Advertisements

ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்’ என்கிறார்களே.. அப்படி என்றால் என்ன?

அவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்….” என்று சதா சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சொல்வது வழக்கம். உண்மையில் ஏழாம்  பொருத்தம் நன்றாய் இருந்தால் மிகவும் அன்யோன்யமாய் இருப்பார்கள். பின் எப்படி இந்த சொற்றொடர் வழக்கில் வந்தது என்பதைக் காண்போம். ஒவ்வொருவரின்  ஜாதகத்திலும் ஏழாம் இடம் என்பது ஒரு ஆணுக்கு அவனது மனைவியையும், பெண்ணுக்கு அவளது கணவனையும்

குறிக்கும் என்பதை ஜோதிடர் சொல்லக்  கேட்டிருப்போம். ஏழாம் இடம் என்பது வாழ்க்கைத் துணைவரை மட்டுமல்லாது நண்பர்கள், பழகும் தன்மை, வெளிவட்டாரத் தொடர்பு என பல்வகைப்பட்ட  இணைவுகளைக் குறிக்கும். லக்னம் என்பது ஜாதகரின் குணாதிசயத்தையும், ஏழாம் இடம் என்பது அவனது தொடர்பாளர்களின் குணங்களையும் குறிக்கும்.
லக்னம் என்பது 0 டிகிரி என்றால் ஏழாம் இடம் என்பது அதன் நேரெதிர் துருவமான 180வது டிகிரி ஆகும். ஒரு காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும்  ஒன்றோடொன்று ஈர்ப்பு கொள்வது இயற்பியல் விதி. ஜோதிட ரீதியாக சற்று விளக்கமாகவே பார்ப்போம்… மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். அதன் ஏழாவது  ராசியான துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். செவ்வாய் வீரமுடைய ஆண்மைத்தன்மை உடைய கிரகம். சுக்கிரனோ அழகு நிறைந்த பெண்மைத்தன்மை  நிறைந்திருக்கும் கிரகம். இவர்கள் இருவரும் அடிப்படையில் நேரெதிரான குணங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் ஒருவர்மீது ஒருவர் ஈர்ப்பு உள்ளவர்கள்.  இதே கருத்து சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷபத்திற்கும் அதன் ஏழாமிடமான விருச்சிகத்திற்கும் பொருந்தும்.
அதேபோல் மிதுன, கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன். அவற்றின் ஏழாம் ராசிகளான தனுசு, மீனத்திற்கு அதிபதி குரு. இயற்கையில் குரு நீதி, நேர்மை, நியாயம்  என்று நேரான வழியில் பயணிப்பவர். எதற்காகவும் தன் கொள்கையைத் தளர்த்திக் கொள்ளாதவர். புதன் இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும்  தகுதி படைத்தவர். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் எதற்கெடுத்தாலும் கௌரவம் பார்ப்பார்கள். கௌரவத்திற்குக் குறைவான செயலை  ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அதேநேரத்தில் அதற்கு ஏழாமிடமான கும்ப இராசிக்கு அதிபதி சனி. சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள் கௌரவம் என்பதை  சற்றும் எதிர்பாராது காரியத்தில் மட்டும் கண்ணாய் இருப்பார்கள்.
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் அமைதி, அடக்கம், சுறுசுறுப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம்  அளிப்பவர்கள். கடகத்திற்கு ஏழு ஆகிய மகரத்திற்கு அதிபதி சனி என்பதால் சோம்பல், அழுக்காய் இருத்தல் என நேரெதிர் குணங்களை நிரம்பப் பெற்றவர்கள்.  திருமணத்திற்கு பத்து பொருத்தம் பார்க்கும்போது ஏழாவதாக வருகின்ற ராசி அதிபதி பொருத்தம் என்பதும் இந்த அடிப்படையில் வகுக்கப்பட்டதே ஆகும். ராசி  அதிபதி பொருத்தம் நன்றாக இருந்தால் ரஜ்ஜூ உட்பட வேறெந்த பொருத்தமும் பார்க்க தேவையில்லை என்பது முக்கியமான ஜோதிட விதி. ராசிகளும் அவற்றின்  ஏழாம் இராசிகளும் பின்வருமாறு : மேஷம் & துலாம் (செவ்வாய் – சுக்கிரன்); ரிஷபம் – விருச்சிகம் (சுக்கிரன் – செவ்வாய்); மிதுனம் – தனுசு (புதன் –  குரு);  கடகம் – மகரம் (சந்திரன் – சனி); சிம்மம் –  கும்பம் (சூரியன் – சனி); கன்னி – மீனம்  (புதன் – குரு).
மேற்கண்டவாறு ராசிகளைக் கொண்ட தம்பதிகள் தங்களுக்குள் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்குள்  அன்யோன்யம் அதிகமாக இருக்கும். பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும் பிறரை விட அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். “அவங்க  ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்….” என்பதை இனி ஆதர்ச தம்பதியரைப் பார்த்தும் சொல்லலாம் அல்லவா.!

Advertisements
%d bloggers like this: