Advertisements

கொசுவின்றி அமையுமா உலகு?

நாராயணா… இந்தக் கொசுத் தொல்லை தாங்கலைடா! மருந்து அடிச்சுக் கொல்லுங்கடா…’’ என்று `சூரியன்’ படத்தில் கவுண்டமணி சொல்லும் ஃபேவரைட் டயலாக்தான் இன்று பலரின் மைண்ட் வாய்ஸ்.  

அதிலும் மழைக்காலத்தில் கொசுவால் நாம் படும் அவஸ்தைகள் சொல்லித் தீராதவை. ஜன்னல்கள், கதவுகளில் புல்லட் ப்ரூஃப்போல கொசுவலையைப் போட்டுப் பாதுகாத்தாலும், கொசுவலையைப் போர்வையாக மூடிக்கொண்டு தூங்கினாலும்கூட ஏதாவது சின்ன இடுக்கில் புகுந்து நம் காதருகே வந்து ரீங்காரமிட்டுக் கொட்டமடிக்கின்றன கொசுக்கள். அடுத்த விநாடியே ஊசியைப் போட்டுக்கொண்ட உணர்வோடு ஒரு கடியும் இலவசம். கடியைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம். டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா… இன்னும் உயிரைப் பறிக்கும் எத்தனையோ பெயர் தெரியாத மர்மக் காய்ச்சல் களைக்கூட சர்வசாதாரணமாகப் பரப்பிவிட்டுப் போய்விடுகின்றன கொசுக்கள். 

கொசுக்கடி பாதிப்பால் உலகம் முழுக்க ஆண்டொன்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  7 லட்சத்து 25 ஆயிரம் பேர் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். கொசுக்களில் பல வகைகள்! அவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.    

கொசு எப்படி உருவாகிறது… கொசுவால் ஏற்படும் நோய்கள்… கொசுக்களை எப்படி ஒழிப்பது… அத்தனை விவரங்களையும் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் முதன்மை பூச்சியியல் வல்லுநர் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர் விளக்குகிறார்.

“கொசுக்களின் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. இங்கிருந்துதான் உலகின் பிற பகுதிகளுக்கு கொசுக்கள் பரவியதாகச் சொல்கிறார்கள். மிகக் குறைந்த வெப்பநிலையிலும் மிக அதிகமான வெப்பநிலையிலும் கொசுக்களால் உயிர் வாழ முடியாது. இதன் காரணமாகத்தான், மிதவெப்ப நாடுகளில் கொசுக்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளிலும், சில வளரும் நாடுகளிலும் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம். 

கொசுக்கள் பூமியில் 7 கோடியே 90 லட்சம் ஆண்டுகளாக வாழ்வதாகப் புதை உயிர்ப்படிவங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 21 கோடி  ஆண்டுகள் பழைமை வாய்ந்த டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலேயே இருந்திருக்கின்றன கொசுக்கள்.
கொசு, பூச்சிகள் இனத்தைச் சேர்ந்தது. உலகில் சுமார் 3,500-க்கும் அதிகமான கொசு இனங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 404 கொசு இனங்கள் உள்ளன. இவற்றின் தலையின் மையப்பகுதியில் காணப்படும் வாயுறுப்பு, இறக்கைகளில் காணப்படும் நரம்புகள், உடல் பகுதிகள் மற்றும் இறக்கைகளின் ஓரப்பகுதிகளில் காணப்படும் செதில்கள் மூலம் இதரப் பூச்சிகளிடமிருந்து கொசுக்களை நாம் அடையாளம் காணலாம்.

கொசுக்கள் உணவுக்காகவும் முட்டைகளை இடவும் பறக்கின்றன. பொதுவாக, எல்லா கொசுக்களும்  மாலை நேரத்திலும், இரவிலும்தான் கடிக்கும். டெங்குக் காய்ச்சல் மற்றும் சிக்குன்குன்யாவை உண்டாக்கும் ஏடிஸ் கொசுக்கள் மட்டும் பகலில் கடிக்கும். வீடுகளில் இருட்டான இடங்களில் தங்கி ஓய்வெடுக்கும். வீட்டுக்கு வெளியில் கிணறு, சாக்கடைகள், தாவரங்கள், மாட்டுத்தொழுவம் போன்றவற்றில் தங்கும். அனோபிலெஸ் (Anopheles) கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் அடைகாக்கும். க்யூலெக்ஸ் (Culex) கொசுக்கள் அசுத்தமான தண்ணீரில் உருவாகும். ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீர் உள்ள கலன்களில் உருவாகும். கொசுக்கள் இன விருத்திக்குத் தண்ணீரில் முட்டைகளை இடுகின்றன. ஆர்மிஜெரஸ் கொசுக்கள் மனிதக் கழிவுகள் கலந்த கழிவு நீரில்தான் உருவாகின்றன.

நோய்களைப் பரப்பும் கொசுக்கள்

முட்டைகள் உருவாகுவதற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான புரதத்தை மனிதர்களி டமிருந்தும் விலங்குகளின் ரத்தத்திலிருந்தும் கொசுக்கள் பெறுகின்றன. நோயுள்ள ஒருவரைக் கொசு கடிக்கும்போது அவரிடமிருந்து கொசுவுக்கு அந்தத் தொற்று ஏற்பட்டுவிடும். பிறகு நோய் பாதிப்பில்லாதவர்களைக் கடிக்கும்போது அவர்களுக்கு அந்தத் தொற்றுப் பரவி, நோய் உண்டாகிறது. கொசு, மனிதர்களைக் கடிக்கும் போது அதன் எச்சிலில் உள்ள வேதிப் பொருள் ரத்தம் உறையாமல் தடுத்து, ரத்தத்தை உறிஞ்சி எடுக்க உதவும். அப்போது, அலர்ஜி உள்ள குழந்தை கள் மற்றும் பெரியவர்களுக்குக் கடித்த இடத்தில் சருமத்தில் அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்படும்.

நோய் பரப்பும் கொசுக்களில் அனோபிலெஸ், க்யூலெக்ஸ், ஏடிஸ், மான்சோனியா ஆகிய நான்கு முக்கிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் அனோபிலெஸ் கொசு மூலம் மலேரியா பரவுகிறது. க்யூலெக்ஸ் கொசு மூலம் யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவுகிறது. ஏடிஸ் கொசு மூலம் டெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா வைரஸ் போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவுகி ன்றன. மான்சோனியா கொசு மூலம் யானைக்கால் நோய் பரவுகிறது. அதேபோல ஆர்மிஜெரஸ் கொசுக்களும் பரவலாக அறியப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் அவற்றால் பெரிய தொற்றுநோய்கள் இதுவரை பரவியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்தக் கொசுவின் கடி, மற்ற கொசுக்களைவிட கடுமையான வலியை ஏற்படுத்தும். சருமத்தில் அரிப்பு, தடிப்புகளை ஏற்படுத்தும்.

கொசுக்களின் வாழ்க்கைச் சுழற்சி

கொசுக்களுக்கு மனிதர்களைப்போல ஆண், பெண் இனத்துக்கும் ஒரே மாதிரியான வாழ்நாள் கிடையாது. பெண் கொசுக்கள் சராசரியாக மூன்று வாரம் முதல் நான்கு வாரங்கள் வரை உயிர்வாழும். ஆனால், ஆண் கொசுக்கள் சராசரியாக ஒரு வாரம் மட்டுமே உயிர்வாழ்கின்றன.

பொதுவாக, கொசுக்களின் வாழ்க்கைச் சுழற்சியில் அதன் முட்டைப் பருவம் சராசரியாக 1-2 நாள்கள் வரையும், லார்வா நிலையை 6 முதல் 8 நாள்களுக்கும் நீடிக்கின்றன. பியூப்பா என்னும் கூட்டுப்புழு நிலைக்கு இரண்டு நாள்களாகும். ஒரு முழுமையான கொசுவாக உருவாக 10 முதல் 14 நாள்கள் வரை எடுத்துக்கொள்கின்றன. இந்த வாழ்க்கைச் சுழற்சியானது, முழுமையாகச் சுற்றுச்சூழலைச் சார்ந்தே அமையும். குறிப்பாக, சுற்றுச்சூழலின் வெப்பநிலை மற்றும் ஈரக்காற்றினைச் சார்ந்திருக்கும். எனவே, வளர்ச்சி யடையும் நாள்களில் சிறிது மாற்றம் இருக்கலாம். உதாரணமாக, 30 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவும்போது ஏழு நாள்களில் முழுமையான வளர்ச்சியை எட்டி விடும்.

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்

சுற்றுச்சூழல் முறைகள் (Environmental Methods)

கொசுக்களைக் கட்டுப்படுத்த அவற்றின் வாழ்விடங்களை அழிப்பது முதன்மையானது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தவிர்த்து, தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் மணல்கொண்டு நிரப்பி, நீர் தேங்காதவாறு சமப்படுத்த வேண்டும்.

ஒரு வாரத்துக்கும் மேல் தண்ணீர் தேக்கிவைக்கும் பாத்திரங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்களில் தண்ணீரைச் சேர்த்துவைப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் அல்லது அவற்றை நன்றாக மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்குகளின் மூடிகளைக் காற்றுப் புகாமல் மூடிவைக்க வேண்டும். இப்படிக் கொசுக்கள் உருவாகும் இடங்களை அழிப்பது மற்றும் அவை உருவாகும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறை (Biological Method)

கொசுப்புழுக்கள் உருவாகாமல் தடுக்க கொசுவை லார்வா நிலையிலேயே அழித்துவிடுவது நல்லது. இதற்கு லார்வாக்களை முக்கிய உணவாகக் கொண்டிருக்கும் கம்பூசியா, கப்பி வகை மீன்களைக்  கிணறுகள், பெரிய சிமென்ட் தொட்டிகள், அலங்காரத் தொட்டிகள், பயன்படாத கிணறுகள் மற்றும் கழிவுநீர் தேக்கங்கள் முதலியவற்றில் வளர்க்கலாம். பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் (Bacillus thuringiensis) போன்ற சில பாக்டீரியாக்களும் கழிவுநீரில் கொசு உற்பத்தியைத் தடுக்கின்றன. யானைக் கொசுக்கள் எனப்படும் பெரிய கொசு இனமான டாக்சோரின்சைட்டிஸ் (Toxorhynchites) வகைகளும் சிறிய வகைக் கொசுக்களின் புழுக்களை அழிக்கின்றன.

ரசாயன முறை (Chemical Method)

முதிர்கொசுக்களைக் கொல்வதற்கு பூச்சிக்கொல்லி (Insecticide) எனப்படும் ரசாயனம் பெரிதும் உதவும். முதிர்க்கொல்லிகள் (Adulticides), `புழுக்கொல்லிகள்’ (Larvicide) எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திக் கொசுக்களை அழிக்கலாம். ஆனால், இந்த முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல. அவசியம் கருதி மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு நல்லது.

முதிர்கொசுக்களை அழிக்க வீட்டின் சுவர்கள் மற்றும் கூரைகளில் பூச்சிக்கொல்லி மருந்துத் தெளிப்பு (Indoor residual spraying) செய்யலாம். வீட்டினுள் மனிதனைக் கடித்த கொசுக்கள் முட்டைகள் உருவாகும் வரை சுமார் 48 மணி நேரம் சுவர்கள் அல்லது கூரைகளில் ஓய்வெடுக் கின்றன. எனவே, இந்த இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பம்புகள் மூலம் டெல்டா மெத்ரின் போன்ற கொசு மருந்துகளைத் தெளிக்க வேண்டும். இந்த மருந்துகள் அந்த இடங்களில் படிந்து, பல நாள்கள் இருக்கும். அங்கு ஓய்வெடுக்கும் கொசுக்களின் உடலில் இது உட்கிரகிக்கப்பட்டு அதன் நரம்பு மண்டலம் செயலிழந்து கொசுக்கள் மரணிக்கின்றன. இம்முறை மலேரியா நோய் பரப்பும்  அனோபிலெஸ் கொசுக்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல, காற்றில் பரவும் பைரீத்ரம் அல்லது மாலத்தியான் வகை மருந்துகளைத் திவலைகளாகத் தெளித்தோ அல்லது புகை மருந்தாகப் பயன்படுத்தியோ திறந்தவெளியில் உள்ள கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

கொசுப்புழு ஒழிப்பு

தேங்கியுள்ள நீர்நிலைகள், கழிவு நீர் சிமென்ட் தொட்டிகள், கிணறுகள், டிரம்கள் போன்று கொசு உற்பத்தியாகும் இடங்களில் வாரம் ஒருமுறை மட்டும் புழுக்கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம். டெமிபாஸ் (Temephos) என்ற கொசுப் புழுக்கொல்லியை நன்னீரில் பயன்படுத்தலாம். கொசுப்புழுக்கொல்லி எண்ணெய் (Mosquito larvicidal oil) பாக்டிஸைடு (Bacticide) போன்றவற்றைக் கழிவுநீரில் பயன்படுத்திக் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். 


 

சுயப் பாதுகாப்பு முறைகள்

* வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்.

* தினமும் இருமுறை அழுக்குத் தேய்த்துக் குளித்து, வியர்வை வாடை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

* உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.

* கொசுவலை கட்டி, அதற்குள் தூங்கலாம்.

* வீட்டின் கதவுகள், ஐன்னல்களுக்கு ‘கொசு புகா வலைகளைப் பொருத்த வேண்டும்.

Advertisements
%d bloggers like this: