Advertisements

இடைத்தேர்தல் நடக்குமா?

டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் நடக்கிறது. ஒரே நாளில் தி.மு.க-வுக்கு இரண்டு அக்னிப் பரீட்சைகள்’’ என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘பரீட்சையின் ரிசல்ட் எப்படி இருக்குமாம்?’’ என்று கேட்டோம்.

தன் கையோடு கொண்டுவந்திருந்த துண்டுச்சீட்டு குறிப்புகளை நம்மிடம் தந்த கழுகார், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறலாம் என்று டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது’’ என்றார்.
‘‘இன்னொரு பக்கம் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில், ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை விடாமல் துரத்துகிறதே?’’
‘‘ஆம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குள் பணம் வந்த பாதையில் ப.சிதம்பரம் சிக்கியிருப்பதாக சி.பி.ஐ சொல்கிறது. கார்த்தி சிதம்பரத்துக்கு அந்தப் பிரச்னை இன்னும் தீராத துயரமாக இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்தைப் போதுமான அளவுக்கு இந்த விவகாரத்தில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை துரத்திவிட்டது. கடந்த வாரம் கார்த்தி சிதம்பரத்தின் மாமனார் கைலாசம் (தாய் வழிச் சொந்தம்), அவருடைய நண்பர்கள் சுஜய் சாம்பமூர்த்தி, ராம்ஜி நடராஜன், கொல்கத்தாவில் உள்ள மனோஜ் மோகன் ஆகியோரைக் குறிவைத்து ரெய்டு நடந்தது. சென்னை திருவான்மியூரில் ஸ்ரீராம் நகர் குறுக்குத் தெருவில் உள்ள சுஜய் சாம்பமூர்த்தியின் மீடியா மேக்னட் பிஸினஸ் சர்வீஸ், கார்த்தி சிதம்பரத்தின் நண்பர் ராம்ஜி நடராஜனுக்குச் சொந்தமான ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் பகுதியில் உள்ள டிராவல் மாஸ்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கார்த்தி சிதம்பரத்தின் மாமனார் சடையவேல் கைலாசத்துக்குச் சொந்தமாக தேனாம்பேட்டையில் உள்ள அஸ்வினி சவுந்தரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கொல்கத்தாவில் உள்ள மனோஜ் மோகன் என்பவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில்  கடந்த 1-ம் தேதி அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. அதை வைத்து கார்த்தியை விசாரணைக்கு விரைவில் அழைப்பார்களாம்.’’

“ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே கண்ணீரில் மிதக்கிறது. அரசுமீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களே?’’
‘‘மழையும், புயலும் கடலோர மாவட்டங்களின் மக்களுக்கு பழகிப்போன விஷயங்கள்தான் என்றாலும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒரே நாளில் காணாமல் போவது என்பது இதுவரை நடக்காதது. ‘அரசாங்கத்தின் அலட்சியத்தால்தான் இது நடந்தது’ என்று மீனவ மக்கள் நினைக்கிறார்கள். 30-ம் தேதியும் கனமழை என்ற வார்த்தையைப் பயன்படுத்தித்தான் முதலில் அறிவிப்பு வெளியிட்டனர். அன்று காலையில்தான், ‘புயலாக இது உருமாறியிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் கன்னியாகுமரியை இந்தப் புயல் கடக்கும்’ என்று வானிலை மையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், அவசர அவசரமாக புயல் அறிவிப்பு செய்தியை விடுத்துள்ளது. முன்பே கடலுக்குள் சென்ற மீனவர்கள் வர முடியாமல் சிக்கிக் கொண்டார்கள். இதேபோன்ற குரலை கேரளாவில் அரசே எதிரொலித்தது. ‘ஹைதராபாத் வானிலை மையம் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்காததே சேதத்துக்குக் காரணம்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.’’
‘‘தேடுதல் விஷயத்தில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததே?’’
‘‘ஆழ்கடலில் மீனவர்கள் சிக்கிக்கொண்டதாகத் தகவல் வந்ததும், கடலோரக் காவல்படை விரைந்து செயல்படவில்லை. அதே போல், ‘கடற்படையும் மெத்தனமாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது’ என்ற வருத்தம் மீனவர்களுக்கு உள்ளது. கரை ஒதுங்கிய சில மீனவர்கள், ‘நாங்கள் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, இந்தியக் கடற்படையின் ரோந்துக் கப்பல் எங்களைக் கடந்துசென்றது. நாங்கள் அவர்களை சைகை காட்டி அழைத்தபோதும், கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதுதான் தமிழக மீனவ மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அங்கு சென்றபோது, குளச்சலில் மீனவர்கள் முற்றுகையிட அதுதான் காரணம். குமரியில் மக்கள் தவித்துக்கொண்டிருந்தபோது, கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்தது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. முதல்வர் வருகை தருவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.’’
‘‘அவர்களுக்கு விழாக்களும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும்தானே முக்கியம்?’’
‘‘குறிப்பாக, இடைத்தேர்தலை எடப்பாடியும் பன்னீரும் மானப் பிரச்னையாக நினைக்கிறார்கள். அனைத்து அமைச்சர்களையும், ஏற்கெனவே அவர்கள் பார்த்த ஏரியாக்களைப் போய்ப் பார்க்கச் சொல்லி முதல் உத்தரவு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இரண்டு அணிகளின் நிர்வாகிகளையும் அரவணைக்கும் வேலையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். தினகரனுக்காக அமைச்சர்கள் கடந்த முறை ஏராளமாக செலவு செய்துவிட்டார்கள். ஆனால், மக்களிடம் ‘தினகரன் பணம் கொடுத்தார்’ என்ற பெயர்தான் உள்ளது. அந்த நினைப்பை மாற்ற, இந்த முறையும் அமைச்சர்கள் கையிலிருந்து கரன்சிகள் இறங்கும் என்கிறார்கள்.’’
‘‘ஓஹோ!’’
‘‘இந்தத் தேர்தலில் இரட்டை இலை தோல்வியைத் தழுவினால், தினகரனின் கை ஓங்கிவிடும் என்று அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள். மேலும் விஷால், தீபா எனப் பெரும்படையே  சுயேச்சைகளாகக் களத்தில் நிற்பதால், வாக்குகள் சிதறி தி.மு.க-வுக்கு சாதகமாகப் போய்விடக்கூடாது என்ற அச்சம் அ.தி.மு.க-வினரிடம் உள்ளது. அந்தக் காரணத்துக்காகவே செலவு செய்யவேண்டிய நெருக்கடியில் அமைச்சர்கள் உள்ளார்கள்.’’
‘‘விஷால் களம் இறங்குவதன் பின்னணி என்னவாம்?’’
‘‘கமல்தான் விஷாலைக் களத்தில் இறக்கியுள்ளார் என்று முதலில் தகவல் வந்தது. அதன்பிறகு, ‘தினகரன் மறைமுகமாக விஷாலை நிறுத்தி வாக்குகளைப் பிரிக்க முடிவுசெய்துள்ளார்’ என்றார்கள். ‘ஆர்.கே.நகரில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் மொத்தமாக மதுசூதனனுக்குப் போய்விடாமல் தடுக்கவே இந்த பிளான்’ என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘விஷால் நிற்பதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று தினகரன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ‘இது தி.மு.க-வின் திட்டமாக இருக்குமோ’ என்று சில அமைச்சர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். விஷாலும், ஸ்டாலினின் மகன் உதயநிதியும் நெருங்கிய நண்பர்கள் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதை வைத்தே சந்தேகம் எழுந்தது. ஆனால், உண்மையில் விஷாலைத் தேர்தலில் நிற்கத் தூண்டியதே அவருடன் இருக்கும் ஒரு நபர்தான் என்கிறார்கள் விஷாலின் நண்பர்கள். அதோடு உதயநிதிக்கும் விஷாலுக்கும் இடையே சமீபத்தில் மனக்கசப்பு ஏற்பட்டதையும் அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.’’
‘‘தி.மு.க என்ன திட்டத்தில் உள்ளதாம்?’’
‘‘ஆர்.கே. நகரை எப்படியும் கைப்பற்றிட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் ஸ்டாலின் குஷியாக உள்ளார். 89 எம்.எல்.ஏ-க்களும் ஆர்.கே. நகரில் களமிறங்க உள்ளார்கள். மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு போய்விட்டது. நூறு ஓட்டுக்கு ஒருவர் என்ற ரீதியில் பொறுப்பாளர்களை நியமிக்கும் திட்டத்தில் தி.மு.க உள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தையும் விரைவில் நடத்த உள்ளனர்.’’

‘‘தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டை வைகோ எடுத்துவிட்டாரே?’’
‘‘கருணாநிதியைப் பார்க்க வந்தது, முரசொலி பவள விழாவில் பங்கெடுத்தது என வைகோவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தி.மு.க-வுக்கு சார்பானவையாகத்தான் இருந்தன. அரசியல் கூட்டணியைப் பொறுத்தவரை, ‘கட்சியின் அரசியல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்’ என்று வைகோ சொல்லியிருந்தார். மதுரை விமான நிலையத்திலும், கோவை விமான நிலையத்திலும் நடந்த ஸ்டாலின் – வைகோ சந்திப்புகள், இருவரின் நட்பை அதிகப்படுத்தின. ‘தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டைத்தான் ம.தி.மு.க எடுக்க வேண்டும்’ என்று அக்கட்சியின் முன்னணியினர் தொடர்ந்து வைகோவிடம் சொல்லிவந்தார்கள். ‘அ.தி.மு.க-வையும் பி.ஜே.பி-யையும் எதிர்க்கும் வலிமை  தி.மு.க-வுக்கே உள்ளது’ என்பது ம.தி.மு.க அரசியல் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கருத்தாக இருந்துள்ளது. எனவேதான், தி.மு.க-வை ஆதரிக்கும் முடிவை வைகோ எடுத்தாராம்.’’

‘‘ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?’’
‘‘வைகோவின் அறிவிப்பு வந்ததும், ‘இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணையும் இந்த நேரத்தில், ம.தி.மு.க-வும் அதில் தனது பங்கைச் செலுத்தும் வகையில் இணைந்திருப்பது பாராட்டுக்குரியது’ என்று சொன்னார் ஸ்டாலின். இதுதான் மறுநாள் வெளியான ‘முரசொலி’யின் தலைப்புச்செய்தி. அந்தளவுக்கு வைகோ ஆதரவை ஸ்டாலின் மதித்ததாகச் சொல்கிறார்கள். 7-ம் தேதியன்று ஆர்.கே. நகரில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வைகோவிடம் இந்தத் தகவல் சொல்லப்பட்டது. ஆனால், ‘அன்றைய தினம் இரண்டு திருமணங்களை நடத்தத் தேதி கொடுத்துள்ளேன்’ என்று வைகோ சொல்ல, கூட்டத்தின் தேதியையே மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின் என்கிறார்கள்.’’

‘‘சரி, ஆர்.கே. நகர் தேர்தல் நியாயமாக நடக்குமா?’’ என்ற கேள்வியைப் போட்டதும் சிரித்த கழுகார், ‘‘தேர்தல் நடக்குமா?’’ என்று திருப்பிக் கேட்டார். ‘‘தி.மு.க வெற்றிபெறும் சூழல் வந்தால், கடைசி நேரத்தில் தேர்தலை மீண்டும் நிறுத்த எடப்பாடியும் பன்னீரும் டெல்லிக்கு ரகசியக் கோரிக்கை வைப்பார்கள் என்று அதிகாரி ஒருவர் தகவல் தந்தார். டெல்லியிலிருந்து கிண்டி மாளிகைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் பலரிடமும், ‘ஜனவரிக்குப் பிறகு பார்க்கலாம்’ என்று ஏதோ சூட்சுமம் வைத்துப் பேசுகிறாராம். ‘ஆர்.கே. நகர் தேர்தல் எங்கே சுமுகமாக நடக்கப்போகிறது? பழையமாதிரியே பிரச்னையில்தான் முடியும். இரண்டு முறை தேர்தல் நடப்பது நின்றால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற நிலை உருவாகும். அதனால், அரசு முடங்கிப்போகும். அப்புறம், அதிகாரம் இங்கேதான் வரும்’ என்று அவர் சொன்னாராம்’’ என்று சொல்லிவிட்டுப் பறந்து வானத்தில் வட்டமிட்டார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: