Advertisements

‘சிங்கிள் சைல்டு சிண்ட்ரோம்’

சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்… கூட்டுக் குடும்பங்கள் சிதைந்த பின்னர் நம் சமூகம் சந்தித்த பிரச்னைகளில் இதுவும் ஒன்று. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றாலும்கூட, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி, சித்தி, அத்தை போன்றோர் குழந்தைகளை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். குழந்தைகள், பெற்றோர் மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் அரவணைப்போடு வளர்ந்தனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று நிம்மதியுடன் வேலைக்குச் சென்றனர்.  

கூட்டுக் குடும்பம் சிதைய ஆரம்பித்ததையடுத்து பெற்றோர் மட்டுமே குழந்தைகளுக்குப் பாதுகாவலர்களாக மாறினர். ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொண்டனர். காரணம், ஒன்றை கவனித்துக்கொள்ளவே யாரும் இல்லை என்ற நிலை. ஒற்றைக் குழந்தையாகச் சகோதர, சகோதரிகள் யாரும் இல்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை ‘சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்’(Single child syndrome) என்கிறது மனவியல். `சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்’ எனப்படும் இந்த பாதிப்பு பற்றி விரிவாக விளக்குகிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் சங்கீதா சங்கரநாராயணன்.
“முதலில் இது ஒரு நோயே அல்ல. தனியாக வளரும் குழந்தைகளின் சில ‘க்ரூப் ஆஃப் கேரக்டர்கள்’ தான் ‘சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்’. தனியாக வளர்ந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஏன் இந்த பாதிப்பு ஏற்படுகிறது?
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு வீட்டில் இருக்கும்போது, பெற்றோரின் கவனம் அனைத்துக் குழந்தைகளின் மீதும் இருக்கும். ஒரே ஒரு குழந்தை இருக்கும்பட்சத்தில் அந்த ஒரு குழந்தையின்மீது மட்டுமே கவனம் இருக்கும். அந்தக் குழந்தையை மையப்படுத்தியே பெற்றோரும் இருப்பார்கள்.
இந்த ஒற்றைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் அதிகச் செல்லம் கொடுப்பார்கள். வீட்டில், அந்தக் குழந்தைகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் போன பிறகும் பிரச்னைகளை எழுப்பும். வீட்டில் அம்மா, அப்பா தன் பேச்சைக் கேட்டதுபோல் பள்ளியில் தன்னுடன் படிக்கும் நண்பர்களும் தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தான் மட்டுமே அனைவராலும் கவனிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இவை நடக்காதபோது அந்தக் குழந்தைகளுக்குத் தனிமை உணர்வு ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போகும் பண்பு, பிறரிடம் பகிர்ந்து வாழும் குணம் ஆகியவை தனியாக வளர்ந்த குழந்தைகளிடம் இருக்காது.    

தனிமையின் கொடுமையைத் தனியாக வளர்ந்த குழந்தைகள் அறிந்திருப்பதால், தாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புவார்கள். அதேநேரத்தில் இந்த ஒற்றைக் குழந்தைகள் சமூகத்துடன் தொடர்பு (Social interaction) வைத்துக் கொள்வதிலும் மிகவும் தடுமாறுவார்கள். ஒருவரை  எப்படி அணுகுவது என்பது தெரியாமல் வளர்ந்திருப்பார்கள். எப்போதும் கோபத்துடனும் பதற்றத்துடனுமே இருப்பார்கள். எல்லோரும் தன்னைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.ஒற்றைக் குழந்தைகளால் பெற்றோருக்குச் சில நன்மைகளும் உண்டு. கிடைக்கும் சிலமணி  நேரத்தை,  ஒரு குழந்தைக்காக மட்டுமே செலவழிக்க முடியும். அவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து அவர்களை மேம்படுத்தவும் முடியும். தனியாக வளரும் குழந்தைகளில்  பெரும்பாலானோர் கூடுதல் திறமை உடையவர்களாக, நல்ல கிரியேட்டிவிட்டி உடையவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த பாதிப்பு ஏற்படாமல் குழந்தையை எப்படிப் பாதுகாப்பது?
ஒரு குழந்தை என்பதால் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதோ, அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பதோ கூடாது. குழந்தையிடம் ‘வேண்டாம்’, ‘முடியாது’ என்பதுபோன்ற சில விஷயங்களைச் சொல்லிப் பழக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே குழந்தையைச் சுதந்திரமாக, தன்னம்பிக்கை உடையவர்களாக வளர்க்க வேண்டும். சிறுவயதி லேயே வெளி உலகத்துடன் தொடர்புகொள்ளப் பழக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறுவயதில் இருந்தே பழக விட வேண்டும். குறிப்பாக தாத்தா,  பாட்டி போன்ற முதியவர்களிடம் பழகக் கற்றுத்தர வேண்டும்.  பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் அவர்களிடம் சிறிய மாற்றமோ, பதற்றமோ தென்பட்டால் அவர்களை அருகில் அழைத்துப் பக்குவமாகப் பேச வேண்டும்; அவர்களது பிரச்னை என்னவென்று கேட்க வேண்டும்.
‘சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்’ உலகளாவிய பிரச்னையாக இருந்தாலும், நம் நாட்டில் இது அதிகரிக்கக் காரணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நம் குழந்தைகளை நெருங்க விடாமல் இருப்பதே. இந்தப் போக்கை ஒவ்வொரு பெற்றோரும் மாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது சரியான முடிவாக இருந்தாலும். சமூகத்தில் அவர்களைத் தனித்தவர்களாக ஆக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.
`சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்’ என்னும் இந்தப் பாதிப்பைச் சரிசெய்யும் ஒரே மருந்து மனிதர்களிடம் அன்பு செய்வது மட்டுமே.

Advertisements
%d bloggers like this: