Advertisements

இறுக்கமான ஷூ அணியலாமா?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கல்வியறிவு, நவநாகரிகம் காரணமாக, ஷூ அணிவோர் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அதுவும், பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில், ஷூ அணிவது கட்டாயம் என்ற நிலை வேறு வந்து விட்டது. இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஷூ, அதை தொடர்ந்து அணிபவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண்களில் பலர், பொதுவாக முன் பக்கம் குறுகிய விதத்திலேயே அணியும் பழக்கமும், ஸ்டைலையும் வைத்துக் கொண்டுள்ளனர். ஆகவே, பாதம் முன் பகுதி சற்று அகன்று இருந்தால் இந்த ஷூக்கள் அதிக வலியை கொடுக்கும்.
எனவே ஒவ்வொரு முறை ஷூ வாங்கும்போதும், கால் அளவினை எடுப்பது அவசியம். ஏனெனில் அளவு மாறும் வாய்ப்புகள் அதிகம். இரண்டு
காலுக்கும் அளவு வித்தியாசப்படும் வாய்ப்பும் உண்டு.
நீண்ட விரலுக்கும் ஷூவுக்கும் இடையே அரை இன்ச் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கு நடந்து பார்க்கலாம். உங்கள் பாதம்படும் ஷூவின் உள் இடம் கடினமாக இல்லாது மென்மையாக இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமான ஷூக்களை, போகப்போக தளரும் என நினைத்து வாங்கக்கூடாது. மிகவும் தளதளவென லூசான ஷூக்களையும், பிள்ளை சீக்கிரம் வளர்ந்து விடுவான் என சொல்லி வாங்கக்கூடாது. அடிக்கடி தடுக்கி விழுந்து விடுவர்; அவ்வாறு வாங்குவது ஆபத்தும் கூட.
முறையற்ற இறுக்கமான ஷூக்களை அணியும் பொழுது கட்டை விரல் அடியில் எலும்பு திசு பெரிதாகிவிடும். இதனால் கட்டை விரல் 2வது விரலை நோக்கித் திரும்பும். இது வலி, வீக்கம் இரண்டினையும் அளிக்கும். கால் ஆணி உருவாகி வலியும், புண்ணும் ஏற்படும். இறுக்கமான ஷூவினால் விரல்கள் சற்று சுருண்டு மடிந்து கொள்ளும். வெகு நேரம் ஷூ போட்டு இருக்கும் பொழுது தசைகள் வலுவிழக்கும்.
இரண்டாவது விரல், முதல் விரல் மீது வந்து மடியும். இதனால் அறுவை சிகிச்சை வரை கூட செல்லும் பிரச்சினை உருவாகும். சர்க்கரை நோயாளிகள்
மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதிக உயரம் கூடிய ஷூக்களால் பாதமே பாதிக்கப்படும். பெரும்பாலானவர்களுக்கு, நடை, பாத அமைப்பு, கால் அமைப்பு இவற்றில் ஏதோ ஒரு வித சிறு பாதிப்பு இருக்கவே செய்யும். அத்தகையவர்கள், தவறான காலணிகளை அணியும் பொழுது பிரச்னைகள் கூடவே செய்யும்.
சிறிய அளவு ஷூக்களை அணியும், 50 வயதினை கடந்த பெண்களில் அநேகருக்கு, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் எனும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கால்கள், பாதங்கள் உடலின் எடையினைத் தாங்கி காலம் முழுவதும் நடக்கின்றன. எனவே, அவற்றை முறையாக பாதுகாக்க வேண்டும்.
கால்களை தினமும் வெதுவெதுப்பான நீரில் சோப்பு கொண்டு கழுவ வேண்டும். கால் நகங்களை சீராய் வெட்ட வேண்டும். 60 வயதிற்குப் பிறகு சருமம் மெலியும். மூட்டுகள் சற்று கடினப்படும் என்பதால் கூடுதல் கவனம் தேவை என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

Advertisements
%d bloggers like this: