Advertisements

இனி எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெற்றிபெற முடியாது!

அழகிரி அதிரடி பேட்டி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதைவிட, அடுத்து ஆட்சிக்கு வருவதாகக் கூறிக்கொண்டிருக்கும் தி.மு.க., டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்துள்ளதுதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

‘தி.மு.க-வினர் முழுமையான ஈடுபாட்டுடன் தேர்தல் பணியாற்றவில்லை’, ‘பணம் வழங்கவில்லை,’ ‘அ.தி.மு.க ஆட்சியை வீழ்த்த ஸ்டாலின் செய்த ராஜதந்திரம்’ என்றெல்லாம் சொல்லி, கட்சியினர் தங்களை ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள். அதேநேரம், ‘இந்த மாதிரியான ஒரு சூழலில், அழகிரி மட்டும் கட்சியில் இருந்திருந்தால், இந்நேரம் தி.மு.க வெற்றி பெற்றிருக்கும்’ என்ற குரல்களும் கட்சிக்குள் ஒலித்துவருகின்றன. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு, எந்தக் கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்துவருகிறார், முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க-வின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி. நீண்ட முயற்சிக்குப் பிறகு அவரிடம் பேசினோம்…

‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பற்றி..?’’

‘‘தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார். அதைப் பற்றிச் சொல்ல வேறு ஒன்றுமில்லை…’’

‘‘இதுவரை இல்லாத அளவுக்குக் குறைவான வாக்குகள் பெற்று தி.மு.க தோல்வியடைந்துள்ளதே?”

“ஆமாம், மிக மோசமான தோல்விதான்.உண்மையான கட்சியினர் வேதனைப்படுகிறார்கள். தேர்தலில் எந்த வேலையும் செய்யாமல் எப்படி வெற்றி பெற முடியும்? ‘பணநாயகம் வென்று விட்டது, தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது,  குதிரை பேரம்’ என்றெல்லாம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கட்சி நிர்வாகிகளுக்கு, கட்சியினரை ஒருங்கிணைத்துத் தேர்தல் பணியாற்றத் தெரியவில்லை. தானாக வெற்றி வந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.’’

“பலரும் இப்போது, ‘அ.தி.மு.க  இரண்டாகப் பிளவுபட்டு தேர்தலைச் சந்திக்கும் சூழலில்கூட தி.மு.க வெற்றிபெற முடியவில்லையென்றால், வேறு எப்போதுதான் வெற்றி பெறும்’ என்று கேட்கிறார்களே?”

“ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் என்றில்லை… இனி, எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறாது. இந்தச் செயல் தலைவர் இருக்கும் வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை. தலைவர் ஆக்டிவாக இருந்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. அவர், உடல்நலமில்லாமல் இருக்கிறார். கட்சியை நடத்துபவரின் பின்னால் விசுவாசமான கட்சி நிர்வாகிகள் இல்லை. அ.தி.மு.க-விலிருந்தும், ம.தி.மு.க-விலிருந்தும் வந்தவர்களுக்குத்தான் கட்சிப்பதவியைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில்கூட, மணிமாறன் என்பவருக்குப் பொறுப்பு கொடுத்துள்ளனர். இப்படி இருந்தால், கட்சியால் எப்படி வெற்றி பெற முடியும்?”

“காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஆதரவளித்தும் வெற்றி பெற முடியாததற்கு என்ன காரணம்?”

“தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் எதிலும் தொண்டர்களே இல்லை. ஆளே இல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எப்படி வெற்றி பெற முடியும்? அதிலும் கறுப்புத்துண்டும், கறுப்புச் சட்டையும் கூடவே இருந்தால் வெற்றியே பெற முடியாது.”

“நீங்கள் கட்சியில் முன்புபோல முக்கியப் பொறுப்பில் இருந்து தேர்தல் பணி ஆற்றியிருந்தால் தி.மு.க வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்லப்படுகிறதே..?”

“அதைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை. என்னைத்தான் கட்சியிலிருந்து நீக்கி வைத்திருக்கிறார்களே! திருமங்கலம் மட்டுமல்ல, அனைத்து இடைத் தேர்தல்களிலும் பணியாற்ற என்னை விரும்பி அழைத்தவர்கள்தான் கட்சியினர். தி.மு.க-வுக்கு ஒவ்வோர் இடைத்தேர்தலிலும் வெற்றியைத் தேடித்தந்தவன் நான். நான் தேர்தல் வேலை செய்யவேண்டுமென்று தொண்டர்கள் கேட்டு என்ன பலன்? இப்போதுதான் என்னைக் கட்சியை விட்டு விலக்கி வைத்திருக்கிறார்களே! வைகோ என்னை சந்தித்ததற்காக என்மீது நடவடிக்கை எடுத்ததாகச் சொன்னார்கள். அதே வைகோ, மருத்துவமனையில் இருந்த தலைவர் கலைஞரைப் பார்க்கச் சென்றபோது, அவரைக் கல்லால் அடித்தார்கள். அப்புறம் முரசொலி பவள விழாவுக்கு வைகோவை அழைத்தார்கள். அவர், ‘ஸ்டாலின் அடுத்த முதல்வராவார்’ என்று இப்போது கூறுகிறார். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? இதே வைகோ, தலைவர் கலைஞரை எவ்வளவு இழிவாகப் பேசினார் என்பதை மறந்து விட்டார்கள். ஆளுக்கொரு நியாயம்…”

“ஆர்.கே. நகர் வேட்பாளராக, கட்சியினருக்கு அதிகம் அறிமுகமில்லாத மருது கணேஷைத் தேர்வு செய்தது தவறு என நினைக்கிறீர்களா?” 

“ஆம். அவரைக் கட்சியின் செயல் தலைவர் குடும்பத்தினர் சிபாரிசு செய்ததால், வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறார்கள். முதலியார் சாதிக்காரர் என்ற அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரைப் பற்றிச் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.”

“டி.டி.வி.தினகரன் தரப்பினரும், அ.தி.மு.க-வினரும் ஓட்டுக்குப் பணம் வழங்கியதால்தான் தி.மு.க-வால் வெற்றி பெற முடியவில்லை என்று கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்களே?”

“தி.மு.க தரப்பில் கட்சித் தலைமையில் உள்ளவர்கள் வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், அதை மறைத்து ‘தி.மு.க-வினர் விலை போய்விட்டார்கள்’ என்று கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியிருக் கிறார். இது கட்சியினரை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இதற்குத் தி.மு.க-வினர் துரைமுருகனுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டியிருக்க வேண்டும். துரைமுருகன் தி.மு.க-வினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். வேண்டுமானால் துரைமுருகன் போன்றவர்கள் பணம் வாங்கியிருக்கலாம். வெற்றி பெற்ற தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து சொல்கிறார். இதற்கு அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதுபோன்றவர்களுக்குத்தான் தி.மு.க-வில் பொறுப்பு கொடுத்து மரியாதை செய்கிறார்கள்.’’

“உங்கள் மகன் துரை தயாநிதி, ‘துரோகம் என்றும் வெற்றி பெறாது’ என்று ட்விட்டரில் கருத்து கூறியுள்ளாரே?”

“அவர் சரியாகத்தான் கூறியிருக் கிறார். துரோகம் என்றைக்குமே வெற்றி பெறாது!”

“தி.மு.க பழையபடி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?”

“அனைத்தையும் மாற்ற வேண்டும், சுயநலத்துடன் கட்சியில் இருப்பவர்களை மாற்ற வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்குப் பொறுப்புகள் வழங்க வேண்டும். அதெல்லாம் இப்போது நடக்குமா என்று தெரியவில்லை.’’

“நீங்கள் கட்சியில் மீண்டும் எப்போது இணைவீர்கள்?”

“என்னை ‘மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள். எதற்காக நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்? கட்சியில் உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியதால், என்னைக் கட்சியை விட்டு நீக்கியதாக அறிவித்தார்கள். ஆனால், தொடர்ந்து கட்சிக்குத் துரோகம் செய்துவரும் அவர்களிடம் நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? கட்சிக்கு நான் வரவேண்டுமென்றால் அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கட்டும். அப்போது பார்க்கலாம்!’’

நன்றி-விகடன்

Advertisements
%d bloggers like this: