Advertisements

ஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி – மூன்று முடிச்சுகள்

வேதா இல்லம்… ஜெயலலிதாவின் அம்மா சந்தியா கட்டிய மாளிகை. அதன் திறப்பு விழாவுக்கு முன்னால் சந்தியா இறந்துபோனார். யாரும் நுழையாக் கற்கோட்டையான அதனுள் வாழ்ந்துவந்தார் ஜெயலலிதா. அதன் திறப்புவிழா அன்று பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று ஒவ்வொரு அறையாகக் காட்டினார் ஜெயலலிதா. ‘`இந்த மாளிகையின் ஒவ்வொரு செங்கல்லும் அணு அணுவாகப் பார்த்துக் கட்டியவர் என் அம்மா. இப்போது அவர்

இல்லை” என்று சொல்லிக் கண்கலங்கினார். சமையலறை, படுக்கையறை, பூஜையறை, வரவேற்பு அறை, குளியல் அறை என்று மட்டுமல்ல, படிப்பு அறை, உடையலங்கார அறை, அலங்கார அறை, நகையலங்கார அறை என்று தனித்தனியாக வேதா இல்லம் கட்டப்பட்டிருந்தாக அன்றைய பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.
“மாளிகையைப் போல் வீட்டைக் கட்டியிருக்கும் நீங்கள், அதில் தனியாக வசிப்பது போரடிக்கவில்லையா?’ என்று ‘நடிகை’யாக இருந்த காலத்தில் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. ‘`நான் தனியாக இல்லையே! என்னுடன் என் சித்தி, சித்தப்பா, மற்றொரு சித்தியின் மகள், என் ஏழு குழந்தைகள் (அதாவது என் பிரிய நாய்கள்), பனிரெண்டு வேலைக்காரர்கள்… இத்தனை பேரும் மொத்தமாக இருக்கிறோம்” என்று பதில் தந்தார். இந்தக் காட்சிகள் எல்லாம் சினிமாக் காலத்தில் மட்டும்தான். அரசியலுக்குள் நுழைந்தார். சசிகலா, வீட்டுக்குள்ளே நுழைந்தார். ஒவ்வொருவராக வெளியேறினார்கள். அந்தப் பிரியமான நாய்கள் உட்பட!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வீடே யாருமற்றுக் கிடக்கிறது. அந்த வீட்டுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடிக்கொண்டு வருகிறார்கள். சசிகலாவின் சொந்தங்கள் தொடர்புடைய இடங்கள் என்று 187 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனைபோட்ட சில நாள்களில் ஜெயலலிதாவுக்கும் சோதனை. அவர் ஆசையாய்க் கட்டி, வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்குள்ளும் வருமானவரித்துறை நுழைந்தது.
1996-ம் ஆண்டு ஜெயலலிதா சிறைச்சாலையில் இருந்தபோது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் போயஸ் இல்லத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினார்கள். இப்போது ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போது மத்திய வருமானவரித்துறை உள்ளே நுழைந்துள்ளது. அன்று ஜெயலலிதாவின் ‘எதிரி’யான கருணாநிதி ஆட்சி நடத்தினார். இன்று ஜெயலலிதாவின் காலில் விழுந்துவிழுந்து எழுந்தவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். ‘`ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடந்தது வருத்தத்துக்குரியதுதான்’’ என்று சொல்லிவிட்டு, சசிகலா குடும்பத்தினர்மீது பாய்ந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரால் ஜெயலலிதா பற்றி அதற்குமேல் சொல்ல முடியவில்லை.
சசிகலா ஏதோ வானத்திலிருந்து வந்து, சொத்துகளைக் குவித்ததாக எடப்பாடி நினைக்கிறார். சசிகலாவை இவர்கள் ஏன் மதித்தார்கள் என்றால், ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் அவர் இருந்ததால்தான். சசிகலாவிடம் நல்ல பெயர் வாங்கினால்தான், ஜெயலலிதாவின் அனுகிரகம் கிடைக்கும் என்று எடப்பாடிகளும் பன்னீர்களும் நினைத்தார்கள். அம்மா, சின்னம்மா என்ற வார்த்தையைப் பிரபலப்படுத்தியவர்கள் சசிகலா குடும்பத்தினர் அல்ல. எடப்பாடி, பன்னீர் வகையறாக்கள்தான். ஜெயலலிதாவுக்கு இவையெல்லாம் இப்போது தெரிய வாய்ப்பு இல்லை  என்பதால் பேட்டிகளில் கொந்தளிக்கிறார் முதலமைச்சர். ஜெயலலிதா ஏன் இவர்களைத் தட்டி வைத்திருந்தார் என்று இப்போது தெரிகிறதா?
“தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’’ என்று ஜெயலலிதாவிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. ‘`ஒன்றா இரண்டா அதை வார்த்தைகளில் சொல்ல’’ என்று பதில் அளித்தார். அப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகங்களில் ஒன்றுதான், அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருக்கும்போது, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் வருமானவரித்துறை  ரெய்டு நடத்துவதும், அதற்குப் பாதுகாப்பாக அ.தி.மு.க ஆட்சியின் காவல் துறையினர் காவல் காப்பதும், அது பற்றிய கூச்சமே இல்லாமல் ஆட்சியாளர்கள் இருப்பதும்.
‘`இது என்  அத்தை வீடு” என்று பாத்தியதை கொண்டாடி வருகிறார் தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் மகள். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அந்த வீட்டுக்குள் அதிகம் நுழைய முடியாதவர். ‘இந்த வீட்டுக்குள்தான் சசிகலாவும் வாழ்ந்து வந்தார்’ என்று சொல்லி நுழைய முயல்கிறார் விவேக். பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசியின் மகன். இன்று ஜெயலலிதாவுக்காகப் பதறும் விவேக் திருமணத்துக்கே ஜெயலலிதா போகவில்லை. இவர்கள்தான் ஜெயலலிதாவுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்கள் கண்ணுக்கு ஜெயலலிதாவைவிட அவருடைய சொத்துகள்தான் கண்ணுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கும்.

‘`கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கிறேன், எனக்கு எதிரியே இல்லை” என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா சொன்னார். அவரது கண்ணுக்கு எதிரே எதிரிகள் இல்லை. முதுகுக்குப் பின்னால் துரோகிகள்தான் நிறைந்து இருந்துள்ளார்கள். ஆத்தா வளர்த்தது நாய்களை அல்ல, நஞ்சுகளை மட்டும்தான் என்பது புரிந்துவிட்டது.
இன்று இவர்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் இருப்பதால் கட்சியைப் பற்றிக் கவலையே தவிர, எதிர்க்கட்சியாக இருந்தாலோ, நாளை எதிர்க்கட்சியாக ஆனாலோ கவலையே படமாட்டார்கள். ஜெயலலிதா காப்பாற்றி வைத்திருந்த இரட்டை இலை இன்னமும் மீட்கப்படவில்லை. ஜெயலலிதா அங்கீகாரம் வாங்கித் தந்த அ.தி.மு.க என்ற கட்சியின் பெயர் இன்னமும் கிடைக்கவில்லை. 135 உறுப்பினர் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆட்சி, இன்று பலவீனம் அடைந்து பெரும்பான்மை இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாமல் ஆட்டம் எடுத்துக்கொண்டிருக்கிறது. கட்சிக்குப் பத்திரிகை இல்லை. கட்சிக்கு டி.வி. இல்லை. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வந்தால், எங்களுக்கு 25 தொகுதிகள் வேண்டும் என்று பாரதிய ஜனதா இப்போதே பேரம் பேசுவதாகச் சொல்லப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலிலும் இப்படிப் பாதிக்கும் மேல் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கோவைக்கு சென்று விசாரணை நடத்தினால் என்ன, கோட்டைக்கு வந்து விசாரணை நடத்தினால் என்ன? தன்னுடைய நாற்காலி மூழ்கும் வரைக்கும் வெள்ளம் வராமல் இருந்தால் போதும் என்று நினைக்கிறார் பழனிசாமி. அதனால்தான் ஜெயலலிதா வீட்டைக் கோயிலாகச் சொன்னாலும், கோயிலுக்குள் என்ன நடந்தாலும் கவலை இல்லை; கோட்டையில் என்ன நடந்தாலும் கவலை இல்லை; கோவையில் என்ன நடந்தாலும் கவலையில்லை.

ஒரு மனுஷி போனால் வீடு களை இழக்கும். அதிகாரம் பொருந்திய வீடு களை இழந்தால் கட்சியும் களை இழக்கும்.

நன்றி – விகடன்

Advertisements
%d bloggers like this: