Advertisements

மோடியைச் சீண்டிய நமது எம்ஜிஆர்

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘லேட்டஸ்ட்டாக வந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ்களைக் கொண்டுவந்து போடும்’’ எனக் கட்டளையிட்டார். பரபரவென பக்கங்களைப் புரட்டினார். சிலவற்றை மட்டும் குறித்துக் கொண்டு நம்மைப் பார்த்தார். ‘‘எனக்குக் கிடைத்த சில தகவல்கள் இத்துடன் பொருந்திப் போகின்றனவா எனப் பார்த்தேன்’’ என்றார்.
‘‘என்ன தகவல்கள்?’’

‘‘தினகரன் தரப்பு சம்பந்தமாக மத்திய உளவுத்துறை அனுப்பிய இரண்டு தகவல்கள், மத்திய பி.ஜே.பி அரசைக் கொந்தளிக்க வைத்துள்ளன. தினகரன் செல்லும் இடங்களிலெல்லாம்  அ.தி.மு.க தொண்டர்களும், பொதுவானவர்களும் பெருமளவில் திரளுகிறார்கள் என்பது முதல் தகவல். நெல்லை, பசும்பொன், விருதுநகர், தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு தினகரன் சென்றபோது கூடிய கூட்டம், ‘அ.தி.மு.க என்ற கட்சி, தினகரன் பக்கம்தான் என்பதைக் காட்டுகிறது’ என மத்திய உளவுத்துறை ‘நோட்’ போட்டுள்ளது. அதற்குக் காரணம் தினகரனின் கொஞ்ச செல்வாக்கைத் தாண்டி, ‘கூட்டங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யப்படுகிறது’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.’’
‘‘இரண்டாவது தகவல்..?’’
‘‘மத்திய ஆட்சியைப் பற்றியோ, பிரதமர் மோடியைப் பற்றியோ தினகரன் நேரடியாக விமர்சிப்பதில்லை. ஆனால், தினகரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் மோடியையும், மத்திய ஆட்சியையும், பி.ஜே.பி-யையும், கடுமையான வார்த்தைகளால் குட்டுகிறார்கள். ‘சோ.க.’, ‘ராக்கெட் ராமசாமி’, ‘சோழ அமுதன்’ என்ற பெயர்களில் இந்தக் கட்டுரைகள் வருகின்றன. ‘எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி?’ என்ற கட்டுரையில், உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் மீண்டும் 30 குழந்தைகள் இறந்ததை விமர்சித்து எழுதியிருந்தார்கள். அதில், ‘உலக வல்லரசு நாடுகளுடன் இந்தியாவைப் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, முதலில் மருத்துவ வசதியின்றி குழந்தைகள் கொத்துக்கொத்தாக மடிவதைத் தடுப்பதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், ‘தாஜ்மகாலைச் சுற்றுலாத் தலங்கள் பட்டியலிலிருந்து நீக்கிய உ.பி முதலமைச்சர், அதில் காட்டும் ஆர்வத்தைக் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் செலுத்தினால், வாக்களித்த அந்த மாநில மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்’ என்றும் கிண்டலடித்து இருந்தார்கள். சோ.கருணாநிதி என்பவர்தான் சோ.க என்ற பெயரில் எழுதுகிறார். இவர் நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றுகிறாராம்.’’

‘‘ஓஹோ… அவ்வளவு தைரியமா?’’
‘‘இன்னும் அதிக துணிச்சலுடன் இந்துத்வா பற்றியும் கொந்தளித்து இருந்தார்கள். இந்து தீவிரவாதம் பற்றி நடிகர் கமல்ஹாசன் சொல்லியிருந்தார் அல்லவா? ‘மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து சாமியார் கைதானதை மறக்க முடியாது. தீவிரவாதம் என்றாலே இஸ்லாமியர்களால் மட்டுமே உருவெடுக்கும் என்று சொல்ல முடியாது. கமல்ஹாசனைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்று இந்து மகாசபைத் தலைவர் சொன்னதை, பிரதமர் கண்டிக்காதது ஏன்?’ என்றெல்லாம் ‘நமது எம்.ஜி.ஆர்’ விமர்சித்தது. மேலும், கருணாநிதியைப் பிரதமர் மோடி சந்தித்ததையும், 2ஜி வழக்குடன் நமது எம்.ஜி.ஆர் முடிச்சுப்போட்டிருந்தது. ‘2ஜி வழக்கில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னதைக் குறிப்பிட்டு, ‘அதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்’ என்றது ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேடு. இவை அனைத்துக்கும் மேலாக, 9-ம் தேதி காலையில் ‘கருப்புப் பண ஒழிப்பும் – கருப்பு தினமும்’ என்ற கட்டுரையை வெளியிட்டு, மோடிக்கு நேரடியாக சவால்விட்டுள்ளனர்.’’
‘‘ஓஹோ!’’
‘‘அந்தக் கட்டுரையில் சேகர் ரெட்டி பற்றிச் சொல்லியிருந்தார்கள். ‘சேகர் ரெட்டிக்குப் பணம் வந்த வழியைக் கண்டுபிடித்து, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமிங்கலங்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ எனச் சொல்லிவிட்டு, ‘இனியும் சேகர் ரெட்டி விவகாரத்தில் மத்திய அரசு கண்டும் காணாமல் வாய்மூடி மெளனியாக இருந்தால், மன்மோகன் சிங் கூற்றுப்படிப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரலாற்றுப் பிழையாக மாறும். மொத்தத்தில், ஊழல் திமிங்கலங்கள்மீது எடுக்கப்படும் மத்திய அரசின் நடவடிக்கையைப் பொறுத்தே கறுப்புப் பண ஒழிப்பா, கறுப்பு தினமா என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள்’ என்றும் காட்டமாகக் கேட்டிருந்தார்கள். இந்தக் கட்டுரை வெளியான நாளில்தான், சசிகலா குடும்பத்தினர் அத்தனை பேர் வீடுகளிலும் ரெய்டு அட்டாக் தொடங்கியது.”
‘‘187 இடங்களில் ரெய்டு நடத்தியிருப்பதைப் பார்த்தால் கோபம் அதிகம்போல் தெரிகிறதே?’’
‘‘ஆமாம்! தினகரன் மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தில் யாருமே அரசியல்ரீதியாக எழுந்து வரக்கூடாது என்ற நோக்கத்தில் ரெய்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ‘பணம் இருப்பதால்தான் இவர்கள் அதிகமாக ஆடுகிறார்கள்’ என்று நினைக்கிறார்களாம். டி.வி., பத்திரிகை என மீடியா செல்வாக்கைக் கையில் வைத்துக்கொண்டு மீண்டும் தாங்கள் அதிகாரத்துக்கு வருவோம் என்ற தோற்றத்தை உருவாக்குவதாக நினைக்கிறார்களாம்.
‘அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதும், அரசியல்ரீதியாக செல்லாக்காசு ஆகிவிடுவார்கள்’ என நினைத்தது தவறாகிப் போனது. தேர்தல் ஆணையத்தில் நடந்த இரட்டை இலை வழக்கில், பலம் வாய்ந்த டெல்லி வக்கீல்களை அமர்த்தி, வாதங்களை தினகரன் தரப்பு வைத்தது. தேர்தல் ஆணையத்தை முடிவெடுக்கவிடாத வகையில், தினகரன் தரப்பு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இவை அனைத்துக்கும் ‘செக்’ வைக்கவே இந்த ரெய்டு நடவடிக்கையாம்.’’
‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். இந்த நிலையில், தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர்மீதும் வழக்குப் பாய வாய்ப்பு இருக்கிறதா?’’
‘‘வழக்குகளில் சிக்கவைக்க வேலைகள் நடக்கின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சந்தேகத்துக்கிடமான பல நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டன. கறுப்புப் பணப் பரிமாற்றத்துக்காக மட்டுமே இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். எந்த பிசினஸும் செய்யாமலே, பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடக்கும். சில காலம் கழித்து, நிறுவனத்தை மூடிவிட்டதாகக் கணக்குக் காட்டுவார்கள். ‘என்ன பிசினஸ் செய்தார்கள், பணம் எங்கிருந்து வந்தது, எங்கே போனது?’ எதுவுமே யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட நிறுவனங்களை, ‘ஷெல் கம்பெனிகள்’ எனக் குறிப்பிட்டு, இவற்றின்மீதுதான் குறி வைத்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது வருமானவரித் துறை. சசிகலா குடும்பத்தினரின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டும் இந்த அடிப்படையில்தான். குறிப்பாக, ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இதில் சில நிறுவனங்கள் பெயரில் நடைபெற்ற பரிமாற்றங்கள் சந்தேகத்துக்குரியவை’ என்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். ‘இந்த ரெய்டில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து, அடுத்ததாக அமலாக்கத் துறை களத்தில் இறங்கும். அப்போது வழக்குகள் பாயும்’ என்கிறார்கள்.’’ 

‘‘தமிழ்நாட்டில் எத்தனையோ ரெய்டுகள் நடந்துள்ளன. அவற்றில் எல்லாம் நடவடிக்கை எடுத்தது மாதிரி தெரியவில்லையே?’’
‘‘இதை வைத்துதான், ‘சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் நடத்தப்பட்டது, அரசியல்ரீதியான ரெய்டு’ என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பத்துக்கும் மேற்பட்ட ரெய்டுகளை வருமானவரித் துறை நடத்தியுள்ளது. ஆனால், எதிலுமே எந்த நடவடிக்கையும் இல்லை. அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமான அன்புநாதன் என்பவர் கரூரில் சிக்கினார். அவர் ஜாமீனில் வந்துவிட்டார். சேகர் ரெட்டி கைதானார். கோடிகளில் பணமும் தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும்கூட ரெய்டு நடந்தது. ஆனால், சேகர் ரெட்டியும் ஜாமீனில் வந்துவிட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமானவரித் துறை சோதனை போட்டது. அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. அன்புநாதன், சேகர் ரெட்டி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதைத் தவிர யார்மீதும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத்தான் தினகரன் தனது பேட்டிகளில் சொல்லிக் கொந்தளிக்கிறார். வருமானவரித் துறையின் நடவடிக்கைகளில் இதுதான் சந்தேகம் கிளப்புகிறது.’’
‘‘எதிர்க்கட்சிகளும் இதைத்தானே சொல்கின்றன!’’
‘‘அரசியல்ரீதியாக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. எடப்பாடி அணியையும் தினகரனையும் சேர்க்க சிலர் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ‘எல்லோரும் ஒன்றாகப் போவோமே’ என அவர்கள் சொல்கிறார்களாம். ‘சசிகலா குடும்பத்தைப் பகைத்துக்கொள்வது இன்று வேண்டுமானால் பிரச்னை தராமல் இருக்கலாம். ஆட்சி முடியும்போது, அது பிரச்னையை ஏற்படுத்தும். அடுத்த சட்டசபைத் தேர்தலில் தகராறை உண்டாக்கும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். இதற்கு எடப்பாடியும் பன்னீரும் இறங்கி வருவதுபோல் தெரிந்ததாம். கடந்த 6-ம் தேதி அமைச்சர்கள் நான்கைந்து பேர் ஒரே காரில் எங்கோ சென்று பேசி உள்ளார்கள். அந்தப் பேச்சுவார்த்தையே சமரச முயற்சிதான் எனச் சொல்லப்படுகிறது. அதே நாளில் பெங்களூரு போன தினகரன், சசிகலாவைச் சந்தித்ததாகவும் சொல்கிறார்கள். இந்த இரண்டு சந்திப்புகளும் பேச்சு வார்த்தைகளும் இணைப்பை நோக்கிப் பயணித்ததாம். எடப்பாடி – தினகரன் இணைப்பை டெல்லி தலைவர்கள் விரும்பவில்லையாம். அதைத் தடுக்கவே தினகரன் உறவினர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.’’
‘‘ஆனால், ரெய்டுக்குத் தமிழக போலீஸ்தானே ஒத்துழைப்பு  கொடுத்தது?’’
‘‘ஆமாம். தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ்,  அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளிலும், தலைமைச் செயலகத்திலும்  ரெய்டு நடந்தபோது மத்திய ரிசர்வ் போலீஸ் படையைப்  பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றார்கள். தலைமைச் செயலகத்தில் சோதனை போட்டபோது  பன்னீர் முதல்வராக இருந்தார். ஆனால், அப்போது அவர் முழுமையாக டெல்லியின் நம்பிக்கைக்குரியவராக மாறவில்லை. விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டின்போது எடப்பாடி முதல்வர். அப்போது அவர் தினகரனுடன் இருந்தார். இப்போது, பன்னீரும் எடப்பாடியும் ‘டெல்லியின் நம்பர் 1 விசுவாசி யார்’ என நிரூபிப்பதில் போட்டிபோடுகிறார்களே. அதனால், வருமான வரித்துறையினர் கேட்ட ‘எல்லாமே’ கிடைக்கிறது’’ என அழுத்திச் சொல்லிவிட்டு கழுகார், சட்டெனப் பறந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: