Advertisements

ரயில் பயணங்களில்… தடக் தடக் போலீஸ்!

கோவையில் அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தியதற்கே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்மீது எல்லோரும் பாய்ந்தார்கள். இதோ… கன்னியாகுமரி, கடலூர், சேலம் எனத் தன் பயணத்தை கவர்னர் தொடர்கிறாரே… யாரால் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைப் போட்டவாறு நம்முன் ஆஜரானார் கழுகார்.
‘‘எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனவே… தி.மு.க கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்துகிறதே?” என்றோம்.

‘‘தமிழகத் திட்டங்களை ஆய்வுசெய்ய கவர்னர் போகலாமா, கூடாதா என்பதெல்லாம் இருக்கட்டும். கவர்னரின் பயணத்தால் ஏற்படும் அரசியல் காரணங்கள் அல்லாத இதரக் குழப்பங்களைச் சொல்கிறேன். கேளும்!”
‘‘சொல்லும்!”
‘‘சென்னையிலிருந்து கவர்னர் விமானத்தில் கிளம்பிப்போனால், யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், கவர்னர் ரயில் ஸ்நேகிதராக இருக்கிறார். அதனால், அவர் பயணம் கிளம்புகிறார் என்றதும் போலீஸ் அதிகாரிகள் மனசெல்லாம் ‘தடக் தடக் ’   என அடிக்க ஆரம்பித்துவிடுகிறதாம்.”
“ஓஹோ!”
“ஆமாம். சென்னையிலிருந்து கடலூர் பயணத்துக்கு கவர்னர் திட்டம் வகுத்தபோது, காரில் செல்வார் என்றுதான் அதிகாரிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ‘ரயிலில் பயணம் செய்யப்போகிறேன்’ என்று தடாலடியாக கவர்னர் சொல்லியுள்ளார். உடனே, ரயில்வே காவல்துறையிடம் இந்த விஷயத்தை கவர்னர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கவர்னர் இஸட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்பதால், பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தீவிரப்படுத்திவிட்டது ரயில்வே காவல்துறை. ரயில்வே ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல் தலையில் அந்தப் பொறுப்பு விழுந்தது. ‘கவர்னர் ரயிலில் செல்கிறார் என்றால், எஸ்.பி தலைமையில் காவலர்கள் அவருடன் ரயிலில் பயணிக்க வேண்டும்’ என்று கறார் உத்தரவு போட்டுவிட்டார் பொன்.மாணிக்கவேல்.”

‘‘கவர்னரின் பாதுகாப்பு முக்கியமாச்சே?”
‘‘கடலூர் பயணத்துக்கு பல்லவன் எக்ஸ்பிரஸில் விருத்தாசலம் வரை பயணிக்க முடிவாகியது. சென்னை எழும்பூரில் ஏ.சி கோச்சில் கவர்னர் ஏறியதும், அந்த கோச்சில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் துப்பாக்கிச் சகிதமாக ஏறியுள்ளார். அந்த கோச் முழுவதையும் தீவிரமாக சோதனை யிட்டு, அதிலிருந்த பயணிகள் அனைவரிடமும் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதனால், பயணிகள் முகம் சுளித்துள்ளனர். விருத்தாசலம் வரை இடையில் உள்ள ஒவ்வொரு ஸ்டேஷனிலும் உள்ளூர் போலீஸாரை வரவழைத்துப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தியிருக்கிறார்கள்.”
‘‘சேலத்துக்கும் ரயில்தானே?”
‘‘சேலத்துக்கு, ‘கூபே’ கோச்சில் சென்றுள்ளார் கவர்னர். அவர் பயணம் செய்த கூபேக்கு அருகில் இருந்த பெட்டிகள் அனைத்தையும் போலீஸார் கடும் சோதனைக்கு உள்ளாக்கிவிட்டனர். அதிக பணம் செலவுசெய்து சொகுசாகப் பயணிக்கத் திட்டமிட்ட பயணிகள், காவலர்கள் காட்டிய கெடுபிடியால் நொந்துபோயினர். காவலர்களோ, ‘மேலதிகாரிகள் சொல்வதைத்தான் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது’ என்று புலம்புகிறார்கள். சேலத்திலிருந்து பிரதமர் மோடியை வரவேற்க நாகர்கோவில் சென்றபோதும், ரயில் பயணத்தையே கவர்னர் தேர்ந்தெடுத்துள்ளார். அப்போதும், அதே கெடுபிடிகள்தான்.”
‘‘அரசாங்கமும் அரசியல்வாதிகளும் புலம்புவது ஒரு பக்கம் என்றால், போலீஸும் பொதுமக்களும் படுகிற சிரமங்கள் இன்னொரு பக்கமா?” என்றதும், ஆர்.கே.நகர் சூழலைச் சிரித்தபடி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.
“அவசர நோயாளிகளைச் சுமந்தபடி அலறும் ஆம்புலன்ஸ் போவதற்குக்கூட ஆர்.கே. நகரில் எந்தப் பக்கமும் வழி இல்லை. பிரசார மைக் சத்தம் காதைக் கிழிக்கிறது. இதனால், தொகுதி மக்கள் கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். பணப்பட்டுவாடா மட்டும் சத்தமில்லாமல் பல இடங்களில் நடந்து முடிந்துவிட்டது.’’
‘‘செய்யப் போகிறார்கள் என்று முன்னமே சொன்னீரே?’’
‘‘சிறப்புத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா அதிரடி காட்டுவதுபோல் தெரிகிறது. சிலர், அவரது செல்போனுக்குத் தொடர்புகொண்டு, ‘பணப் பட்டுவாடா நடப்பதாக’ புகார் சொல்கிறார்கள். டோர் நம்பர், தெரு பற்றிய விவரங்களை அவர் கேட்டுவிட்டு, அந்த இடத்துக்குப் பறக்கும்படையை அனுப்பிவைக்கிறார். பறக்கும்படையினர் இந்த இடத்தில் பிஸியாக இருக்க, அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வேறொரு இடத்தில் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். இந்த ஆடுபுலி ஆட்டத்தால் தேர்தல் ஆணையம் ஆட்டம் காண்கிறது.”
‘‘பெருமளவு பணம் பிடிபட்டதாகச் செய்திகள் வந்தனவே?”
“இப்படிப் போட்டுக் கொடுக்காத சில இடங்களில், பறக்கும்படையினர் ரவுண்ட்ஸ் போகும்போதுதான், பண்டல் பண்டலாக இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள் சிக்கின. தண்டையார் நகர், மணலி சாலை, கொருக்குப்பேட்டை, சாத்தாங்காடு போன்ற இடங்களில் பணத்தை வைத்திருந்த நபர்கள் போலீஸாரிடம் சிக்கினர். வ.உ.சி நகர் பகுதிக்கு பறக்கும்படை போவதற்கு முன்னரே, தி.மு.க-வினர் அங்கு சென்றுவிட்டனர். ‘என்ன நடந்தது, பணப்பட்டுவாடா செய்தவர் சிக்கினாரா’ என்ற விவரங்கள் எதுவும் வெளியில் வரவில்லை. ‘வ.உ.சி நகரில் அமைச்சர் உதயகுமார் வந்த கார் உடைக்கப்பட்டது’ எனப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். நான்கு பேரைக் கைது செய்ததாகப் பத்திரிகைக் குறிப்பையும் வெளியிட்டுள்ளனர். இலையும் குக்கரும் நுழைகிற தெருக்கள், பணப் பட்டுவாடா நடக்கும் பகுதிகள் குறித்த தகவல்கள் அனைத்துமே தி.மு.க-வினருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் கிடைத்துவிடுவதுதான் இந்தத் தேர்தலில் செம மெர்சல்.”
“பிடிபட்ட தொகை குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளனவே?”
‘‘அதைப்பற்றி மட்டும் எந்த அதிகாரியும் வாய் திறப்பதில்லை. இதுவரை 11 பேர் பிடிபட்டுள்ளனர் என்று மட்டும் சொல்லியுள்ளார்கள். எவ்வளவு தொகை பிடிபட்டுள்ளது என்பதைப் பற்றி யாரும் சொல்லவில்லை.”
‘‘ம்!”
‘‘அ.தி.மு.க-வினரில் கடந்த இடைத்தேர்தலில் யாருக்கு எந்த ‘பாகம்’ ஒதுக்கப்பட்டதோ, அதே பாகத்தில்தான் இப்போதும் அவர்கள் தேர்தல் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் அணி மாறியிருக்கிறார்கள் என்பதைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. குக்கர் ஆட்கள் என்றால், கழுத்தில் பெரிய சைஸ் விசிட்டிங் கார்டு தொங்குகிறது. அந்த கார்டில், ஜெயலலிதா மற்றும் சசிகலா உருவங்களுக்கு நடுவில் தினகரன் கும்பிடுகிறார். ஆளும்கட்சி ஆட்களோ, பச்சை வண்ணத்தில் பிளாஸ்டிக் இரட்டை இலைச் சின்னத்தை மட்டும் சட்டையில் அணிந்துள்ளனர். அங்கே எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வேலை இல்லை.”
‘‘எடப்பாடி தரப்பிலிருந்து ஏதோ எச்சரிக்கை வந்திருப்பதாகச் சொல்கிறார்களே?”
“எடப்பாடி சீரியஸாக ‘குக்கரைவிட ஓர் ஓட்டு குறைவாக இலை வாங்கினாலும், அந்தப் பாகத்தின் பொறுப்பாளருக்குத் தண்டனை உண்டு’ என்று சொல்லிவிட்டதால், இரட்டை இலைக்கு வாக்கு கேட்பவர்கள் தீவிரமாகச் செயல்படுகிறார்கள்.”
‘‘தி.மு.க என்ன செய்கிறது?”

“தி.மு.க-வினர் பிரசாரத்தில் காட்டும் அக்கறையைவிட, பணப்பட்டுவாடா குறித்த தகவலை உறுதிசெய்து, அதன்மீதான நடவடிக்கையைக் கோருவதில்தான் தீவிரக் கவனம் செலுத்தினர். 17-ம் தேதி தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் செய்த பிரசாரம் தி.மு.க-வினருக்குக் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. துணை ராணுவமும், அதிகளவு போலீஸும் ஸ்டாலின் பிரசார வேனுக்குப் பின்னால் பிரதான சாலையில் போய்க்கொண்டிருக்க, அப்போதும் குறுக்குத் தெருக்களில் பணப்பட்டுவாடா சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது.’’
‘‘தினகரன்?”
‘‘தொகுதியில் பலர், ‘நான் ஜெயித்தாலும் தோற்றாலும் கவலையில்லை. உங்களுக்கு எந்த உதவி என்றாலும், என் வீட்டுக்கு நீங்கள் வரலாம் என்று தினகரன் சொல்லிட்டுப் போனாரு’ என்ற உருகும் அளவுக்குப் பிரசாரத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார் தினகரன். ‘போன முறை எலெக்‌ஷனே நடக்காமல் போய்விட்டது. இருந்தாலும், பிள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு நாலஞ்சு பேரு அவர் வீட்டுக்குப் போனோம். உடனே செஞ்சுக் கொடுத்துட்டாரு’ என்று தினகரன் ஆட்களே ஆங்காங்கே நின்று கதைகளை அவிழ்த்துவிடுவதும் நடக்கிறது. இத்தகைய பிரசாரத்தைப் பார்த்து அ.தி.மு.க-வினர் அரண்டு போயுள்ளார்கள்!”
‘‘கடைசிக்கட்டமாக ஒரு ஓட்டுக்குக் கொடுக்கப்பட்ட கரன்சி எவ்வளவு?” என்ற கேள்வியைப் போட்டதும், ஆறு விரல்களைக் காட்டிவிட்டு சிறகடித்துப் பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: