Advertisements

கொஞ்சம் ப்ளஸ்… நிறைய லாபம்! – தென்னை தரும் பொருள்கள்!

திப்புக் கூட்டல் என்பது குறிப்பிட்ட சில பொருள்களுக்கு மட்டும் கிடையாது. விவசாயத்தில் கிடைக்கும் அனைத்துப் பொருள்களையும் மதிப்புக் கூட்ட முடியும். அதன்படி தென்னையை எடுத்துக்கொண்டால் தேங்காய், தென்னை மட்டை, இளநீர், தேங்காய் எண்ணெய் ஆகியவை கிடைக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். இவை தவிர்த்து  தேங்காய் பவுடர், கயிறு, தென்னை நார்க்கட்டி, பதப்படுத்தப்பட்ட இளநீர், தென்னங் கருப்பட்டி எனப் பல வடிவங்களில்

மதிப்புக் கூட்டினால் நிச்சயமாக லாபம் கிடைக்கும். இவற்றைத் தமிழ்நாட்டில் அதிகமாக கொங்கு மண்டலத்தில் செய்துவருகிறார்கள். இந்த இடத்தைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அதிகமாகத் தென்னை வளர்க்கும் விவசாயிகளும் மதிப்புக் கூட்டல் செய்து வருகிறார்கள். மதிப்புக் கூட்டல் சம்பந்தமாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உடுமலையைச் சேர்ந்த எழுத்தாளர் ரவியிடம் பேசினோம்.  

“தமிழ்நாட்டில்தான் மதிப்புக் கூட்டல் பற்றிய விழிப்பு உணர்வு அதிகமாக இல்லை. ஒரு சிலரைத் தவிர அதிகமான ஆட்கள் மதிப்புக் கூட்டலின் பக்கம் வரத் தயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. இதைத் தமிழக அரசும் ஊக்குவிக்க முன்வர வேண்டும். இலங்கையில் மதிப்புக் கூட்டல் பற்றிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்கே பார்த்த தொழில்நுட்பங்கள்தான் மதிப்புக் கூட்டல் பற்றிய அவசியத்தைப் புரிய வைத்தது. இலங்கையில் தென்னையிலிருந்து மது வகைகள், தோசைப் பொடி, கூடை, மிதியடிகள், தென்னங் கருப்பட்டி எனப் பல பொருள்களைத் தயார் செய்கிறார்கள். இலங்கை செல்லும் ஒரு சில விமானங்களில் பதப்படுத்தப்பட்ட இளநீரைக் கொடுக்கிறார்கள்.
தென்னைக்கு என்றே தனியாக வாரியம் அமைத்து மதிப்புக் கூட்டல் செய்த பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறார்கள். மேலும், தேங்காயிலிருந்து பால், பவுடர் ஆகிய பொருள்களை அதிகமாகத் தயாரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தென்னையில் செய்யப்படும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் அரிதாகி வருகிறது. அரசு கொஞ்சம் முனைப்புக் காட்டி, மதிப்புக் கூட்டல் மூலம் பலருக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்” என்றார்.
தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார்க் கட்டி உற்பத்தி
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்ரீராகவேந்திரா ஃபைபர் புராடெக்ட்ஸ் உரிமையாளர் சி.பாலசுப்பிரமணியம், 1994-ம் ஆண்டு முதல் தென்னையிலிருந்து மதிப்புக் கூட்டித் தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார்க்கட்டி ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். தென்னை நார்களில் மதிப்புக் கூட்டல் பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்…
“தேங்காய் நார்களிலிருந்து பல பொருள்களை உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்கு மூலக் காரணமாக விளங்கும் நாரை, முறைப்படி உற்பத்தி செய்ய வேண்டும். 1994-ம் ஆண்டு முதல் தேங்காய் நார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். இதில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற நார்கள் என இரு வகை உண்டு. வெள்ளை நார்கள் சற்று தரம் உயர்ந்தவை. பச்சை தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இது அழகான கால்மிதிகள், சோஃபாக்கள் எனப் பல பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன.
பழுப்பு நிறக் கயிறுகள், அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றைத் தயாரிக்க, பழுப்பு நிற நார்கள் பயன்படுகின்றன. பச்சை தென்னை மட்டையை கன்வேயரில் போட்டு நார்களைத் தனியாகப் பிரித்துவிடுவோம். பின்னர், மட்டைகளை பாலிஷ் செய்து, சல்லடையில் சலித்து நார்கள் எடுத்து, தரம் பிரித்துக் காயவைப்போம். அதைச் சரியாக 30 கிலோ அளவிற்கு எடைபோட்டு பண்டலாகக் கட்டி ஏற்றுமதி செய்வோம். கன்வேயரில் போடப் பட்ட மட்டைகளை அரைத்து நார்களைப் பிரிக்கும்போது அதிலிருந்து துகள்கள் தனியாக விழும். அந்தத் துகள்களைக் கொண்டு தேங்காய் நார்க் கட்டிகளாகவும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறேன்” எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.   

கயிறு பிசினஸ்
“தென்னை நாரிலிருந்து தயாரிக்கப்படும் கயிறு பிசினஸ்தான் தற்போது டாப்பாக இருக்கிறது” என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த கெளதமன். மேலும், அவர் கூறும்போது…
“மட்டையிலிருந்து தயாரிக்கும் நார்களை வாங்கி கயிறு தயாரிக்கப் படுகிறது. பிணைந்திருக்கும் தென்னை நார்களின்மீது தண்ணீர் ஊற்றிப் பிரித்துவிடுவோம். அதன் பின்னர் வில்லோயிங் மெஷினில் அள்ளிப்போட வேண்டும். அதிலிருந்து  கயிறு தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் மெஷினிலிருந்து நார் வெளியே வரும். அடுத்ததாக ஆட்டோ ஃபீடர் மெஷினிலிருந்து ஸ்பின்னிங் முறையில் கயிறாகத் தயாராகிறது. இதெல்லாம் நடக்க ஒரு நாள்தான் தேவைப்படும். கயிறு தயாரிப்பதில் 1.30 முதல் 1.90 ரன்ஏஜ்(Runage) என்று சொல்லக்கூடிய அளவுகள் உள்ளன. இதில் நான் தயாரிப்பது 1.60 என்ற அளவில்தான் இருக்கும். இந்த அளவுள்ள கயிறுகள் மேட் போன்ற அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்பதற்காக அதிகமாக விற்பனையாகும். 2016-ம் ஆண்டில் நான் ஆரம்பித்த கயிறு தயாரிக்கும் தொழில் தற்போது  வேகமெடுத்து இருக்கிறது. புதிதாக இந்தத் தொழிலைத் தொடங்க நினைத்தால் சுமார் 1 கோடி ரூபாய் தேவைப்படும். எங்களுடைய பொருள்கள் பெரும்பாலும் கேரளாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன. முதலில் இந்தத் தொழிலைப் பார்க்கும் முன்னர்  பல நிறுவனங்களுக்குச் சென்று  தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  கயிறு தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. இது தவிர, இதுபோன்ற தொழிலுக்கு வரும் புதியவர்கள் அதிகத் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இனி வரும் காலங்களில் இந்தத் தொழிலில் சாதிக்க முடியும்” என்றார்.
தென்னையில் இங்கே குறிப்பிட்ட பொருள்களை மட்டும்தான் மதிப்புக் கூட்டல் செய்யமுடியும் என்பது கிடையாது. தென்னையின் நுனிமுதல் அடிவரை இருக்கும் அனைத்துப் பொருள்களுமே மதிப்புக் கூட்டல் செய்யக் கூடியவைதான்.

Advertisements
%d bloggers like this: