Advertisements

அ.தி.மு.க.வைவிட தி.மு.க.வுக்குத்தான் சரிவு அதிகம்!

ஆர்.கே. நகர் சொல்லும் பாடம்

ஆர்.கே.நகரில் குக்கர் வெடித்து ஓ.பி.எஸ்.,  ஈ.பி.எஸ். படுகாயம்!
காலை முதல் சூரியனைக் காணவில்லை!
போயஸ் கார்டன் ஆனது கற்பகம் கார்டன்!
டி.டி.வி முன்னிலை…டி.டி.வி-யின் பின் இலை!
வைகோவுக்குத் தொடர் வெற்றி!

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு வெளியானபோது சமூக வலைதளங்களில் சுழன்றடித்த புயல் இது! ‘இடைத்தேர்தலில்

சுயேச்சை வெற்றி… 2004-க்குப் பிறகு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தோல்வி…’ என நிறைய வரலாறுகளைப் படைத்து சுனாமியாக எழுந்து நிற்கிறது ஆர்.கே.நகர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க வாக்கு வங்கிகளில் பெரிய ஓட்டையை ஏற்படுத்திவிட்டார் தினகரன். இந்தக் கட்சிகளின் ஓட்டுகள் சரிந்த கதை இங்கே…

‘மதராஸ்’ மாநிலமாக இருந்த தமிழகத்துக்கு 1952-ல்தான் முதல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது தேர்தல் நடைபெற்ற 1957-ல்தான் ‘பேசின் பிரிட்ஜ்’ என்ற தொகுதி உருவானது. இதற்குள்தான் ஆர்.கே. நகர் ஏரியா இருந்தது. இங்கே 1957 தேர்தலில் 85,667 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, இப்போது 2,28,234.

முதலில் தி.மு.க-வைப் பார்ப்போம். 1957-ல் பேசின் பிரிட்ஜில் தி.மு.க சுயேச்சையாகப் பேட்டியிட்டபோது வாங்கிய ஓட்டுகள் 14,367. இது, 1962 தேர்தலில் 25,913 வாக்குகளாக உயர்ந்தது. முதன்முதலில் ஆட்சியைப் பிடித்த 1967-ல் 40,109 வாக்குகளைத் தொட்டது. 1971 தேர்தலில் 48,959 ஆக அதிகரித்தது. 1977 தேர்தலின்போது ஆர்.கே. நகர் தொகுதி உருவாகியிருந்தது. அ.திமு.க-வும் உருவாகியிருந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் ஓட்டு 26,928 ஆகச் சரிந்தது.

1980 தேர்தலில் ஆர்.கே. நகரைக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது தி.மு.க. அப்போது காங்கிரஸ் வாங்கிய வாக்குகள் 44,076. தொடர்ந்து 1984-ல் 50,483, 1989-ல் 54,216 என தி.மு.க-வின் வாக்குகள் உயர்ந்தன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட 1991 தேர்தலில் ஆர்.கே. நகர், கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது வாக்குகள் 41,758 ஆகக் குறைந்தன. 

மிக அதிகபட்சமாக 1996 தேர்தலில்தான் 75,125 வாக்குகளை தி.மு.க அள்ளியது. இதுவரையில் ஆர்.கே.நகரில் நடந்த தேர்தல்களில் மிகக் குறைவான வாக்குகளை இந்தத் தேர்தலில் தி.மு.க. வாங்கியிருந்தது. இப்போது தி.மு.க பெற்ற வாக்குகள் 24,651. அதாவது 1962 தேர்தலில் வாங்கிய 25,913 ஓட்டுகளைவிடக் குறைவாக வாங்கியிருக்கிறது. 1962-ல் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 88,271. இப்போதோ 2,28,234. இதை வைத்துப் பார்த்தாலே தி.மு.க-வின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழுந்திருப்பதை உணர முடியும்.

அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி என்ன ஆனது? அ.தி.மு.க முதன்முதலாகக் களமிறங்கிய 1977 தேர்தலில் ஆர்.கே. நகரில் அந்தக் கட்சி வாங்கிய ஓட்டுகள் 28,416. அது படிப்படியாக 36,888 மற்றும் 54,334 (கூட்டணிக் கட்சி காங்கிரஸ்) ஆக உயர்ந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்து, இரட்டை இலை முடக்கப்பட்ட நேரத்தில் நடைபெற்ற 1989 தேர்தலில், ஜெயலலிதா அணி வாங்கிய ஓட்டுகள் 29,960. 1991 தேர்தலில் 66,710 ஓட்டுகள் வாங்கிய அ.தி.மு.க., அதன்பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளை அதிகரித்தே வந்தது. அதிகபட்சமாக 2015  இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடாதபோது 1.60 லட்சம் ஓட்டுகளைக் குவித்தது. இப்போது 48,306 வாக்குகள். அ.திமு.க-வுக்குச் சரிந்த ஓட்டுகளைவிட தி.மு.க-வுக்குச் சரிந்த ஓட்டுகள்தான் அதிகம். இத்தனைக்கும் தி.மு.க. வாங்கிய ஓட்டுகளில் கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளும் கலந்திருக்கின்றன.

Advertisements
%d bloggers like this: