Advertisements

கருணாநிதியைச் சந்தித்த மோடி – ராகுலுக்கு சொல்லப்பட்ட மெசேஜ்!

ருவமழை மேகங்கள் ஒருவார காலமாக மையம் கொண்டிருக்க… அரசியல் மேகங்களும் தமிழகத்தில் படர ஆரம்பித்திருக்கும் நிலையில், ‘கழுகார் எங்கே போனார்?’ எனத் தவித்தபடியே ஃபார்ம் லிஸ்ட்டைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென நீர்த்துளிகள், ரெய்ன் கோட்டிலிருந்து சிதறின. எதிரே கழுகார்.
‘‘மோடியின் சென்னை விசிட் எப்படி?” – எடுத்த எடுப்பிலேயே கேள்வியை வீசினோம்.

‘‘தினத்தந்தியின் பவளவிழாவும், பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.எஸ்.சுவாமிநாதனின் இல்லத் திருமண நிகழ்ச்சியும் பிரதமரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிநிரலில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்தன. அதில், கோபாலபுரம் விசிட் இல்லை. இரண்டு நாள்களுக்கு முன்பே நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டிருந்தது. அக்டோபர் 6-ம் தேதி காலையில்தான் இதில் மாற்றம் செய்தது பிரதமர் அலுவலகம். தி.மு.க தரப்பிலிருந்து யாரும் பிரதமர் அலுவலகத்திடம் பேசவில்லை. மாறாக, ‘பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியை உடல் நலம் விசாரிக்க வருகிறார்’ எனப் பிரதமர் அலுவலகத்திலிருந்துதான் தி.மு.க தரப்பை அணுகியுள்ளனர்.’’

‘‘எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்?’’
‘‘தினத்தந்தி விழாவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வி.ஐ.பி-களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. ஸ்டாலினுக்கும் வீடு தேடிப் போய் அழைப்பிதழ் கொடுத்தார், தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன்.எடப்பாடி ஆட்சியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் மோடியையும் பி.ஜே.பி-யையும் தி.மு.க கடுமையாக விமர்சித்துவருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் தினத்தந்தி விழாவில் பங்கேற்பது தேவையில்லாத அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தும் என நினைத்தார் மு.க.ஸ்டாலின். இதனைத் தவிர்க்கவே, சார்ஜா பயணத்தைத் திட்டமிட்டார். பி.ஜே.பி எதிர்ப்பை வெளிப்படையாகவே செய்துவருகிறது தி.மு.க. கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டம், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றபோது பி.ஜே.பி தவிர்த்து அகில இந்திய கட்சித் தலைவர்களை மேடை ஏற்றியிருந்தார்கள். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சி.பி.ஐ., சி.பி.எம்., தேசியவாத காங்கிரஸ் என பி.ஜே.பி-யின் பரம வைரிகளை மு.க.ஸ்டாலின் ஒன்றாக மேடையேற்றினார். இதேபோல, திருமாவளவன் ஒருங்கிணைத்த மாநில சுயாட்சி மாநாட்டிலும் பி.ஜே.பி தவிர்க்கப்பட்டிருந்தது. அதிலும் மு.க.ஸ்டாலின் முக்கியமானவராகத் திகழ்ந்தார். இதன் உச்சகட்டமாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவந்த நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு நாளாக அனுசரிக்க முடிவெடுத்தது தி.மு.க. இப்படியான சூழலில்தான், ஸ்டாலின், சார்ஜா சென்றார்.மோடியின் கோபாலபுரம் விசிட் பற்றி பிரதமர் அலுவலகமும், முரளிதரராவும் தி.மு.க தரப்பைத் தொடர்புகொண்டு உறுதிசெய்தனர். அதன்பிறகுதான், மு.க.ஸ்டாலினின் சார்ஜா பயணம் மாற்றியமைக்கப்பட்டது.அவசர அவசரமாக ஸ்டாலின் தமிழகம் கிளம்பி வந்தார்.’’
‘‘மோடியின் இந்த அவசர மூவ்… இப்போது ஏன்?’’

‘‘தினத்தந்தி விழாவுக்கு வரும் நிலையில், இந்திய அரசியலில் மூத்த தலைவராகத் திகழும் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்கலாம் என முடிவெடுத்துதான் சந்திப்பு நடைபெற்றது என பி.ஜே.பி-யினர் சொல்கிறார்கள். ஆனால், உண்மையான காரணம் வேறு. பி.ஜே.பி-யின் தயவில் தமிழகத்தில் நடக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிமீது ‘பொம்மை அரசாங்கம்’ என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

அதில் பி.ஜே.பி-க்குக் கெட்ட பெயர். அதோடு, ‘எடப்பாடி அரசாங்கத்தைக் காப்பாற்றுவதால், நமக்கு எந்தப் பயனும் இல்லை’ என கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கொடுத்த தகவலும் சேர்ந்த நிலையில்தான், தாங்கள் எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவானவர்கள் என்கிற தோற்றத்தைப் போக்க கோபாலபுரம் வரும் முடிவை எடுத்தது பி.ஜே.பி தலைமை. ராகுல் காந்தி, கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றுவிட்டார்.

மோடியும் நலம் விசாரிப்பது அரசியல் நாகரிகமாக இருக்கும் என நினைத்தது பி.ஜே.பி. தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இலங்கைப் பிரச்னை, 2ஜி எனப் பிரச்னைகள் வந்தாலும், அந்தக் கூட்டணியின் வாக்கு வங்கிக்குப் பெரிய சேதாரம் இல்லை. இந்த நிலையில், தி.மு.க-வுடன் நாங்களும் நெருக்கம்தான் என்பதை ராகுல் காந்திக்கு உணர்த்ததான் இந்தச் சந்திப்பு நடந்ததாம். தேவைப்பட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-பி.ஜே.பி கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தச் சந்திப்பு அச்சாரம் போடலாம்.”

‘‘கோபாலபுரம் வீட்டில் நடந்தது என்ன?’’
‘‘பிரதமரின் கோபாலபுரம் விசிட்டின்போது தி.மு.க தரப்பிலிருந்து துரைமுருகனுக்கு மட்டும் அனுமதி.தி.மு.க பெருந்தலைகள் மிஸ்ஸிங். கனிமொழி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின் மட்டுமே சந்திப்பின்போது உடனிருந்தார்கள். பி.ஜே.பி சார்பில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் உடன் இருந்தனர். மோடிக்கும், கவர்னருக்கும் இடையில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் காவேரி மருத்துவமனையின் டாக்டர் அரவிந்த். கருணாநிதியின் உடல்நிலை பற்றி மோடியிடம் அவர்தான் விளக்கிக்கொண்டிருந்தார். பிரதமர் மோடி, கருணாநிதியின் கையைப்பிடித்து நலம் விசாரித்தார். ஆனால், கருணாநிதிக்கு மோடியை அடையாளம் தெரியவில்லை. காரணம், கருணாநிதி எடுத்துக்கொள்ளும் மருந்தின் தன்மையால், காலை நேரத்தில் தூக்கத்தில் இருப்பதுதான் அவரது வழக்கமாக மாறிவிட்டது. மதியத்துக்கு மேல்தான் அவர் எழுகிறார். பிறகுதான், அவரைக் குளிப்பாட்டி அமர வைக்கிறார்கள். அதனால்தான், ராகுல் காந்தி உள்பட பலரும் மாலை அல்லது இரவு நேரத்தில்தான் சந்தித்தனர். முரசொலி கண்காட்சியைப் பார்க்கச் சென்றதும் இரவில்தான். ஆனால், மோடியின் வருகை பகலில் இருந்ததால், கருணாநிதியை எழுப்பி குளிக்க வைத்துத் தயார்படுத்தியபோதும், அவரால் நிதானத்துக்கு வர முடியவில்லை. அதனால், மோடியை அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால், கருணாநிதியிடம் பேசிய மோடி, ‘டேக் கேர்… டெல்லியில் க்ளைமேட் நன்றாக உள்ளது. நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், டெல்லிக்கு வந்து தங்குங்கள். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஆறுதலாகப் பேசியிருக்கிறார். ஆனால், கருணாநிதிக்கு எதுவும் புரியவில்லை.’’

‘‘ம்’’
‘‘கருணாநிதியைச் சந்தித்துவிட்டுக் கீழே இறங்கி வந்த மோடி, தயாளு அம்மாளைச் சந்தித்தார். தயாளு அம்மாளிடம் துரைமுருகன், ‘இவரைத் தெரிகிறதா?’ எனக் கேட்டபோது, ‘இவர் பிரைம் மினிஸ்டர் மோடி’ எனச் சொன்னார் தயாளு அம்மாள். ‘காபி சாப்பிட்டுப் போங்க’ எனத் தயாளு அம்மாள் சொன்னதில் நெகிழ்ந்து போனார் மோடி. ‘எனக்கு நேரமில்லை. இன்னொரு நாள் உங்கள் வீட்டில் விருந்து சாப்பிட வருகிறேன்’ என்றார் மோடி. இந்தச் சந்திப்பின்போது சில நொடிகள் மட்டும் கனிமொழியிடம் மோடி தனியாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பலரும் கவனிக்கத் தவறவில்லை.’’

‘‘2ஜி-வழக்கின் தீர்ப்புத் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறதே?’’
‘‘ஜெயலலிதாவின் உடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் சசிகலா தலைமீது கைவைத்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார் மோடி. அதன்பிறகுதான், அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சித் தொடங்கியது. சசிகலா சிறைக்குப் போனார். இப்போது மோடி கோபாலபுரம் வந்துவிட்டுப் போயிருக்கிறார். இதைவைத்து உடன்பிறப்புகள் சென்டிமென்ட் கணக்குப்போட ஆரம்பித்துவிட்டார்கள். வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, நிர்பந்தத்துக்கு ஆளானவராக வழக்கை விசாரிக்கவில்லை. ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் விடுதலை எனத் தீர்ப்பு வந்தது. இத்தனைக்கும் அந்த வழக்கில் தயாநிதிமாறன், கலாநிதிமாறனுடன், பிரதமர் மோடியின் பரம வைரியான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் இருந்தார். ஆனாலும், அந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்பதால், நீதிபதி ஓ.பி.சைனி அனைவரையும் விடுதலை செய்தார். அதனால், 2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. வழக்கின் தீர்ப்பை விரிவாகச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி சைனி நினைக்கிறார். அது தண்டனைக்காகவும் இருக்கலாம்; இந்தியாவின் கவனத்தையே திருப்பிய வழக்கில் விடுதலை அளிப்பதாகவும் இருக்கலாம்.’’
‘‘ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் என்ன ஆனது?’’
‘‘ ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிந்தவர்கள், தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பிரமாணப் பத்திரங்களுடன் தெரிவிக்கலாம்’ எனச் சொல்லியிருந்தார் நீதிபதி ஆறுமுகசாமி. ஜெயலலிதா, அப்போலோவில் சேர்க்கப்பட்டிருந்த 75 நாள்கள் குறித்த டாக்குமென்ட்ஸ், யார் யார் அவரைச் சந்திக்க மருத்துவமனை வந்தார்கள் போன்ற தகவல்கள் மற்றும் ஃபைல்கள் திரட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ ரிக்கார்டுகளை மருத்துவமனையிடம் அவர் கேட்டுள்ளார். விசாரணைக்காக இதுவரை சுமார் 50 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இந்த லிஸ்டில் அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, ப்ரீதா ரெட்டி, சசிகலா, ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த 11 பேர் கொண்ட மருத்துவக்குழு, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல், ஜெயலலிதாவின் தனிச்செயலாளர்கள், அப்போதைய தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமைச்செயலர் ராம மோகன ராவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக விசாரணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போலோ சென்றுவந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் சம்மன் போகுமாம்.’’
‘‘ஓஹோ’’
‘‘பொதுவாக யார் யாரெல்லாம் மருத்துவமனைக்கு வந்தார்கள் என்கிற ரீதியில் விசாரணை சென்றால், மத்திய அமைச்சர்களையும் விசாரிக்க நேரிடும். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்பட பலரும் அப்போலோவுக்கு வந்தார்கள். விசாரணை கமிஷன் யாரை வேண்டுமானாலும் விசாரிக்க முடியும் என்றபோதும், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களையே எப்படி விசாரிக்க அழைப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விசாரணையைத் தீவிரப்படுத்தும்போது, ஜெயலலிதா கையெழுத்து குறித்தெல்லாம் விசாரிக்கப்படும். அப்படி நடந்தால், அது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சிக்கல் கொடுக்கும். இந்த விசாரணை கமிஷனே சசிகலா, டி.டி.வி தினகரன் தரப்புக்கு செக் வைக்கும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது’’ என்ற கழுகார், “நடிகர் கமல், ஒரு செயலியை (மொபைல் ஆப்) தயாரித்துள்ளார் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேனே. அந்த செயலியை நவம்பர் 7-ம் தேதி கமல் வெளியிட்டார்” என்றபடியே ஜூட் விட்டார்.


மழை நிவாரணம்… பன்னீரை ஓவர்டேக் செய்தாரா எடப்பாடி?
வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பு செய்ய வேண்டிய ஏற்பாடுகளில் கோட்டைவிட்ட தமிழக அரசு, நிவாரண பணிகளில் கொஞ்சம் வேகம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. 2016-ல் வர்தா புயல் வந்த நேரத்தில், முதல் அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் கொஞ்சம் சிறப்பாகச் செயல்பட்டார். சென்னை முழுவதும் விழுந்துகிடந்த மரங்களை உடனடியாக அகற்றினார். அப்போது, பன்னீருக்குக் கிடைத்த நல்ல பெயர் தனக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார் எடப்பாடி.

சென்னையின் பிரதான சாலைகளில் எதிலும் ஒரு மணிநேரத்துக்குமேல் மழைநீர் தேங்கவில்லை. முக்கியமான நீர்வழித்தடங்கள், கால்வாய்கள், ஆறுகளில் இருந்த குப்பைகளை அகற்றி, நீர் செல்வதற்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு அதிகாரி தலைமையிலும், சிறப்புப் பேரிடர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டன. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, மாநகராட்சி, நகராட்சிகளுடன் இந்த முறை போலீஸும் களத்தில் இறங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் முழு வேகத்தில் களத்தில் இறக்கப்பட்டனர். வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஒரு நாள் முழுவதும் கட்டுப்பாட்டு அறையிலேயே அமர்ந்திருந்தார். உடனுக்குடன் புகார்கள் கேட்கப்பட்டு உடனடியாக மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. மின்மோட்டார்கள், பொக்லைன் எந்திரங்கள் முழு வேகத்தில் களத்தில் இறக்கப்பட்டன. ஆனாலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: