Advertisements

நான் அடிமை இல்லை – டீஅடிக்‌ஷன் டிப்ஸ்

தற்கும் அடிமையாவது பிரச்னைதான். அது மது, புகை போன்ற போதை வஸ்துகளோ அல்லது ஏதாவது ஒரு பழக்கமோ. அடிக்‌ஷன் என்பது நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி மீண்டும் அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு சிரமமல்ல; முடியாததும் அல்ல. அப்படி, என்ன மாதிரியான அடிக்‌ஷன்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து மீள நாம் என்ன செய்ய வேண்டும் என்பன பற்றிய முழுமையான கையேடு இது.

மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் (Substance Abuse) என்பது மருத்துவத்தால் பரிந்துரைக்கப்படாத, ஏற்றுக்கொள்ளப்படாத மருந்துகளைப் பயன்படுத்துதல், அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துதல் என்பதே ஆகும். நீண்ட நாள்களுக்கு மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் உருவாகும் விளைவுகள் அந்த மருந்துகளைப் பொறுத்தவை.  

மருந்து நஞ்சாதல் (Substance Intoxication) என்பது மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பாதிப்புகளைக் குறிக்கும். பிரக்ஞை இழத்தல், அறிவாற்றல் குறைபாடு, உணர்வுகள், நடத்தை மற்றும் ஒழுக்கத்தில் பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். மிகத் தீவிரமான நிலையில் கோமா எனப்படும் உணர்விழந்த நிலைக்குக்கூடச் செல்லலாம்.

பழக்கமாதல் (Habituation) என்பது அடிக்கடி உபயோகப்படுத்தியதால் ஏற்படும் மனரீதியான விளைவு. அது ஓர் அன்றாட நிகழ்வாகி, பயன்படுத்தும்வரை மனதிருப்தி இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தும்.

அடிமையாதல் (Addiction) என்பது நீண்ட நாள்கள் பயன்படுத்தியதால் ஏற்படுவது. உடல் மற்றும் மனரீதியான விளைவுகள் உடனடியாக அதைப் பயன்படுத்த உங்களைத் தூண்டும். அதைப் பயன்படுத்தாமல் உங்களால் எந்த வேலையையுமே செய்ய முடியாத நிலை ஏற்படும்.

பழக்கமாதல் மற்றும் அடிமையாதல் இடையேயான சில வேறுபாடுகள்   

ஒரு பழக்கம் நமக்குத் தீமைகளைக் கொடுக்கக்கூடியது எனத்தெரிந்ததும், அதற்கு அடிமையான பின்னர் உடனடியாக விட்டுவிட முடியுமா? அதற்கு நாம் அடிமையாகி விட்டதனால் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்தித்தான் விடுபட முடியும். 

அடிமையாதலில் இருந்து விடுபடுவதற்குக் கடுமையான, மிக நீண்ட பாதையில் பயணிக்க வேண்டும். பல நேரங்களில் அது நடக்காது எனப் பலர் நினைப்பதுண்டு. ஆனால், அப்படியல்ல. நீங்கள் அந்தப் பழக்கத்தை விடுவதற்குத் தயாராக இருந்தால், அதற்கான முயற்சிகளை விருப்பத்துடன் செய்தால், அது எவ்வளவு மோசமான விடுபட முடியாத பழக்கமாக இருப்பினும், இலக்கை அடைந்துவிட முடியும். அதிலிருந்து விடுபட சுய விருப்பத்துடன் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து உதவிகளும் ஒத்துழைப்பும் பல நேரங்களில் தேவைப்படும். மோசமான பின்னர் என்ன செய்வது என இல்லாமல், எந்த நேரமாயினும் முயன்று பாருங்கள். வெற்றி கிடைக்குமென நம்புங்கள், மீண்டு எழுவதற்கான முயற்சிகளை இன்றே தொடங்குங்கள்.

முதல் விதி

புதிய வாழ்க்கையை உருவாக்குங்கள்  

பழக்கத்தை விட்டுவிட அதைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் மட்டும் போதுமென நினைக்க வேண்டாம். அதை மீண்டும் பயன்படுத்த இயலாத ஒரு வாழ்க்கையை  உருவாக்க வேண்டும். ஒருவேளை புதியதாக மாறவில்லையெனில், முன்னர் எப்படித் தொடங்கினீர்களோ அதேபோல மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவீர்கள்.

வாழ்க்கையில் மாற்றத்திற்காக அனைத்தையும் மாற்ற வேண்டுமென அவசியமில்லை. உங்களின் பண்புகளை மாற்றியமைக்க வேண்டும். உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும் பண்புகளை எவ்வளவு விடுகிறீர்களோ, அதைப் பொறுத்தே உங்கள் முயற்சியின் வெற்றி அமையும்.

அடிமையானதால் பெற்றதும் இழந்ததும்  

 

 

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானதால் பெற்றது மற்றும் இழந்தது என்னவென ஓர் அட்டவணையை உருவாக்குங்கள். உதாரணத்திற்கு மதுவால் ஏற்பட்டதைக் கொண்டு ஓர் அட்டவணை இணணக்கப்பட்டுள்ளது. உங்களின் பாதிப்புகளைப் பொறுத்து இதேபோல் அட்டவணையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இலக்குகளை வைத்துச் செயல்படுங்கள்    

 

மாற்றம் வேண்டுமென முடிவெடுத்து விட்டால் துல்லியமாக, சிறப்பாகச் செய்து முடிக்கக்கூடிய, சரியான இலக்குகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உதாரணம் 1

* நான் குடிப்பதை நிறுத்திவிடுவேன்

* நான் என் இலக்கை அடையும் தேதி

உதாரணம் 2

* நான் புகைப்பிடிப்பதைக் குறைத்துக்கொள்வேன்

* இன்றிலிருந்து ஒவ்வொன்றாகக் குறைத்து மூன்று மாதங்களுக்குள் ஒரு நாளைக்கு ஒன்று எனக் குறைத்துப்  பிறகு முற்றிலும் நிறுத்தி விடுவேன்.

* வீட்டில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் புகை பிடிப்பதை விட்டுவிடுவேன்.

இலக்கை அடைய வழிகள்

 

எப்போது நிறுத்தப் போகிறோம்? தினமும் எவ்வளவு குறைக்கப்போகிறோம்? இலக்கை அடையப்போவது எப்போது? இன்றா? நாளையா? ஒரு மாதத்திலா? ஒரு வருடத்திலா? தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இந்த இலக்கை அடைய, உங்கள் இலக்கை அடிக்கடி நினைவில் வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்…   

 

* வீட்டில் மற்றும் வேலை செய்யுமிடங்களில், இந்தப் பழக்கத்தை மீண்டும் கொண்டுவரக்கூடிய பொருள்கள் இருந்தால் அவற்றை அகற்றுங்கள்.

* உடன் வேலை செய்பவர்கள் மற்றும் உறவினர்களிடம் உங்கள் இலக்குகளைச் சொல்லி, அவற்றுக்கு உறுதுணையாக இருக்கவும் உங்கள் முன்னேற்றத்தின்போது பாராட்டவும் சொல்லுங்கள்.

* உங்களின் சிறிய இலக்குகள் வெற்றியடையும்போது, அவற்றோடு புதிய இலக்குகளை இணைத்துக் கொள்ளுங்கள்.

* உங்களின் நம்பிக்கையைக் கெடுக்கும் நபர்களை உடன் சேர்க்காதீர்கள்.

* ஏற்கெனவே முயன்று தோற்றிருந்தால், அப்போது தோல்வியடைந்ததற்குக் காரணமான தவறுகளைக் கண்டறிந்து சரிசெய்து கொள்ளுங்கள்.

உண்மையான இலக்கு என்ன?  

 

அளவைக் குறைப்பதோ அல்லது முழுமையாக நிறுத்திவிடுவதோ நீங்கள் வெற்றியடைந்து விட்டதற்கான அடையாளம் என நினைத்துக்கொள்ள வேண்டாம். அடுத்த இலக்குகளை வகுத்து முன்னேற்றமடைவதிலும், நிரந்தரமாக அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதும் தான் வெற்றியாகும்.

உங்கள் இலக்கை இன்றைய தேதிக்குச் சரியாக அடைந்துள்ளீர்களா எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். நிரந்தரமாக நிறுத்துவதும் வாழ்நாளில் மீண்டும் செய்யாமல் இருப்பதும் வெற்றி என்பதை மறக்காதீர்கள்.

* டைரியில் தினமும் குறித்துக்கொள்ளுங்கள். வார இறுதியில், மாத இறுதியில் உங்களின் செயல்பாடுகள் குறித்து ஓர் ஆய்வு செய்து, ஏதேனும் தவறுகள் நேர்ந்திருந்தால் மாற்றுவதற்கு வழிகளைத் தேடுங்கள்.

* முழுமையாக நிறுத்துவதற்கு முன்னோட்டமாக, ஒரு வாரம் அந்தப் போதைப்பொருள் கிடைக்காத இடத்தில் வசித்துப்பார்க்கலாம். அதன் முடிவுகளைப் பொறுத்து நிர்ணயிக்கும் இலக்குகள் இன்னும் துல்லியமானவையாக இருக்கும்.

ஆபத்தான சூழ்நிலைகள்    

மாலை நேரத்தில் நீங்கள் இருக்கும் சூழ்நிலைகள் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தூண்டுபவையாக அமையலாம். ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மனநிலை மற்றும் சுற்றுப்புறம்  போன்றவை காரணமாகலாம்.

மனநிலைக் காரணிகள்

* பசி: மாலை வேளை முடியும் நேரத்தில் ஆற்றல் தீர்ந்து பசியெடுக்கும்.

* கோபம்: அன்று உங்களுக்கு வழங்கப்பட்ட வேலை மிகக் கடினமானதாக இருந்திருக்கும்.

* தனிமை: பிறர் தம் வேலைகளை முடித்துச் சென்றபின்னரும் அலுவலகத்தில் இருப்பது,  பிறருடன் சரியாகப் பழக முடியாததால் ஏற்படும் தனிமை.

* சோர்வு: வேலைகளை முடித்த பின்னர் ஏற்படும் சோர்வு.

சுற்றுப்புறக் காரணிகள்    

 

* மனிதர்கள்: உங்களோடு சேர்ந்து போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், உங்களுக்கு அவற்றை விற்பவர்கள், அவற்றைப் பயன்படுத்த நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ காரணமானவர்கள்.

* இடம்: நீங்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் இடம் அல்லது அவை கிடைக்கும் இடம்.

* பொருள்கள்: போதைப்பொருள் பயன்படுத்துவதை நினைவுப்படுத்தும் பொருள்கள்.

இதேபோல் உங்களுக்கான காரணிகள் எவையெனக் கண்டறிந்து அவற்றைப்  பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். இவை போன்ற காரணிகள் இருக்குமிடங்களைத் தவிர்த்தல் வேண்டும். அவற்றிலிருந்து விலகியிருப்பது போலவே அவை இருப்பினும்கூட மீண்டும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படியெனக் கண்டறிந்து பழக்கப்படுத்திக்கொள்ளவும்.

ஓய்வெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள் 

 

பெரும்பாலானோர் தங்கள் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, கவலைகளை மறக்க, வலிகள் மரத்துப்போகச் செய்ய, மன அமைதிக்காகப் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். மனஅழுத்தம் மற்றும் சோர்வை நீக்க வேறு வகையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஓய்வெடுத்தால் அழுத்தம் மற்றும் சோர்வு நீங்கிவிடும் எனத் தெரியும். ஆனால். அதற்கு நேரமில்லை என்பவர்களிடம் இரண்டு கேள்விகள்…

நீங்கள் போதைப்பொருள்களைப்  பயன்படுத்துவதால் எவ்வளவு நேரம் இழக்கிறீர்கள்? அதனால் ஏற்படும் விளைவுகளுக்குச் செலவாகும் நேரம் எவ்வளவு? இவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் உண்மையில் எவ்வளவு நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று புரியும்.

சில வழிகள் 

 

உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள்.

* மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுங்கள்.

* பிடித்த உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுங்கள்.

* மனதிற்கு அமைதி தரும் இடங்களுக்குச் சென்று வாருங்கள்.

* சிறிய வயது நினைவுகளை அசைபோடுங்கள்.

* உங்கள் திறமைகளை எண்ணி, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.

* நடைப்பயிற்சி செய்யுங்கள்.

* இவையெதுவும் முடியவில்லையெனில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மனஅழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

புதியதைக் கற்றுக்கொள்ளுங்கள்   

 

புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது, இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று நமது மனஅழுத்தம் குறையும்; மற்றொன்று எதிர்மறையான எண்ணங்கள் நம்மிடமிருந்து விலகும். புதிய விஷயம் எனும்போது அதன்மீது ஒரு கவர்ச்சி மற்றும் ஈர்ப்பு இயல்பாகவே ஏற்பட்டுவிடும். அழுத்தத்துடன் இருக்கும்போது உங்கள் மனம் அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. ஆக, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கையில் நமது மனஅழுத்தம் காணாமல் போய்விடும். கோபம், அழுத்தம் போன்றவற்றால்தான் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் என்பதால், இங்கு அவை உருவாக வாய்ப்பேயில்லை.

அப்புறம் என்ன? நீங்கள் சிறுவயதில் கற்றுக்கொள்ள நினைத்த இசையோ, நடனமோ, ஓவியமோ, சிலம்பமோ எதுவாகினும் ஒரு கை பார்த்துவிடுங்கள்.

உண்மையாக இருங்கள் 

போதைப்பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தப் பொய்கள் தேவைப்படும். அவற்றை மறைத்து வைத்து யாருக்கும் தெரியாமல் பயன்படுத்துவது, அப்படி நடந்ததே தெரியமாலிருக்க இயல்பாக நடிப்பது என எத்தனை நாடகங்களை அரங்கேற்ற வேண்டியுள்ளது? நூறு சதவிகிதம் உண்மையாக, நேர்மையாக இல்லாமல் இலக்கை அடைய முடியாது. போதைப்பொருள்கள் மீதான விருப்பம், அவற்றால் கிடைக்கும் இன்பம் எனும் மாயை போன்றவை பொய்களைச்  சொல்லத் தூண்டும்.

நீங்கள் மாற்றத்திற்குத் தயாராகாமல் இருந்தால் எதுவுமே மாறாது. உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் ‘அதிகம் பொய் சொல்கிறோமா? தனிமையில் அதிகம் இருக்கிறோமா? நேர்மையாக முயற்சி செய்கிறோமா?’ இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சொல்லும் உங்களின் எண்ணங்கள் பற்றி.

மீண்டும் அடிமையாதல் 

ஒருமுறை முடிவெடுத்துப் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், மீண்டும் அதற்கு அடிமையாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. போதைப்பொருள் பழக்கத்தை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் அதனைப் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மீண்டும் அந்தப் போதைப்பொருளை பயன்படுத்துவது என்பது அரிதானது.

ஆக, நீங்கள் உங்களின் இலக்குகளின் மூலம் அடைந்த வெற்றியை உறுதிப்படுத்த குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்.

மீண்டும் அடிமையாதல் மூன்று படிநிலைகளைக் கொண்டது. அவற்றைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டால், எளிமையாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மூன்று நிலைகள்   

 

* உணர்வுரீதியான நிலை

* மனரீதியான நிலை

* உடல்ரீதியான நிலை

உணர்வுரீதியான நிலை

நீங்கள் அந்தப் போதைப்பொருளைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பதால், உணர்வுரீதியான நிலை தோன்றுகிறது. ஆரம்பத்தில் எளிமையாக உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், நாளடைவில் அந்த உணர்வுகள் ஓர் உச்சநிலையை அடையும். அப்போது கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.

சில அறிகுறிகள்  

 

* பதற்றம்

* கோபம்

* வெறுப்பு

தனிமை

* எதிலும் விருப்பில்லாத நிலை.

* மகிழ்ச்சி, வெறுப்பின் உச்சக்கட்ட மாறுபாடுகள்

* வெளியே செல்வதைத் தவிர்த்தல்

* உணவு உண்ணும் முறைகளில் மாறுபாடுகள்

* தூக்கமின்மை

உணர்வுரீதியான நிலையானது, அந்தப் போதைப்பொருள் பழக்கத்தை விட்ட பின்னர் எப்போது வேண்டுமானாலும் (மறுநாளே கூட) தோன்றலாம். இந்த நிலைமையிலேயே பெரும்பாலானோர் தோல்வியடைகின்றனர். இந்த நிலையில் அறிகுறிகளைச் சரியாகக் கண்டறிந்தால், அவர்களுக்குச் சரியான மருத்துவத்தைக் கொடுக்கலாம்.

ஆரம்ப நிலையிலேயே மீண்டும் அடிமையாவதைத் தவிர்த்தல் 

 

மீண்டும் அடிமையாவதைக் கண்டறிய, பண்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும். அவற்றில் மாற்றங்கள் தேவையென நினைத்தாலோ, தனிமையாக இருப்பதாக உணர்ந்தாலோ பிறரிடம் உதவி கேட்க மறக்க வேண்டாம்.

பண்புகளில் மாற்றங்களைக் கண்டறிவதற்குச்  சாப்பிடுவது மற்றும் தூங்குவது ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் உதவிபுரியும். பண்புகளில் எந்த மாற்றமும் இல்லையென விட்டுவிட வேண்டாம். உங்களுக்கு மனஅழுத்தம் இருப்பினும், அதுவும் இந்த நிலையைச் சேர்ந்தது என்பதை மறக்காதீர்.

சுய அக்கறை  

மீண்டும் அடிமையாவதைத் தடுக்கச் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை தங்கள்மீது அக்கறை செலுத்துவது. சுய அக்கறை என்பது உங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது, உங்களுடைய பண்புகளை மேம்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது.

நன்கு சாப்பிட வேண்டும், நன்கு தூங்க வேண்டும் என உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தும்போது, அது மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் உங்களை வலுப்படுத்தும். வலிமையான மனப் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகிவிடும், அவற்றுக்குப் பயந்து போதைப்பொருள்களைத் தேடாது.

மனரீதியான நிலை  

 

இந்த நிலையில் மனதினுள் ஒரு போர் நடந்துகொண்டு இருக்கும். சிலநேரம் போதைப்பொருள் வேண்டுமெனவும், வேறொரு நேரம் வேண்டாமெனவும் சொல்லி உங்களை வதைத்து எடுக்கும். இந்த நிலையைச் சரியாகக் கையாளாமல் விட்டுவிட்டால், நிச்சயம் மீண்டும் அந்தப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவோம்.

சில அறிகுறிகள்  

* போதைப்பொருள்களைப் பயன்படுத்திய இடம், உடனிருந்த நபர்கள் பற்றி அடிக்கடி எண்ணுதல்

* அந்த நினைவுகள், நீங்கள் அப்போது மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்லுதல்

* அப்போது உடனிருந்தவர்களைத் தேடி நட்பு பாராட்டுதல்

* மீண்டும் அடிமையாவதைப் பற்றி யோசித்தல்

இவர்கள் தங்களின் மகிழ்ச்சி  மற்றும்  வலிமை அங்கே கிடைக்கும் என நினைத்துவிட்டால், மீண்டும் சென்று பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. இந்த முறை அதனுடனான பிணைப்பு இன்னும் அதிகமாக இருக்கும். உள்ளே சென்றால் மீட்க முடியாத நிலைக்குக்கூடச் செல்லலாம்.

மனநிலையில் ஏற்படும் அவசரநிலையைத் தவிர்த்தல்  

மனநிலையில் உடனடியாக மீண்டும் போதைப்பொருளைப் பயன்படுத்தியே ஆக வேண்டுமென்ற அவசரநிலை தோன்றினால், ஒருமுறைதானே என எடுத்துக்கொள்வீர்கள். ஆனால், இதுதான் கடைசி என அடிக்கடிச் சொல்லி ஒருநாள் பழையபடியே அடிமையாகி நிற்பீர்கள்.

சில நுட்பங்கள்   

* மகிழ்ச்சியாக ஒரு சிறிய விளையாட்டு விளையாடுங்கள்.

* தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் இருங்கள்.

* உங்கள் பிரச்னைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள்.

* வேறு வேலைகளைக் காரணமாகக் காட்டி உங்கள் மனதைத் திசைத்திருப்புங்கள்.

* சிறிது நேரத்துக்கு அமைதியாக இருங்கள்.

* ஒவ்வொன்றாக விடுங்கள் – ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் விட முடியாது.

* குட்டித் தூக்கம் போடுங்கள்.

உடல்ரீதியான நிலை   

இந்த நிலை வந்துவிட்டால் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். மேலே சொன்ன வழிகளையே பின்பற்றிப் பாருங்கள். அதன்பின்னரும் முடியவில்லையெனில் மருத்துவரிடம் சென்று ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தொடருங்கள்.

முன்னரே சொன்னதுபோல இது பெரிய சுதந்திரப் போராட்டம். இதில் உடனடியாக வெற்றி பெறுவது மிகக் கடினம். வெற்றி பெறப்போகும் கதாநாயகன் நீங்கள்தான். அந்த வெற்றியின் மூலம் பலருக்கு வழிகாட்டக்கூடிய முன்னோடியும் நீங்கள்தான். முயற்சியை இப்போதே தொடங்குங்கள்.

வாழ்க்கைமுறை மாற்றத்திற்கு ஐந்து வழிகள் (ABCDE)

(எளிமையாக, சுருக்கமாக, இறுதியாக, மறக்காமல் பிடித்துக்கொளுங்கள்)  

 

* A – Avoid Going to Favourite Bars –   உங்களுக்குப் பிடித்த மதுபான வகைகளையும், பிடித்த இடத்தில் குடிப்பதையும் தவிர்க்கவும்.

* B – Build  Support Network – ஏற்கெனவே போதைப்பொருள்களைப் பயன்படுத்தி, பின்னர் அவற்றிலிருந்து விடுபட்டவரிடம் வழிமுறைகளைக் கேளுங்கள். அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

* C – Continue Treatment போதைப் பொருள்களை விடுவதால் ஏற்படும் விளைவுகளுக்குத் தொடர்ந்து சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.  

 

* D – Development of New Activities – இசை, யோகா போன்று ஒன்றைப் புதியதாகக் கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்.

* E – Exercise – உடற்பயிற்சி, விளையாட்டு போன்று மனஅழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.

போதைப்பொருள் வகைப்பாடு   

 

வேதிப்பொருள்களால் ஏற்படும் அடிமையாதல் மிக முக்கியப் பிரச்னையாக இருப்பதால் அவற்றை மேலும் வகைப்படுத்திக்கொள்வோம்.

* நரம்பு மண்டலத்தைத் தூண்டுபவை – கஃபைன், நிகோடின், கொகைன்.

நரம்பு மண்டலத்தை மட்டுப்படுத்துபவை – ஆல்கஹால், தூக்க மாத்திரைகள், ஹெராயின் போன்றவை

* மயக்கநிலை ஏற்படுத்துபவை – கஞ்சா

பிற வஸ்துகள்.

உலகில் அதிக அளவிலான போதைப்பொருள் பயன்பாடு இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொருள்களில் புகையிலை வகைகள் முதலிடத்தில் உள்ளன. புகையிலை சிகரெட்டாகச் சட்டப்பூர்வமாகவும், குட்கா, பான் மசாலா, மூக்குப்பொடி எனப் பலவகைகளில் மறைமுகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்த இடத்தில் ஆல்கஹால் வகைகள் உள்ளன. இவை மட்டுமின்றி கஞ்சா, கொகைன், ஹெராயின் போன்றவையும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.


சிகிச்சையின் பகுதிகள்

* மனநிலை மாற்றம்

* குடும்ப ஆதரவு

* சமுதாய ஆதரவு

போதைத்தடுப்பு மையங்கள்

சிகிச்சை அணுகுமுறைகள்

மருந்துகள்  

 

நச்சுத்தன்மை நீக்குதல்: அதிக அளவில் போதைப்பொருளைப் பயன்படுத்தியதால் ஏற்படும் விளைவுகளுக்கு அவற்றை உடலில் இருந்து நீக்குவது. ஒவ்வொரு வகையிலான போதைப்பொருளுக்கும் எதிராக செயல்படும் மருந்துகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி ஏற்பட்ட நச்சுத்தன்மையை நீக்கலாம்.

டைசல்ஃபிரம்: இவை ஆல்கஹால்போலவே அமைப்பு கொண்டவை. ஆனால், எந்த செயல்பாடும் இருக்காது. எனவே, ஆல்கஹால் ஏற்பிகளில் செயல்பட்டு அறிகுறிகளைக் குறைக்கும்.

* நிகோடின்: இது பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் சிகரெட் பிடிக்க வேண்டுமென இருக்கும் விருப்பத்தைக் குறைக்கும்.

மருத்துவமனையில் தங்குவது

மருத்துவமனை அல்லது காப்பகத்தில் கொஞ்சம் நாள்கள் இருக்கும்போது போதைப்பொருள் பழக்கத்தை மறக்க வாய்ப்புகள் உண்டு.

பழக்கவழக்க மாற்றங்கள்   

அடிமையானவர்கள் தாமாக முன்வந்து தங்களது பழக்கத்தை விட்டுவிட நினைத்தால், இந்த முறையினை முயற்சிக்கலாம்.

Advertisements
%d bloggers like this: