Advertisements

கம்ப்யூட்டராலும் களைப்பு வரும் !

உடல் உழைப்புதான் நம்மை சோர்வாக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நிஜம் அது இல்லை. ‘3 கிலோ மீட்டர் ஓடிய பின் உண்டாகும் உடல் சோர்வு சில மெயில்கள் அனுப்பு வதாலும் வரக்கூடும்’ என்கிறார் அமெரிக்க தூக்க மருத்துவ நிபுணரான ஸ்டீவன் பெயின்ஸ்வர். ‘‘உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு என்ன ஆற்றல்

தேவைப்படுகிறதோ அதே ஆற்றல்தான் ஒரு கணக்குக்குத் தீர்வு காண்பதற்கும் தேவைப்படுகிறது. இந்த இரண்டு வெவ்வேறு வேலைகளைச் செய்யவும் மனித உடலுக்கு வெவ்வேறு விதமான ஆற்றல் தேவைப்படுவதில்லை. இந்த இரண்டுவிதமான வேலைக்கும் மனித இதயம் ஒரே மாதிரியான அட்ரினலின் உற்பத்திக்கான வேலையில்தான் ஈடுபடுகிறது.
இன்னும் சொல்லப்போனால், உடல் உழைப்பைக் காட்டிலும் மூளை உழைப்புக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குறிப்பாக, உடலுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனை விட 20 சதவீதம் அதிகமான ஆக்ஸிஜன் மூளைக்குத் தேவைப்படுகிறது. மூளைக்குத் தேவைப்படும் ஆற்றலை வெளிப்படையாக உணர முடியாததால் நமக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை’ என்ற கருத்தை ஸ்டீவன் வலியுறுத்துகிறார். இன்னும் முக்கியமாக, கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களின் எலக்ட்ரானிக் அலைகள் உடலை இன்னும் அதிக சோர்வாக்கும் வல்லமை கொண்டவை என்றும் கூறியிருக்கிறார். நரம்பியல் சிறப்பு மருத்துவர் ஹல்பிரசாந்த்- திடம் இதுபற்றிக் கேட்டோம்…
‘‘இன்று பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டரில் பல மணி நேரம் வேலை செய்பவர்களாகவும், வீட்டுக்கு வந்தபிறகும் ஸ்மார்ட்போனில் நேரம் செலவழிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். டிஜிட்டல் திரையை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் இருட்டிக் கொண்டு, மிகவும் சோர்வாக இருப்பதைக் கொஞ்சம் யோசித்தாலே உணர முடியும். சில நேரங்களில், அதிக அசதியால் அதன்மேலேயே படுத்து உறங்கிவிடுபவர்களும் உண்டு. இதை கம்ப்யூட்டர் சோர்வு(Computer fatigue) என்கிறார்கள். நரம்பியல்ரீதியாகப் பார்க்கும்போது, ஒருவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால் தசைகள் இறுக்கமடைகிறது.
இயக்கமற்ற நிலையில் அமர்வதால் முதுகுத் தண்டுவட வலி, கழுத்துவலி, கண்களுக்கு அழுத்தம் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அடுத்து ரத்த அழுத்தம், உடல்பருமன், நீரிழிவு, இதயநோய் மற்றும் மாரடைப்பு போன்றவை இவர்கள் உடல்ரீதியாக சந்திக்கும் பிரச்னைகள். கம்ப்யூட்டர் திரையில் வெளிப்படும் ஒளிக்கதிர்கள் மூளையில் எதிர்மறையாக வினைபுரிவதால் மனநிலை, உறக்கம், நினைவாற்றல், கவனம், கற்றல் மற்றும் நடத்தைகளை பாதிக்கிறது. இதன் விளைவாக சவாலான சூழலை எதிர்கொள்ளும் போக்கையும், முரட்டுத்தனமான நடத்தைகளையும் வளர்த்துக் கொண்டுள்ளோம். இந்தப் பழக்கங்கள் குறிப்பாக இளைஞர்களிடத்தில் அதிகமாக வெளிப்படுகிறது.
இமைக்காமல் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மற்றும் ஸ்மார்ட்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் அழுத்தம், கண் உலர்வு நோய் ஏற்படுகிறது. (புத்தகங்களில் அச்சிடப்பட்ட எழுத்துக்கள் ஒரே சீராக இருப்பதாலும், படிக்கும்போது இட, வலமாக கண்கள் அசைவதாலும் கண்
களுக்கு பளுவை ஏற்படுத்தாது.) டிஜிட்டல் எழுத்துகளில் பிக்ஸல்கள் சீரான அடர்த்தி இல்லாமலும், கண்களுக்கு அசைவு ஏற்படாமலும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால் அதை உற்றுப் படிக்கும் நம் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு விரைவில் சோர்வடைந்துவிடும். மேலும், கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி ஏற்படுத்தும்.
இரவு நேரங்களில், இருட்டில் செல்போன் திரையை பார்ப்பதால் தூக்கத்துக்குக் காரணமான மெலட்டனின் சுரப்பு குறைகிறது. தூக்க நேரம் குறைவதால் மாணவர்களிடத்தில் கவனக்குறைவு, நினைவாற்றல் குறைதல் போன்ற பாதிப்புகள்  அதிகரிக்கிறது. தூக்கமின்மை பெரியவர்களிடத்திலும் சிந்தனைத் திறனை குறைத்துவிடும். மன அழுத்தம், மனப்பதற்றம், அனைவரிடத்திலும் காட்டும் எரிச்சல் எல்லாவற்றுக்கும் மூல காரணம் தூக்கமின்மையே. இதுபோல், சின்னச்சின்ன தகவல்களை மூளை சேகரித்துக் கொண்டே இருப்பதால் நாளடைவில் முக்கியத் தகவல்களை சேகரிக்கும் ஆற்றல் குறைந்துவிடும்.
எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் அல்லது கொடுக்கக்கூடாது என மூளை குழப்பமடைந்துவிடும். எந்த விஷயத்துக்கு ரியாக்ட் செய்வது என்ற குழப்பத்தால் எல்லாவற்றுக்கும் ஓவர் ரியாக்ட் செய்ய ஆரம்பித்துவிடும். மனிதனின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களுக்கும் மூளை நரம்புகளின் நெகிழ்வுத்தன்மைக்கும் (Nerves Elasticity) நெருங்கிய தொடர்பு உண்டு. மன அழுத்த நோய்கள் அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் உடல்சோர்வுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை மனச்சோர்வுக்கும் தரவேண்டியிருக்கிறது. அதனால், நம்முடைய தேவைக்கு மட்டுமே கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட் போனையும் பயன்படுத்த வேண்டும்”.

Advertisements

One response

  1. தங்கள் பதிவுகளை முகநூலில் வெளியிடலாமா

%d bloggers like this: