Advertisements

நாங்கள் அனுப்பியது ஆளுநரை அல்ல; தமிழக நலனுக்கான சி.பி.ஐ இயக்குநரை” அதிரவைக்கும் பி.ஜே.பி தரப்பு!

ளுநர் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் தமிழகத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட பெயர், பன்வாரிலால் புரோஹித். ‘மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுகிறார், ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒத்திகை நடக்கிறது’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளுநருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது ஆளுநரின் சுற்றுப்பயணம். கோவைக்கு அண்மையில் வந்த ஆளுநர் பன்வாரிலால், அரசு சுற்றுலா மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டம்தான், எதிர்க்கட்சிகளின் கூடாரத்தில் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறது.

அமைச்சர்களைக் கூப்பிடாமல், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் என முக்கியமான 12 உயர் அதிகாரிகளை மட்டும் அழைத்து, இந்த ஆய்வுக் கூட்டத்தை அரங்கேற்றினார் ஆளுநர். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோவையைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி, “ஆளுநரின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், இதனை வரவேற்பதாகக் கூறியிருக்கிறார். ஆளுநர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உரிய கோப்புகளுடன் பங்கேற்று, ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தது கூடுதல் வியப்பு. ஆளுநரின் தலையீடு குறித்து, பி.ஜே.பி. வட்டாரங்களில் பேசினோம்.

“தமிழ்நாட்டுக்கு நாங்கள் அனுப்பியிருப்பது, ஆளுநரை அல்ல; ஒரு சி.பி.ஐ. இயக்குநரை. எதிர்க்கட்சிகள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. அதேசமயம் ஆளுநருக்கான அதிகாரங்களை உணர்ந்து தற்போதைய தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதையும் கவனிக்க வேண்டும். மக்களுக்கான எங்கள் செயல்பாடுகளை அந்த மக்கள் புரிந்துகொண்டால் போதும். எதிர்காலத்தில் கண்டிப்பாகப் புரிந்துகொள்வார்கள். ‘ரெய்டுக்கு வருமான வரித்துறையை அனுப்பி பி.ஜே.பி. அரசு மிரட்டுகிறது’ என்று சொல்வதை எதிர்க்கட்சியினர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், பொதுமக்களின் வீடுகளுக்கா வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றார்கள்? சொத்துகளை குவித்துவைத்திருந்தவர்களின் வீடுகளுக்குதானே சென்றார்கள். 

இன்னும் நாங்கள் முழுமையாக செயல்பாட்டை ஆரம்பிக்கவில்லை. அதற்குள், ‘அமைச்சர்கள் வீடுகளுக்கு ரெய்டு போகத் தயங்குவது ஏன்?’ என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுகிறார்கள். சிலரிடம் குவிந்திருக்கும் கணக்கில்வராத பணம், நிலம், தங்கம், வைர நகைகள் ஆகியவை அனைத்தும் அரசின் கருவூலத்துக்கு விரைவில் திரும்பச் செய்வோம், அதுதான் நாங்கள் கையில் எடுத்துள்ள முழுத் திட்டம். மக்களை ஏமாற்றிய யாரும், எங்கும் ஓடி ஒளியமுடியாது. இது ஒருபக்கம் இருக்க, மக்கள் நலத்திட்டப் பணிகளுக்காக, மாநிலங்களுக்கு அதிகபட்ச நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த நிதியைப் பெறும் மாநில அரசுகள், அவற்றை முழுமையாகச் செலவிடுவது இல்லை. அதுதொடர்பான பல விஷயங்கள் இப்போது தமிழக ஆளுநர் கையில் கோப்புகளாக உள்ளது. குறிப்பிட்ட சில துறைகளில் இப்படி மத்திய அரசின் பணம், தேங்கிவிட்டது. அந்தப் பணம் கமிஷன்களாகப் பிரிக்கப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதும் இந்த நிலை தொடர்கிறது. இதை மாற்றுகிற வேலையைத்தான் ஆளுநர் கையில் எடுத்திருக்கிறார். ஓரிரு மாநிலங்களில் இதுபோன்றப் பரிசோதனையை செய்து பார்க்க பி.ஜே.பி. திட்டமிட்டுள்ளது. 

அடுத்தகட்டமாக வாரத்தில் இரண்டு நாள்கள் ‘மக்கள் குறைகேட்பு முகாம்’ நடத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டை ஆட்சிசெய்யும் அதிகாரம், பி.ஜே.பி-யால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு உண்டு என்பதை நிரூபிப்பதுபோல், இனி அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும். அந்த நடவடிக்கைகள் அனைத்துமே, மக்களுக்கு பயனுள்ளதாகவும், மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிரானதாகவும் மட்டுமே இருக்கும். தமிழ்நாடு, ‘தங்க’ நாடாக மாறப் போவதைப் பாருங்கள்” என்று பரபரப்பைப் பற்றவைத்தார்.

ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். பெரிய மாநிலமான தமிழ்நாட்டுக்கு முழுநேர ஆளுநர் தேவை என்கிற குரல் பல்வேறு தரப்பில் இருந்து ஒலித்த போதிலும், ஓராண்டாக மத்திய பி.ஜே.பி. அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இடைப்பட்ட காலத்தில், ஜெயலலிதா மறைந்தது, அவர் தலைமையிலான அ.தி.மு.க. இரண்டு, மூன்று அணிகளாகப் பிளவுபட்டது, பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, முதல்வர் எடப்பாடி அணியுடன் இணைந்து, சசிகலா குடும்பத்தினரை தனிமைப்படுத்தியது எனப் பல நிகழ்வுகள் அரங்கேறிவிட்டன. இந்நிலையில்தான், தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பன்வாரிலால் புரோஹித்

வித்யாசாகர் ராவைப் போன்றே இவரும் பி.ஜே.பி-யில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மேகாலயா, அஸ்ஸாம் மாநிலங்களின் ஆளுநராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், கடந்த 11 மாதங்களில், தமிழகம் பல முக்கியப் பிரச்னைகளைச் சந்தித்துவிட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசரச் சட்டம், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி, நீட் தேர்வு தொடர்பான குழப்பம், மருத்துவக் கவுன்சிலில் இடஒதுக்கீடு, டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம், விளைநிலங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டம், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டது என தமிழக மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளின் பட்டியல் பெரிதாக நீள்கிறது. “இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த மூவ் எதுவோ?” என மக்கள் இப்போதே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisements
%d bloggers like this: