Advertisements

புறப்பட்டார் புரோஹித்… டிசம்பரில் கவர்னர் ஆட்சி!

மிழகத்தில் மறைமுகமாக பி.ஜே.பி ஆட்சி நடக்கிறது என இனி யாரும் சொல்ல முடியாது” என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.

‘‘ஏன், தமிழகத்தைக் கைகழுவ பி.ஜே.பி முடிவு செய்துவிட்டதா?’’ என்றோம். சிரித்தபடி ‘‘இல்லை’’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘நேரடியாகவே பி.ஜே.பி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது என்பதற்கான தொடக்கம்தான் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் கோவை விசிட்’’ என்றபடி தொடங்கினார்.

‘‘புதுச்சேரியில் ஏற்கெனவே துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது பி.ஜே.பி; அல்லது அங்கு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமிக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது தமிழகத்திலும் அந்த நிலைதான் ஏற்படப்போகிறது. அதற்கான தொடக்கமாக துடைப்பத்தைக் கையில் எடுத்துவிட்டார் கவர்னர். குப்பைகளைக் கூட்டி அள்ளுவது போல அள்ளப்போகிறார். தமிழகத்தில் இதுவரை எந்த கவர்னரும் இப்படி ஆய்வு மேற்கொண்டதில்லை. 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது தமிழகத்துக்கு கவர்னராக இருந்த சென்னா ரெட்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் வெளிப்படையாகவே மோதல் நடந்தது. அந்தச் சூழ்நிலையில்கூட சென்னா ரெட்டி, இப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டதில்லை. இப்போதைய கவர்னர் பன்வாரிலாலுக்கும் முதலமைச்சர் எடப்பாடிக்கும் என்ன மோதலா நடக்கிறது? ஆனால், கவர்னர் இப்படிச் செய்வது அரசியல் சட்டமீறல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டன.’’

‘‘தினகரனும் பொங்கியுள்ளாரே?’’

‘‘பொதுவாக கவர்னர், கிண்டி ராஜ் பவன் மாளிகையைவிட்டு வெளியில் வருவதில்லை. பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்கள், குடியரசு தின விழா கொடியேற்றம், சட்டமன்ற உரை நிகழ்த்துவது போன்ற நிகழ்வுகளுக்கு மட்டும்தான் வெளியில் வருவார். மற்ற மாநிலங்களில் எப்படி நிலையோ… அதுதான் தமிழகத்திலும்.  ஆனால், புரோஹித்தை வைத்து அந்த மரபை உடைத்துள்ளது பி.ஜே.பி. ‘புறப்பட்டு விட்டார் புரோஹித். இனி அவரை யாரும் தடுக்க முடியாது’ என்பதே கோட்டை வட்டாரத் தகவல். அடுத்து கன்னியாகுமரியில் ஆய்வு செய்ய உள்ளார் கவர்னர். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் அவரைப் பார்க்கலாம். கோவையும், கன்னியாகுமரியும் பி.ஜே.பி-க்குக் கொஞ்சம் செல்வாக்கான இடங்கள். அங்கிருந்து கவர்னரின் ஆட்சி ஆரம்பமாயிருக்கிறது.”

‘‘என்னதான் பி.ஜே.பி-யின் திட்டம்?’’

‘‘துடைப்பத்தை கவர்னர் ஏன் கையில் எடுத்தார் என்பது டிசம்பர் கடைசியில் தெரிந்துவிடும். டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் 18-ம் தேதி வெளியாகும். அதன்பிறகு, தமிழகத்தில் சட்டமன்றம் முடக்கப்படும். கவர்னரின் கைக்கு ஆட்சி அதிகாரம் வந்துவிடும். கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடக்க உள்ளது.’’

‘‘ஆட்சியை முடக்க முடிவெடுத்தால் தாமதம் செய்ய மாட்டார்களே?’’

‘‘இப்போது பிரதமர் மோடி, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் கவனம் முழுவதும் குஜராத்தில்தான் இருக்கிறது. மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு உள்ளிட்ட ஏழு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றாக விசாரிக்கப்படுகின்றன. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் இதை விசாரிக்கும் வேகத்தைப் பார்த்தால், சீக்கிரம் ஒரு முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. கவர்னர் அதைப் பயன்படுத்திக்கொண்டால், ஆட்சியைக் கவிழ்த்த கெட்ட பெயர் பி.ஜே.பி-க்கு வராது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.’’

‘‘கோவையில் கவர்னர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணியை அனுமதிக்கவில்லை என்கிறார்களே?’’

‘‘14-ம் தேதி காலை கவர்னர் கோவை வந்திறங்கினார். அன்று காலையே, ஆஸ்திரேலியாவிலிருந்து அமைச்சர் வேலுமணியும் கோவை வந்துவிட்டார். முதலில் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார். அதன்பிறகு, ரேஸ்கோர்ஸ் சுற்றுலா மாளிகையில், திட்டமிட்டப்படி மாலை 3.30 மணிக்கு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கோவை கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், எஸ்.பி. மூர்த்தி மற்றும் சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 12 முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ‘அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை என ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த தால், அதிகாரிகளின் கூட்டத்துக்கு அமைச்சர் வேலுமணி அனுமதிக்கப்படவில்லை’ எனச் சொல்கிறார்கள். ‘திட்டமிட்டுத் தான் அமைச்சரை அனுமதிக்க வில்லை. அமைச்சர் இருந்தால் அதிகாரிகள் சுதந்திரமாகப் பேசமாட்டார்கள்’ என கவர்னர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். இல்லையென்றால் அங்கும் செட்டப் ஆலோசனைதான் நடந்திருக்கும். 15-ம் தேதி காலை 7 மணிக்கே காந்திபுரத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டப் பணிகளை கவர்னர் ஆய்வு செய்தார். இதற்காக காந்திபுரம் முழுவதும் பளிச் தூய்மையில் இருந்தது. அவர் துடைப்பத்துடன் குப்பை அள்ளுவதற்காக மட்டும் சில இடங்களில் சம்பிரதாயத்துக்காகக் குப்பை கொட்டி வைக்கப்பட்டது. திட்டமிட்டபடியே அவற்றைச் சுத்தம் செய்தார் கவர்னர். அவரது வருகைக்காக வைக்கப் பட்ட குப்பைத்தொட்டிகள், அவர் சென்ற சில நிமிடங்களிலேயே மாயமாகின.’’

‘‘செட்டப் குப்பை… செட்டப் குப்பைத் தொட்டியா?”

‘‘அரசாங்கமே செட்டப் அரசாங்கம் போலத்தானே இருக்கிறது. கவர்னர் தினமும் தலைமைச் செயலகத்துக்கு வரப்போகிறார் என்ற தகவலும் பரவிக் கிடக்கிறது. தலைமைச் செயலகத்தில் முதல் தளத்தில் கவர்னருக்கு அறை உள்ளது. முதல் தளத்தில் உள்ள அறைக்கு கடந்த பத்தாண்டுகளில் எந்த கவர்னரும் சென்றதில்லை. ஆனால், இப்போது அந்த அறை வேகமாகத் தயார் செய்யப்படுகின்றன. தினமும் கவர்னர் அந்த அறையில் அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்யப்போகிறாராம்.’’

‘‘அப்போது முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வரலாமா, கூடாதா?’’

‘‘இதற்கு எடப்பாடியிடம் பதில் இருக்காது. ஆனால், அரசியல் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. பிரிவு 167-ன் படி, முதல்வர்தான் கவர்னருக்குத் தகவல்களைச் சொல்ல வேண்டும். கவர்னர் நேரடியாக அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளத் தேவையில்லை. அசாதாரண சூழ்நிலைகளில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டியிருந்தால், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி போன்றவர்களைக் கூப்பிட்டுத் தகவல் கேட்கலாம். மற்றபடி கவர்னர், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளையும், முதல்வர் தரும் தகவல்களையுமே கவனிக்க வேண்டும். ஆனால், பன்வாரிலால் ‘பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவே இந்த ஆய்வுகள்’ என்கிறார். ‘எதற்காக அவர் அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,இப்படிப் பழகிக்கொண்டு எதிர்காலத்தில் அவர் என்ன செய்யப்போகிறார்’ என்பதுதான் டிசம்பர் மர்மத்தில் உள்ளது.’’

‘‘இதற்கு டெல்லி எந்த வகையில் உதவுகிறது?’’

‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசுப்பணிக்குப் போன ராஜகோபால் ஐ.ஏ.எஸ், தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார். அவர்தான் கவர்னரின் செயலாளராக ஆகப் போகிறார் என்பது தகவல். பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க சமீபத்தில் மோடி சென்னை வந்தார். அந்த சோமநாதனும் இப்போது தமிழ்நாட்டுப் பணிக்கு வருகிறார். கவர்னரின் ஆட்சிக்கு உதவ இப்படி இன்னும் பலர் வருவார்கள் எனக் கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள்’’ என்ற கழுகார் ஜன்னல் வழியே பாய்ந்தார். அவர் வைத்துவிட்டுப் போன குறிப்புகள், காற்றில் படபடத்தன.

‘‘சசிகலா குடும்பத்தினரை வளைத்த ரெய்டுகளுக்கு முக்கியமான காரணம், ஜெயலலிதா தொடர்பான பணமும் சொத்துப் பத்திரங்களும் யாரிடம் இருக்கின்றன என்பதற்கான தேடுதல் வேட்டை’’ என்கிறார்கள் டெல்லியில். அங்கு மிகமிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் வி.வி.ஐ.பி ஒருவரிடம் ஜெயலலிதா முன்பு சொல்லி வைத்திருந்த தகவல்களை அவர் போட்டுக்கொடுத்துள்ளாராம்.

சசிகலா குடும்பத்துப் பெண் ஒருவர், தனது வக்கீலுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு கணக்கு விவரத்தை அனுப்பி வைத்திருந்தாராம். அது இப்போது வருமான வரித்துறையின் வசம் இருக்கிறது.

தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழல்களை மத்திய அரசின் உளவுத்துறை திரட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியை எப்படிச் செலவிடுகிறார்கள் என்பதை பூதக்கண்ணாடியால் கண்காணிக்கிறார்கள்.

சசிகலா குடும்பத்துக்காகச் செய்யப்பட்ட இரண்டு மெகா சொத்து டீலிங்குகளில் இன்றைய அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டிருப்பது வருமான வரித்துறைக்குத் தெரிய வந்துள்ளது.

கோட்டையில் நடப்பதை முக்கிய அதிகாரி, கவர்னருக்குச் சொல்கிறாரோ என்ற சந்தேகம் முதல்வருக்கு வந்துள்ளது. அதனால் அவரிடம் அடக்கி வாசிக்கச் சொல்லி முதல்வர் கட்டளையிட்டுள்ளாராம்.

கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதியைப் பார்க்க வரும் வி.ஐ.பி-க்களை வாசலில் நின்று வரவேற்பார் ஸ்டாலின். நவம்பர் 16-ம் தேதி வந்த எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரை செல்வியும் தமிழரசும்தான் வரவேற்றனர். கோபாலபுரம் சந்திப்பு முடிந்த பிறகு, தனது வீட்டுக்கு அந்த 3 எம்.எல்.ஏ-க்களை அழைத்து டீ கொடுத்து அனுப்பினார் ஸ்டாலின். தொண்டையில் ஏற்பட்டுள்ள இன்ஃபெக்‌ஷன் காரணமாக ஓய்வில் இருப்பதால், ஸ்டாலின் அன்று கோபாலபுரம் வரவில்லை.

சசிகலா குடும்பத்தில் இளவரசர் போல உலாவரும் வி.ஐ.பி -யும் மதுரைப் பகுதியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரின் மகனும் மிகவும் நெருக்கமாம். ‘‘இருவரும் தொழில் பார்ட்னர்கள்’’ என்கிறார்கள். ரெய்டால் நொந்து போயிருந்த அந்த இளவரசருக்கு ஆறுதல் வார்த்தை சொல்லியிருக்கிறார் அந்த அமைச்சரின் பிள்ளை.

ரெய்டால் மிகவும் கவலையில் இருக்கிறார், போயஸ் கார்டனில் இருந்த பூங்குன்றன். அவரை தங்கள் பக்கம் வரச் சொல்லி மூத்த அமைச்சர் ஒருவர் தூண்டில் போட்டுள்ளார். ‘‘சின்னம்மா குடும்பத்தால்தான் வளர்ந்தேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவங்களோடதான் இருப்பேன்” என்று சொல்லிவிட்டாராம் பூங்குன்றன்.

Advertisements
%d bloggers like this: