Advertisements

வாசனைச் சோதனை விய(ர்)க்க வைக்கும் தகவல்கள்!

ந்தக் கதை நடப்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அது ஓர் அடர்ந்த காடு. சூரிய வெளிச்சம்கூடக் காட்டின் ஆழத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு வளர்ந்திருந்த மரங்கள் நிறைந்த காடு. அந்த அதிகாலை நேரத்தில் கைகளில் சில ஆயுதங்களுடன் வேட்டையாட அந்தக் கூட்டம் கிளம்புகிறது. தலைவன் நின்று தன் கூட்டத்தைப் பார்க்கிறார். முன்வரிசையில் நிற்கும் ஒருவனைக் கோபத்தோடு பார்த்து, அருகே அழைக்கிறார். அவனை நெருக்கத்தில் மோந்து பார்க்கிறார்.  

 

“உனக்கு இன்னும் பயம் நீங்கவில்லை. உன் வாசனையில் பயம் படர்கிறது. அதை மிருகங்கள் எளிதாகக் கண்டு கொள்ளும். அது உனக்கு மட்டுமில்லாது, இந்தக் கூட்டத்திற்கே ஆபத்தாக முடிந்துவிடும். வேட்டைக்கு நீ வராதே…” என்று கோபத்தோடு சொல்லிவிட்டு நகர்கிறார். அவன் தனித்து நிற்க, அந்தக் கூட்டம் வேட்டைக்கு முன்னேறுகிறது.

இதோ இந்தக் கதை நடந்தது சில மாதங்களுக்கு முன்னர். சத்தியமங்கலம் வனப்பகுதி. பழங்குடியினத்தைச் சேர்ந்த வனக்காவலர் தங்கராஜ் இப்படிச் சொன்னார்.

“காலையில காட்டுக்குக் கிளம்பும்போது சோப்பு போட்டெல்லாம் குளிக்க மாட்டோம் சார். அதே மாதிரி யானையையோ, புலியையோ பார்த்தாலும் பயந்திட மாட்டோம். மனசுக்குள்ள ‘நான்  உன்ன எதுவும் பண்ண மாட்டேன். நான் உன்னோட நண்பன்தான்’ன்னு  சொல்லிட்டேயிருப்பேன். நாம பயந்தா நம் வாசனை அதுக்குத் தெரிஞ்சிடும். நம்மைத் தாக்கவும் வாய்ப்புகள் அதிகம்.”

நம் உடலின் வாசனை, வேட்டைச் சமூகக் காலத்திலும் சரி,  இன்றைய காட்டு வாழ்க்கையிலும் சரி.. மிகவும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால், இன்றைய நவநாகரிக உலகில் வியர்வை வாசனை என்பது பெரும் அசிங்கம், அவமானம். நாம் இந்தளவுக்கு வெறுக்க வேண்டிய விஷயமா வியர்வையும் அதன் வாசனையும்? ஒரு சிலரின் வியர்வை அத்தனை துர்நாற்றம் அடிப்பதில்லை; சிலரின் வியர்வையோ நம்மை முகம் சுளிக்க வைக்கிறது. இதன் பின்னணிக் காரணம் என்ன? 

வியர்வைக்கு வாசனை கிடையாது

நாம் பொதுவாக நினைப்பதுபோல், நேரடியாக வியர்வையிலிருந்து வாசனை வருவது கிடையாது. நம் உடலில் இருக்கும் சில பாக்டீரியாக்கள்,  நம் வியர்வையிலிருக்கும் கொழுப்பையும் புரதத்தையும் தனக்கான உணவாக எடுத்துக்கொள்கின்றன. அது அப்படிச் செய்யும்போது, வியர்வையின்  மூலக்கூறுகள் உடைந்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தும் ரசாயனங்கள் வெளியாகின்றன. ஆக, வியர்வையின் துர்நாற்றத்திற்கு முக்கியக் காரணம் இந்த பாக்டீரியாக்கள்தான்.

நம் உடலில் இரண்டு முக்கிய வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. ‘அபோக்ரைன் சுரப்பி’ (Apocrine Gland) மற்றும் ‘எக்ரைன் சுரப்பி’ (Eccrine Gland). உடலில் முடி இருக்கும் இடங்களில் வியர்வையைச் சுரப்பது அபோக்ரைன். இது அந்த இடங்களில் பால் போன்ற ஒரு திரவத்தை வெளியிடும். 

அதிலிருக்கும் கொழுப்புச்சத்துகள், அமினோ அமிலங்கள், புரதங்கள் இந்த பாக்டீரியாக்களுக்குக்  கிடைத்த  ஒரு ‘கல்யாண விருந்து’ மாதிரி. அதுவும் நாம் அதிக பயத்திலோ, பதற்றத்திலோ இருக்கும்போது அபோக்ரைன் அதிகமான வியர்வையைச் சுரக்கும். வேட்டைச் சமூகத் தலைவர் சொன்னதும், வனக்காவலர் தங்கராஜ் சொன்னதும் இது குறித்துதான்.  எக்ரைன் சுரப்பி நம் உடல் முழுக்கவே இருக்கிறது. இது நீர் போன்ற வியர்வையை வெளியிட்டு நம் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது.

வியர்வை நல்லது

நாம் பயந்து ஒதுங்குவதுபோலவோ, வெறுத்து ஒதுக்குவதுபோலவோ வியர்வை ஒன்றும் ‘பல்வாள் தேவன்’ இல்லை என்கிறார் பெல்ஜியத் தைச் சேர்ந்த ‘உடல் வாசனை’ (Body Odour)ஆராய்ச் சியாளர் டாக்டர். க்ரிஸ் காலிவெர்ட் (Chris Callewaert).  “இந்த பாக்டீரியாக்களால் நமக்குச் சில பலன்களும் இருக்கின்றன. நம் சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பதோடு, சருமத்தை வீக்கம், எரிச்சல் போன்றவற்றிலிருந்தும் நம்மைக் காக்கின்றன’’ என்கிறார்.

சுத்தத்தின் பின்னிருக்கும் அரசியல்

வியர்வை ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்தது, அதற்குத் தீர்வாக டியோடரன்ட் போன்ற வாசனைத் திரவியங்கள் வந்தது, அது சர்வதேசச் சந்தையாக மாறியது எல்லாமே 19-ம் நூற்றாண்டிற்குப் பிறகு நடந்தவை. இதன் ஆரம்பத்தை அறிய நாம் 1912-ம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும்.

அமெரிக்கா சின் சினாட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் எட்னா மர்ஃபி (Edna Murphy). இவரின் தந்தை ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர். அறுவை சிகிச்சைகள் செய்யும் போது கை வியர்க்கக் கூடாது என்பதற்காக அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பேஸ்ட்டை உருவாக்குகிறார். அதை ஒருநாள் எட்னா எடுத்து, வியர்வையான தன் அக்குள்களில் உபயோகிக்கிறார். ஒரு சில நிமிடங்களிலேயே அவரின் வியர்வையின் ஈரத்தை அந்த பேஸ்ட் உறிந்துகொண்டது. அதை ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற அவர் முடிவு செய்கிறார்.

அதற்கு ‘ஆடர்னோ’ எனப் பெயரிடுகிறார். (ஆங்கிலத்தில் ‘Odour’ என்பதற்கு வாசனை என்று அர்த்தம். ‘Odour?Oh…No!’ என்பதை அடிப்படையாகக் கொண்டு அதற்குப் பெயரிட்டார்). ஆரம்பத்தில் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு எட்னா ஒரு விளம்பர நிறுவனத்தின் உதவியைக் கொண்டு புது உத்தியைப் பின்பற்றினார். “வியர்வை நாற்றம் பெரும் கேடானது. அது நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது. உங்கள் வியர்வை துர்நாற்றம் எடுக்கிறதா? நீங்கள் கொஞ்சம் கோளாறானவர்” என்பது போன்ற விளம்பரங்களை மக்கள் மத்தியில் முன்வைத்தார். அது முதலில் மேல்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. 1927-லேயே ‘ஆடர்னோ’  10 லட்சம் பாட்டில்கள் விற்பனை ஆனது. அதன் தொடர்ச்சி தான் இன்று, டியோடரன்ட் அடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறாத காலத்தை உருவாக்கியுள்ளது.

பிரச்னையா, இல்லையா?

வியர்வையும் வியர்வை நாற்றமும் நாம் அதீத முக்கியத்துவம் கொடுக்குமளவிற்குப் பெரும் பிரச்னைகள் இல்லை என்றாலும், வியர்வைப் பிரச்னைகளை நாம் பார்க்க வேண்டியதும் அவசியம்தான்.

இந்த உலகிலேயே இரண்டு சதவிகிதம் பேர் மட்டும்தான் இயல்பிலேயே வியர்வை நாற்றம் இல்லாமல் இருப்பார்கள். மீதம் 98 சதவிகிதம் பேருக்கு வியர்வையில் நாற்றம் இருக்கும். அந்த நாற்றம் எப்போது துர்நாற்றமாக மாறுகிறது என்பதை நாம் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். நம் வியர்வை துர்நாற்றம் எடுக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை மனஅழுத்தம் மற்றும் உணவுப் பழக்கம்.

சைவம் சாப்பிடும் போது வரும் வியர்வையைவிட,  அசைவம் சாப்பிடும் போது வரும் வியர்வையில் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். கூடவே மது, புகை, அதிகக் காரம் கொண்ட உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போதும் வியர்வையின் துர்நாற்றம் அதிகரிக்கும்.

அதீத வியர்வை நிலை

ஒரு சிலர்  எழுதும்போது, பேப்பரில் தங்களின் கைக்குட்டையையும் வைத்தபடியே எழுதுவார்கள். காரணம், அவர்களின் உள்ளங்கையின் வியர்வை பேப்பரையே முழுதாக நனைத்துவிடும். இந்த அதீத வியர்வை சுரக்கும் நிலையை ‘ஹைபர் ஹைட்ராஸிஸ்’ (Hyper Hidrosis) என்று சொல்வார்கள். அக்குள், உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்தப் பிரச்னைகள் சிலருக்கு ஏற்படலாம்.

இது குறித்துச் சரும நோய் மருத்துவர் ஆர்த்தியிடம் பேசினோம்.

“வியர்வையில் இரண்டு முக்கியப் பிரச்னைகள் இருக்கும். ஒன்று வியர்வையினால் துர்நாற்றம் எடுப்பது (Bromhidrosis). மற்றொன்று அதீத வியர்வை வருவது (Hyperhidrosis). இரண்டிற்குமே இரு வேறு விதமான சிகிச்சைகள் இருக்கின்றன. பெரும்பாலும், வியர்வை துர்நாற்றத்தைத் தடுக்க அக்குள்களில் இருக்கும் முடியை லேசர் சிகிச்சையின் மூலம் நீக்கிவிடுவோம். இதுவே வியர்வை துர்நாற்றத்தை 70 சதவிகிதம் வரைக் குறைத்துவிடும்.

ஹைபர்ஹைட்ராஸிஸைப் பொறுத்தவரை, அது மரபணுப் பிரச்னையாக இருக்கலாம். அது அல்லாமல் அதீத மன அழுத்தமும் முக்கியக் காரணம். மேலும், புகை, மதுப்பழக்கங்களும் ஹைபர்ஹைட்ராஸிஸ் நிலையை உருவாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்குப் பல வகை சிகிச்சைகள் இருக்கின்றன. முக்கியமாக அயன்டோபோரெஸிஸ் (Iontophoresis) எனும் சிகிச்சை. உடலில் கரன்ட்டைப் பாய்ச்சிக் குணப்படுத்துவது.

ஆனால், இதற்கு நோயாளிகள் வாரத்திற்கு மூன்று முறை வீதம், மாதக்கணக்கில் வர வேண்டியிருக்கும். பலரும் அதை முறையாகச் செய்வதில்லை. லேசர், அறுவை சிகிச்சை என இன்னும் சில விஷயங்கள் இருந்தாலும் தகுந்த டாக்டரை அணுகிச் சிகிச்சை பெறலாம்.

பெரும்பாலும், உடலில் அதிக வியர்வையின் காரணமாக சளி, சைனஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்கிற கேள்வி பலருக்கும் எழும். ஆனால், வியர்வைக்கும் சைனஸிற்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது” என்கிறார் ஆர்த்தி.

“வியர்வையினால் உடல் பிரச்னைகளைவிட மனப் பிரச்னைகளே அதிகம் ஏற்படுகின்றன. தங்களின் வியர்வை நாற்றம் தங்களைச் சுற்றிருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துவிடுமோ என்கிற அச்சம் இங்கு எல்லோருக்குள்ளுமே இருக்கின்றது. அதை இன்றிருக்கும் மருத்துவத்தைக் கொண்டு எளிதாகத் தீர்த்துவிடலாம்.

ஆனால், வியர்வைக்கு முக்கியக் காரணியாக இருக்கும் மன அழுத்தத்தை நீக்குவது மருத்துவத்திடம் மட்டும் அல்ல… உடல் ஆரோக்கியத்தோடும், மன நிம்மதியோடும் இருந்தால் இங்கு எதுவுமே பிரச்னை இல்லை’’ என்று சொல்லி முடிக்கிறார் மருத்துவர் ஆர்த்தி.


 

உங்கள் வியர்வையின் துர்நாற்றத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்…கூடவே அதற்கான தீர்வுகளையும்.

1.   உங்கள் வியர்வையை நீங்களே மோந்து பார்ப்பதை எப்போதெல்லாம் செய்வீர்கள்?

A –
தொடர்ச்சியாக.

B – கடுமையான உடற்பயிற்சிகளை முடித்த பிறகு.

C – கிட்டத்தட்ட அப்படி நான் செய்வதே இல்லை.

2.   டியோடரன்ட் போன்ற வாசனைத் திரவியங்களைப் போடாமல் விட்டால் என்ன நடக்கிறது?


A –
உடனடியாக மிக மோசமான துர்நாற்றம் வருகிறது.

B – அந்த நாளின் இறுதியில் துர்நாற்றம் எடுக்கத் தொடங்குகிறது.

C – பெரிதாக ஒன்றும் ஆவதில்லை. தொடர்ச்சியாக அதை உபயோகிக்காவிட்டாலும் பெரும் பிரச்னைகள் வருவதில்லை.

3.  உங்கள் வியர்வையிலிருந்து ஓர் அழுகிய வாசனை வருவதாக என்றாவது, யாராவது சொல்லியிருக்கிறார்களா?

A –
ஆமாம். இதை யாரும் சொல்லத் தேவையில்லை. எனக்கே நன்றாகத் தெரியும்.

B – ஏதாவது சமயங்களில் நான் குளிக்கத் தவறியிருந்தால் எனக்கு நெருக்கமானவர்கள் அப்படிச் சொன்னதுண்டு.

C – இதுவரை அப்படி யாரும் சொன்னதில்லை.

4.  உங்கள் வியர்வை வழக்கமாக குப்பை, மீன்  அல்லது சல்பர் போல துர்நாற்றம் வீசுகிறதா?

A – ஆம்.

B – இல்லை.

* பெரும்பாலான கேள்விகளுக்கு ‘A’ உங்கள் பதில் என்றால்:

* துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன. மேலும், மற்றவர்களைவிட உங்களுக்கு அதிகம் வியர்க்கிறது என்று அர்த்தம். டாக்டரிடம் ஆலோசனைகளைப் பெற்று, அதற்கேற்றவாறு சரி செய்யலாம்.

* பெரும்பாலான கேள்விகளுக்கு ‘B’ உங்கள் பதில் என்றால்:

* உங்களுக்குப் பெரியளவில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு டியோடரன்டோ அல்லது ஆன்ட்டி பெர்ஸ்பிரென்ட்டோ (Anti-Perspirant) உங்களுடைய பிரச்னைகளைத்  தீர்க்கக் கூடியதாக இருக்கும்.

* பெரும்பாலான கேள்விகளுக்கு ‘C’ உங்கள் பதில் என்றால்:

* எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள் மிகச் சிறப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

* 4வது கேள்விக்கு ‘ஆம்’ உங்கள் பதில் என்றால்:

* ‘ட்ரைமெதிலமினுரியா’ (Trimethylaminuria) எனும் வளர்சிதைக் குறைபாட்டால் (Metabolic Disorder) பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மருத்துவ ஆலோசனை அவசியம்.


பாக்டீரியா மாற்றம், நாற்றத்தில் மாற்றம்!

டாக்டர்.க்ரிஸ் காலிவெர்ட் வியர்வை பாக்டீரியா ஆராய்ச்சியில்  ஒரு புது முயற்சியை மேற்கொண்டு பார்த்தார். தன்னுடைய ஆராய்ச்சிக்கு இரட்டைச் சகோதரர்களை எடுத்துக்கொண்டார். அதில் ஒருவரின் வியர்வை அதிக துர்நாற்றமாகவும், மற்றொருவரின் வியர்வை வாசனையானதாகவும் இருந்தது. துர்நாற்றம் அடித்தவரின் வியர்வையில் அதிகப்படியான ‘கரின்பாக்டீரியம்’ (Corynebacterium) இருப்பதைக் கண்டுபிடித்தார். அதை நீக்கி, அதில் மற்றொரு சகோதரரின் வியர்வையிலிருந்த பாக்டீரியாவை எடுத்து இவருக்குச் செலுத்தினார். துர்நாற்றம் வருவது நின்றது. எதிர்காலத்தில் டியோடரன்ட்டுக்குப் பதிலாக இது போன்ற ‘மாற்று பாக்டீரியாக்கள்’ கூட வரலாம் என்கிறார் டாக்டர்.க்ரிஸ்.

Advertisements
%d bloggers like this: