Advertisements

ஆபரேஷன் ஆர்.கே.நகர் – அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்!

ஆர்.கே. நகரைச் சுற்றிவிட்டு அலுவலகம் வந்தார் கழுகார். ‘‘ ‘குறைந்த வாக்கு வித்தியாசமாக இருந்தாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்’ என்பது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி இட்டுள்ள கட்டளை’’ என்ற பீடிகையுடன் செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.
‘‘என்ன செய்கிறது அ.தி.மு.க?’’

‘‘தினகரனை அ.தி.மு.க குறிவைத்துள்ளது. ‘தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி, மஃப்டி போலீஸை ஏவி, தினகரன் கோஷ்டியில் ஆக்டிவான பிரமுகர்களை இரவோடு இரவாகப் பிடித்துப் பொய் கேஸ் போடுகிறார்’ என்று சொல்கிறார்கள். ‘உளவுத்துறை ஐ.ஜி., சென்னை போலீஸ் கமிஷனர், இணை போலீஸ் கமிஷனர் ஆகிய மூவரையும் மாற்றவேண்டும்’ என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தினகரன் புகார் கொடுத்திருப்பது இதனால்தானாம்.’’
‘‘இடைத்தேர்தல் என்றாலே பணப்பட்டு வாடாதானே… அது தொடங்கிவிட்டதா?’’
‘‘தெருத்தெருவாகப் பிரசார ஊர்வலம் நடக்கிறது. அதில், அதிகமாகப் பெண்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தலைக்கு 300 ரூபாயும், சாப்பாடும் தரப்படுகின்றன. பிரியாணி மாஸ்டர்களை ஆம்பூரிலிருந்து கூட்டிவந்து இறக்கியிருக்கிறார்கள். வேட்பாளர் வரும்போது மாடியிலிருந்து பூ தூவ, வாசலில் கோலம் போட, பின்னால் அணிவகுத்து நோட்டீஸ் தர… என ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனிக் கட்டணம். ஆண்களுக்குத் தேவையான தனி கவனிப்பும் நடக்கிறது. இதில், ஆளுங்கட்சியினர் மும்முரமாக இருக்கிறார்கள். அமைச்சர்கள் மேற்பார்வையில் பட்டுவாடா நடக்கிறது. கடந்த முறை ஒவ்வோர் ஓட்டுக்கும் நான்காயிரம் ரூபாய் வரை தந்ததாகச் சொல்லப்பட்டது. பணக்கட்டுகளைப் பிரிப்பதற்கு முன்பு பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று தினகரன் அணியினரும்,  தி.மு.க-வினரும் கண்கொத்திப் பாம்பாக உள்ளார்கள்.”
‘‘முன்னோட்டம் தொடங்கிவிட்டார்களா?’’

‘‘வைத்தியநாதன் பாலம் அருகே சில தெருக்களுக்குப் போயிருந்தேன். ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் குறிப்பிட்ட வீட்டுப்பெண்களுக்கு செல்போனில் அழைப்பு போகிறது. ‘அமைச்சர் வருகிறார்… உடனே வாருங்கள்’ என்று சொல்லி அழைக்கிறார்கள். தெருவில் உள்ள ஏதாவது ஒரு வீட்டுக்கு அரை மணி நேரம் வந்துபோகும்படி, பெண் வாக்காளர்களிடம் ஆளும் கட்சிப் பெண் நிர்வாகிகள் பாசத்துடன் பேசுகிறார்கள். தெருவுக்குள் இருக்கும் பெரிய வீடு, சிறிய மண்டபங்கள்… இங்கெல்லாம் தாய்க்குலங்கள் கையில் குழந்தையுடன் வந்தவண்ணம் இருந்தார்கள். ‘உள்ளே போய் உட்காருங்கள்’ என்று சொல்லி, நிர்வாகிகள் அவர்களை வரவேற்கிறார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை. சாரி சாரியாகப் பெண்கள் வருகிறார்கள். வருகிற பெண்களுக்கு முதலில், ‘வெல்கம் ட்ரிங்க்’ தரப்படுகிறது. கூல் ட்ரிங்க்ஸ், காபி, டீ… எதுவானாலும் கேட்டது தரப்படுகிறது. கொஞ்ச நேரத்தில், பெயர் தெரியாத முக்கியப் பிரமுகர் காரில் வருகிறார். பெண்கள் மத்தியில் பேசுகிறார். பெண்கள் கைகளில் ஏதோ திணிக்கப்படுகிறது. அவர்கள் சந்தோஷத்துடன் போகிறார்கள். ‘கடைசித் தவணையின்போது இந்தப் பகுதியில் தேர்தல் பணி செய்யும் அமைச்சர் வந்து உங்களைச் சந்திப்பார்’ என்று சொல்லி அனுப்புகிறார்கள்.’’
‘‘ஏதோ என்றால்… அது என்ன?’’
‘‘அட்வான்ஸாகத் தரப்படுவது 500 ரூபாய் நோட்டு. ‘இது முதல் ரவுண்டுதான். அடுத்தடுத்த ரவுண்டுகள் வரும்’ என்று உறுதி கொடுக்கிறார்கள். ஆளும் கட்சியினரின் இந்தத் திட்டம் புதுவிதமாகத் தெரிகிறது. பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு நாளும் தவணை முறையில் பட்டுவாடா நடக்கிறது. இதைத்தான் எதிர்க்கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்கிறார்கள்.’’
‘‘பகுதி பகுதியாகக் கொடுத்துவிட்டுக் கடைசி நேரத்தில் அமைதியாக இருக்கத் திட்டமா?’’
‘‘ஆமாம்! கடந்த முறை நாலாயிரம் ரூபாயை வாக்காளர்களிடம் கொடுத்த கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள், தற்போது தினகரன் கோஷ்டியில் இருக்கிறார்களாம். அதுவும் ஆளும்கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இப்போது தினகரன் பக்கம் இருக்கும் அந்த நிர்வாகிகள், முன்பு பணம் வாங்கிய தாய்க் குலங்களை வீட்டுக்கு வீடு போய் சந்திக்கிறார்கள். ‘பழசை நினைத்துப்பாருங்கள். போனமுறை தேர்தல் தள்ளிப்போனதுபோல, இந்த முறை சின்னமும் தள்ளிப்போயிருக்கிறது. தொப்பிக்குப் பதில் குக்கர். அவ்வளவுதான். வாங்கின பணத்துக்கு ஓட்டுப்போடுங்கள்’ என்று உருக்கமாகப் பேசுகிறார்கள். இந்தத் தகவல் மதுசூதனன் ஆள்களுக்கு கிலியைக் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே, அமைச்சர்களுக்கு அதிரடி அசைன்மென்ட் தந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.’’
‘‘என்ன அது?’’
‘‘ஆர்.கே. நகர் தொகுதியில் மொத்தம் 2,28,000 வாக்குகள் உள்ளன. ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அதிகபட்சம் 80 சதவிகிதம் ஓட்டுகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறார் எடப்பாடி. தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் சராசரி வாக்குப்பதிவு இதுதான். ‘ஆபரேஷன் ஆர்.கே. நகர்’ என எடப்பாடி தன் அமைச்சர்களுக்குக் கொடுத்திருக்கும் டார்கெட், ‘அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்கு குறைந்தபட்சம் ஒண்ணரை லட்சம் வாக்குகள் விழ வேண்டும்’ என்பதுதான். எடப்பாடியோடு சேர்த்து  தமிழக அமைச்சரவையில் 33 பேர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரின் தலைக்கும் 5 ஆயிரம் வாக்காளர்களைப் பிரித்து ஒப்படைத்திருக்கிறார். இப்படி ஏரியா பிரித்துக்கொள்ளும் இவர்களின் தலைமையின்கீழ் பல ‘டீம்’கள் இயங்கும். இந்த 5 ஆயிரம் பேருக்கான கவனிப்புகளை கனகச்சிதமாகச் செய்யவேண்டியது தான் அமைச்சர்களின் வேலை. சிறப்பாகச் செயல்படும் அமைச்சருக்குப் பரிசுகள் உண்டாம்.’’

‘‘இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியின் ‘ரிசர்வ் பாங்க்’ யார்?’’
‘‘வேறு யார்? எடப்பாடி பழனிசாமிதான். அனைத்தும் அவரது மேற்பார்வையில்தான் நடப்பதாகச் சொல்கிறார்கள். தேர்தல் செலவுகள் பற்றி அ.தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்திலும் சொன்னாராம். ‘நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க எம்.பி-க்கள் எப்படிச் செயல்பட வேண்டும்’ என்பதைச் சொல்வதற்காக டிசம்பர் 9-ம் தேதியன்று எம்.பி-க்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது, வட மாவட்ட எம்.பி. ஒருவரும், தென் மாவட்ட எம்.பி ஒருவரும் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளனர். தங்களுக்கான கவனிப்புகளில் பாக்கி இருப்பதையே அவர்கள் பேச்சில் குறிப்பிட்டார்கள். இதில் எடப்பாடி கோபமாகிவிட்டாராம். ‘அதையெல்லாம் சேர்த்துதான் எம்.எல்.ஏ-க்களுக்குக் கவனிப்பு நடந்தது. இடைத்தேர்தல் செலவு வேறு இருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் வரலாம். அதையெல்லாம் பார்க்க வேண்டும். உங்களுக்கானதைப் பிறகு பார்க்கலாம்’ என்று முகத்தில் அடித்தாற்போல எடப்பாடி பேசியதாக எம்.பி-க்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.’’
‘‘ஆர்.கே. நகரில் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?’’
‘‘வெளியூர் வாகனங்களை மட்டும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். வெளிமாநிலங்களைச் சேர்ந்த கார்கள் பிடிக்கப்பட்டு, தொகுதிக்குள் உள்ள கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பிரசாரம் செய்ய வருகிறவர்கள் வேறு டெக்னிக்குகளைக் கையாள்கிறார்கள். சொந்த வாகனங்களில் செல்லாமல் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சியில்தான் செல்கிறார்கள். இப்போது ஆர்.கே. நகருக்குள் வரும் கால் டாக்சிகளின் நம்பர்கள், அந்தக் கார்கள் யாருக்குச் சொந்தமானவை, எங்கே போகின்றன, அவற்றில் போகிறவர்கள் யார் என ஆரம்பித்து எல்லா தகவல்களையும் தேர்தல் ஆணையம் பதிவுசெய்கிறது. பிரசாரத்துக்குப் பூக்கள் தூவும் பெண்கள், ஆரத்தி எடுக்கும் பெண்கள், ஊர்வலத்துக்குப் போகும் ஆட்கள் என அனைத்தையும் தேர்தல் ஆணையம் வீடியோவில் பதிவுசெய்துவருகிறது.’’
‘‘பதிவு செய்வார்கள், நடவடிக்கை எடுப்பார்களா?’’ என்ற நம் கேள்விக்குப் பதில் சொல்லாமல், சிரித்தபடி பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: