை வெளியேறுவது இயல்பானது. சமயங்களில் இது பழுப்பு அல்லது சிவப்பு நிறத்திலும் இருக்கலாம். சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறும்போது (Ovulation process) சிறிய அளவில் ஏற்படும் ரத்தக்கசிவு இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனால், வெள்ளைப்படுதலில் அதிகப்படியான நிற வேறுபாடு, துர்நாற்றம் இருந்தாலோ, அதிகப்படியான வயிற்றுவலி, பிறப்புறுப்பில் எரிச்சல், வலி ஆகியவை நேர்ந்தாலோ, பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று அதற்குக் காரணமாக இருக்கலாம். மாதவிடாய் முடிந்த (Menopause) பெண்களுக்கு இதுபோல சிவப்பு கலந்து வெள்ளை ஏதேனும் வெளியேறினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.
பூஞ்சை, பாக்டீரியா தொற்றும் வெள்ளைப்படுதலும்!
பூஞ்சைத் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்படும்போது, அதில் நுரைத்தல் நாற்றம் அடிக்கும். வெள்ளைப்படுதல் மிகவும் அடர்த்தியாக இருக்கும். பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். அதேபோல, பாக்டீரியாவால், பாக்டீரியல் வஜினோசிஸ் (Bacterial Vaginosis) என்கிற தொற்று, பிறப்புறுப்பில் ஏற்படலாம். இதுவும் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதலை ஏற்படுத்தலாம்.
பால்வினை நோயால் ஏற்படும் வெள்ளைப்படுதல்!
உடலுறவின் மூலம் பரவும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெள்ளைப்படுதல் நிகழும். துர்நாற்றமும் இருக்கும். இதை ட்ரிக்கோமொனாயசிஸ் (Trichomoniasis) என்று அழைக்கிறது மருத்துவ உலகம். மேலும், ஹெர்பிஸ், கொனோரியா, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் பாதிப்பு (Herpes, Gonorrhea, Human Papilloma Virus) போன்ற பால்வினை நோய்களாகவும் இருக்கலாம்.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக் காரணங்கள்
* பெண்ணுறுப்பில் இருக்கும் லாக்டோபாசிலஸ் என்ற நன்மை தரும் பாக்டீரியா, அங்கே  பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். பிறப்புறுப்பை அடிக்கடி, அதிகமாகக் கழுவியபடி இருக்கும்போது அந்த பாக்டீரியா அழிந்துவிடுவதாலும் பூஞ்சைத் தொற்று ஏற்படுகிறது. அப்படி தொற்று ஏற்படும்போது, அது அருகில் இருக்கும் சிறுநீர்க் குழாய்க்கும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அது சிறுநீர்த்தொற்றுக்கு எளிதாக வழிவகுப்பதாகிவிடும்.

பாக்டீரியா பூஞ்சைத் தொற்று இவற்றாலும் ஏற்படலாம்

* பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்ய நறுமணம் ஏற்றப்பட்ட சோப்புகளைப் பயன்படுத்துவது பாக்டீரியா பூஞ்சைத் தொற்றுக்கு வழிவகுக்கும்.
* அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வதும் தொற்றுகளுக்கு வழிவகுக்கலாம். எனவேதான் ஆன்டிபயாடிக் மருந்துகளுடன் சில ப்ரோ பயாட்டிக் மருந்து களையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.  
* தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, அதிக அளவு மன அழுத்தத்தினால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ஈரப்பதத்துடன் கூடிய உள்ளாடை களைப் பயன்படுத்துவது, உள்ளாடைகளில் சோப்பு சுத்தமாக அலசப்படாமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக நேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, குறிப்பிட்ட நாப்கின் சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது, டாம்பூன்ஸ் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட நேர இடைவேளையில் மாற்றாமல் இருப்பது… இவையெல்லாம் பிறப்புறுப்பிலும், சிறுநீர்ப்பாதையிலும் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.
இன்டிமேட் ஹைஜீனுக்கு இவையெல்லாம் செய்யவும்
* பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* வெந்நீர், ஆன்டிசெப்டிக் லோஷன் போன்ற வற்றைப்பயன்படுத்திப் பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்யக்கூடாது. மைல்டு சோப் கொண்டு தினமும் ஒருமுறை மிதமான வெந்நீரில் பிறப்புறுப்பைச் சுத்தம் செய்யலாம்.
* இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்து சற்றுத் தளர்வான காட்டன் உள்ளாடைகளைப் பயன்படுத்தலாம்.
* பெண்ணுறுப்பு மிகவும் வறண்டு போயிருந்தால் (குறிப்பாக உடலுறவு கொள்ளும்போது) லூப்ரிகன்ட் ஜெல் பயன்படுத்தலாம்.
* யோகாவும் உடற்பயிற்சியும் செய்வது நல்லது.
மொத்தத்தில், பர்சனல் சுகாதாரத்தில் பெண்கள்  கொள்ளும் அக்கறை,  ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதை உணர வேண்டும்!
– ரமணி மோகனகிருஷ்ணன்


தாம்பத்யம் – சில குறிப்புகள்!
* பெண்கள் முதன்முதலில் உடலுறவுகொண்டதில் இருந்து மூன்று வருடங்கள் கழித்தோ அல்லது 21 வயதுக்கு பிறகோ மகப்பேறு மருத்துவரை அணுகி `பேப் ஸ்மியர் டெஸ்ட்’ எடுத்துக்கொண்டு ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள  வேண்டும்.
* கர்ப்பப்பை மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் இன்று பெருகிவருவதால் இந்தப் பரிசோதனை முக்கியம். இவற்றுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். என்றாலும், வருடத்துக்கு ஒருமுறை மருத்துவ ஆலோசனையும் முக்கியம்.
* மாதவிடாயின் 12-வது நாளில் இருந்து 16 நாள்களுக்குள் தாம்பத்யம் நிகழும்போது கரு உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். மேலும், இந்நாள்களில் பெண்கள் உறவில் அதிகபட்சத் திருப்தி அடைவார்கள்.
* மாதவிடாய் சுழற்சியின் முதல் எட்டு நாள்கள் மற்றும் கடைசி எட்டு நாள்களைக் குழந்தை உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவான/பாதுகாப்பான நாள்கள் எனக்கொள்ளலாம்.
* முதன்முறை உடலுறவின்போது பல பெண்களுக்கு வலி இருக்கும். அதன் அளவு மாறுபடலாம். சிலருக்கு இரண்டு, மூன்று முறைகளுக்குப் பிறகும் வலி தொடரலாம். அதையும் தாண்டி வலி நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
* காண்டம்கள் சில பெண்களுக்கு உறுப்பில் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே, நீர்மம் அதிகமாக இருக்கும் மெல்லிய காண்டம்களைப் பயன்படுத்துவது நல்லது.
* குழந்தைகள் பிறப்புறுப்பில் வலியோ, எரிச்சலோ இருப்பதாகச் சொன்னால் அவர்களின் சோப்பு, உள்ளாடையில் கவனம்கொள்ளவும். கழிவறை சென்றுவிட்டுச் சரியாகக் கழுவாமல் இருந்தாலோ, விளையாடியபின் கைகளைச் சரியாகக் கழுவாமல் பிறப்புறுப்பில் கை வைப்பதாலோ, நீச்சல் உடைகளை நீண்ட நேரம் ஈரத்துடன் அணிந்திருப்பதாலும்கூட வரலாம். இவற்றில் எல்லாம் கவனம்கொண்டு சரியாகவில்லை என்றால், அவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கலாம் என்கிற கோணத்திலும் இப்பிரச்னையை அணுக வேண்டியது காலத்தின் அவசியமாகியுள்ளது.
* இறுதி மாதவிடாய்க்குப் (Menopause) பிறகு பிறப்புறுப்பு அதிகமாக வறட்சியாகவும், சிறிது சிவந்தும் இருக்கும். இறுதி மாதவிடாய்க்குப் பிறகு பூஞ்சைத் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், அடிக்கடி பூஞ்சைத் தொற்று ஏற்பட்டால், நீரிழிவு நோயாகக்கூட இருக்கலாம். அலட்சியம் காட்டாமல் மருத்துவ ஆலோசனை பெறவும்.

ஒரு மறுமொழி

  1. Thank you Useful tips

%d bloggers like this: