Advertisements

வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு மன்னார்குடி!

சசி குடும்பத்தினர் தொடர்பான சோதனையில், வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு, மன்னார்குடி என, தெரிய வந்துள்ளது. இதுவரை சிக்கிய ஆவணங்கள் வாயிலாக, இமாலய மோசடிகள் அம்பலமாகி உள்ளதால், ‘எனக்கு எந்த சம்மனும் வரவில்லை’ என, உதார் விடும், சசிகலாவின் தம்பி திவாகரனை உலுக்க, வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கல்லுாரி, பண்ணை வீடுகள் மற்றும் பினாமி சொத்துக்களை முடக்கவும், பதுக்கியுள்ள வைரக் குவியலை பறிமுதல் செய்யவும், அதிகாரிகள் படை ஆயத்தமாகி வருகிறது.மன்னார்குடி என்ற சிறிய ஊரில் பிறந்து, சாதாரண அரசு அதிகாரியின் மனைவியாக வாழ்க்கைப்பட்ட சசிகலா, ஜெயலலிதா என்ற, அதிகார ஆயுதத்தை பயன்படுத்தி, அ.தி.மு.க., மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் அதிகார மையமானார்.
அனைத்து முடிவுகளும், சசிகலாவை கலந்து ஆலோசித்த பின்னரே, ஜெயலலிதா எடுப்பார் என்ற பிம்பத்தை, நாடு முழுவதும், சசி கும்பல் ஏற்படுத்தியது.அதன் விளைவாக, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அக்கும்பலுக்கு கைகட்டி சேவகம் செய்தனர். அதை பயன்படுத்தி, சொத்துக்களை வாங்கி குவித்தனர்.

ரெய்டு

ஒரு கட்டத்தில், சசிகலா என்ற அந்த அதிகார வலை, சகோதரர் திவாகரன், கணவர் நடராஜனின் உறவினர்கள், தன் சகோதரிகள்,

சகோதரர்கள், அவர்களின் வாரிசுகள் என நீண்டு, மன்னார்குடி குடும்பமாகவும், மன்னார்குடி மாபியாவாகவும் மாறியது. அதன் விளைவாக, சசிகலா, தற்போது, பெங்களூரு சிறையில் இருக்கிறார்.
இதற்கிடையில், பல ஆயிரம் கோடிகளுக்கு, அக்கும்பல் சொத்துக்களை குவித்திருந்ததால், வருமான வரித்துறையினர், நவ., 9ல், அவர்களின் வீடுகள், அலுவலகங்கள், போலி நிறுவனங்கள் என, 215 இடங்களில் சோதனை நடத்தினர். ஐந்து நாள் சோதனை முடிவில்,பல ஆயிரம் கோடி ரூபாய், சொத்து ஆவணங்கள், போலி கம்பெனிகள் பரிவர்த்தனைகள், பினாமி சொத்து ஆவணங்கள் மற்றும் தங்கம், வைர நகைகளை அள்ளிவந்தனர்.
அவற்றை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், இளவரசி மகன் விவேக் மற்றும் அவரது சகோதரிகளிடம், முதல் கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் அளித்த தகவல்களின்படியும், சிக்கிய ஆவணங்கள் வாயிலாகவும், இமாலய மோசடிகள் நடந்தது அம்பலமானதாலும், வருமான வரித்துறையின் பார்வை, மன்னார்குடி நோக்கி திரும்பியுள்ளது.

அசுர வளர்ச்சி

இது தொடர்பாக, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
சசிகலா கும்பல் வீடுகளில் பணம், நகைக்காக, நாங்கள் சோதனை நடத்தவில்லை. ‘ஜாஸ் சினிமாஸ்’ கம்பெனி போன்ற சில நிறுவனங்களின் திடீர் வளர்ச்சி மற்றும் போலி கம்பெனிகளை உருவாக்கி, அவற்றின் மூலம் வாங்கி குவிக்கப்பட்ட பினாமி சொத்துக்கள், அதன் வாயிலாக நடந்த, வரி ஏய்ப்பிற்காகவே, சோதனை நடத்தினோம்.
அவர்கள், போலி கம்பெனிகள் பெயரில் வங்கிக் கணக்குகள் துவங்கி, அதில், மேற்கொண்ட

பல கோடிரூபாய் பண பரிவர்த்தனைகளை, ஆய்வு செய்வது மிக சிக்கலாக உள்ளது. அந்த கம்பெனிகள் வாயிலாக, பினாமி சொத்துக் களை வாங்கி குவித்துள்ளனர். இது தவிர, ஏராளமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள், காற்றாலைகளையும் வாங்கியுள்ளனர்.

சென்னை, ‘டாப்!’

இதுவரை நடந்த ஆய்வில், சசி கும்பல், சென்னையில் தான் அதிக அளவில் சொத்துக் களை சேர்த்தது தெரிய வந்துள்ளது. அதனால் தான், சென்னையில்,110 இடங்களில் சோதனை நடத்தினோம். சென்னையில் கைப்பற்றிய ஆவணங்களை, எப்படி ஆய்வு செய்வது என்பதில், தற்போது ஓரளவு தெளிவு ஏற்பட்டு உள்ளது.அதனால், இந்த இமாலய மோசடியில் அடுத்த இலக்காக, மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், அவர்கள் சேர்த்த சொத்துக்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கவுள்ளது.
சசி கும்பல், பணத்தை முதலீடு செய்வதற்கு மூளையாக விளங்கிய, மன்னார்குடி திவாகரனை மையமாக வைத்து, அடுத்த சோதனை ஆரம்பமாக உள்ளது.தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட கல்லுாரி மற்றும் பண்ணை வீடுகள் குறித்து, திவாகரன் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரணை நடத்தப்படும். ஆய்வின் முடிவில், பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால், சில இடங்களில், ‘ரெய்டு’ நடத்தப்படும். அதற்காக, சென்னை, போயஸ் கார்டனில் சிக்கிய சொத்து ஆவணங்கள், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisements
%d bloggers like this: