Advertisements

ஆர்.கே.நகரில் பண மழை; வாக்காளர்கள், ‘குஷி’

ஆர்.கே.நகரில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை தரப்பினர், பணத்தை வாரி இறைப்பதால், வாக்காளர்கள், ‘குஷி’ அடைந்துள்ளனர்.

ஆர்.கே.நகரில், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், மதுசூதனன்; தி.மு.க., சார்பில், மருதுகணேஷ் போட்டியிடுகின்றனர். சுயேச்சையாக, தினகரன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருப்பதால், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, வேட்பாளர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில், வேட்பாளர் மீது, பூ துாவுவதற்கு, 200 ரூபாய்; சின்னத்தை குறிக்கும் கோலம் போடுவதற்கு, 300 ரூபாய் என, வாக்காளர்களுக்கு, கட்சிகள் மற்றும் சுயேச்சை தரப்பில், பணம் வாரி வழங்கப்படுகிறது.
வேட்பாளரை வரவேற்று, மகளிர் சுய உதவி பெண்கள் வரிசையாக நின்று, பூரண கும்ப மரியாதை தருகின்றனர். அவர்களுக்கு, தலா, 150 ரூபாயும்; ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, 500 ரூபாய் வரையும், கட்சியினர் வழங்குகின்றனர்.

ஆர்.கே.நகரில், மொத்தம், 256 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும், கட்சிகள் மற்றும் சுயேச்சை தரப்பில், ஆண், பெண் என, 200 – 300 வாக்காளர்கள் அடங்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவர்கள், தினமும், தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில், வேட்பாளருக்கு ஆதரவாக, பேரணியாக சென்று ஓட்டு சேகரிக்கின்றனர். இதற்காக, தலா, ஒருவருக்கு, 200 ரூபாய் மற்றும் மூன்று வேலை சாப்பாடு வழங்கப்படுகிறது.
இது தவிர, ஒவ்வொரு ஓட்டுக்கும், ஆயிரக்கணக்கில், பணப் பட்டுவாடாவும் நடக்கிறது. இதனால், ஆர்.கே.நகரில் கொட்டும் பண மழையால் நனைந்துள்ள வாக்காளர்கள், குஷி அடைந்து, வேலைக்கு கூட செல்லாமல், வீட்டில் உற்சாகமாக உள்ளனர்.

‘தேர்தல் ரத்தாகும்’: வதந்தி பரப்பும் கும்பல்

‘ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாக உள்ளது’ என்று, ஒரு கும்பல், பொது மக்களிடம் வதந்தி பரப்பி வரும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை தோற்கடிக்கும் வகையில், அக்கட்சியின் ஓட்டுகளை பிரிப்பதற்காக, சுயேச்சையாக போட்டியிடும் தினகரன் தரப்பு,

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்கிறது. அதேசமயம், பணம் வாங்காமல் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடம், பள்ளி மாணவர்கள் வாயிலாக, தேர்தல் கமிஷன், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறி, சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து, வாக்காளர்கள் கூறியதாவது: தி.மு.க., – அ.தி.மு.க., – பா.ஜ.,வுக்கு இணையாக, சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் பிரசாரம் செய்கின்றன. அவர்கள் பிரசாரம் முடித்து சென்றதும், வ.உ.சி.நகர், அன்னை சத்யா நகர் போன்ற பகுதிகளுக்கு, சிலர் வருகின்றனர். அவர்கள், ‘தேர்தல் ரத்தாக உள்ளது. இதுவரை ஓட்டு போட்டதால், உங்களுக்கு என்ன கிடைத்தது; பணம் தந்தால் வாங்கிக் கொள்ளவும்; ஆனால், யாருக்கும் ஓட்டு போடாமல், தேர்தலை புறக்கணியுங்கள்’ என, கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisements
%d bloggers like this: