Advertisements

டிசம்பர் 12 தனிக்கட்சி? – வந்துட்டேன்னு சொல்லு! – ரஜினி ரகசியங்கள்!

யக்குநர் இமயம் பாலசந்தரின் இயக்கத்தில் முதல் பட வாய்ப்பு, ஒரு ஹோலிப் பண்டிகை அன்று ‘சிவாஜிராவ்’ ரஜினிகாந்த் ஆகிறார். பாலசந்தரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள். இப்படி 70-களில் தொடங்கிய பயணம் 80-களில் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், ஆர்.தியாகராஜன் என்று கடந்து, 90-களில் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோருடன் பயணித்து, இரண்டாயிரம்களில் ஷங்கர், பா.இரஞ்சித் என்று தொடர்கிறது.

இந்தப் பயணமும் வாழ்வும் இன்னும் அவருக்கே ஆச்சர்யம்தான். இதை அவரின் பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இவர் அறிமுகமான காலத்தில் இருந்த ஹீரோக்களுடன்

போட்டிபோடுவதற்கான நிறமோ, முகவெட்டோ கிடையாது. வசதியான குடும்பப் பின்னணி கிடையவே கிடையாது. குறிப்பாக, கர்நாடகாவிலிருந்து வந்தவர். ஆனாலும் இங்கு சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு வளர்ந்ததும்,  இந்தியாவின் மெகா பட்ஜெட் பட ஹீரோ என்ற அளவுக்குத் தன்னைத் தக்கவைத்ததும் ஆச்சர்யம்தான். இந்த ‘நடத்துநர்-நடிகர்’ பயணம் ஆர்வக்கோளாறினால் நிகழ்ந்தது அல்ல, தனக்கு விதிக்கப்பட்டது என்பதை முழுமையாக நம்புகிறார். அதனால்தான் ‘மாயா மாயா எல்லாம் மாயா’ என்று பாடியபடி தன்போக்கில் நடக்கிறார்.

இடையிடையே வெளிவரும் ரஜினியின் அரசியல் வாய்ஸ், நாம் அனைவரும் அறிந்ததே. ‘எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்!’ – இது அவர் பட டயலாக்தான். இந்தக் கால்நூற்றாண்டு எதிர்பார்ப்புக்கு, அவரின் அரசியல் வரவுமீதான கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் பதிலாகத் தன் பிறந்தநாளில் அறிவிப்பு இருக்கும் என்றொரு செய்தி. இது வருடாவருடம் வரும் வழக்கமான செய்திதானே என்று நினைக்கலாம். ஆனால், அவரைப்பொறுத்தவரை போர் வந்துவிட்டது. இப்போது அந்தப் போருக்கான ஆயத்தப்பணிகளில் இருக்கிறார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

ரஜினி இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார். அவருக்கான அரசியல் வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன, சினிமாவைப் பகிர்ந்துகொண்டதுபோல் அரசியலையும் கமலுடன் பகிர்ந்துகொள்வாரா…

சினிமா

ஏற்றம், இறக்கம் என்று பயணித்து வளர்ந்த இவரின் சினிமா வாழ்க்கையில் இன்றைய நாள்களை உச்சம் எனலாம். ஒரு பக்கம் தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்டுள்ள ‘2.0’, மறுபுறம் சமூகப் பிரச்னைகளை அணுகும் ‘காலா’. டப்பிங் உள்பட இரண்டு பட வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிட்டு ரிலாக்ஸாக இருக்கிறார் ரஜினி. வெகுநாள் களுக்குப்பிறகு இப்படி ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். இரண்டையும் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்துவிட்டு வாசிப்பு, நண்பர் களுடனான சந்திப்பு, அரசியல் ஆலோசனைகள் என்று வேறு திசையில் பிஸியாக இருக்கிறார். இனி இப்படி இரண்டு படங்களை ஒரே சமயத்தில் நடிக்கும் நெருக்கடிக்குள் சிக்க மாட்டார் என்பது நிச்சயம். இனி அதிகபட்சம் ஆண்டுக்கு ஒரு படம். அதுவும் தன் வயதுக்கேற்ற சமூகப் படங்களாகவே இருக்கும். குறிப்பாக வழக்கத்தைவிட அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்கிறார்கள், அவரை அறிந்தவர்கள்.

குடும்பம்

இளைய மகளுக்காக ‘கோச்சடையான்’, மூத்த மகளுக்காக ‘காலா’  என்று மகள்களுக்குச் செய்ய வேண்டியதையும் நிறைவாகச் செய்திருக்கிறார். மகள்கள் தங்களுடைய சினிமா ஆர்வத்தை வெளிப்படுத்தும்போது ஆரம்பத்தில் தயங்கியவருக்கு, இன்று மகள்கள், மருமகன் என அனைவரும் சினிமாவில் செட்டிலானதில் மகிழ்ச்சி. நன்றாகப் படிக்கும் பேரன்கள், குடும்பத்தையும் கல்வி நிலையத்தையும் கவனிக்கும் மனைவி என்ற இந்தச் சூழல் இவரின் அரசியல் வரவுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.

ஆரோக்கியம்

மரணத்தின் வாயில் வரை சென்றுவிட்டுத் திரும்பிய அன்றைய நாள்கள்தான், புகை, மது குறித்த இன்றைய அறிவுரைகளாக இவரிடம் இருந்துவருகின்றன. உடல்மீதான நிதானம், கட்டுப்பாடு இப்போதுதான் இவருக்குப் பிடிபடத் தொடங்கியிருக்கிறது. கூடவே எப்போது, யாருக்கு, என்ன செய்வது என்று திட்டமிடக்கூடிய இன்றைய நாள்களும் இவரின் கைகளில் உள்ளதால் நிதானமாக யோசிக்கக்கூடிய உடல்நிலை வாய்க்கப்பெற்றிருக்கிறார்.

வயது

‘66 வயசுல உங்க தலைவர் எப்ப கட்சி ஆரம்பிச்சி, பிரசாரம் போய்…’ என்று இவரின் ரசிகர்களிடம் மற்றவர்கள் கேலி பேசுவதும் இவரின் காதுகளுக்கு வராமல் இல்லை. இவரைப் பொறுத்தவரை உடலுக்குத்தான் மூப்பே தவிர, மனதுக்குக் கிடையாது. ஒருவகையில் அது உண்மையும்கூட. ‘இதுதான் என் கட்சி. அதன் கொள்கை இதுதான். தமிழ்நாடு இன்று இப்படி இருக்கிறது. என்னிடம் கொடுத்தீர்கள் என்றால் இப்படியாக மாற்றிக்காட்டுவேன். அதற்கு வலுவான இளைஞர்களும், அறிவான சீனியர்களும் என்னிடம் இருக்கிறார்கள்’ என்று அறிவித்துப் பிரசாரம் செய்வதுதான் ரஜினியின் திட்டம். அதனால், வயது ஒரு தடையே அல்ல.
 

டீம்

இவரின் மனம் அறிந்த, மக்களைப் புரிந்த, தமிழகத்தின் புவியியல் சூழலை உள்வாங்கிய சிலரைக்கொண்ட ஒரு குழுவிடம் தொடர்ந்து அரசியல் ஆலோசனைகளைப் பெற்றுவருகிறார். அந்தக் குழுவில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுதான் தமிழகத்துக்குத் தேவையான அறிவியல்பூர்வமான உடனடித் திட்டங்கள் எவையெவை என்ற பட்டியல் தயாரித்துக்கொண்டிருக்கிறது. அவற்றை மக்களுக்கு முன் எடுத்துவைக்கும்போது அவை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்பதற்காக, துறைசார்ந்த வல்லுநர்களுடன் விவாதிப்பதும் கலந்துரையாடுவதும் நடக்கின்றன.

கொள்கை

‘மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நேர்மையாக, மதச்சார்பின்றிச் செய்ய வேண்டும்’ என்பதே இவரின் அடிப்படைக் கொள்கை.

 கமல்ஹாசன்

வயதில் இவரைவிட கமல்ஹாசன் இளையவர். ஆனால், சினிமாவில் இவருக்கு மூத்தவர். இன்று அரசியலிலும் முந்திக்கொண்டார். ஆனால், அந்த அன்பும் மரியாதையும்  அவரை அணுகும்போதோ, அவரைப்பற்றி மற்றவர்களிடம் பேசும்போதோ ஒருங்கே இவரிடம் வெளிப்படும். எங்கும் எப்போதும் ஒருவர் மற்றவரை விட்டுக்கொடுத்துப் பேசியதில்லை. ‘முரசொலி’ பவளவிழாவிலும் சிவாஜி கணேசன் நினைவு மணி மண்டபத் திறப்பு விழாவிலும் சில வார்த்தைகள் எதிரும் புதிருமாக இருந்ததாக ஊடகங்களில் பேசப்பட்டன. அதைப்பற்றி இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப் புரிதல், இவர்களின் ரசிகர்களுக்குள் இல்லை என்பதே உண்மை. அதனால், அரசியலில் இருவரும்  இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

எப்போது:

ஜெயலலிதாவின் மறைவு, கலைஞரின் ஓய்வு, எடப்பாடி அரசின் நிலையற்ற தன்மை, கலகலத்துப்போய் உள்ள அ.தி.மு.க, தனக்கு முன்னதாகக் களத்துக்கு வந்துள்ள கமல்ஹாசனின் சுறுசுறுப்பு, நடிகர் விஜய்யின் வளர்ச்சி, அனைத்துக்கும் மேல், முன்பைவிடத் திடமாக இருக்கும் தி.மு.க-வின் அடிப்படைக் கட்டமைப்பு என தமிழக அரசியலின் இன்றைய சூழலை இவர் உணர்ந்தே இருக்கிறார். இந்த ஆட்சி தொடருமா, கவிழுமா, கவிழ்க்கப்படுமா என்ற அரசியல் சதுரங்கத்தைப் பற்றி இவருக்கும் ஒரு கணிப்புக் கணக்கு உள்ளது. அந்தக் கணக்கு கிட்டே நெருங்கும்போதுதான் இவரின் அரசியல் கட்சி தொடக்கம் இருக்கும் என்கிறார்கள். அதுதான் இவரின் கடைசி வாய்ப்பும். இந்தமுறை தேர்தல் அரசியலிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

டிசம்பர் 12 தனது பிறந்தநாளன்று கட்சியை அறிவிப்பதாக முன்னர் திட்டமிட்டிருந்த ரஜினி, இப்போது அதைத் தள்ளிவைத்திருக்கிறார். எடப்பாடி தலைமையிலான இந்த அரசு முடியும் நேரத்தில்தான் கட்சியை அறிவிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி.  ஆனால், அந்த மெயின் பிக்சருக்கு முன் டீசர், ட்ரெயிலர், சிங்கிள் வெளியிடுவதுபோல் இந்தப் பிறந்தநாளில் அரசியல் டீசராக ஓர் அறிவிப்பு இருக்கும் என்கிறார்கள் ரஜினியின் நண்பர்கள்.

காத்திருப்போம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: