Advertisements

மதுசூதன மல்லுக்கட்டு! – தர்மயுத்தம் சீஸன்-3

.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் தொடங்கிவிட்டது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘நீர் தீர்க்கதரிசி. ‘இரட்டை இலையை வாங்கியபிறகு இவர்களுக்குள் மோதல் நடக்கும்’ என்று முதலிலேயே சொல்லியிருந்தீரே’’ என்றோம்.
‘‘ஆமாம்’’ என்றபடி கழுகார் ஆரம்பித்தார். ‘‘எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து மூன்று மாதங்கள்

ஆகிவிட்டன. ஆனாலும் இருவரும் ஒட்டவில்லை. இதைத்தான், ‘அணிகள் இணைந்தன, மனங்கள் இணையவில்லை’ என்று பன்னீரின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி போட்டு உடைத்தார். பன்னீர் சொல்லித்தான் மைத்ரேயன் இப்படி எழுதினார் என்று எடப்பாடி சந்தேகப்பட்டார். மதுரை விழாவில் பன்னீர் புறக்கணிக்கப்பட்டதற்கும் இதுதான் அடிப்படைக் காரணமானது. இந்த விழாவை ஏற்பாடு செய்தவர், எடப்பாடி ஆதரவாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மைத்ரேயன் மூலமாக பன்னீரும், உதயகுமாரை வைத்து எடப்பாடியும் சண்டையைத் தொடங்கிவிட்டார்கள் என்றே அ.தி.மு.க-வில் சொல்கிறார்கள்.’’
‘‘ஓஹோ!’’
‘‘ஜெயலலிதா பிறந்த நாள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, நூறடி கம்பத்தில் கொடியேற்றும் விழா என்று மதுரையில் முப்பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்தார் அமைச்சர் உதயகுமார். முதலில் அடித்த அழைப்பிதழிலும், நிகழ்ச்சி நடந்த இடத்தில் வைக்கப்பட்ட பேனர்களிலும், அடிக்கல்லிலும் ஓ.பி.எஸ் பெயரைத் திட்டமிட்டே புறக்கணித்ததாகச் சொல்லப்படுகிறது. இதைக் கண்டுகொள்ளவில்லையாம் எடப்பாடி. ‘முதல்வர் சொல்லித்தான் உங்கள் பெயரைப் போடவில்லை’ என்று சிலர் பன்னீர் காதில் ஓதினார்கள்.’’

‘‘மைத்ரேயன் பற்ற வைத்த நெருப்பு இப்படித்தான் மதுரையிலிருந்து புகைந்ததா?’’
‘‘ஆமாம். ராமநாதபுரம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குச் செல்ல முதல் நாள் இரவே மதுரை வந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார் பன்னீர். மதுரை விழா தகவல்களால் மிகவும் டென்ஷனோடு இருந்திருக்கிறார் அவர். தனது எதிர்ப்பை உடனடியாகக் காட்ட பன்னீர் நினைத்ததாக எடப்பாடிக்குத் தகவல் வந்தது. சென்னையில் கே.பி.முனுசாமி இதுதொடர்பாக பிரஸ்மீட் வைக்கப் போவதாகவும் தகவல் பரவியது. ‘ஆர்.கே. நகர் தேர்தல் நடக்கும் நேரத்தில் தேவையில்லாத சிக்கல் வேண்டாம்’ என்று முடிவெடுத்த எடப்பாடி, சென்னையிலிருந்தபடி அமைச்சர் உதயகுமாரிடம் பேசியிருக்கிறார். ‘பன்னீரை விழாவுக்கு அழையுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். பன்னீர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார் உதயகுமார். ‘நான் இல்லாம நடத்தணும்னுதானே ஏற்பாடு செஞ்சீங்க… அப்படியே நடத்துங்க’ என்று பன்னீர் கடுமையாக சத்தம் போட்டிருக்கிறார். உதயகுமார் எவ்வளவோ மன்றாடியும், ‘வர முடியாது’ என்று கூறிவிட்டார். பதறிப்போன உதயகுமார், அவசர அவசரமாக பன்னீர் பெயர் போட்டு அடிக்கல் ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்தார். எடப்பாடி தோப்பூர் வருவதற்கு 15 நிமிடங்களுக்குமுன்பு அந்த அடிக்கல்லைக் கொடிக்கம்பத்தின் பக்கவாட்டில் ஒட்டி வைத்தனர்.’’
‘‘அப்புறம்?’’
‘‘முதல்வர் எடப்பாடி வந்து நூறடி கம்பத்தில் கொடியை ஏற்றிவைத்து, மகிழ்ச்சியாகப் பேசிவிட்டுக் கிளம்பினார். முதல்வர் இங்கு பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஒத்தக்கடை நரசிங்கர் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார் பன்னீர். அன்று மாலை இருவரும் இணைந்து  மேடையேறிய ராமநாதபுரத்தில், கட்சியின் ஒற்றுமையைப் பற்றிப் பேசினார் பன்னீர். அதேநேரத்தில் மைத்ரேயன், ‘அ.தி.மு.க முப்பெரும் விழா என்று விளம்பரப்படுத்திக் கொண்டாடும் போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீருக்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும். விழா ஏற்பாடு செய்தவர் அமைச்சராக இருக்கும் நிலையில் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்று கூறிவிட்டு ஆளுநரைச் சந்திக்கச் சென்று பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தார்.’’

‘‘இதன் தொடர்ச்சியாகத்தான் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் மோதல் வெடித்ததா?’’
‘‘ஆமாம்! கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் ‘ஆளாளுக்குக் கருத்துகளை மீடியாவிடம் பேசி வருகிறார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும்’ என்றார். அதற்கு எடப்பாடி, ‘கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதைக்கட்சிக்குள் பேசித்தான் முடித்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் பரப்பினால், கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும்’ என்றதும், அருகில் அமர்ந்திருந்த மைத்ரேயன், ‘என்னைத்தான் நீங்கள் சொல்கிறீர்களா?’ என்று டென்ஷனாகக் கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் ஏதோ சொல்லிச் சமாளிக்கப் பார்த்துள்ளார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் எழுந்து, ‘ஆமாம். உன்னைப் பற்றித்தான் சொன்னார். உன் இஷ்டத்துக்கு எதையாவது போட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? உனக்குப் பதவி வேண்டும்னு கலகத்தை ஏற்படுத்தறியா?’ என்று மைத்ரேயனைப் பார்த்து ஒருமையில் பேசினார். பதிலுக்கு மைத்ரேயனும், ‘நாங்க இல்லாம சின்னமும் கட்சியும் கிடைச்சிருக்குமா?’ என்று எகிற, கூட்டத்தில் சலசலப்பு ஆரம்பித்துள்ளது. இருவரையும் எடப்பாடியும் பன்னீரும் சமாதானம் செய்துள்ளார்கள். அதன்பிறகுதான் ஆட்சிமன்றக் குழு விவகாரம் வெடித்துள்ளது.’’
‘‘அது என்ன பிரச்னை?’’
‘‘ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க-வின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் ஜெயலலிதாவும் விசாலாட்சி நெடுஞ்செழியனும் இறந்து விட்டார்கள். இந்த இரண்டு இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்குப் புதிய நபர்களைத் தேர்வு செய்வது குறித்து, உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஓர் இடத்துக்குத் தேர்வு செய்ய முடிவானது. இரண்டாவது நபராக வைத்திலிங்கத்தின் பெயரை எடப்பாடி பழனிசாமி சொன்னதும், பன்னீர் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி அதை எதிர்த்தார். ‘எல்லாப் பதவியையும் உங்கள் ஆள்களுக்கே கொடுப்பது முறையல்ல. நானும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்தான். வைத்திலிங்கத்துக்குப் பதவி கொடுக்க முடிவு செய்தால், எனக்கும் ஆட்சிமன்றக் குழுவில் இடம் வேண்டும்’ என்று முனுசாமி கொதித்துள்ளார். ஒருகட்டத்தில் இது இரண்டு அணிகளின் நிர்வாகிகளுக்கு இடையேயான மோதலாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதும், எடப்பாடி பழனிசாமி எழுந்து சமாதானம் செய்துள்ளார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் பன்னீர் வாய் திறக்கவில்லை. இந்தச் சூழலில்தான் ‘ஆட்சிமன்றக் குழுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்’ என்று வேறொரு வழி சொன்னார் எடப்பாடி.’’

‘‘இதனால்தான் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஏழிலிருந்து ஒன்பதாக உயர்த்தினார்களா?’’
‘‘ஆமாம். புதியதாக எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், முனுசாமி, ஆகியோருடன் பெண்களுக்கு வாய்ப்பு என்ற அடிப்படையில் வளர்மதியையும் சேர்த்துள்ளார்கள். ஆனால், ‘இதிலும் எடப்பாடி தரப்புதான் வெற்றி கண்டுள்ளது’ என்று கண்சிமிட்டுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இப்போது ஆட்சிமன்றக் குழுவிலுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் எடப்பாடி ஆதரவாளர்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியைத் தன்வசப்படுத்தி வருகிறார் எடப்பாடி. அதே நேரம் பன்னீர் தரப்புக்கு செக் வைக்கவும் ஆரம்பித்துவிட்டார். அது ஆர்.கே. நகரிலிருந்து தொடங்கும் என்கிறார்கள்.’’
‘‘அது என்ன?’’
‘‘ஆர்.கே. நகர் தொகுதி ‘மண்ணின் மைந்தன்’ என்ற இமேஜுடன் வலம் வந்த மாஜி அமைச்சரும் அ.தி.மு.க அவைத் தலைவருமான மதுசூதனனுக்கு இடைத்தேர்தலில் சீட் மறுக்கப்படும் வாய்ப்பே அதிகம் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில். எடப்பாடி அணியினரின் மறைமுக யுத்தம், நேரடி யுத்தமாக இனிதான் மாறப் போகிறது. ‘மதுசூதனனை வேட்பாளராக அறிவித்தது பன்னீர் அணிதானே தவிர, ஒன்றுபட்ட அ.தி.மு.க அல்ல. அதனால் அவரையே மீண்டும் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்காக கொம்பு சீவும் வேலைகளை அமைச்சர் ஜெயக்குமார் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.’’
‘‘ஆனால், மதுசூதனன் முதல் ஆளாக செவ்வாய்க்கிழமையே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளாரே?’’
‘‘விஷயம் தெரிந்து முந்திக்கொண்டார் அவர்.. ‘மதுசூதனனுக்கு வயதாகி விட்டது. அவருக்குத் தொகுதியில் நல்ல பெயர் இல்லை. அவரால் செலவும் செய்ய முடியாது. அதனால் வேறு யாரையாவது நிறுத்தலாம்’ எனப் பதினைந்து பெயர்களை ‘டிக்’ அடித்து ஜெயக்குமார் கொடுத்துள்ளார் என்கிறார்கள். பாலகங்கா, முன்னாள் மண்டலக் குழுத் தலைவர் கார்த்திகேயன், வட்டச் செயலாளரான கராத்தே ஏழுமலை ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.’’

‘‘இது மதுசூதனன் ஆட்களுக்குத் தெரியாதா?’’
‘‘தெரியாமல் இருக்குமா?  ‘என் அரசியல் வாழ்க்கையை அழிக்கத் துடிக்கிறார் ஜெயக்குமார்’ என்று மதுசூதனன் பகிரங்கமாகவே கடந்த மாதம் பேட்டியில் சொன்னார். ‘மதுசூதனன்தான் இந்தக் கட்சியின் அவைத்தலைவர். அவர் இருப்பதால்தான் இரட்டை இலை கிடைத்தது. எனவே நாங்கள் விடமாட்டோம்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.’’
‘‘மதுசூதன மல்லுக்கட்டுத் தொடங்கிவிட்டதா?’’
‘‘ஆமாம். இந்த நிலையில் சிலர் தந்திரமாக, ‘மதுசூதனன் நிற்கவேண்டாம், வேண்டுமானால் பன்னீர் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி நிற்கட்டும்’ என்று பன்னீர் அணியிலேயே பிரித்தாளும் வேலையைத் தொடங்கியுள்ளார்கள். மதுசூதனன் ஆதரவாளர்களோ, ‘சீட் மறுக்கப்பட்டால் அவர் சுயேச்சையாகவே களம் காண்பார்’ என்கிறார்கள். ‘எதிர்ப்புகளை மீறி மதுசூதனன் வேட்பாளர் ஆக்கப்பட்டாலும், அவரைத் தோற்கடிப்பதற்குக் கட்சிக்குள்ளேயே சிலர் மறைமுகமாக வேலை பார்ப்பார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது. ஆர்.கே. நகர் தேர்தல் ‘தினகரன்-எடப்பாடி அணி’ மோதலாக இல்லாமல், ‘எடப்பாடி – பன்னீர்’ மோதலாக மாறப் போகிறது.”
‘‘தர்மயுத்தம் சீஸன்-3 ஆரம்பம் என்று சொல்லும்!’’
‘‘ஆமாம். சென்னையில் எடப்பாடியும் பன்னீரும் கூட்டம் நடத்திய அதே நாள் மாலையில், திருச்சி பெமினா மஹாலில் தனது அணி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் தினகரன். அவர் பேச்சு உணர்ச்சிகரமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். ‘துரோகிகளை அடையாளம் காண்பதற்கான தேர்தல் இது. டிசம்பர் 1-ம் தேதி காலை ஆட்சிமன்றக் கூட்டத்தில் வேட்பாளராக என்னை அறிவித்த கையோடு, அன்று மாலையே வேட்புமனு தாக்கல் செய்வேன். மோடிக்கு நெருக்கமானவர்கள்தான் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் எதுவும் நடக்கலாம். அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்’ என்றார். ‘எம்.ஜி.ஆர் முதன்முதலில் தேர்தலைச் சந்தித்தபோது இரட்டை இலை சுயேச்சை சின்னமாகத்தான் இருந்தது. இப்போது நானும் சுயேச்சை வேட்பாளர்தான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் வெற்றிக்காக உழைப்போம்’ என்று பன்ச் வைத்தார்.’’
‘‘அ.தி.மு.க கொடியையோ, பெயரையோ தினகரன் தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு எழுந்திருக்கிறதே?’’
‘‘திருச்சி கூட்டத்துக்கு அ.தி.மு.க கொடி கட்டிய காரில்தான் வந்தார் தினகரன். நிருபர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு, ‘தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகத்தான் தீர்ப்பு சொன்னது. கொடியைப் பற்றி எதுவும் சொல்லவில்லை’ என்றார். ஆனால், தினகரனும் அவரின் ஆதரவாளர்களும் கொடியைப் பயன்படுத்துவதை எதிர்த்து, ஆளும் தரப்பினர் ஆங்காங்கே போலீஸில் புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.’’ என்றபடியே பறந்தார் கழுகார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: