Advertisements

கருணாநிதி – மோடி சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்கு?!

தினத்தந்தி பவளவிழாவுக்கு வந்த மோடி, உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வில் இருக்கிற தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள், சரச்சைக்குரிய பிரபலங்களுடனான சந்திப்புகளை மிகக் கவனமாகத் தவிர்ப்பவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்டவர் இன்னும் சில தினங்களில் இந்திய அளவில் பரபரப்பை  ஏற்படுத்தப்போகும் ஒரு வழக்குடன் தொடர்புடைய கட்சியின் தலைவரைச் சந்தித்துவிட்டுச் சென்றிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

தமிழகத்தில், ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க இரு அணிகளாக பிளவுபட்டது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைத்தால் ஒன்றுசேர்வது பற்றி பரிசீலிப்பதாகச் சொன்ன ஓ.பி.எஸ் அணி அவ்வாறே கமிஷன் அமைக்கப்பட்டதைத்தொடர்ந்து தனது அணியுடன் அ.தி.மு.க-வில் ஒன்றிணைந்தார். 

தமிழக அரசியிலில், கடந்த10 மாதங்களாக நிகழ்ந்துவரும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பி.ஜே.பி இருப்பதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. மத்திய அரசுடன் அ.தி.மு.க அமைச்சர்களின் அணுகுமுறையும் ஜெயலலிதாவுக்குக் காட்டிய அதே பவ்யத்தை அவர்கள், மோடிக்கும் காட்டிவருவது இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன் ”பாராளுமன்றம் மற்றும் தமிழக சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்” என பி.ஜே.பி எம்.பி இல.கணேசன் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்படி ”தமிழகத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுடன் கூட்டணி கண்டு கணிசமான இடங்களைத் தமிழக சட்டசபையில் பெறுவது பி.ஜே.பி-யின் எதிர்காலக் கணக்கு” என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

கருணாநிதி

இந்நிலையில், இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார். கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவரை ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் வரவேற்றனர். நாடே பரபரப்பாக எதிர்நோக்கியிருக்கும் ஒரு வழக்குடன் தொடர்புடையவர், பிதரமரைச் சந்தித்து சால்வை வழங்குவது நல்ல மரபல்ல. ”தனிப்பட்ட சந்திப்பு என்பதால், பிரதமர் வட்டாரத்தினால் அவற்றை தவிர்க்கமுடியவில்லை” என்கிறார்கள். ஆனால், ”தி.மு.க தலைவருடனான இந்தச் சந்திப்பு பல அரசியல் வியூகங்களுக்கும் அடித்தளம் வகுத்திருக்கிறது” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். 

இதுகுறித்து பி.ஜே.பி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி சேகரிடம் பேசினோம். “பிரதமர்  தி.மு.க தலைவரைச் சந்தித்ததில், எந்த அரசியல் நோக்கமுமில்லை. பொதுவாக வயதில் பெரியவர்களைக் கண்டால் மதிக்கும் குணம் கொண்டவர் மோடி. பொதுமேடையிலேயே  பலமுறை, வயதில் பெரியவர்களின் காலில் அவர் விழுந்து வணங்கியதுண்டு. அவரது அரசியல் அத்தனை பண்பானது. வட இந்தியாவில், இது சர்வசாதாரண விஷயம்தான். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவர், பழுத்த அரசியல்வாதி, உடல்நிலை குன்றியிருக்கும் நிலையில், அவரைச் சந்திக்க விரும்பி இது நிகழ்ந்தது. மற்றபடி வேறு யாரையும் அவர் சந்திக்கச் செல்லவில்லை. தனிப்பட்ட முறையிலான  சந்திப்பில், யார் வருவார் யார் போவார்கள் என்பதையெல்லாம் ஒரு பிரதமர் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. 

அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த கால அரசியலில், கருணாநிதியின் பணிகளை அறிந்து அவர் மீது பிரதமருக்குப் பெருமதிப்பு உண்டு. தனிப்பட்ட சந்தர்ப்பங்களில் நானே அதை அறிந்திருக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான தி.மு.க-வின் ஒருசில தலைவர்கள் தவிர, தி.மு.க. மீதோ அதன் தலைமை மீதோ பிரதமருக்கு எந்த வெறுப்பும் கிடையாது. 

ஸ்டாலின் - மோடிஅப்படிப்பார்த்தால், பிரதமர் இன்று கலந்துகொண்ட மேடையில், எங்களின் பரம வைரியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எங்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிற பல தலைவர்களும் இருந்தனர். அவர்களுக்கும் மோடி வணக்கம் செய்தார். இது பொதுவான அரசியல் பண்பு. தி.மு.க-விலாவது ஒரு சில தலைவர்கள் பெயரில்தான் ஊழல் வழக்கு உள்ளது. அ.தி.மு.க-வில், அதன் முந்தைய தலைமையே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்தானே.  இன்றைய அமைச்சர்கள் பெயரிலும் அத்தனை வழக்குகள். அவர்களையும்தான் மரியாதை நிமித்தமாக பிரதமர் வணங்கினார். இது ஒரு பொதுவான அரசியல் பண்பு.
தி.மு.க-வைப் பொறுத்தவரை அதன் தலைவர்கள் சிலர் பேரில்தான் வழக்கு உள்ளது. ஆனால், அதன் தலைமை மேல் பெரிய அளவில் மக்களுக்கு அதிருப்தி இல்லை. ஊழல் வழக்குகளில் உள்ள தி.மு.க-வின் சில தலைவர்களும் எதிர்காலத்தில் விடுவிக்கப்பட்டால், அந்தக் கட்சியுடன் பி.ஜே.பி கூட்டணி கொள்வதில் எந்தத் தடையும் கிடையாது. கடந்த காலத்தில், இந்த இரு கட்சிகளுமே ஒன்றாகக் கூட்டணி கண்டவைதானே…!” எனப் பேசி முடித்தார். 

பி.ஜே.பி-யின் டெல்லி மேலிடத்துடன் தொடர்புடைய தமிழகப் பிரமுகர் ஒருவருடன் இதுகுறித்துப் பேசினோம். “வட இந்தியாவில் கொள்கை அடிப்படையில், தலைவர்கள் ஒருவருக்கொருவர் மேடையில் மோதிக்கொண்டாலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்புகளில் நட்பு பாராட்டுவார்கள். வட இந்தியாவில், இது சகஜமான அரசியல் அணுகுமுறை. அதனால் மோடி – கருணாநிதி சந்திப்பில்,  துளியும் அரசியல்  இல்லை. இந்தச் சந்திப்பும் திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல. சில வாரங்களுக்கு முன் கருணாநிதியின் உடல்நிலை, மோசமாகிவிட்டது. அப்போது தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தேசியக் கட்சிகளுக்கும் தி.மு.க தலைமை இதுகுறித்து தகவல் தெரிவித்தது. அப்போதே பல தலைவர்கள் கோபாலபுரம் வந்து கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றார்கள். அந்தவகையில், பிரதமர் மோடிக்கும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ‘தினத்தந்தி பவளவிழா’வுக்கு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மோடியின் தமிழகப் பயணத்திட்டம் அறிந்த தி.மு.க தலைமை ‘இந்தப் பயணத்தின்போது கருணாநிதியை நலம் விசாரிக்கவேண்டும்’ எனச் சென்னையிலிருந்து கோரிக்கை வைத்தது. 

இதன்படி நேற்றிரவுதான் கருணாநிதியைச் சந்திக்கும் கோரிக்கைக்கு மோடி தலையசைத்தார். உடனே இந்தத் தகவல், தி.மு.க தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது பிரதமருக்கு மதிய உணவை தங்கள் வீட்டில் ஏற்பாடு செய்வதாக தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதைக் கறாராக மறுத்துவிட்டார்கள். ‘அதிகப்பட்சம் 5 லிருந்து 10 நிமிடங்களுக்கு மேல் பிரதமர் அங்கிருக்கமாட்டார். சால்வை, பரிசுகள் அளித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது’ என்றும் கண்டிஷன் போட்டார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.  மேலும், ‘தேவையற்ற விளம்பரங்கள் செய்து கூட்டத்தைக் கூட்டக் கூடாது’ எனவும் தகவல் சொல்லப்பட்டது.  ‘சர்ச்சையோ சங்கடம் தரும் நிகழ்வோ அங்கு நடக்கக் கூடாது’ என பிரதமர் தரப்பிலிருந்து ‘நாசூக்காக’த் தெரிவிக்கப்பட்டது. அதனால் சில விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டது தி.மு.க. அதன்பிறகே இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்தச் சந்திப்பில், கருணாநிதிக்குப் புதிய உடைகள் அணிவித்து தயார் நிலையில் அவரது வழக்கமான அறையில் காத்திருக்கவைத்தார்கள். கோபாலபுரம் வீட்டுக்கு வருகைதந்த மோடி, கருணாநிதியின் அருகில் வந்ததும் அவரை கருணாநிதிக்கு அறிமுகம் செய்தார் ஸ்டாலின். உற்றுப்பார்த்த கருணாநிதியிடம் ”ஹவ் ஆர் யு…?” என ஆங்கிலத்திலும் பின்னர் இந்தியிலும் சில வார்த்தைகளைப் பேசினார் மோடி. கருணாநிதி பாதி புரிந்தும் பாதி புரியாமலும் அவருக்குப் பதிலளிக்க முனைந்தார். அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் மோடி. தனிப்பட்ட முறையில், ஒரு தலைவரை நலம் விசாரிப்பதற்காக நிகழ்ந்த இந்தச் சந்திப்பில், வழக்கைக் காரணம் காட்டி அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை ஒதுக்கும் அளவு அரசியல் நாகரிகம் தெரியாதவர் அல்ல மோடி” என்றார் அவர்.

மோடி

இன்னொரு தரப்பு, “தேர்தல்கமிஷனில் தங்களின் தேர்தல் சின்னத்திற்கு உரிமைக்கோரி அதிமுகவின் இரு அணிகளும் மல்லுக்கட்டி வரும் நிலையில், ஆவணங்களின்படி டி.டி.வி தினகரன் அணிக்கே தற்போது வாய்ப்பு சாதகமாக உள்ளதாக மத்திய அரசுக்குத் தகவல் சென்றதாகச் சொல்லப்படுகிறது. ஆளும்கட்சியானாலும் ஓர் எல்லையைத்தாண்டி தேர்தல் கமிஷனை அதிகாரம் செய்வது இயலாத காரியம் என்பதால் மத்திய அரசுக்கு இது சற்று கிலி கொடுத்துள்ளது. சின்னம் தினகரன் அணிக்குச் சென்றால் தானாகக் கட்சியின் அதிகாரங்களும் தொண்டர்களும் தினகரன் அணிக்குச் செல்வார்கள். அப்போது அதிமுகவின் எடப்பாடி அணி பலமிழக்க வாய்ப்புண்டு. அப்போது அதிமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்து தமிழகத்தில் காலுான்ற நினைத்த தங்கள் எண்ணமும் ஈடேறாது என்பதோடு கடந்த காலச் சம்பவங்களால் தினகரன் தலைமையிலான அதிமுகவுடன் சமரசம் செய்துகொள்ளவும் முடியாது என்பது பா.ஜ.க மேலிடத்திற்கு நன்கு தெரியும். எனவேதான் தி.மு.க வுடன் ஓர் இணக்கத்தை இப்போதே கடைபிடித்தால் அது தேர்தல் நேரத்தில் பயன்படும் எனக் கணக்குபோட்டு இந்தச் சந்திப்பைப் பயன்படுத்திக்கொண்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பா.ஜ.கவின் இந்த மூவ் அறியவந்ததால்தான் ஸ்டாலின் தன் எழுச்சிப்பயணத்தை மழையைக்காரணம் காட்டி ரத்து செய்தார்” என்கிறார்கள்.

தமிழக அரசியலில் இனி என்னவெல்லாம் நடக்குமோ?!

Advertisements

2 responses

  1. Thank you

  2. திரு. மோடி, பாரத பிரதமர் அவர்கள் ஒரு நல்ல அறிவாளியம் சமயோசிதம் உள்ளவரும் ஆவார். வருகின்ற லோக் சபா தேர்தல் சம்பந்தமாகத் தான் அவர் செஸ் காய்களை நகர்த்துகிறார். நகர்த்திக்கொண்டே இருப்பார். இது சம்பந்தமாகத் தான் முந்தைய, ஐந்து முறை தமிழக முதன் மந்திரியாக இருந்த ஒப்பற்ற தலைவர் திரு. மு. கருணாதியைச் சந்தித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. அரசியல் பண்ணுபவர்கள் தான் வெவ்வேறு கோணங்களில் ஆராய்கிறார்கள். ஆராயட்டும்.

    “ம.கி.சுப்ரமணியன்”

%d bloggers like this: