Advertisements

நம்பிக்கை அளிக்கும் புதிய சிகிச்சைகள் !

நாளுக்கு நாள் பெயர் தெரியாத பல நோய்களும், பிரச்னைகளும் மனித இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இது கவலைக்குரியதுதான் என்றாலும், எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறனையும் மனித இனம் கற்றுக் கொண்டுவிடுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ‘வெற்றியாளர்கள் தங்களது திறனை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாக பிரச்னையைப் பார்க்கிறார்கள். தோல்வியாளர்களோ பிரச்னைகளை ஆபத்தாக நினைக்கிறார்கள்’ என்கிற பொன்மொழியைப் போல, நாம் வாய்ப்புகளை மட்டுமே பார்ப்போம்…இதோ நம்பிக்கை அளிக்கும் மூன்று புதிய சிகிச்சைகள் பற்றி நிபுணர்கள் இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Water Birth Treatment

‘‘சுகப்பிரசவம், சிசேரியன், எதுவாக இருந்தாலும் பெண்ணுக்கு புனர்ஜென்மம்தான். மருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில் கூட பெண்கள் குழந்தைகளை சுகப்பிரசவமாக நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், மருத்துவத்துறையில் தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது ஆச்சரியம்தான். இதற்குக் காரணம் இன்றைய இளம் தாய்மார்கள் கர்ப்பம் உறுதியானதுமே பயப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள். வலியில்லாத சிசேரியன் பிரசவத்தை சில தாய்மார்கள் விரும்புவதாலும், நாள் நட்சத்திரம் பார்த்து குழந்தை பிறக்க வேண்டும் என்று அவர்களின் குடும்ப பெரியவர்கள் நினைப்பதாலும் சிசேரியன் பிரசவங்கள் பெருகிவிட்டன.

இருந்தாலும், தற்போது இளம் தாய்மார்களிடத்தில் இயற்கையான பிரசவத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். வலியில்லாமல் இயற்கை பிரசவத்துக்காக இயற்கைமுறை பிரசவ மையங்கள் மற்றும் ‘வாட்டர் பர்த்’ எனப்படும் தண்ணீர்த் தொட்டிக்குள் கர்ப்பிணியை பிரசவிக்கச் செய்யும் முறை போன்றவை பெருநகரங்களில் பிரபலமடைந்து வருகிறது’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா கௌதம். வாட்டர் பர்த் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்… ‘‘வலி நிவாரணிகள், மயக்க மருந்து என எதுவும் தேவையில்லை, இயற்கையான முறையில் வலியின்றி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு ஏற்ற சிகிச்சை இது.

வாட்டர் பர்த் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் கர்ப்பமான மூன்றாவது மாதத்தில் இருந்தே கர்ப்பிணியை மனதளவில் தயார் செய்யும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும். மேலும் 5-வது மாதத்திலிருந்து தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பவர்களால் வாட்டர் பர்த் முறை பயன் தராது. தொடர்ச்சியான உடற்பயிற்சி எடுத்துக் கொண்டு வரும்போதுதான் சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணியின் உடல் தயாராகும். முதல் குழந்தை சிசேரியனாக பெற்றுக் கொண்டிருந்தாலும் ‘வாட்டர் பர்த்’ மூலம் இரண்டாம் குழந்தையை சுகப்பிரசவமாகப் பெற்றெடுக்க முடியும்.’’

‘வாட்டர் பர்த்’ சிகிச்சை எப்படி நடக்கும்?

“‘வாட்டர் பர்த்’ முறையால் கர்ப்பிணி களுக்கு வலி குறையும், பிரசவமும் எளிதாகும். வெளிநாடுகளில் சாதாரணமாக நடக்கும் இந்த முறை தற்போது நம்நாட்டில் பரவி வருகிறது. இந்தப் பிரசவ முறையில், 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ள நீரில் கர்ப்பிணியை அமரச் செய்வோம். இதில், அவர் வலி குறைவாக உணர்வார். இளம் சூடான நீரில் அமர்வது வேதனையைக் குறைப்பது மட்டுமின்றி இதமாகவும் இருக்கும்.

சுடுநீர் உடலின் கீழ்ர்பாகம் அமிழ்ந்துள்ளதன் காரணமாக கருப்பையின் ரத்த ஓட்டம் சுறுசுறுப்படைந்து கருப்பையின் தசை விரிவாக்கம் அடையும். இதனால் குழந்தைக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நீரில் அமிழ்ந்திருக்கும்போது தாயின் மன அழுத்தம் குறைந்து பதற்றமும் குறையும். இதன் விளைவாக பிரசவத்தில் மட்டுமே அமைதியாக கர்ப்பிணியால் கவனம் செலுத்த முடியும். பிரசவம் குறித்து அச்சம் குறைவதால் மருத்துவர் சொல்லும் விதங்களில் எல்லாம் கர்ப்பிணியால் உடம்பை இயக்க முடியும்.

இதனால் தண்ணீருக்குள் பிரசவம் எளிதில் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டாகிறது. பொதுவாக, குழந்தை பெற்றுக் கொள்ள 4 முதல் 5 மணி நேரமாகிறது. ஆனால், தண்ணீருக்குள் நடக்கும் பிரசவம் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. தண்ணீருக்குள் நடக்கும் பிரசவத்தால் பிறப்புறுப்பின் திசுக்கள் மென்மையாகவும், விரிந்து கொடுப்பதாலும் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதில்லை. இதனால் பிரசவத்துக்குப் பின் தையல் போட வேண்டிய அவசியமும் இல்லை’’ என்கிறார்.

வாட்டர் பர்த் முறையில் பிரச்னைகள் எதுவும் இல்லையா?

‘‘வலிப்பு, மூச்சுத்திணறல் போன்ற நோயாளிகளை அனுமதிப்பதில்லை. சிலருடைய தொப்புள்கொடி நீளம் குறைவாகவும், மெலிதாகவும் இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது சரி வராது. மேலும், பிரசவிக்கும் பெண்ணுக்கு தைரியம் கொடுத்து, ஊக்கமளிப்பவர்கள் மட்டுமே உடன் இருக்க வேண்டும். முக்கியமாக, கர்ப்பிணியின் கணவர்
உடனிருப்பது நல்லது’’ என்கிறார்.

Singing Bowls

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் ஒலியை, நோயை குணப்படுத்துவதற்கான கருவியாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்துக்களின் மந்திரங்கள், அமெரிக்கர்களின் மெல்லிசை அல்லது பிதாகரசின் இடைவெளி அதிர்வெண்கள் என எதுவாக இருந்தாலும், இந்த நுட்பங்கள் அனைத்தும் நம் மனதை சமநிலைப்படுத்தும் ஒரே நோக்கத்துக்கானவை. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் சிகிச்சைதான் Singing Bowls.

இந்த சிகிச்சை பற்றி ஆய்வாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நம்முடைய மூளையில் பீட்டா, ஆல்பா, தீட்டா, டெல்டா மற்றும் காமா என 5 வகையான அதிர்வெண்கள் இருக்கின்றன. ரிதம் மற்றும் அலைவரிசையைப் பயன்படுத்துவதன் மூலம், ஒலி நம் மூளைக்குள் நுழைந்து, பீட்டா எனப்படும் சாதாரண விழிப்புணர்விலிருந்து ஆல்பாவுக்கு (தளர்வு மனநிலைக்கு) மாற முடியும். மேலும் தீட்டா எனப்படும் தியான நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் டெல்டா எனப்படும் உட்புற சிகிச்சையை நிகழ்த்த முடியும்.

தியானத்தின்போது செய்யப்படும் மூச்சுப்பயிற்சியில் இந்த அடிப்படை கருத்துதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திபெத்தியர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். கிண்ணங்களிலிருந்து எழும் ஒலி அலைகள் நோயுற்ற உடல், மனது மற்றும் ஆன்மாவின் அதிர்வெண்களை மீட்டெடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. மன அழுத்த கோளாறுகள், வலி மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை குணப்படுத்த முடிகிறது என்பதை இப்போது விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

Trigger Point Therapy

‘‘கி.பி 1843-ல் ப்ரோரிப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ட்ரிக்கர் பாயின்ட் தெரபி சிகிச்சை முறை. வலியால் துடித்த ஒருவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு தசையாக அழுத்திப் பார்த்துக் கொண்டே வந்தபோது ஒரு குறிப்பிட்ட புள்ளியை அழுத்தும்போது வலி குறைவதைக் கண்டு மேலும், மேலும் அதே இடத்தை மென்மையாக அழுத்த, அழுத்த வலி குறைந்துவிட்டதை வைத்தே இந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது’’ என்கிறார் அக்குபங்சர் மருத்துவரான பரிமளசெல்வி.

டிரிக்கர் பாயின்ட் தெரபி என்றால் என்ன?

‘‘தசை முடிச்சுக்களை ட்ரிக்கர் பாயின்ட் என்று சொல்கிறோம். தசைகளின் திசுப்படலத்தின் சுருக்கம்தான் நாளடைவில் முடிச்சுகளாக மாறி வலியை ஏற்படுத்துகின்றன. இந்த புள்ளிகளை மெதுவாக அழுத்தும்போது வலி குறையத் தொடங்கும். ஒரே பக்கமாக அமர்ந்திருப்பது, தசைகளுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பது, எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள், தொற்றுகள் மற்றும் நரம்பு வலி போன்றவற்றால் தசைநார்களில் அழுத்தம் ஏற்படுகிறது.

இந்த அழுத்தங்களே நாளடைவில் சுருங்கி முடிச்சுகளாக மாறிவிடுகின்றன. இந்த முடிச்சுகள் பாதிக்கப்பட்ட தசையின் மீதோ அல்லது உடலின் மற்றொரு பகுதியிலோ வலியை ஏற்படுத்தலாம். இந்த தசை முடிச்சுகளை நாம் தொட்டுப்பார்த்து அழுத்தும்போதுதான் உணர முடியும். மிதமான வலி, அதிகமான வலி, பரவும் வலி, எரிச்சலுடன் வலி அல்லது எரிச்சல் மற்றும் மரத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இந்த தசை முடிச்சுகளால் ஏற்படுகின்றன.’’

ட்ரிக்கர் பாயின்ட் தெரபி யாருக்கெல்லாம் தேவைப்படும்?

‘‘நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் இப்போது அதிகம். தசை முடிச்சுகள் ஏற்பட்டுள்ள தசைப்பகுதி சாதாரண தசையைவிட பலவீனமடைவதால், அவற்றால் முழுமையாக இயங்க முடியாது. அந்த நேரத்தில் இவற்றின் செயல்பாட்டை சரிகட்ட மற்ற தசைகள் தானாகவே இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. நன்றாக இருக்கும் தசைகளுக்கு இதனால் வேலைப்பளு அதிகமாகும்போது நாளடைவில் அவற்றிலும் தசை முடிச்சுகள் தோன்ற ஆரம்பித்துவிடும். எனவே, தசை முடிச்சுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.’’

யாரெல்லாம் இந்த சிகிச்சையை அளிக்க முடியும்?

‘‘மசாஜ் தெரபிஸ்ட், உடற்பயிற்சி வல்லுனர்கள், பிஸியோதெரபிஸ்ட் போன்றவர்கள் இந்த சிகிச்சை அளிக்க தகுதியானவர்கள். இவர்கள் மட்டுமல்லாமல் லேசர் மற்றும் அக்குபங்சர் தெரபிஸ்ட்டுகளும் டிரிக்கர் பாயின்ட் தெரபி சிகிச்சை அளிக்கலாம். முறையாகப் பயின்ற, அனுபவம் மிக்கவர்களிடம் சிகிச்சை மேற்கொண்டால் தீர்வு நிச்சயம்!’’

Advertisements
%d bloggers like this: