Advertisements

மதுசூதனன் தலை தப்பிய மர்மம்!

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.

‘‘அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், ஆர்.கே. நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘அ.தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும்’ என்பதுதான் அதிகமான பதற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ‘கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளரை இறுதி செய்யும்’ என்று அறிவிப்பு வந்ததும், அது மதுசூதனனுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது.

ஆட்சிமன்றக் குழுவில் அவரும் உறுப்பினர் என்றாலும், எடப்பாடியின் ஆட்கள்தான் அதில் அதிகம். மேலும், ஜெயக்குமார் வேறு முட்டுக்கட்டை போட்டார். ஜெயலலிதா ஜெயித்த இந்தத் தொகுதியில் நிற்க 19 பேர் ஆசைப்பட்டு விருப்ப மனு செய்திருந்தார்கள். இவர்களில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருக்கும் எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேனும் அடக்கம். ‘யாருக்குக் கொடுப்பது’ என்பதைவிட, வாய்ப்பு கேட்கும் மற்றவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதே எடப்பாடியின் கவலையாக இருந்தது. ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று முதலில் அறிவித்தாலும், தஞ்சை எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாக் கூட்டத்தைக் காரணம் காட்டி வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்கள். ‘தஞ்சை விழா என்பது ஒரு காரணம்தான். வேட்பாளர் யார் என்று முடிவெடுக்க முடியாததால்தான் ஒத்திவைக்கப்பட்டது’ என்று கட்சிக்குள் பேசப்பட்டது.’’

‘‘அப்படியா?’’
‘‘ஆமாம். ‘ஆட்சிமன்றக் குழுவில்தான் வேட்பாளர் தேர்வு’ என்று அறிவித்தாலும், வேட்பாளரை முடிவு செய்யும் இடத்தில் பன்னீரும் எடப்பாடியும் மட்டுமே இருந்தார்கள். ‘மதுசூதனனை எப்படியும் வேட்பாளராக்கிவிட வேண்டும்’ என்ற முடிவில் பன்னீர் இருந்தார். லோக்கல் பிரமுகர் என்ற பலத்தைத் தாண்டி, ‘கடந்த முறை வேட்பாளராக நின்றவர்’ என்ற கூடுதல் தகுதியும் மதுசூதனனுக்கு இருந்தது. எடப்பாடி தரப்பு கடந்த முறை தினகரனை வேட்பாளராக நிறுத்தியிருந்ததால், இந்த முறை உரிமைகோர முடியாத நிலையில் இருந்தது. இதையே தனக்குச் சாதகமாக்கியுள்ளார் பன்னீர். ‘அம்மாவால் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டவர் மதுசூதனன். அவருக்கு வாய்ப்பு தராவிட்டால், கட்சியைவிட்டு வெளியேறுவார். அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டாலோ, தினகரனுடன் போனாலோ, நமக்குச் சிக்கல். எனவே, குழப்பம் ஏற்படாதவாறு முடிவெடுங்கள்’ என்று எடப்பாடியிடம் சொன்னாராம் பன்னீர். ‘ஆளாளுக்குக் கேட்கிறார்கள். மதுசூதனனுக்குக் கொடுத்துவிட்டால், மற்றவர்கள் அமைதியாகி விடுவார்கள்’ என்ற லாஜிக்கை உணர்ந்து எடப்பாடியும் சமாதானம் ஆனார். அதனால், மதுசூதனன் தலை தப்பியது.’’
‘‘ஓஹோ!’’
‘‘எடப்பாடியும் பன்னீரும் இந்த உடன்படிக்கையைச் செய்துகொண்ட பிறகுதான், ஆட்சிமன்றக் குழு கூட்டத்துக்கே வந்தார்கள். கூட்டம் 10.30 மணிக்கு  தொடங்கும் என்று அறிவித்தாலும், அதற்கு முன்பாகவே இவர்கள் அ.தி.மு.க அலுவலகம் வந்துவிட்டனர். கூட்டம் நடைபெற்றபோது, அமைச்சர்கள் சிலரும், ஆர்.கே. நகரில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த பாலகங்காவும் வந்திருந்தனர். ஆனால், கூட்ட அரங்குக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ், உடல்நிலையைக் காரணம் காட்டி வரவில்லை. மற்ற அனைவரும் வந்திருந்தார்கள்.’’
‘‘கூட்டத்தில் காரசார விவாதம் ஏதும் நடைபெற்றதா?’’
‘‘இல்லை. மதுசூதனனை நிறுத்தலாம் என்று பன்னீர் சொல்ல, அமைதியாக இருந்துவிட்டாராம் எடப்பாடி. மௌனம் சம்மதம் என்று அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு, லெட்டர்பேடில் வேட்பாளர் பெயரை பிரின்ட் செய்யுமாறு எடப்பாடி சொன்னதும், பிரின்ட் அவுட் எடுத்துவந்தார்கள். அதில் எடப்பாடியும் பன்னீரும் கையெழுத்திட்டனர். லெட்டர் பேடில் மதுசூதனன் பெயர் இருக்கிறது என்ற தகவல் அரங்குக்கு வெளியே நின்ற பாலகங்காவுக்குத் தெரிந்ததும், அவர் சோகமாக வெளியேறிவிட்டார். ஆனால், ‘நல்ல நேரம் பார்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என்பதற்காகத்தான் இரண்டு மணி நேரம் கூட்டத்தை இழுத்துக் கடத்தினார்கள்.’’
‘‘மதுசூதனனுக்கு சந்தோஷம்தானே?’’

‘‘அவருக்கு ‘நிம்மதி’ என்றும் சொல்லலாம். கடந்த ஒரு வாரமாக தினமும் முதல்வர் வீட்டில் தவறாமல் ஆஜராகி யுள்ளார் மதுசூதனன். ‘வயதாகிவிட்டது. கடைசியாக எனக்கு  ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று வெளிப்படை யாகவே பேசியிருக்கிறார். இதுவும் எடப்பாடியின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தன்னை வேட்பாளராக அறிவிக்கச் சொல்லி முதல்வருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். பாலகங்காவுக்காக அமைச்சர் ஜெயக்குமாரும் வைத்திலிங்கம் எம்.பி-யும் பேசியிருக்கிறார்கள். மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இவர்கள் அனைவரும் அப்செட்.’’
‘‘மதுசூதனன் போட்டியிட மாட்டார் என்று தினகரன் நினைத்ததாகச் சொல்கிறார்களே?’’
‘‘மதுசூதனன் நின்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைத்திருப்பார் தினகரன். தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக இதை தினகரன் பார்க்கிறார். தமிழகம் முழுவதிலுமிருந்து தனது அணியின் நிர்வாகிகளை சென்னைக்கு வருமாறு தினகரன் உத்தரவிட்டுள்ளார். தினகரன் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்தார் அல்லவா… தினகரன் தேர்தலில் நிற்பதைப் பற்றி பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம் சசிகலா. குறைந்த வாக்குகள் வாங்கினால் நிலைமை மோசமாகிவிடும் என்ற கவலையை சசிகலா பகிர்ந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘தி.மு.க ‘எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம்’ என்று உறுதியாக இருக்கிறதாமே?’’
‘‘அ.தி.மு.க-வின் வாக்குகளை தினகரன் கணிசமாக உடைத்தால் தி.மு.க வெற்றிபெற்றுவிடும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள். தி.மு.க-வுக்கு கூட்டணிக்கட்சிகள் வரிசையாக ஆதரவு கொடுத்து வருவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரை முதலில் அறிவித்து, பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது தி.மு.க. பழைய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், முதலில் ஆதரவு தெரிவித்தது. புதிய கூட்டணியினரான விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் ஆதரவை அறிவித்துவிட்டன. வியாழக்கிழமை கோவை விமான நிலையத்தில் ஸ்டாலின் – வைகோ சந்திப்பு நடந்தது. அப்போது, வைகோவின் ஆதரவை ஸ்டாலின் கேட்டதாகவும், ‘டிசம்பர் 3-ம் தேதி நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவை அறிவிக்கிறேன்’ என்று வைகோ கூறியதாகவும் சொல்கிறார்கள்.’’
‘‘ஆர்.கே. நகரில் தே.மு.தி.க நிற்காததற்கு என்ன காரணம்?’’
‘‘மூன்று மாதங்களுக்கு முன்பே தே.மு.தி.க அந்த முடிவுக்கு வந்துவிட்டது. ‘ஆர்.கே. நகரில் கடந்த முறை பணப் பட்டுவாடா நடைபெற்றதால்தான் தேர்தல் நின்றது. ஆனால், பணம் கொடுத்தவர்கள்மீது ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த முறையும் அதுபோலவேதான் நடக்கும். எதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டும்?’ என்று கட்சி நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டுதான் சிங்கப்பூருக்குப் பறந்துள்ளார் விஜயகாந்த். 10 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் தமிழகம் திரும்புகிறார்.’’

‘‘எல்லா கட்சிகளும் முடிவெடுத்துவிட்டாலும், பி.ஜே.பி தரப்பு மௌனமாக இருக்கிறதே?’’
‘‘ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிப்பு வெளியான மறுதினமே பி.ஜே.பி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சிலர், ‘தமிழிசை சௌந்தர்ராஜனே ஆர்.கே. நகரில் நிற்கட்டும்’ என்று சொன்னார்கள். ஆனால், ‘வாக்கு வங்கியே இல்லாத ஆர்.கே நகரில் மாநிலத் தலைவரை நிறுத்தி, தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்’ என்று தமிழிசையிடமே நேரடியாக சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.’’
‘‘கடந்த முறை கங்கை அமரனை நிறுத்தினார்களே?’’
‘‘இந்த முறை தன்னை வேட்பாளராக அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் கங்கை அமரன் எங்கோ வெளியூர் கிளம்பிவிட்டார் என்று கிண்டலாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். அ.தி.மு.க-வை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுக்கவும் அவர்களுக்குக் கூச்சமாக இருக்கிறது. தேர்தலில் நின்று குறைவான வாக்குகள் பெற்றால், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் கூட்டணிக்கட்சிகளிடம் பேரம் பேசவும் முடியாது. குழப்பத்தில் இருக்கிறது பி.ஜே.பி.’’

‘‘நர்ஸ்கள் போராட்டத்தில் தமிழக அரசை நீதிமன்றம் காப்பாற்றிவிட்டதே?’’
‘‘ஆமாம். கடந்த முறை தமிழக  அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடியபோதும், நீதிமன்றம்தான் தலையிட்டது. ஆனால், நர்ஸ்கள் போராட்டத்தை தமிழக அரசு மிக மோசமாக ஒடுக்கியதாக அரசு ஊழியர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 27-ம் தேதி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளுடன் பலர் வந்திருந்தனர். டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்த கழிவறைகள் அனைத்தையும் பூட்டினர். உள்ளே இருப்பவர்களை வெளியே விடாமல், வெளியில் இருப்பவர்களையும் உள்ளே விடாமல் தடுத்தார்கள். பேச்சுவார்த்தைக்குச் சென்ற 32 செவிலியர்களையும் ‘போராடுபவர்களுக்கு வேலை பறிபோனால், சிலர் தற்கொலை செய்துகொள்வார்கள். அந்தப் பழி உங்களையே வந்து சேரும். உங்களுக்கு தண்டனையும் கிடைக்கும்’ என்று அமைச்சர் தரப்பினரும், அதிகாரிகளும் மிரட்டியுள்ளார்கள். ‘எந்த முடிவும் எடுக்காமல், மிரட்டுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறது அரசு’ என்று அரசு ஊழியர்கள் கொந்தளிக்கிறார்கள்’’ என்ற கழுகார், சிறகடித்துப் பறந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: