பருமனானவர்களின் பார்வைக்கு

ல்லியாக இருப்பவர்களைப்போல குண்டாக இருப்பவர்கள் வேகமாகச் செயல்பட முடியாது. எந்த வேலையையும்  மலைபோல உணர்வார்கள். விரைவில் சலிப்படைந்து விடுவார்கள். மூட்டு வலி, இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். அவர்களது எடை  கூடக் காரணம் என்ன என்று மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும்.  உணவிலும்  வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை உடனடியாகச் செய்ய வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் ஒரு வேலையை முடிக்கக் கூடுதல் நேரமாகும் என்பதால் அதற்கேற்பத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்க வேண்டும். இது தேவையற்ற மன அழுத்தத்தையும் தவிர்க்கும். உடனடியாக எடை குறைக்க வேண்டும் எனக்  கடுமையான உடற்பயிற்சிகளில் இறங்கக் கூடாது. இது தேவையற்ற சிரமங்களையும் வலிகளையும் உடலில் ஏற்படுத்தும். முதலில் நடைப்பயிற்சியில் தொடங்கி எடைக் குறைப்புக்கான பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

பட்டினி கிடப்பது, தினமும் ஒருவேளை சாப்பாட்டைத் தவிர்ப்பது, அரிசியே எடுத்துக் கொள்ளாமல் விடுவது எனச் சிலர் தவறான உணவுக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆரம்பத்தில் எடை இழப்பதுபோல் தோன்றும். இறுதியில் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.  ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி உணவுத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு உள்ளுறுப்புகளைச் சுற்றிப் படிவதால் உள்ளுறுப்புகளின் வேலைத்திறன் குறையும். இது வேறு உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க அதிகக் கொழுப்பைத் தரும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 
தொப்பை பெரிதாக உள்ளவர்களுக்கு  நடக்கும்போதும் மாடிப்படி ஏறும்போதும் மூச்சிறைக்கும். இதற்குக் காரணம், கூடுதல் எடை, உறுப்புகளை அழுத்துவதே. எனவே,  கவனம் தேவை.

%d bloggers like this: