Advertisements

மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன்… குறைக்கப்பட்ட வட்டி… கூடுதல் சலுகைகள்!

கையிருப்புப் பணத்தைக்கொண்டு வீடு கட்டுவதைவிட, கடன் பெற்று வீடு கட்டுவதே லாபகரமானது என்ற நிலைப்பாடு நிரூபணமாகி வரும் காலகட்டம் இது. இதனை உறுதிப்படுத்துவது போல், வங்கிகளும், வீட்டுக் கடன் தரும் நிறுவனங் களும், போட்டி போட்டுக்கொண்டு வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.

இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளுவது போல், இதுவரை இல்லாத அளவில் வட்டியைக் குறைத்து, சலுகைகளைக் குவித்து, தனது ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பண விதிகளை விசாலமாக்கி ஆணை பிறப்பித்திருக் கிறது மத்திய அரசு.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுக் கடன் சலுகைகள் அதிக எண்ணிக்கையிலான ஊழியர் களுக்குப் பயன் தரும் வகையில், முன்னதாக ஓர் அடித்தளத்தை அமைத்து வைத்திருக்கிறது 7-வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள். 

100 சதவிகிதமாக இருந்த அடிப்படை ஊதியத்தை, அகவிலைப்படியைச் சேர்த்து 257 சதவிகிதமாக சம்பள கமிஷன் பரிந்துரை மேம்படுத்தி வைத்துள்ளதால், அதிகபட்ச வீட்டுக் கடனை அதிக எண்ணிக்கையிலான மத்திய அரசு ஊழியர்கள் பெற்றுப் பயனடைய முடியும்.

வீடு கட்டும் முன்பண விதிகளில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சலுகைகள் பின்வருமாறு:

ரூ.7.50 லட்சமாக (8.11.2017 வரை) இருந்த அதிகபட்ச வீட்டுக் கடன், 9.11.2017 முதல் ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன் கோரும் ஊழியரின் 34 மாத அடிப்படை ஊதியம் அல்லது 25 லட்சம், இவற்றுள் எது குறைவோ அந்தத் தொகை அதிகபட்ச வீட்டுக் கடனாக இருக்கும்.

மேற்கண்ட இரு அம்சங்களுடன் கூட, ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தின் அளவைப் பொறுத்து, அவர் திருப்பிச் செலுத்த முடிந்த தொகையையும் கீழ்காணுமாறு கணக்கிட்டு முன்பணம் தரப்படும்.

இருபது ஆண்டுகளுக்கு மேலும் பணியில் நீடிப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் 40% வீட்டுக் கடன் (மாத) பிடித்தமாக இருக்கும். இதன் அடிப்படையில் கடன் தொகை கணக்கிடப்படுகிறது.

இதேபோல், 10 முதல் 20 ஆண்டு களுக்குள் ஓய்வுபெற உள்ளோருக்கு 40% வரையிலான அடிப்படை ஊதியம் சம்பளத்தில் பிடிக்கப்படும். மீதியுள்ள நிலுவைக் கடன் மற்றும் வட்டித் தொகை, ஊழியர் பெறப்போகும் பணிக்கொடையில் 65% வரை சரி கட்டப்படும்.

பத்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலத்துடன் வீட்டுக் கடன் பெற்றோருக்கு, அடிப்படை ஊதியத்தில் 50% வரை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். எஞ்சியுள்ள தொகையில் 75% வரையிலான தொகை, பணிக்கொடைத் தொகையில் சரிக்கட்டப்படும்.

நிரந்தர ஊழியர் மற்றும் ஐந்து ஆண்டுகள் முறையாக     (Regular Service) பணியை நிறைவு செய்தோர் வீட்டுக் கடன் பெறலாம்.

கணவன்  மனைவி இருவருமே மத்திய அரசுப் பணியில் இருந்தாலும் யாரேனும் ஒருவர் மட்டுமே வீட்டுக் கடன் பெறலாம் என்பது முந்தைய விதி. இந்த விதியானது விரிவாக்கம் பெற்றுள்ளது. அதன்படி, கணவன் மனைவி இருவரும் இணைந்தோ, தனித்தோ வீட்டுக் கடன் பெறலாம். இது புதிய விதி.

முன்னதாக 6% முதல் 9.5% வரை, வட்டி விகிதம் நான்கு பகுப்பாக (Four SLABS) இருந்தது. அது தற்போது, ஒரே சீராக 8.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு விட்டது.

வீட்டைக் கட்டி முடித்த கையோடு, கடன் தொகைக்குக் குறையாத தொகை அளவுக்குக் கட்டிய வீட்டைக் காப்பீடு செய்திட வேண்டும். காப்பீடு செய்யத் தவறினால், எத்தனை காலம் காப்பீடு செய்யாமல் விடு பட்டதோ அந்தக் காலகட்டத்துக்கு, வீட்டுக் கடன் வட்டியுடன் அபராத வட்டி 2%  கட்ட நேரிடும்.

அரசுப் பணியானது  இடமாறு தலுக்கு உரியது. எனவே, 20 ஆண்டு களுக்கு மேலும் பணிக்காலம் (Service Period) மீதமாக உள்ளவர்கள், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், சொந்த வீடு எந்த ஊரில் வாங்க வேண்டும் என்று கலந்தா லோசித்து முடிவெடுத்துவிடுவது நல்லது. ஏனெனில், வீட்டைவிட, வீடு அமைந்துள்ள இடமே  முதன்மையானது.

* இதேபோல், 20 வருடங்களுக்கு மேலும் பணிக்காலம் உடைய ஒருவர், தனது கடன் மற்றும் அதற்கான வட்டியை 240 தவணை கள் வரை அரசுக்குத் திருப்பிச் செலுத்தலாம். என்றாலும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் மற்றும் தனது மருத்துவச் செலவு உள்ளிட்ட எதிர்காலச் செலவினங் களைச் செய்ய ஏதுவாக, தவணையின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வது நன்று. என்றாலும், செலவு, சிக்கனம், சேமிப்பு ஆகிய மூன்று காரணி களைக் கணக்கிட்டு இது குறித்து முடிவெடுக்கலாம். பெரிய அளவில் வட்டித்தொகை மிச்சமாகும் என்பதையும் கருத்தில் கொள்ள லாம்.

வங்கிகள் முதலான வீட்டுக் கடன் நிறுவனங்களின் வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது. அரசு தரும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலனைக்கு உட்பட்டு மாற்றம் செய்யப் படலாம். என்றாலும், ஊழியர் கடன் பெற்ற ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே ஒட்டுமொத்த வீட்டுக் கடனுக்கான வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் மாறுபடாது.

வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் கடன் + கடனுக்கான வட்டி முழுவதும் கட்டி முடிக்கப்படும் காலம் வரையிலும் வட்டி வசூலிக்கின்றன. இது (Equal Monthly Instalment) மாத சமதவணையாக நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், அரசு தரும் வீட்டுக் கடனுக்குத் தனிவட்டி கணக்கீடு என்பதோடு, கடன் தொகையைக் கட்டி முடிக்கும் காலத்துக்கு மட்டுமே வட்டிக் கணக்கீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, ஓர் ஊழியர் தனது வீட்டுக் கடனாக அரசிடமிருந்து பெற்ற அசல் தொகையை 180 மாதத் தவணைகளிலும், வட்டியை 60 மாதத் தவணைகளிலும் செலுத்தலாம். கடனை அடைக்க அதிகபட்ச காலக்கெடு 240 மாதங்கள்தான். இதில், அசல் தொகை செலுத்தும் 180 மாதங்களுக்கு மட்டுமே தனி வட்டி கணக்கீடு. வட்டி செலுத்தும் காலமான 60 மாதத்துக்கு வட்டிக்கு வட்டி என்பதெல்லாம் கிடையாது. எனவே, வங்கிகள் உள்ளிட்ட வீட்டுக் கடன் நிறுவனங்கள் என்னதான் வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், அரசுக் கடன் வட்டியே குறைவாக இருக்கும். குறைவாக இருக்கும் என்பதுகூட தவறு. மிக மிகக் குறைவாக இருக்கும் என்பதே சரி. அதற்கான ஓர் கணக்கீட்டை, நாளது தேதியில் உள்ள வட்டி விகிதத்தின்படி பார்ப்போம்.

வங்கிகளின் மிகக்குறைந்த வட்டி விகிதம் 8.30%

அரசுக் கடன் வட்டி விகிதம் 8.50%

* கடன் தொகை ரூ.25  லட்சம்

25 லட்சம் ரூபாயை அரசிடம் வீட்டுக் கடனாகப் பெற்ற ஓர் ஊழியர் மாதம் ரூ.20,833 வீதம் 120 மாதத் தவணைகளில் அசல் தொகையைக் கட்டி முடித்துவிடலாம். அடுத்த 51 மாதங்களில் ரூ.20,833 வீதமும் 52-வது மாதத்தில் ரூ.8,854-ம் கட்டிவிட்டால் மொத்தக் கடன் + வட்டி அடைபட்டுவிடும். அதாவது, செலுத்தப்பட்ட மொத்த வட்டி ரூ.10,71,337 மட்டுமே. (51×20833 = 10,62,483+8854= 10,71,337)

இந்த 25 லட்சம் ரூபாயை 8.30 சதவிகித வட்டியில், வங்கியிலோ பிற நிதி நிறுவனங்களிலோ வீடு கட்டும் கடனாகப் பெற்றிருந்தால், மாதம் ரூ.21,825 வீதம், 228 மாதங்களுக்குச் சம மாதத்தவணை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் மொத்தத்தொகை ரூ.49,76,100-ஆக இருக்கும். அசல் தொகை ரூ.25 லட்சம் போக, வட்டியாகச் செலுத்தப்படும் தொகை ரூ.24,76,100 ஆகும். அதாவது, அரசு தரும் வீட்டுக் கடன் வட்டியைவிட ரூ.14,04,763 அதிகம். அதாவது, வங்கிக் கடன் மாதத் தவணையைவிட, அரசுக் கடன் மாதத்தவணை ரூ.992 குறைவு. அதுமட்டுமல்ல, அரசுக் கடன் 120+52=172 தவணை மட்டுமே. அரசுக் கடன் அல்லாத வங்கி போன்றவற்றின் தவணைகள் 228.

எனவே, அரசு ஊழியர்கள் அரசுக் கடன் பெற்று வீடு கட்டுவதே லாபம். அரசு பல்வேறு சலுகைகளைத் தந்து வருகிறது. இந்தச் சலுகைகளை விரைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டியது ஊழியர்கள்தான்!

Advertisements
%d bloggers like this: