Advertisements

காதில் கவனம் பட்ஸ் பயன்படுத்தலாமா?

காதில் அழுக்கு சேர்ந்தால் பட்ஸ் வைத்துக் குடைவது நம் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் சில நேரம் காதில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும் அழுக்கை எடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட பட்ஸ் இது என்று வரும் விளம்பரங்களை நம்பி அவற்றால் காது அழுக்கை அகற்றுவது, குடைவதெல்லாம் சரியான செயல்கள் அல்ல.

 

காதில் சேரக்கூடிய அந்தப் பொருள் அழுக்கு கிடையாது. இது நம்மில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை. பிசின் போன்ற அந்தப் பொருளை வேக்ஸ், குருமி அல்லது குடுமி என்பார்கள். ஆங்கிலத்தில் Cerumen என்பார்கள். இது காதைப் பாதுகாக்கக்கூடியது. இந்தக் குருமி காதில் இருப்பது நல்லது. இது காதில் ஏற்படக்கூடிய இன்ஃபெக்‌ஷன்களைப் போக்கும் பணியைச் செய்யும். மேலும் பாக்டீரியாக்களை வளரவிடாமல் செய்யும். அதே நேரத்தில் அந்தக் குருமி அதிகமாவதோடு அதனுடன் அழுக்குகளும் சேரும்பட்சத்தில் நாளடைவில் நமது தாடை அசைவின்போது காதுகள் தாமாகவே அவற்றை வெளியேற்றிவிடும். அதைத் தவிர்த்துக் கண்ட பொருள்களையும் காதின் உள்ளே விட்டுக் குடைவது தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.  

பட்ஸைக்கொண்டு அழுக்குகளை எடுக்கிறேன் என்று சொல்லிக் குறைந்த அளவு குருமிகளை எடுத்துவிட்டு அதிகப்படியான குருமிகளை காதின் உள்ளே தள்ளிவிடுவார்கள். இது காது மடலுக்கு உள்ளே இருக்கும் தோலை அழுத்துவதால் நாளடைவில் அது அழுகிப்போக நேரிடும். அதுமட்டுமல்ல காதின் உள்ளே இருக்கும் எலும்பையும் அரித்துவிடும். மேலும் இது துர்நாற்றம் வீசுவதோடு பயங்கர வலியையும் உண்டாக்கும். காதில் எதையோ வைத்து அடைத்ததுபோல் இருக்கும். இதுபோன்ற சூழலில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
காதில் அதிகப்படியாகச் சேர்ந்த குருமிகளை அகற்ற   மூன்று சொட்டு தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து சில நாள்கள் காதின் உள்ளே விட்டால் அது தானாகவே வெளிவந்துவிடும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இதைச் செய்யலாம். ஆனால், காதில் குருமி அதிகமாக இருப்பதுபோன்று தெரியவந்தால் மட்டுமே காதில் எண்ணெய் விட வேண்டும். தேவையில்லாமல் எண்ணெய் விட வேண்டாம். இதற்கு மாறாக பட்ஸ், குச்சி, இறகுகள் என எதையும் காதின் உள்ளே விட்டுத் தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டாம்.

Advertisements
%d bloggers like this: