Advertisements

ஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை!

ன்னப்பா லைட்டா தொப்பை எட்டிப் பார்க்குது” என்று நண்பர்களில் எவரோ ஒருவர் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போக, அவ்வளவுதான் அன்றிரவு தூக்கமே வராது. உடற்பயிற்சித் தொடர்பாக இருக்கும் மொபைல் ஆப்கள், அதுவும் ரன்னிங் தொடர்பான ஆப்கள் எல்லாம் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து விடுவோம். “நாளையிலிருந்து இதெல்லாம் செய்ய வேண்டும்” எனக் காற்றிலேயே

ஓர் உடற்பயிற்சி அட்டவணையை வரைந்துகொண்டு அதை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வோம். சிலர் ஒருபடி மேலே போய் பிரின்ட் அவுட் எடுத்து அறையில் ஒட்டிக்கொள்வார்கள். அதைப் பின்பற்றுகிறோமா என்பது வேறு கதை.
இப்படி உடலை வலுவாக, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல பயிற்சிகள் செய்கிறோம். அதே அக்கறை நம் மூளைக்கும் மனதிற்கும் கொடுக்கப்படுகிறதா? நம் மூளையின் செயல்பாட்டைச் செம்மைப்படுத்த, கூர்மைப்படுத்த அதேபோல் ஓர் அட்டவணை போடுவது அவசியமாகிறது. வாரத்தின் ஏழு நாள்களும் இதைப் பின்பற்றினால் மனதளவில் என்றும் இளமையுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
திங்கள்: மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவு வகைகளுக்கு ரெட் கார்பெட்!
சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் தீங்கு விளைவிப்பவையே. இதனால் உடலில் கொழுப்பு  அதிகரித்து நம் மூளையின் செயல்பாட்டை வெகுவாகப் பாதிக்கிறது. அல்சைமர் எனப்படும் நாள்பட்ட நரம்பியல் நோயை ஏற்படுத்தி நினைவு மற்றும் பிற முக்கியமான மனச் செயல்பாடுகளை அழிக்கிறது. இதேபோல் மற்றவர்களைக் காட்டிலும், வரம்புமீறிக் குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மனச்சோர்வு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் அதிகம். மது மற்றும் போதை பானங்கள் உணவுகளின் மூலம் மூளைக்குச் செல்லும் ஆற்றலைத் தடுக்கின்றன.

சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்
முழு தானிய வகைகள்: இவை தேவையான ஆற்றலை அளித்து எப்போதும் உற்சாகமான மனநிலையை ஏற்படுத்துகின்றன.
மீன் உணவுகள்: இவற்றில் நம் உடலுக்கு அவசியம் தேவைப்படும் கொழுப்பு அமிலங்கள் நிறைய இருக்கின்றன.
வேகவைத்த தக்காளி: தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளுக்கு (Free Radicals) எதிராகச் செயல்பட்டு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து காக்கிறது.
புரோக்கோலி: இதிலுள்ள வைட்டமின் கே அறிவாற்றலை மேம்படுத்துகிறது.
செவ்வாய்: சரியாகத் திட்டமிட்டு செயல்படப் பழகுங்கள்!
நம்மில் பெரும்பாலானோர் போனில் பேசிக்கொண்டே மடிக்கணினியில் வேலை செய்வது, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் செய்வது என்று பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைப்போம். ஆனால், உண்மையில் இப்படிச் செய்வது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். செய்யும் வேலைகளில் ஒன்றில்கூட முழு ஈடுபாடு இருக்காது. இது கவனப்பற்றாக்குறை போன்ற குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, ஒரு வேலையை முழுதாக முடித்துவிட்டு அடுத்த வேலையைச் செய்வது நலம். அதற்கு நம் அன்றாட வேலைகளைச் சீர்ப்படுத்தித் திட்டமிடல் மிகவும் அவசியம். வாரத்தில் ஒருநாளை இதற்கு ஒதுக்கிக்கொண்டு அந்த வாரத்திற்கான வேலையைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.
புதன்: வெளியுலகத் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
ஒரே வேலையைத் தினமும் கடிவாளம் போட்ட குதிரையைப்போலச் செய்யாமல், அவ்வப்போது சில மாறுதல்கள் மற்றும் கேளிக்கைகளுக்கு இடம் அளியுங்கள். நண்பர்களுடன் வெளியே செல்வது, சினிமா, பீச் போன்ற இடங்களுக்குப் போவது வாரத்திற்கு ஒருமுறை மிகவும் அவசியம். இதனால் பதற்றம், மனச்சோர்வு, தனிமையில் அவ்வப்போது தோன்றும் தன்னம்பிக்கையற்ற எண்ணங்கள் போன்றவை  கட்டுக்குள் வரும்.
வியாழன்: மூளைப் பயிற்சி செய்யலாம் வாங்க!
உடற்பயிற்சியின் நன்மை உடலோடு நின்று விடுவதில்லை. மூளை வரை ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்திப் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. வாரத்திற்கு நான்கு முறை 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் டிமென்ஷியாவில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். உடல் உறுதி அற்றவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, நடனம், டேபிள் டென்னிஸ், நீச்சல், நடைப்பயிற்சி போன்ற விஷயங்களை மூளைக்கான பயிற்சிகளாகவும் செய்து கொள்ளுங்கள்.
வெள்ளி: புதியதோர் முயற்சி செய்வோம்! 
தினமும் ஒரு புதிய முயற்சியை அல்லது புதிய விஷயத்தைச் செய்வதால் மூளை சுறுசுறுப்படையும். உதாரணமாக, வேர்ட் டாக்குமென்ட்டில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஃபான்ட்டை மாற்றினால் கூடப் போதுமானது. புதிய விஷயங்களைச் செய்து உங்கள் மூளைக்குச் சவால்கள் பல வைத்தால் தான், அது எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
சனி: விளையாடலாம் வா!
செஸ், சீட்டுக்கட்டு, பரமபதம் என்று உங்களுக்குப் பிடித்த எந்த விளையாட்டையும் வாரந்தோறும் விளையாடுவதால், டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்புகள் 15 சதவிகிதம் வரை குறைகிறது. விளையாடும்போது அடுத்து என்ன என்று மூளையைச் செயல்பாட்டிலேயே வைத்திருக்கும். நம் மூளையானது கற்றுக்கொள்ளும் இயந்திரம். அதற்கு அலாவுதீன் பூதம்போல வேலை கொடுத்துக்கொண்டே இருத்தல் நலம்.
ஞாயிறு: சிறு தூக்கம் அவசியம்!
இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அன்று முழுவதும் உடலில் ஏறிவிட்ட நச்சுத்தன்மையை வெளியேற்றவும் சீரான முறையில் ஹார்மோன்கள் சுரக்கவும் இந்த உறக்கம் அவசியம்.
இதை உங்களால் அன்றாடம் செய்ய முடியவில்லை எனும்போது ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் குட்டித் தூக்கம் போட்டுக்கொள்வது நன்மை பயக்கும். நீங்கள் ஆறு நிமிடம் கண்ணை மூடி உறங்கினால்கூட அது உங்கள் மூளைக்குப் புத்துணர்ச்சியை அளிப்பதை உணர்வீர்கள்.


மூளையைப் பாதிக்கும் நான்கு பழக்கவழக்கங்கள்
அதிகச் சுவையூட்டப்பட்ட உணவு: வாய்க்கு ருசியாக உப்பு, காரம் அதிகம் சேர்த்துக்கொள்வது மனித இயல்பு. இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். அறிவாற்றல் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அந்த எக்ஸ்ட்ரா லெக் பீஸ்:
அதிகமான கலோரிகள் கொண்ட உணவு வகைகளால் உடல் பருமன் மட்டும் அதிகரிப்பதில்லை. மூளையின் செயல்பாட்டைச் சீரழிப்பதிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. 
போதைப் பழக்கம்: புகையிலை பழக்கத்தால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால், மறதி மட்டுமின்றி பக்கவாதம் வரவும் 50 சதவிகிதம் வாய்ப்பு உண்டு.
அதீத சத்தம்: அதிகளவில் காதுகளுக்கு ஒலியைக் கொடுப்பதைத் தவிருங்கள். ஹெட்செட் அணிந்து பாடல்களைச் சத்தமாகக் கேட்பதால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். கேட்கும் திறனை இழப்பதாலும் டிமென்ஷியா ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

Advertisements
%d bloggers like this: