Advertisements

மனதாரச் சாப்பிடுவோம்

தையும் நிறைவாக, திருப்தியாகச் செய்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர். இன்றைய நெருக்கடியான, பரபரப்பான வாழ்க்கைச்சூழல் அதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதே யதார்த்தம். சாமி கும்பிடுவது தொடங்கிச் சாப்பிடுவது வரை எதையும் நம்மால் மனநிறைவோடு, ஒருமுகப்படுத்திய மனதோடு செய்ய முடிவதில்லை. அதற்குக் காரணங்களாகக் குடும்பம், வேலைச்சூழல், பரபரப்பு… என நீள்கிறது பட்டியல். இப்படி எதையாவது சிந்தித்துக்கொண்டேதான் ஒவ்வொரு நொடியையும் கடக்கிறோம். சாப்பிடும் நேரம்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது நாம் வருத்தப்பட வேண்டிய செய்தி.

யாராவது நம்மிடம் `காலையில என்ன சாப்பிட்டீங்க?’ என்று கேட்டால், ஏதோ கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டு விட்டதுபோல் நம்மில் பலரும் விழிப்போம். சாப்பிட்டுவிட்டுத்தான் வந்திருப்போம். என்ன சாப்பிட்டோம் என்பது நினைவில் இருக்காது. எல்.கே.ஜி-யில் படித்த ரைம்ஸ்கூட கேட்டதும் நினைவுக்கு வந்துவிடும். காலையில் சாப்பிட்ட டிபன் என்ன என்பதை மறக்கிற அளவுக்கு நாம் வாழும் சூழல் நம்மை அப்படியே மாற்றியிருக்கிறது. சாப்பிடும்போது கவனத்தை உணவின் மீது குவிக்காமல், வேறு எதன்மீதோ செலுத்துவதுதான் அதற்குக் காரணம். இது சாதாரணப் பிரச்னை அல்ல.

“உணவில்  கவனமில்லாமல் ஏனோ தானோ என்று சாப்பிடுவதால்தான் இன்று பல்வேறு நோய்கள் உண்டாகின்றன’’ என்கிறார் உணவியல் நிபுணர் அனிட் பியாட்ரிஸ். அத்துடன், உணவை  மனநிறைவோடு, மகிழ்ச்சியாகச் சாப்பிடுவதன் (Mindful eating) அவசியம் குறித்தும் விரிவாக விளக்குகிறார் இங்கே…

சாப்பிடும்போது நாம் கவனத்தில்கொள்ள வேண்டியவை

தயாராகுதல்: சாப்பிடுவதற்கு முன்னர் தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கிவைத்துவிட வேண்டும். செய்ய வேண்டிய வேலையையோ அல்லது செய்து முடித்த வேலைகளைப் பற்றியோ சிந்திக்கக் கூடாது. சாப்பிடும்போது நம் கவனம் முழுக்க உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

உட்கார்ந்து சாப்பிடுதல்: உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். நின்றுகொண்டோ அல்லது நடந்து கொண்டோ சாப்பிட்டால், நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்கிற அளவு தெரியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குறைவாகச் சாப்பிட வாய்ப்பு உண்டு. வேகவேகமாகச் சாப்பிடவும் தோன்றும். உட்கார்ந்து சாப்பிடும்போதுதான் நிதானமாக, முழுக் கவனத்துடன், தேவையான அளவு சாப்பிட முடியும்.

டி..வி., கம்ப்யூட்டர், மொபைல், புத்தகம் தவிர்த்தல்: டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டோ, புத்தகங்களைப் படித்துக் கொண்டோ சாப்பிட்டால் நம் கவனம் முழுக்க அவற்றின் மீதுதான் இருக்கும். இதன் காரணமாக நமக்குத் தேவையான அளவில், ஆரோக்கியமான, சத்தான உணவுகளைச் சாப்பிட முடியாமல் போகும். உணவு வேளையில் தேவையற்ற இந்தப் பழக்கங்களைத் தவிர்த்துவிடுவது உடல் நலத்துக்கு நல்லது.

நமக்கு நாமே பறிமாறுதல்:
நமக்கு வேண்டிய உணவை நாமே எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்யும்போதுதான் நாம் சாப்பிடும் அளவும் நமக்குத் தேவையான உணவும் சரியாகக் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக உண்ணும்போது உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய தட்டில்தான் உணவைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். பெரிய தட்டில் உணவை எடுத்துக்கொண்டால் தேவைக்கும் அதிகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

நன்றி தெரிவித்தல்: உணவை, அதன் அருமையை உணர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குத் தேவையான பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளை, நமக்காகக் கஷ்டப்பட்டுச் சமைத்துத் தருபவர்களின் உழைப்பை நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் அருமையை உணர்ந்து சாப்பிடும்போது உணவை வீணாக்க நமக்கு மனம் வராது.

நன்றாக மென்று சாப்பிடுதல்: ஒவ்வொரு  முறை உணவையும் 30 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். மெல்லாமல் அப்படியே விழுங்கினால், உணவில் உள்ள நுண்ணூட்டச் சத்துகள் நமக்குக் கிடைக்காது. வேகவேகமாகச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். அதனால்தான் நம் முன்னோர் ‘நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

வேக வேகமாகச் சாப்பிடுவதற்கு ஸ்பூனால் சாப்பிடுவதும் ஒரு காரணம். அதற்காக, `ஸ்பூனால் சாப்பிடவே கூடாது’ என்று அர்த்தமல்ல. ஒரு வாய் உணவை எடுத்துச் சாப்பிட்ட பிறகு ஸ்பூனைக் கீழே வைத்துவிட வேண்டும். அப்போதுதான் பொறுமையாக, மென்று சாப்பிட முடியும். ஸ்பூன் கையிலிருந்தால் வேகவேகமாகச் சாப்பிடத்தான் மனம் தூண்டும்.

உணவுகளை மிச்சம் வைப்பதைத் தவிர்த்தல்: சிலர் தங்களுக்குத் தேவையான உணவுகளைத் தாங்களே பரிமாறிக்கொண்டாலும்கூட முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம் வைத்துவிடுவார்கள். அதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு, `க்ளீன் பிளேட்’ கான்செப்ட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். தட்டில் போட்டுக்கொண்ட உணவு முழுவதையும் சாப்பிட்டுவிட வேண்டும். இவையெல்லாம் நாம் சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள். இவற்றோடு நாம் சாப்பிடும் உணவுகள் சரிவிகித உணவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து ஆகியவை உணவில் நிறைந்திருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும். தினமும் பால் குடிப்பது நல்லது. சமைப்பதைப்போலச் சாப்பிடுவதும்கூட ஒரு கலைதான். அதனால் உணவின் நிறம், மணம், வடிவம் ஆகியவற்றை ரசித்து, ருசித்து உண்ண வேண்டும்.

Advertisements
%d bloggers like this: