Advertisements

விஷாலைக் களமிறக்கினாரா டி.டி.வி.தினகரன்?! – ‘நட்புக் கணக்கை’ப் பட்டியலிடும் உறவுகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார் நடிகர் விஷால். ‘தொகுதி முழுக்க பரவிக் கிடக்கும் சமுதாய வாக்குகளைப் பிரிப்பது விஷாலின் நோக்கம் என்றாலும், அவருக்குப் பின்னால் இருந்து இயக்குவது டி.டி.வி.தினகரன்தான்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக மதுசூதனனும் தி.மு.க வேட்பாளராக மருது கணேஷும் களம் இறங்குகின்றனர். தி.மு.க வேட்பாளருக்கு ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவர்களைத் தவிர, டி.டி.வி.தினகரன், ஜெ.தீபா உள்ளிட்டவர்கள் தனித்துக் களம் இறங்குகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால். இன்று காலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய விஷால், ‘இந்தத் தேர்தலில் நான் அரசியல்வாதி அல்ல. மக்கள் பிரதிநிதியாகப் போட்டியிடுகிறேன். குறிப்பாக, ஆர்.கே.நகர் மக்களின் தைரியத்தை ஆதரவாக எடுத்துக்கொண்டு தேர்தலில் நிற்கிறேன். இதில் நான் 100 சதவிகித வெற்றி பெறுவேன்’ எனக் குறிப்பிட்டார். 

“நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கிறார். அவர் போட்டியிடுவதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் இருந்து அமைச்சர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தி.மு.க தரப்பிலும், ‘தாராளமாக போட்டியிடட்டும்’ எனக் கூறிவிட்டனர். பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை விஷாலின் வருகையை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பு வார்த்தைகளும் வரவில்லை. ஆளும்கட்சி வாக்குகளை குறிவைத்து தினகரன் களமிறங்குகிறார். விஷாலும் இதே வாக்குகளைத்தான் குறிவைக்கிறார். அப்படியிருக்கும்போது, தினகரனுக்கு வந்து சேரும் வாக்குகளில்தான் சிரமம் ஏற்படும். இதை உணர்ந்தும் டி.டி.வி அமைதியாக இருக்கிறார். காரணம், தினகரனும் விஷாலும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதுதான்” என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

“பொதுவாக, திரையுலகப் பிரபலங்களுடன் நெருக்கமான நட்பில் இருப்பவர் டி.டி.வி. கடந்த மாதம் விஷாலின் தங்கை கல்யாணத்துக்குச் செல்ல முடிவெடுத்திருந்தார் தினகரன். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவரால் செல்ல முடியவில்லை. ஆனாலும், விஷால் வீட்டுக்கே நேரடியாகச் சென்று அரை மணி நேரம் பேசிவிட்டு வந்தார் தினகரன். இந்தச் சந்திப்பில், ‘என்னுடைய அரசியல் நடவடிக்கை எதுவாக இருந்தாலும், உங்களை ஆலோசித்துவிட்டுத்தான் களம் இறங்குவேன்’ எனக் கூறியிருந்தார் விஷால். தொகுதி முழுக்க 20 சதவிகிதம் அளவுக்கு தெலுங்கு பேசும் மக்கள் பரவியுள்ளனர். இந்த வாக்குகள் அனைத்தும் மதுசூதனனை நோக்கி வரக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இதை உணர்ந்துதான், விஷாலைக் களமிறக்கியிருக்கிறார் தினகரன். தான் போட்டியிடுவதால் டி.டி.விக்கு பாதிப்பு என்றால், உறுதியாக விஷால் களமிறங்கியிருக்க மாட்டார். இந்தத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக தினகரன் ஒரு வார்த்தையும் பேச மாட்டார். விஷாலும் தினகரனுக்கு எதிராக எந்த வார்த்தையும் பேச மாட்டார். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் உறுதியாக. 

“தற்போது பொருளாதாரரீதியாக சிரமத்தில் இருக்கிறார் விஷால். அதற்கேற்ப, அவருக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. தினம்தோறும் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் அளவுக்கு தினகரனும் விஷாலும் நல்ல நட்பில் உள்ளனர். ‘இந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோற்க வேண்டும்’ என்பதுதான் தினகரனின் ஒரே நோக்கம். ‘களத்தில் நிற்பதன் மூலம் இதனை நிறைவேற்ற முடியுமா?’ என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது. தி.மு.கவுடன் எதிர்க்கட்சிகள் பலமாகக் கூட்டணி அமைத்துள்ளன. ‘அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி அ.தி.மு.க வென்றுவிட்டால், அ.தி.மு.கவுக்குள் கோலோச்ச முடியாது’ என்பதை தினகரன் உணர்ந்து வைத்திருக்கிறார். மதுசூதனனின் வெற்றியைத் தடுப்பதன் மூலம், ‘மக்கள் செல்லாக்கு இல்லாத அ.தி.மு.க’ என்ற பிரசாரத்தை முன்னெடுக்க முடியும் என அவர் உறுதியாக நம்புகிறார். இதன் ஒருபகுதியாகத்தான் விஷால் களமிறக்கப்பட்டிருக்கிறார்” என்கின்றனர் தினகரன் ஆதரவு பிரமுகர்கள். 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: