Advertisements

போட்டி போட்டு பணம் வினியோகம்

ஆர்.கே.நகரில் தேர்தல் கமிஷன் தவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, கன ஜோராக நடந்து வருகிறது. பட்டுவாடா செய்வோருக்கு, பெண்கள் ஆதரவு அமோகமாக இருப்பதால், தடுக்க முடியாமல், போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் பரிதவித்து வருகின்றனர்.

 போட்டி ,போட்டு, பணம், வினியோகம், ஆர்.கே.நகரில், தேர்தல் கமிஷன், தவிப்பு

ஜெ., மறைவால், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வில், சசிகலா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்தார். ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. அதனால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மகிழ்ச்சி

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, வரும், 21ல், தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை, தினகரன் சுயேச்சையாக போட்டியிடுவதால், அவரின் ஆதரவாளர்கள், ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.முதல் கட்டமாக, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலையை, நேற்று முன்தினம் இரவு துவக்கியது.
அவர்கள் ஓட்டுக்கு, 6,000 ரூபாய் வரை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, தினகரன் அணியினர் கூடுதலாக, ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வழங்க துவங்கினர்.இரு தரப்பினரும் பணப்பட்டுவாடா செய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தால், பணம் கொடுத்தவர்களை, பெண்கள் ஓடி வந்து மீட்டுச் சென்றனர். பணம் கொடுத்தவர், தங்கள் வீட்டில் விருந்துக்கு வந்திருப்பதாக, பெண்கள் வாய் கூசாமல் பொய் கூறினர்.
இது தவிர, பணம் கொடுப்பது தொடர்பாக, அ.தி.மு.க.,வினருக்கும், தினகரன் ஆதரவாளர் களுக்கும் இடையே, ஆங்காங்கே மோதலும் நடந்து வருகிறது. தி.மு.க., தரப்பில், இன்னும் பணப்பட்டுவாடா துவக்கப்பட வில்லை. அவர்கள், தினகரன் தரப்பினருடன் இணைந்து, பணம் கொடுக்கும் அ.தி.மு.க.,வினரை பிடித்து போலீசில் ஒப்படைக்கின்றனர்.

பதற்றம்

பண பட்டுவாடாவுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருப்பதால், போலீசார் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.தொகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும், திருவிழாபோல் கூட்டம் நிரம்பி வழிகிறது. அனைத்து தெருக்களிலும், அ.தி.மு.க., – தி.மு.க., – தினகரன் ஆதரவாளர்கள், நாற்காலி போட்டு அமர்ந்துள்ளனர். அவர்களை வெளியேற்ற, போலீசாரும், அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
.
இதனால், தொகுதியில் பெரும்பாலான பகுதிகளில், பதற்றமான சூழல் நிலவுகிறது. பணப்பட்டுவாடா காரணமாக, கடந்த முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இம்முறை கூடுதலாக பணப்பட்டுவாடா நடப்பதால், மீண்டும் தேர்தல் நிறுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

நாடகம்

இதற்கிடையில் சிறப்பு தலைமை தேர்தல்

அதிகாரியிடம், அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனன் அளித்த புகார்:ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும், தினகரன் ஆட்கள், தி.மு.க.,வின ரோடு கைகோர்த்து செயல்படுகின்றனர். இரு தரப்பினரும் நியமித்துள்ள ஆட்கள், அ.தி.மு.க., கரை வேட்டி அணிந்தும், இரட்டை இலை சின்னத்தை ஏந்தியபடியும், வீடுகளுக்கு சென்று, பணம் கொடுக்கின்றனர்.
இதன்படி, அ.தி.மு.க.,வினர் பணம் கொடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தேர்தலை நிறுத்த முற்படுகின்றனர்.சில இடங்களில், இரு தரப்பின ரும், வலுக்கட்டாயமாக எங்கள் கட்சியினரை பிடித்து, அவர்களின் பாக்கெட்டில், வலுக்கட்டாய மாக பணத்தை திணித்து, பொதுமக்கள் முன்னிலை யில், அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தது போன்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
பல இடங்களில், வேண்டுமென்றே சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்;பொதுமக்களை மிரட்டுகின்றனர். எனவே, தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளை வெளியேற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மற்றொரு மனுவில், ‘ராயபுரத்தில் உள்ள, குக்கர் கடையில், ஐந்து நாட்களில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான குக்கர்கள் விற்றது குறித்து, வருமான வரித்துறையினர் விசாரிக்க வேண்டும்.
தினகரன் உத்தரவுப்படி, குக்கர்கள் வாங்கப்பட்டுள்ள தால், இந்த பணத்தை அவரது செலவு கணக்கில் சேர்த்து, அவரை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.அதேபோல், தினகரன் தரப்பினர், ‘அ.தி.மு.க.,வினர் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்’ என, தேர்தல் கமிஷனில், புகார் அளித்து உள்ளனர்.

சாலை மறியல்

ஆர்.கே.நகரில் பண பட்டுவாடா தொடர்பாக, ஏற்படும் மோதலால், தொகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.தொகுதியின் அனைத்து தெருக்களிலும், திருவிழா போல் கட்சியினர் கூட்டம் அலைமோதுகிறது.நேற்று, கொருக்குப்பேட்டை பகுதியில், பணப்பட்டுவாடா செய்த, அ.தி.மு.க.,வினரை, தி.மு.க.,வினர் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக, போலீசார் புகார் அளித்தனர். ‘பறக்கும் படையினர் வந்த பின், புகார் வாங்குகிறோம்’ என, போலீசார் சமாளித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலங்குளம் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., பூங்கோதை தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், கொருக்குப் பேட்டையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மண்டை உடைப்பு

தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெருவில், அ.தி.மு.க.,வினருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த அசோக், 35 என்பவரின் மண்டை உடைந்தது. அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.’மோதலை தவிர்க்க, வெளியூர் ஆட்களை, தொகுதியிலிருந்து வெளியேற்ற, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.13 லட்சம் பறிமுதல்

சென்னை, கொருக்குப்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள, பிசியோதெரபி மையத்தில், வாக்காளர்களுக்கு கொடுக்க, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.உடன் தேர்தல் பார்வையாளர்கள், பறக்கும் படையினர், அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, உரிய ஆவணங்களின்றி பதுக்கி வைக்கப் பட்டிருந்த, 13 லட்சம் ரூபாயை, பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகி, பச்சையப்பனை போலீசார் கைது செய்தனர்.

மகளிர் குழுவினர் சுறுசுறுப்பு

ஆர்.கே.நகரில், மகளிர் குழுவினர் தான்,

பணப்பட்டுவாடாவை கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றனர். பிரசாரத்திற்கு பெண்களை அழைத்து வருவது, வேட்பாளரை வரவேற்க சாலையில் கோலமிடுவது என, அனைத்து பணிகளையும், அந்தந்த பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுவினரிடம், கட்சியினர் ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள், நோட்டு போட்டு, ஆடிட்டர் போல் வேலை பார்ப்பதால், வாக்காளர்களுக்கு போய் சேர வேண்டியவை அனைத்தும் போய்விடும் என்ற அதீத நம்பிக்கையில் கட்சியினர் உள்ளனர். பிரசாரத்திற்கு வரும் பெண்கள் பிடிக்க வேண்டிய பதாகை, தோளில் அணிய வேண்டிய துண்டு, ஆண்களுக்கான சின்னம் பொறித்த சட்டை என, அனைத்தும் கட்சியினரால் வழங்கப்படுகின்றன.
இது குறித்து, மகளிர் குழு உறுப்பினர்கள் கூறுகையில், ‘நாங்கள் தினக்கூலிகள். இப்போதைக்கு தேர்தல் வேலை கிடைத்து உள்ளது. மூன்று மணி நேரத்திற்கு போய் நின்றால் போதும்; 200 ரூபாய் கிடைக்கிறது. அரசியல்வாதிகள் சொன்ன நல்ல விஷயங் களை செய்தால் நல்லது; இல்லையென்றால் கிடைத்த வரை லாபம்; அவ்வளவு தான்’ என்றனர்.

இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்க!

சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி, விக்ரம் பத்ராவிடம், தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் வேலு, சட்டத்துறை செயலர், கிரிராஜன் ஆகியோர் அளித்த புகார் மனு:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுக்க, முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, தொடர்ந்து தேர்தல் கமிஷனில், மனு கொடுத்துள்ளோம். ஆனால், போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து, ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். கார், விருந்தினர் விடுதி, திருமண மண்டபம், ஓட்டல் போன்ற வற்றில், பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கு பணப்பட்டுவாடா நடக்கிறது என்ற விபரத்தை, ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் தெரிவித்துள்ளோம். ஆனால், பணப்பட்டுவாடா செய்த, அ.தி.மு.க.,வினருக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘பிரஸ்’ ஸ்டிக்கருடன் பணப்பட்டுவாடா செய்த காரை, பொதுமக்கள் பிடித்து கொடுத்தும், போலீசார் எந்த சோதனையும் செய்யாமல் விடுவித்து விட்டனர். பணப்பட்டுவாடாவை தடுப்பதில், தேர்தல் கமிஷன் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.
துணை ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து தெருக் களிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, வலியுறுத்தினோம்; நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க., வினர் ஓட்டுக்கு, 6,000 ரூபாய் கொடுத்து வருகின்றனர். இது தொடரு மானால், ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும். எனவே, பண பட்டுவாடாவை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
%d bloggers like this: